யுகபாரதி

முன்னாள் சொற்கள் 2

Posted by யுகபாரதி மேல் மார்ச் 12, 2010

மிகச் சமீபத்தில் என்னை வெகுவாக ஈர்த்தவர் இயக்குநர்.சமுத்ததிரக்கனி.அவருடைய முந்தையப் படங்களில் இருந்து முற்றிலும்  வேறுபட்டு,நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னை நிரூபித்துக்கொண்டவர்.என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற முத்திரை வாக்கியத்தோடு வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தை அத்தனை எளிதாக யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

நட்பைப் போற்றிவந்த பல படங்களில் இல்லாத ஓர் அம்சத்தைப் பற்றி வித்யாசமாகக் கதை சொன்னதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இயல்பிலேயே நட்பைப் போற்றுவர் என்பதால் அவர்மீது என் தனிப்பட்ட பிரியம் குவிந்துவிட்டது.சுப்ரமணியபுரம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர். சசிக்குமாரும் ஒளிப்பதிவாளர் கதிரும் பணியாற்றியப் படமென்பதால் நடோடிகளுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பைக் கொஞ்சமும் குறைத்துவிடாமல் நடோடிகளை உருவாக்கி வெற்றி சாதித்திருக்கிறார் கனி.

எனக்கு கனி நேரடி அறிமுகமில்லை.கருப்பசாமி குத்தகைதாரர் பாடல்கள் வெளியான சமயத்தில் ஒரு பிற்பகல் வேளையில் தொலைபேசி மூலம் பாடல்கள் பிடித்திருப்பதாகவும் விரைவில் நாம் சந்திக்க வேண்டிவரும் என்பதாகவும் பத்துவரிகள் பேசியிருந்தார்.பிறகு, சசிக்குமார் அலுவலகத்தில் வழக்கமான சந்திப்பு.இந்த இரண்டு சந்திப்பிலும் அவர் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.சினிமாவில் சில நேரங்களில் நல்ல மனிதர்களைத் தாமதமாகவே அடையாளப்படுத்திக்கொள்ள நேர்ந்துவிடும். தங்களை முனைந்து வெளிப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் சில நேரங்களில் தோற்றுப் போய்விடும் அபாயமும் உண்டுதான்.

சமுத்திரகனி சம்போ சிவ சம்பா -பாடலுக்கான சூழலை என்னிடம் பெரிதாக விளக்கவில்லை.நட்பைப்பற்றியும் நட்புதரும் வலியை பற்றியும் எழுதினால் போதும் என்றுதான் தொடங்கினார்.இந்தப் பாடலுக்குக் கதைச் சூழல் அவசியமில்லை.பொதுவான தளத்தில் இயங்கினாலே போதும் என்றார்.சரி என்று நானும் மெட்டை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.பாடலின் அடிநாதமாக கனி விரும்பியது ரெளத்திரம்.நட்புக்கான ரெளத்திரம்.நட்பு பாழ்படும் போது அதைக் கண்டிக்கும் ரெளத்திரம்.சம்போ சிவ சம்போ என்பது சிவ தாண்டவத்தின் மூலச் சொற்கள். எனவே, அதைப் பயன்படுத்திக்கொண்டோம்.சித்தன் போக்கு சிவன் போக்காக இருக்கும் இளைஞர்களுக்கு இடையிலான கதை என்பதால் அவ்வார்த்தைகள் பொருத்தமாயின.பாடலுக்கான மெட்டை வாங்கிக் கொண்டு போனேனே தவிர உடனே எழுதவேண்டும் என்ற உத்வேகம் எழவில்லை.காரணம்,இந்தப்பாடலே படம் நெடுகிலும் வரும் என்பதால் அவரசப்படாமல் எழுதத் தீர்மானித்தேன்.நட்பைப் பற்றி யோசித்து நிதானத்திற்கு வருவதற்குள் நான்கைந்து நாள் கடந்துவிட்டன.இனியும் கடத்துவது ஆகாதென எனக்கு நானே சொல்லிக்கொள்வதுபோல் எழுதினேன்.

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொளுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

– உள்ளத்தில் உள்ளது கவிதை, உண்மை தெளிந்துரைப்பது கவிதை என கவிமணி சொல்லியது நினைவிலேயே வைத்திருப்பவன் நான்.சந்தம் கேட்கும் தொனிக்கேற்ப வார்த்தைகளை இட்டு நிரப்புவது மட்டுமே பாடலாசிரியனின் வேலை இல்லை.சந்தக் கட்டுகளுக்குள் விரவி வரும் வேகத்தையும் வாழ்வின் பேருண்மைகளையும் பாடலில் கொண்டுவர வேண்டும்.அவ்வாறு அமையும் பாடல்களை மக்கள் கொண்டாடிவிடுவார்கள்.உதாரணமாக,மக்கள் திலகம் எம்.ஜி.யாரின் பல பாடல்களைச் சொல்லலாம்.

நீயென்ன நானுமென்ன
பேதங்கள் தேவையில்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை

சிரிக்கின்ற நேரம் மட்டும்
நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட
நட்புண்டு நீங்கிடாதே

தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் பயமே இல்லை
வெற்றியே

– முழுப் பாடலும் எழுதிமுடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை.நதி பெருக்கெடுக்கும் போது மிதக்கும் சக்கைகள் ஒதுங்கிக்கொள்வது மாதிரி ஒரே ஓட்டத்தில் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தது போன்ற திருப்தி.அடுத்தப் படைப்புக்குள் புகும் வரையிலான திருப்தி.படைப்பில் திருப்தி என்பது தற்காலிகமானதுதானே.எழுதிய வரிகளை இயக்குநரிடம் காண்பித்தேன். பிடித்த வரிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தோடு அவரிருந்தார்.சில நொடிகளுக்குப் பின் பாடலின் தொடர்ச்சி சரியாக வந்திருக்கிறதாப்  பாருங்கள் என என்னிடம் தந்தார்.சரியாகவே வந்திருந்தது.எல்லாம் சரி, இப்போதாவது கதையைச் சொல்லக் கூடாதா என்றேன்.சிரித்துக்கொண்டே சொல்லத் தொடங்கினார்.பாடல்கள் சிறப்பாக அமைந்துவிட்டால்
படம் பெரும்வெற்றி பெறும் என்றேன்.முழுகதையும் கேட்டதற்குப் பின்னால் இரண்டாவது சரணத்தில் சில திருத்தங்கள் அவசியமாகப் பட்டன.வெறும் நட்பைப் பற்றி என்பதாக பாடல் அமைந்தால் பாடலின் வீரியம் வெளிப்படாது எனவே,கதையை ஒட்டி சில வரிகள் இணைப்போம் என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

பாடல் மும்பையில் பதிவாகும் சமயத்தில் கனி அழைத்தார்.தொலைபேசியிலேயே இரண்டாவது சரணத்தைச் சொன்னேன்.இசையமைப்பாளர்.சுந்தர்.சி.பாபு என் ஆப்த நண்பர்களில் ஒருவர்.திருத்தத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.பாடலின் வெற்றி இம்மாதிரியான ஏற்புகளில்தான் அடங்கியிருப்பதாக எண்ணுகிறேன்.

ஏக்கங்கள் தீரும் மட்டும்
வாழ்வதா வாழ்க்கையாகும்?
ஆசைக்கு வாழும் வாழ்கை
ஆற்றிலே கோலமாகும்

பொய்வேடம் வாழ்வதில்லை
மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகம்
எந்நாளும் வாழும் வாழும்

சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு
காட்டவே

– கன்ஃபூசியஸ் மூன்று வகையான நட்பைப் பட்டியலிடுவார்,நேர்மையானவர்களுடன்,விசுவாசமானவர்களுடன்,அனுபவத் தெளிவு உள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு நன்மை பயப்பது.பசப்புப் பாவனை செய்பவருடன்,போலிப் புகழ்ச்சியால் மயக்க முனைவோருடன்,நாக்கில் நரம்பில்லாமல் பேசுவோருடன் கொள்ளும் நட்பு தீங்கானது.மூன்று வகையிலும் நட்பை யோசிக்கவைத்த சமுத்திரக்கனி மேலும் பல வெற்றி அடைய வாழ்த்தத் தோன்றுகிறது.என் நண்பனுக்கு நான் தேவைப்படும் போது அவனை உதறித் தள்ளும் தன்மை உடையவனல்ல நான் என்ற சேக்‌ஷ்பியர் வார்த்தைகள் ஏனோ இந்த நேரத்தில் ஞாபகக் கதவுகளைத் திறக்கின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: