யுகபாரதி

என் கனவு யாவும்

Posted by யுகபாரதி மேல் மார்ச் 2, 2010

அப்போது நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலவழி பள்ளி என்றபோதும் தமிழார்வமுள்ள மாணவர்கள் மீது தனி கவனம்  செலுத்துவார்கள்.குறிப்பாக,என்னுடைய முதல் கவிதை பள்ளிக்கூடத்தின் நோட்டீஸ் போர்டில்தான் அரங்கேறியது. தமிழாசிரியர்கள்  புலவர்.கோ.நாகேந்திரனும் ராஜேஸ்வரி அம்மாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.பள்ளி நாட்களில் பாட புத்தகங்களை விட அதிகமும் நான் வாசித்தது

நாவலும் கவிதை நூல்களும்தான்.காரணம் அம்மா,அம்மாவுக்கு நான் படிப்பதைத் தாண்டி வேறு எதிலாவது தனித்து விளங்க வேண்டும் என்பது அவா. அதனால் வீட்டில் படிக்கச்சொல்லி துன்புறுத்தியதில்லை.

ஆசிரியர்கள் மத்தியிலும் எனக்கு நல்ல பேர்.கவிஞன் என்கிற அடையாளம் ஒருபுறமிருந்தாலும் படிப்பதில் நான் எப்போதும் கவனம்
குன்றியதில்லை. பள்ளி இறுதிவரை நானே வகுப்பில் முதல்ஐந்து மாணவர்களில் ஒருவனாயிருந்தேன்.மெல்ல மெல்ல கவிதைப்பக்கம் என் முழு கவனமும் திசைமாறிய போதும் கூட அம்மா என்னை கடிந்துகொள்ளவில்லை.நீ பெரிய ஆளா வரனும்பா, என்பாள். எப்படி என்றால் கவிதை எழுதுறியே  அதைவைத்து முன்னுக்கு வரலாம்தானே, என்பாள்.கவிதையை வைத்து வாழ்வை ஓட்டிவிட முடியும் என்பதை எனக்கு முன்னே எனக்கு சொன்னது அம்மாதான்.

பள்ளியில் என் மரியாதைக்குரிய கணக்கு வாத்தியார் மணி.சேகரன் சார் ஆண்டுவிழாவுக்காக ஒரு நாடகம் எழுதினார்.அதில் எனக்கு கதாசிரியர்  வேடம்.  வேடத்திற்காக ஜிப்பா தேவைப்பட்டது. தெரிந்தவர்கள் வீட்டில் இரவல் வாங்குவதற்காக தம்பியும் அம்மாவும் அலையாய் அலைந்தும்பயனில்லை.சரி,புதிதாகவே வாங்கிவிடலாம் எனப் போனால் விலை அதிகமாயிருந்தது.ஜிப்பா இல்லாமல் போனால் வேடம் கிடைக்காது என்கிற நிலைமை. அம்மாவிடம் துப்புறவாக காசில்லை.கடன் வாங்கக் கூட வழியில்லாத கஷ்டகாலம். என்ன செய்வதென்றே தெரியவில்லை.நாட்கள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு நான் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதிலும் அதன் மூலம் பள்ளியிலும் சுற்று வட்டாரத்திலும்

பேரெடுக்க வேண்டும் என்பதிலும் தீவிரம் மிகுந்துவிட்டது.விழைவு அம்மாவின் மூக்குத்தி அடகு கடைக்குப் போனது.நாடகத்தில் எனக்கு விழுந்த கைதட்டலை பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். மூக்குத்தி இல்லாத அம்மாவைப் பார்க்க எனக்குத்தான் பிடிக்காமல் போனது.

பத்திரிகைகளுக்கு கவிதைகளை அனுப்பி அது பிரசுரமானதும் சிறு சன்மானம் அனுப்புவார்கள்.அந்த சன்மானத் தொகையை சேர்த்துவைத்துத்தான்அந்த மூக்குத்தியை மீட்டேன்.அம்மாவின் மூக்குத்தியைப் பார்க்கும்போதெல்லாம் ஜிப்பாவும் அந்தப் பெருங்கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அம்மா அழுததும் நினைவை முட்டும்.ஒரு தாய் தன் வாழ்வின் அத்தனை ஆசைகளையும் மகன் மீதே வைக்கிறாள்.அவள் கனவுகள் ஈடேறும்வரை ஓய்வதில்லை.

அம்மா அந்தகாலத்து எஸ்.எஸ்.எல்.சி., வேலைக்கு வாய்ப்பும் வந்திருக்கிறது.ஆனால் தாத்தாவும் அப்பாவும் வேலைக்குப் போவதை விரும்பாததால் நிறைய கஷ்டம்.  தனி நபராக அம்மா இந்த வாழ்வை ஆனமட்டும் போராடிப்பார்த்துவிட்டாள்.அவளுக்கு ஓய்வாயிருக்க பிடிப்பதேயில்லை.இப்பவும் வயற்காட்டில் களை எடுக்கிறாள்.அறுப்புக்கு ஆள் சேர்க்கிறாள்.போதும் என்கிற அளவுக்கு வந்த பிறகும் கூட அவளால் சும்மா இருக்க முடிவதில்லை.எல்லா அம்மாக்களும் அவ்வாறுதானே?கடன் தொல்லையால் அம்மா மூன்று முறை தற்கொலைக்குப்போய் திரும்பியவள்.உங்கமுகத்த பாத்துத்தான் முடிவ மாத்திக்கிட்டேன்பா, என்பாள்.சக்கையாக இந்த வாழ்க்கை அவளைப் பிழிந்து போட்டுவிட்டது.சதா சர்வகாலமும் எங்கள் நினைப்போடே எங்களுக்காகவே வாழ்ந்து தொலைக்கிறாள்.

அம்மாவின் இயல்பாக நானறிந்தது விடாப்பிடியான மூர்க்கம்.எதிலும் எப்பவும் எங்கேயும்.வெளியே தெரியாமல் அவள் செய்துவிடும் சாகசங்கள் பலவேளைகளில் அதிர்ச்சியும்  ஆச்சர்யமுமாயிருக்கும். நாகரீகம் பாழ்படுத்திவிடாத பக்குவத்தோடு ஒவ்வொரு செயலிலும் அவளுடைய தனித்துவம் மிளிரும்.என்னுடைய அம்மா எனக்கு அம்மாவாக இல்லாமல் போயிருந்தால் என்று யோசிக்கும் போதெல்லாம் நானே இல்லாது போவது போன்ற நிலை ஏற்படுகிறது.ஒருமுறை வெண்ணாற்றங்கரையில் நடந்து போய் கொண்டிருந்தோம்.அங்கேதான் எங்களுக்குச் சொந்தமான சிறு காணி இருக்கிறது.வயலைப் பார்த்துவர போன ஒரு மதியத்தில்தான், நீ ஏம்பா சினிமாவுக்கெல்லாம் பாட்டெழுதக் கூடாது எனக் கேட்டாள்.பேச்சின் இடையே சிறு குறிப்பு போல அம்மா ஏற்படுத்திய நெகிழ்வுதான் பின்னாளில் நான் பாடலாசிரியனாக உருவெடுக்கக் காரணம் என நினைக்கையில் என் கனவு யாவும் அம்மாவுடையன  என்பதை உணர்கிறேன்.

என் ஆரம்பகால கவிதைகளை பிழைநீக்கி பத்திரிகைகளுக்கு அனுப்பியது மட்டுமல்ல. பிரேம்குமார் என்று தான் வைத்த பெயரையே கவிதைக்காக யுகபாரதி என்று மாற்றியதும் அம்மாதான்.அம்மாவுக்கு போலியான பெருமைகள் மீது இஷ்டமில்லை.அசதி நிரம்ப வீட்டுக்குள் நுழைந்தாள், எழுதவேண்டியது நிறைய இருக்கையில் ஏன் உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாய்,என்பாள்.என் எழுத்தின்முதல் வாசகியும் முதல் விமர்சகியும் அம்மாவாகக் கிடைத்தது பெரும்பேறு.

கொஞ்சகாலம் கழித்து  அம்மாவுக்காக வைரமூக்குத்தி வாங்கும் திட்டத்தில் இருந்ததை அம்மா எப்படியோ வாசம் பிடித்துவிட்டாள். வைரமூக்குதியெல்லாம் தெய்வத்துக்குதான்பா போடணும், என வம்படியாக மறுத்துவிட்டாள்.நானும் தெய்வத்துக்குத்தான் வாங்க எத்தனித்தேன் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.கூடுதல் மிகையாகத் தோன்றினாலும் அம்மாவாக ஒரு ஆணால் முடியாது.என் மகள் என்னைப் பார்த்து சிரிக்கும்போதெல்லாம் நான் என்னம்மா என்றே செல்லம் கொஞ்சுகிறேன்.அம்மாவின் சாயல் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவே செய்கிறது.

Advertisements

5 பதில்கள் to “என் கனவு யாவும்”

 1. a.j.rajaseker said

  oru ammavukkum maganukkum ulla thodarbu thoppul kodi moolam padarnthu aalamaramaga vishva roobamm perugirathu. athai ungalathu yeluththugalin moolam minga azhagaga therivithuloorgal. vaazhthugal.

  anbudan
  a.j.rajaseker
  hello fm
  nellai

 2. karthick said

  என் கனவு யாவும் அம்மாவுடையன என்பதை உணர்கிறேன்.

  Ungal ammavin kanavugalai neraivettrum magana neenga irundhadhil megavum perumai padugirean thozhare….

  Karthick

 3. Senthil said

  Migavum arumai. Ammavai patri maganin unarvugalai miga azhagaga.. unmayaaga.. pathivu seithuleergal..

  Anbudan
  Senthil
  California, USA.

 4. THARA RATNAM said

  mattra uravukal pizlaithalum amma enra uravu mattum evarukkum pilaippathillai.. appadi plaithalum athu antha ammavin pilaiyaka irrukka mudiyathu

 5. sathya said

  இனிய தோழருக்கு, வணக்கம் எப்போதும் வசிய படுத்தும் உங்கள் எழுத்துக்கள்
  இந்த பதிவு நெகிழ வைத்துவிட்டது வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: