யுகபாரதி

முன்னாள் சொற்கள் 1

Posted by யுகபாரதி மேல் மார்ச் 10, 2010

கவிதைகளின் தீவிர ரசிகராக எனக்கு அறிமுகமானவர் இயக்குநர் லிங்குசாமி.அவரே கவிஞராகவும் சிலநேரங்களில் அவதாரம் எடுப்பதுண்டு.அவரைச் சந்தித்ததற்குப் பிறகு என் வாழ்வின் திசையே மாறிவிட்டது எனலாம்.கணையாழில் உதவி ஆசியராக பணிபுரிந்துவந்த என்னை சினிமாப் பாடலாசியராக ஆக்கிப் பார்க்கும் ஆர்வம் அவருக்கு எந்த தருணத்தில் தோன்றிற்று எனத் தெரியவில்லை.அவருக்குப் பாடல் எழுதுவதென்றால் கூடுதல் உற்சாகம் மனதை தொற்றிக்கொள்ளும்.ஆசையோடு வருடும் கையில் பருத்த யானையும் பணிந்துவிடும் என்பதுபோல.

அப்போது, ஜீ’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை எட்டாமல் போன துக்கத்தில் இருந்தார்.எந்தத் துக்கத்தில் இருந்தும் அவரால் எளிதாக மீண்டு அடுத்த வேலைக்குக் கிளம்பிவிட முடியும்.அது,அவருக்கே உரிய தனித்துவம்.அப்படித்தான் சண்டக்கோழி திரைப்படத்திற்கான ஆரம்ப வேலைகளும் தொடங்கின.ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது பாடலுக்காக என்னை அழைத்திருந்தார்.வழக்கம்போல கவிதைப் பற்றிய சம்பாஷனைகள் முடிந்து,பாடலுக்கானச் சூழலையும் காட்சியையும் விளக்கினார்.காட்சியை விளக்கிக்கொண்டிருக்கும் போது அவருக்குள் கனன்று கொண்டிருந்த தவிப்பை உணர முடிந்தது.

சூழல் இதுதான்,மதுரையைச் சேர்ந்த கதாநாயகன் தன் கல்லூரி நண்பனின் வீட்டுக்கு விடுமுறைக்காகச் சிதம்பரத்திற்கு வருகிறான்.வந்தவனுக்குத் துள்ளத்துடிக்க பேசும் நண்பனின் தங்கையைப் பிடித்துப்போகிறது.தன் வாழ்வில் வசீகரத்தையும் வசந்தத்தையும் கொண்டுவரப் போகிறவள் இவளே என்று வயப்படுகிறான்.இது  ஒருபுறமிருக்க,கதாநாயகனுக்கென்றே இரண்டு முறைப்பெண்கள் காத்திருக்கிறார்கள்.அந்தப் பகுதியிலேயே மதிக்கத்தக்க ஒருவருக்கு மகனாகப் பிறந்த கதாநாயகன் தன் காதலை வீட்டில் சொன்னால் என்ன களேபரம் நடக்கும் என்று தெரியாத நிலை இன்னொருபுறம்.இருந்தபோதும் நண்பனின் தங்கையை தன் வீட்டுக்குத் திருவிழா  நிமித்தம் அழைத்துவந்து அறிமுகப்படுத்துவதாகத் திட்டம்.

பாடலை எழுதி இசையமைக்கலாம் என்றார்.எனக்கு யுவன்ஷங்கர்ராஜாவோடு நேரடி பரிச்சயம் இப்போது போல அப்போது அதிகமில்லை.ஒரு இசையமைப்பாளரின் தொனி மற்றும் பிரியத்தைப் புரிந்து கொள்ளாமல் பணியாற்றுவது சிரமம்.எனவே,நீங்கள் மெட்டை அமைத்துவிட்டுக் கொடுங்கள் எழுதுகிறேன் என்றேன்.ஆனால்,லிங்குசாமிக்கு நானும் உடனிருந்து அந்தப் பாடலை அமைத்தால் சிறப்பாகவரும் என்று நம்பிக்கை.வற்புறுத்தித்தான் அழைத்துப்போனார்.உண்மையில், யுவனுடன் அருகிருந்து பணிபுரிந்த அனுபவம் பூரணமாய் அமைந்ததது,இயல்பாகவும் விடலைத்தனத்தோடும்.  வரிகளைச் சொல்ல சொல்ல அவர் மெட்டமைத்த லாகவம் பிரமிக்க வைத்தது.

நாயகியின் அழகை வர்ணிப்பது போலவும் அந்த அழகை வீட்டிலுள்ள அனைவரும் மெச்சுவதாகவும்பாடலின் பயணம் இருக்கவேண்டும்.அந்தப் பாடலில் கதாநாயகி தாவணியோடும் கூந்தலில் பூச்சரத்தோடும் மதுரைக்கே உரிய பண்பாட்டு அடையாளமாகத் திகழுவாள் என்றும் பாடல் நெடுக நாட்டுப்புற சாயல் விரவி வந்தால் மதுரைப் பகுதியை காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும் இயக்குநர் விரும்பியதால் வழக்குத் தமிழிலேயே பல்லவியை எழுதித் தந்தேன்.

பல்லவி

தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கைமொளச்சி கால்மொளச்சி
ஆடுது ஏம் பாட்டுக்கு

கண்ணாக் கண்ணா மூச்சி
ஏங் கண்ணா பின்னா பேச்சி
பட்டாம் பட்டாம் பூச்சி
ஏம் பக்கம் வந்து போச்சி

இரவும் வருது பகலும் வருது
எனக்குத் தெரியல –இவ
அழகு சரிய மனசு எரியக்
கணக்குப் புரியல

குழு:

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவளக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு
பொழச்சுப் போறான்  ஆம்பள

– பல்லவி வரிகளைத் தந்ததுமே யுவனுக்கு முழுப்பாடலும் முடிந்ததுபோல மகிழ்ச்சி.ஏற்கனவே தெரிந்த பதிலுக்குக் கேள்வி கேட்டதுபோல சில நிமிடங்களில் மெட்டை உருவாக்கினார்.தாவணி என்ற சொல், ஒரு கலாசாரத்தின் குறியீடு.மரபார்ந்த தன்மையும் லேசான ரம்மியமும் அந்தச் சொல்லுக்கு உண்டு.

பெண்ணுக்கும் சிறுமிக்குமான இடைப்பட்ட வளரிளம் பருவத்தைச் சொல்வதற்கு அந்த ஒற்றைச் சொல் போதுமானது.தீபாவளி என்றால் மகிழ்ச்சியென்றும் மனசுக்குப் பிடித்த என்றும் புரிந்துவிடும்.இரண்டுவார்தைகளையும் இணைத்து கோர்க்கும்போது புதியாக இருந்தது.ஒருபாடலுக்குப் பல்லவி என்பது மிகமிக முக்கியமாகக் கருதப்படுவது.ஏனெனில்,காலங்கடந்தும் பல்லவி வார்த்தைகளே பாடலின் முகவரியாக அமையும் என்பதால்.ஒரு பாடலுக்கும் பல்லவி சரியாக அமைந்துவிட்டால் அதன் பின்வரிகள் கவனிக்கப்படும்.

திரைப்பாடலில் பிரதானமாகக் கொள்ளவேண்டியது பல்லவிதான்.பாடலின் தொடக்கத்திலேயே அந்தப் பாடலுக்கான சூழல்,காட்சி, தேவை மூன்றையும் விளக்கிவிட வேண்டும்.அப்போதுதான் பாடலின் செல்நெறி சரியாக அமையும்.உதாரணமாக,”நெஞ்சிலோர் ஆலயம்” படப்பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.சொன்னது நீதானே சொல்,சொல் என்னுயிரே என்பதிலேயே சூழலின் மொத்த சாளரமும் நமக்குள் திறந்துவிடும்.

பல்லவி வரிகளுக்கு யுவன் அமைத்த மெட்டு அனைவருக்கும் பிடித்துப்போகவே சரணத்தைத் தொடருங்கள் என்றார் இயக்குநர்.பல்லவியை நான் தந்துவிட்டேன் சரணத்தை யுவன் தரட்டும்,அதற்கு எழுதுகிறேன் என்றேன்.செல்லமான விளையாட்டுப் போல பணி தொடந்தது.

அமைத்த மெட்டை அவர் வாசிக்க வாசிக்க ,மனதுக்குள் மனனம்செய்துகொண்டே எப்படித் தொடங்கலாம்.என்னென்ன வகைகளில் நாயகியை வர்ணிக்கலாம் என யோசித்தேன்.குறுக்கெழுத்துப் போட்டிக்கு வார்தைகளை தேடிவிட்டு பின் சரியாகத்தான் எழுதி இருக்கிறோமா என பதிலிருக்கும் பக்கத்தைத் துழாவுமே அதுமாதிரி.அழகைப்பற்றி எழுத வேண்டும் என சொன்னதுமே எனக்கு காந்தியின் புகழ்பெற்ற வாக்கியம்தான்  நினைவுக்கு வந்தது.அமைதி எனும் அமிர்தத்திற்காக ஏங்கித் தவிக்கும்,சண்டைகள் மலிந்த இவ்வுலகுக்கு அமைதிக் கலையைக் கற்பிக்கக் கூடியவர்கள் பெண்களே. ஆனால்,ஆண்கள் தங்கள் அமைதி பெண்களால் கெடுவதாக புலம்பித் திரிகிறார்கள்.

சரணம்01

ரெண்டுவிழி ரெண்டுவிழி
சண்டையிடும் கோழியா
பத்துவிரல் பத்துவிரல்
பஞ்சுமெத்தைத் தோழியா

பம்பரத்த போல நானும்
ஆடுறேனே மார்கமா
பச்சத்தண்ணி நீகொடுக்க
ஆகிப்போகும் தீர்த்தமா

மகாமக குளமே – ஏ(ன்)
மனசுக்கேத்த முகமே
நவாப்பழ நிறமே – என்ன
நறுக்கிப்போட்ட நகமே

இதுக்கு மேல
இதுக்கு மேல
எனக்கு ஏதும் தோணல

கிழக்குமேல விளக்கு போல
இருக்க வந்தாளே – என்ன
அடுக்குப்பான முறுக்குபோல
ஒடச்சித் தின்னாளே

– முதல் சரணம் முற்றுபெற்றதும் இயக்குநருக்கு அலாதியான  சந்தோசம்.ஒருநூல் கிடைத்துவிட்டால் பாடல் தன்னைத்தானே எழுதிக்கொள்ளும். விரைவாகவும் நிறைவாகவும் எழுதி முடித்தேன்.

எப்போதும் என்மீது லிங்குசாமி வைக்கும் நம்பிக்கை ,பொய்த்துவிடக் கூடாதே என்பதில்  கவனத்தோடு இருப்பேன்.ஒருபாடல் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெறும்வரை அதன் பின்னால் இருக்கும் திரைகள் தெரிவதில்லை.பாதாதி கேசம்,பாவலர் பாடல்,தேக்குமர ஜன்னல்,ஈச்சமர தொட்டில்,குறும்புத்தேள்,ஈரக்குழை,அடுக்குப்பானை என்பன போன்ற வார்த்தைகளுக்குத் தனியான அடையாளம் உண்டு.அந்த அடையாளங்களை ஓசையோடு இணைக்கும்போது வேறொரு உலகத்திற்குள் பிரவேசிக்கும் அனுபவத்தைப் பெறலாம்.

சரணம்02

கட்டழகு கட்டழகு
கன்ணுப்பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும்வெகு தூரமே

பாவாட கட்டி நிற்கும்
பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர
பாசத்தோட காட்டு நீ

தேக்குமர ஜன்னல் – நீ
தேவலோக மின்னல்
ஈச்சமரத் தொட்டில் – நீ
எலந்தப்பழ கட்டில்

அறுத்த வாலு குறும்புத்தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொழ  குலுங்க குலுங்க
சிரிச்சி நின்னாளே  – என்ன
ஓரவிழி  நடுங்க நடுக்க
நெருப்பு வச்சாளே

– லிங்குசாமிக்கு எப்பவும் நிறைய எழுத வேண்டியதில்லை.காட்சிக்கு உள்ளே எவ்வளவு தேவையோ அத்தோடு  நிறுத்தச்சொல்வார்.அவரும் கவிதைக்காராக இருப்பதால் கூடுதலாக ஒரு வசதி விடாமல் வெவ்வேறு வகைகளில் நம்மை ஊக்கிக்கொண்டே இருப்பார்.அவருடன் நான் பணிபுரிந்த பாடல்கள் அத்தனையிலும் செறிவும் அடர்த்தியும் கூடி இருப்பதாகவே உணர்கிறேன்.நட்பின் மையத்தில் உழலும்போதுதான் படைப்பும் படைப்பாளனும் பிரகாசிக்கிறார்கள்.படைத்ததைப் பற்றி பேச என்ன இருக்கிறது ,படைப்பே பேசும்.

Advertisements

3 பதில்கள் to “முன்னாள் சொற்கள் 1”

 1. பழைய பாடலுக்கு புது அர்த்தம் தேடுவதாக எண்ணுகிறேன்.

  🙂

  தாமரையின் புதிய பாடல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 2. karthick said

  Vazthukkal thozhare, thiramaiyaana iyakkunaral kuda kidaikalaam,lingusamyai pola rasanaiyaana iyakunar ungalukku kidaithathanaal neengal adhistasaali..

  karthick

 3. nanrasitha said

  situation ku eththa padal. super

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: