யுகபாரதி

நடைவண்டி நாட்கள் – 21

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 10, 2010

தொன்னூறுகளில் (90) ஐயாயிரம் ரூபாய் என்பது எங்கள் வாழ்நிலையைப் பொறுத்தவரையில் பெரிய தொகை. அது தொகையாக அல்லாமல் நம்பிக்கையாகத் தெரிந்தது. மேலும் கொஞ்ச காலம் சென்னைப் பட்டிணத்தில் வாழ்வதற்கு தேவையான உந்து சக்தியைக் கொடுத்தது. காசோலையாகக் கிடைத்த ஐயாயிரம் ரூபாயை ரொக்கமாக மாற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

சென்னை முகவரி நிரந்தரம் இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு வங்கியும் எங்களிடம் எதிர்பார்த்த தரவுகள் எதுவும் இல்லாததால் ஒரு வங்கியிலும் கணக்கு தொடங்க முடியவில்லை. பேசாமல் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினரிடமே காசோலையைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாமா என யோசித்தோம். அதுவும் சரியாகப் படவில்லை. பிறகு வேறொரு நண்பரின் உதவியோடு காசோலை பணமாகக் கிட்டியது.

சென்னைக்கு வந்த நாங்கள் இருவரும் சம்பாதித்த முதல் தொகை என்பதால் அப்பணத்தை செலவழிக்க மனமே வரவில்லை. புத்தம் புதுத் தாள்களை முகர்ந்து கொண்டே மகிழ்ச்சி அடைந்தோம். காசோலை பணமாக மாறும்வரை இடைப்பட்ட நாள்களில் அடிப்படைத் தேவைகளுக்காக காசோலையைக் காட்டி நண்பர்களிடம் கடன் பெற்றிருந்தோம். பணம் இருக்கிறது என்கிற தைரியம் செலவுகளை அதிகப்படுத்திவிடுகிறது. சாதாரணமாக ஆகின்ற செலவைக் கூட கொஞ்சம் கூடுதலாக ஆக்கிக் கொள்ள துணியும் தருணங்கள். நல்ல ஓட்டல்களில் போய் உபசரிப்பாளனின் கண்களை உற்றுப்பார்த்து கர்வத்தோடு வேண்டியதைக் கேட்டுச் சாப்பிட்டோம். டிப்ஸ் என்ற கொச்சையை அதிக ரூபாய் வைத்து பரிமாறி அவனை ஆச்சரியப்படுத்தினோம். நன்றாகப் போயின இருபது நாட்கள். அந்த இருபது நாட்களில் எனக்கும் சம்பளம் வந்தது. ஆயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய். ஐயாயிரம் போல அச்சம்பளம் ஆனந்தப்படுத்தவில்லை. என்றாலும் அடையாளம் கிடைத்ததே எனும் நிறைவு. வாழத் தகுதியுடைய ஒருவனாக எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம் என்பது மாதிரியான பிரமை. நானும் சரவணனும் சென்னையில் நன்றாக வாழ்கிறோம் என்பதை எங்களது வீடுகளுக்குத் தொலைபேசியில் சொல்லியபோது அவர்களிடமிருந்து அதை மகிழ்வாக ஏற்றுக்கொண்ட தொனியை காணாமல் இருந்தோம். பிள்ளைகள் இரண்டும் சென்னை நகரத்தில் பராரியாகவே திரிகின்றன என அவர்கள் உள்மனம் எங்கள் தொலைபேசி உரையாடலை உணர்ந்திருக்கலாம். இருவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குக் கொஞ்சம் பணம் அனுப்பினால் நிச்சயம் நாம் நலமாகவே இருக்கிறோம் என நம்புவார்கள் என்பதாகப் பேசிக் கொண்டோம்.

நமக்கு பணம் அனுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களே எனும் பெருமிதத்தில் சந்தோஷப்படுவார்கள் என அப்படியொரு முடிவை எடுத்தோம். எடுத்த முடிவுபடியே பணமும் அனுப்பினோம். ஆனால் அனுப்பிய பணம் என் வீட்டில் ஏற்கப்படாமல் திரும்பவும் என் முகவரிக்கே வந்து சேர்ந்தது. கூடவே அம்மாவின் கடிதம்.

“தம்பி…, உன் தேவைக்கேற்ப வாழ்ந்து பழகு. எனக்குப் பணம் அனுப்ப வேண்டும் எனச் சிரமப்படாதே…! உனக்குப் பொறுப்பு உண்டு என்பதை அறிவேன். இந்தப் பணத்தையும் நல்ல புத்தகமோ ஆடையோ வாங்கிக்கொள்ள பயன்படுத்து. அன்புடன் அம்மா” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தின் மொழிநடை என்னால் இப்போது கிரகித்துக் கூறப்பட்டுள்ளது. அம்மாவின் கடிதம் இன்னும் வெளிப்படையான அன்பால் மட்டுமே எழுதப்பட்டிருந்ததாக நினைவு. அம்மாவின் கையெழுத்து கிச்சடி அரிசியைப் போல நீளநீளமாக இருக்கும். கையில் கிடைத்த ரூபாயை வைத்து நானும் சரவணனும் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கத் தீர்மானித்தோம். நாங்கள் தற்காலிகமாக தங்கியிருந்த அம்பேத்கர் விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனில் அறை கிடைத்தது. சரவணனுக்கு அந்த மேன்சன் ரொம்பவும் பிடித்தது. அடிப்படையிலேயே சரவணனுக்கு சினிமா ஆர்வம் இருந்ததால் எங்களுக்கு அறை எடுக்க ஏற்பாடு செய்தவர் அந்த மேன்சனில்தான் இயக்குனர் விக்ரமனும் நடிகர் விஜயகாந்தும் ஆரம்பத்தில் வசித்ததாகச் சொன்னார்.

துண்டு துக்கடா கதாபாத்திரங்களில் இன்றுள்ள பலபேர் இங்கிருந்துதான் வெள்ளித்திரைக்குப் போனார்கள் என்று தெரிந்ததும் சரவணன் தங்கினால் அந்த மேன்சனில் தான் தங்குவது என்று பிடிவாதம் பிடித்தான். எனக்குப் புரிந்து போனது. வேறு அறை தேடி அலைந்து திரிவதைவிட அந்த அறையே போதும் என்று பட்டது.

முதல் நாள் இரவே விடுதி நண்பர்களிடம் பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஏதோ புதுவீடு கட்டி குடிபுகுவதுபோல தடபுடலாகக் கிளம்பினோம். ஆளுக்கு ஒரு பையைத் தவிர வேறு விசேஷமாக எங்களிடம் ஒன்றுமில்லை. ரகுபதியும் பாலாவும் யாரோ ஒரு தொலைபேசி ஜோதிடரிடம் நல்ல நேரம் கேட்டு, விடியற்காலையில் போவது உசிதம் என்றனர். அதேமாதிரி ஒரு விடிகாலையில் அப்சரா மேன்சனுக்கு நண்பர்கள் சூழப் புறப்பட்டோம்.

மேன்சனுக்கு நுழைந்தால் ஒரே புழுதி! படிக்கட்டுகளில் மூலை முடுக்கெல்லாம் திட்டுத்திட்டாக பான்பராக் மற்றும் எச்சில் கறை. வெகுநாட்களாக ஒட்டடை அடிக்கப்படாத சுவர்கள். கட்டில் எனும் பெயரில் செய்து போடப்பட்டிருந்த பலகை. தேங்காய் நாரில் செய்த மெத்தை. அதிலும் அங்கங்கே கிழிசல். சரவணனையும் என்னையும் ரகுபதி பாவத்தோடு பார்த்தான்.

‘மூட்டைப்பூச்சி இருக்கும்போல’ என பாலா பதிலுக்கு பாவப்பட்டான்.

மனசுக்குள் அதிருப்தி குடியேறிக்கொண்டது. ஆனாலும் வாய்த்ததை ஏற்கும் பக்குவத்தில் பேசாமல் இருந்தோம். விடிந்தது. நண்பர்கள் விடைபெற்றார்கள். ஏழு மணிவாக்கில் எங்கள் அறைக்கதவை படபடவென்று யாரோ தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திறந்தோம். திறந்தால் மேன்சன் ரூம் பாய் நின்றிருந்தான்.

