யுகபாரதி

Archive for பிப்ரவரி, 2010

முன்னாள் சொற்கள்

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 26, 2010

தொலைபேசியைத் துண்டிக்க
நீ உதிர்த்த கடைசிச் சொல்லுக்குப் பின்
நான் உறங்கவே இல்லை

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
சொற்களைக் கையாளும்
தேர்ந்த ஆற்றல்

வீசியதே திரும்பவருமென்றும்
நம்புவதற்கில்லை

எதிர்பாரா தருணத்தில்
நம்மை வீழ்த்திவிடும் அபாயம்
சொற்களுக்கு உண்டு

சொற்களின் கனத்தைத்
தாங்கமுடியாமல் நம்மில் பலர்
சுயசாவைத் தேடிக்கொண்டனர்

சொற்களின் வீரியத்தில்
நம்முடைய கற்பு
சூறையாடப்பட்டிருக்கிறது

சொற்களைச் சொற்களாகவே
கேட்டுக்கொண்டிருக்கும் சமூகம்
எந்தக் கோடுகளையும்
தாண்டிவதில்லை

சொற்களிடம் வசப்பட்டு
சொற்களாலேயே முடிந்துபோன
வரலாறு நம்முடையது

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »