யுகபாரதி

Archive for மார்ச், 2010

முன்னாள் சொற்கள் 5

Posted by யுகபாரதி மேல் மார்ச் 31, 2010

எட்டு வருடத்திற்கு முன்பொரு அந்திமாலையில், ஓல்ட் உட்லேண்ட்ஸ் விடுதியில் ஒரு குறும்படத்திற்குப் பாடல் எழுதும் பொருட்டு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.இயக்குநர்.மனோபாலாதான் அந்தக் குறும்படத்தின் இயக்குநர்,கதையையும் பாடலுக்கானச் சூழலையும் விளக்கிக் கொண்டிருக்கையில் குறுக்கே ஒருவர் அந்தக் கதையின் அம்சங்களை மேலதிகமாக என்னிடம் சொல்லத் தொடங்கினார். ஒரு விஷயத்தில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் எப்போதுமே கவனத்துக்குரியவர்கள்.அப்படி என்னால் கவனிக்கப்பட்ட அந்த ஒருவர்தான் இயக்குநர்.ஆர்.கண்ணன். ஜெயம்கொண்டான் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை வெற்றிக்குரியவராக மாற்றிக்கொண்டிருப்பவர்.அவர் என் வீட்டிற்கு அருகிலேயே வசித்து  வந்ததால் அவ்வப்போது அவருடன் பழகவும் சிநேகிக்கவும் தொடங்கி பின்னர் என் வாழ்வைப் புனரமைத்தவர்களில் ஒருவராக மாறிப்போனவர். கண்ணன் அதிர்ந்து பேசுவதில்லை.ஆனால்,அவருடைய செயல்பாடுகள் அடுத்தவரை அதிர்வுறச் செய்துவிடும்.

சின்னச்சின்னதாய் நாங்கள் கண்ட கனவுகள் ஈடேறத் தொடங்கின.அவருக்கு சத்யஜோதியில் படம் கிடைத்தது.இசை வித்யாசாகர். விரல்விட்டு என்னை வளர்த்தவர்கள் என்று சொல்லச் சொன்னால் நான் முதலில் சொல்ல வேண்டிய பெயர் அது.இசையும் கவிதையும் இணைந்து ரசிகனுக்குத் தர வேண்டிய அனுபவத்தை அவர் எப்போதும் தவறவிடுவதில்லை.அவர் இசையமைக்கிறார் என்றால் அத்தனை பாடலாசிரியர்களும் பேனாவுக்கு சிறகு முளைத்தது போல கருதுவார்கள்.காரணம்,எழுதி தாருங்கள் இசையமைக்கிறேன் என்பார்.எழுதித்தருவதை இம்மியும் பிசகாமல் இமையமைப்பதில் அவரே வல்லவர்.

கண்ணன் ஜெயம்கொண்டானுக்கான சூழலாகச் சொன்னது, கனவுகள் நினைவாகும் அனுபவத்தை பிரதிபலிப்பது.ஒரு பொய் மெய்யாகும் காதல் மனநிலைதான்.எனக்கும் கண்ணனுக்கும் இடையே உள்ள நட்பு கூட அவ்வாறுதான்.பாட்டெழுத நானும் படமெடுக்க அவரும் கண்ட கனவு நினைவானதை நினைத்துக்கொண்டு எழுதிக்கொடுத்தேன்.

பல்லவி

நான் வரைந்து வைத்த
சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற
மணல் வெளி மலருகின்றதே

நான் துரத்த நின்ற
காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த
மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட
மூச்சிலே இசை கசிந்ததே

– நான் இழுத்துவிட்ட மூச்சிலே இசை கசிந்ததே என்பதுதான் பாடலின் தொனி.காதல் வயப்பட்ட பிறகு உண்டாகும் மனநிலை மட்டுமில்லை அது.மனதில் எவ்வெப்போதெல்லாம் மாற்றம் நிகழ்கின்றதோ அவ்வப்போதெல்லாம் நம்முடைய மூச்சில் மாறுதலும் லயிப்பும் உண்டாகிவிடும்.அதையே தியானத்தின் பயனாகவும் கருதலாம்.இந்த இடத்தில் நான் சொல்லவேண்டிய மற்றொருவர், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.அவர் மீது எனக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு.திட்டமிட்டு பணிபுரிவதிலும் பணியாற்றுபவர்களின் திருப்தியைக் கருத்திற் கொள்வதிலும் கவனத்தோடு இருப்பார்.இயல்பிலேயே கவிதை ரசனை உள்ளவர் என்பதால் வரிக்கு வரி பாராட்டுவார்.பாராட்டில் பொய்மை இருக்காது.பூச்சு இருக்காது.எளிமையின் வசீகரத்தை உள்வாங்கிக்கொண்டு சரணத்தை எழுதப் புகுந்தேன்.தமிழ் சந்தம் உண்மையில் லகுவானது.எழுத எழுத வார்த்தைகள் வழுக்கிக்கொண்டு போய் சந்தப் பள்ளத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும்.

சரணம் 01

ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பஞ் சக்கை உந்தன்
கண்கள் தொட்டு தொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே
என் தோள்கள் இறக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற
என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடு மாற்றம்
தந்தாய் என்னில்
என்கால் விண்ணில்

– நாட்கள் சரியா? நாள்கள் சரியா? என்ற பெருங்குழப்பம் நிலவுகிறது.நாள்களே சரி.நாள் ஒருமையாகவும் கள் பன்மையாகவும் இயங்குவதால் நாள்கள் என்றே பதிவு செய்தோம்.வரிகளை கண்ணன் ரசித்து வியந்ததும் அவர் படமாக்கிய விதமும் எங்கள் நட்பின் சாட்சியென்றே கருதுகிறேன்.சிலர் வெகு உண்மையோடு பழகி நம்மைவிட மேலானவர் என்பதை நிரூபித்துக்கொள்வார்கள், அப்படியானவரே கண்ணனும்.

சரணம் 02

பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை
நாரும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிறில்லாமல்
என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல்
என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல்
கொஞ்சும் கொஞ்சல்
தங்கும் நெஞ்சில்

– ஊஞ்சல் கயிறில்லாமல் ஊமை மனது ஆடும் என்ற வரியை வித்யாசாகர் ரொம்பவே ரசித்து புளகித்துப்போனார். அவர்,அவ்வப்போது என்னுடன் பழைய பாடல்களைப் பற்றி விவாதிப்பதுண்டு.மெல்லிசை மன்னரும் கவியரசரும் இணைந்து பணிபுரிந்த பாடல்களின் சிறப்பைச் சிலாகிக்க தொடங்கி அப்படியே கரைந்துபோய் இருவரும் பாடத் தொடங்கிவிடுவோம்.இசையின் சரடும் வார்த்தைகளின் ஒத்திசைவுமே பாடலின் பூரணம் என்பார். அவ்விதமே இப்பாடலும் அமைந்தது.நண்பர்கள் இல்லாச் சூழலை யாராலாவது கற்பனை செய்ய முடியுமானால் அதுவே நரகம் என்பேன்.கண்ணன் என் தோழன் என்று பாரதி எழுதிய கவிதை ஆர்.கண்ணனுக்கும் பொருந்தும்.அந்த வரிகள்,ஊனை வருத்திடும் நோய்வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான்.நெஞ்சம்,ஈனக் கவலைகளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான்.

பெஞ்சமின் ஃபிராங்களின் சொல்வதுபோல நண்பனுக்கு நல்லது செய் நட்பு நிலைக்க; பகைவனுக்கும் நல்லது செய்,நண்பனாக்க  என்பதுதான் ஒவ்வொரு பாடலின் வெற்றியின் போதும் நான் உணர்வது. கண்ணனைப் போன்ற நண்பர்கள் எப்போதும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.

Advertisements

Posted in திரைப்பாடல், தொடர்பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: , | 1 Comment »