‘சார்… தண்ணீர் வருகிறது… பிடித்துக் கொள்ளுங்கள்’ என்றான்.

‘தண்ணீர் வருகிறது. பிடித்துக் கொள்ளுங்களா…? ஏன் எப்போதும் தண்ணீர் வராதா?’

‘வராது சார்… எட்டு மணி வரைதான வரும். அதற்குள் குளித்து துவைத்துக் கொள்ளுங்கள்’ என்றான்.எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. சரவணனைப் பார்த்தேன்.

‘விக்ரமனும் விஜயகாந்தும் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்காங்க இல்ல…’ என்றேன். என்னை அடிப்பதுபோல் சிரித்துக் கொண்டே கையை ஓங்கினான்.

வாளியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குப் போனோம். அங்கே போனால் மேன்சனில் இருக்கும் அத்தனை சிகாமணிகளும் வரிசையில் நின்றிருந்தார்கள். நிற்கிற வரிசைக்கும் குளியலறை எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. நிற்பது இருபது பேர். ஆனால் மூன்றே மூன்று குளியல் அறை. இருபது பேரும் குளித்து முடிப்பதற்குள் தண்ணீர் நின்றுவிடும்.

‘உன்னை நினைத்து’ என்றொரு திரைப்படம். அதில் காட்டப்படும் மேன்சனின் பெயரும் அப்சரா தான்.

அப்படத்தை இயக்கிய விக்ரமன், தன் ஆரம்பகால மேன்சன் வாழ்க்கையைத்தான் காட்டியிருக்கிறார் போல!அந்த மேன்சன் வாழ்வு எங்களை ரொம்பவே படுத்தியது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவிதமான மனிதர்கள். நகரத்திற்குப் பிழைக்க வந்த கிராமத்து மனிதன் முதல் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் இரவுப் பாடகன் வரை எத்தனையோ விதமான கதாபாத்திரங்கள்.சொந்த சோகங்களை மனசுக்குள் புதைத்துக் கொண்டு வேஷ சிரிப்பில் வெளி உலகத்தை தரிசிப்பவர்கள். எங்கள் அறைக்குப் பக்கத்தில் ஒரு இளைஞர் தங்கியிருந்தார். அப்போது ஐ.ஏ.எஸ். படிப்புக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அவர் கையில் புத்தகம் இருந்துகொண்டே இருக்கும்.

இன்று ஏதாவது ஒரு வடக்கத்தி மாநிலத்தில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கக்கூடும். அவர் அறைக்கும் எங்கள் அறைக்கும் நேரெதிரே அமைந்த அறையில்தான் சதா குடியில் நட்சத்திர ஓட்டலில் இரவுப் பாட்டுப் பாடும் பாடகன் குடியிருந்தான். அவனுக்குப் பாட்டுதான் சகலமும். ஏதாவது ஒரு சங்கதி, ஏதாவது ஒரு கமகம், ஏதாவது ஒரு சுருதி, ஏதாவது ஒரு பேஸ், ஏதாவது ஒரு அடடா… அவன் அறையிலிருந்து வெளிவந்து கொண்டே இருக்கும்.ஒரு தெறித்துப்போன ஆர்மோனியத்தில் எப்போதும் இந்திப் பாடலை இசைத்தபடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பான்.படிக்கிறவனுக்கு பாட்டு இடையூறு. பாடுகிறவனுக்கு மௌனம் இடையூறு!இந்த இரண்டு பக்கமும் இடிபட்டுக்கொண்டே கனவுகளுடன் நாங்கள்!இந்த வாழ்க்கை சுவாரசியங்கள் நிரம்பியது?

Advertisements

ஒரு பதில் to “நடைவண்டி நாட்கள் – 21”

  1. Rathna said

    இன்றுதான் இந்த தொடர் பதிவு – நடைவண்டி நாட்கள் – முழுவதும் படித்தேன்.
    இளமையில் ஏற்பட்ட அனுபவங்களே, உங்களை சிறந்த கவிஞராக உருவாக்கியுள்ளது.

    வாழ்த்துகள். தொடரவும்…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: