யுகபாரதி

முன்னாள் சொற்கள் 3

Posted by யுகபாரதி மேல் மார்ச் 24, 2010

கர்நாடக சங்கீதத்தில் கடலாழம் கண்டவர்கள் பலருண்டு.அவர்களில் இன்றும் ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டிருப்பவர்,இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா.அவருடைய சிறப்புகளைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.ஒரு பின்னணி பாடகருக்கு தேசியவிருதும் அதே பாடகருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருதும் கிடைத்திருப்பது அவர் ஒருவருக்கே.பள்ளிக்கூட வாசலையே தொடாத ஒருவர், பல பல்கலைக்கழக டாக்டர் பட்டத்திற்குத் தகுதியானவராக மதிக்கப்படுகிறார் என்றால் எத்தனை ஆச்சர்யத்திற்கு உரியது.அவர் குரலுக்கு தனித்துவமான கம்பீரம் உண்டு.

அவரை வியந்துகொண்டே கழிந்த நாட்களுக்கு இடையில் என்பாடலை அவர் பாட இருக்கிறார் என்னும் செய்தி ரொம்பவே சந்தோசப்படுத்தியது.பசங்க திரைப்படத்திற்காக இயக்குநர்.பாண்டிராஜ் என்னை அழைத்தபோது வழக்கமான காதல் பாடலாக இருக்குமென்று நினைத்தேன்.முன்முடிவுகளோடு வாழ்வை அணுகக்கூடாது என்பதுதான் பாடலின் சூழல் என்றார்.அன்பே பிரதானம்.அன்பினால் ஆகாதது எதுவுமில்லை என்பதே பாடலின் சாரமாக வரவேண்டும். இசை என் இனிய ஜேம்ஸ்வசந்தன்.நல்ல தமிழ்த் தொகுப்பாளராகத் தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி இன்று வெற்றி இசையமைப்பாளராக விழுதிறக்கி இருப்பவர்.

பத்து ஆண்டுகளுக்கு முன் என்னை பாடலாசிரியனாக ஆக்கிப்பார்க்கும் ஆசையோடு தன்னுடைய ஆல்பத்திற்கு எழுதப் பணித்தவர்.வாசனை என்னும் தலைப்பில் வெளிவந்த அந்த ஆல்பத்திலுள்ள பாடல்கள் இன்றும் புதிதுபோலவே தோற்றங்காட்டுபவை.அவருக்கு முன்னாலேயே நான் சினிமாவில் அடையாளப்பட்டிருந்தாலும் அவர் என்மீது ஆரம்பத்தில் காட்டிய அன்பை ஒருபோதும் மறக்க இயலாது.

பாண்டிராஜ்,பசங்க திரைப்படம் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டபோதே இது,தமிழில் மிகச் சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படமாக வருமென்று கூறினேன்.வியாபார சினிமாவில் சமூக அக்கறையோடு படமெடுப்பவர்களின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.அதிலும், தனது முதல் திரைப்படத்தை அவ்விதம் எடுக்க துணிவது சாதரண விஷயமில்லை.ஈரான் படங்களுக்கு இணையான தரத்தில், தமிழில் வந்திருக்கும் முதல் குழந்தைகளுக்கான திரைப்படம் பசங்க என்றால் மிகையில்லை.

பல்லவி

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

– இரண்டொரு நாளில் படப்பிடிப்பு என்பதால் உடனே பாடலை முடிக்க வேண்டிய கட்டாயம்.சந்தத்தை உடனுக்குடன் கேட்டு எழுதிக்கொடுத்தேன்.இயக்குநர் கதைக்கு தேவையான வரிகளைத் தேர்தெடுத்து இசையமைப்பாளரிடம் தர, சுடச்சுட அவரும் பாடிப்பார்த்து சிலமணி நேரத்தில் முழுபாடலும் தயாரானது.

சரணம்:01

வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம்?
பூமியே நமக்கானது

சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்?
யாவுமே இயல்பானது

மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே

கலைகின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே

– வீட்டுக்குள் நிகழும் சின்னச்சின்ன கசப்பிலிருந்து வெளியேறாவிட்டால் நிம்மதி தொலைந்துவிடும்.இருப்பையும் இயல்பையும் புரிந்துகொண்டால் எந்த சிக்கலுமில்லை.மாறாமல் வாழ்வுமில்லை,தேடாமல் ஏதுமில்லை என்பதில் நம்பிக்கை விதை தூவிய காலத்தை நெகிழ்வோடு நினைத்துக் கொள்கிறேன்

சரணம்:02

பாசமே கோவில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே

நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே

கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே

ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் கானலே

– ஏணியே தேவையில்லை, ஏறலாம் மேலே மேலே என்ற வரிக்கு எங்களுக்குள் பெரிய விவாதமே தொடங்கியது.யாருமே கைதூக்கிவிடாமல் எப்படி ஒருவர் மேலே வர முடியும்?தெரிந்தோ தெரியாமலோ நமக்காக யாராவது ஒருவர் உதவிக்கொண்டே இருக்கிறார்.அப்படியிருக்க தனியாக ஒருவர் எப்படி முன்னேற முடியும்? என்பதே விவாதம்.அந்த விவாதம் ஆரோக்கியமானதாகவே அமைந்தது.யார் உதவி புரிந்தாலும் அதாவது, எத்தனை ஏணி இருந்தாலும் ஏற வேண்டும் என்கிற நம்பிக்கை இல்லை என்றால் உயரமுடியாது.நமக்குள் கனன்று கொண்டிருக்கும் தீயை காலம் அணைத்துவிட முயன்று கொண்டே இருக்கும் அதை அணையவிடாமல் ஊதி பெருக்கி உயந்தவர்களே வெற்றியாளர்கள்.கலீல் ஜிப்ரான் சொல்வதைப் போல நன்னம்பிகை மிகையாகக் கொண்டவன், ரோஜாவையே காண்பான்; முட்களைக் காண மாட்டான்.நன்னம்பிக்கை அற்றவன்,ரோஜாவைப் பொருட்படுத்தாமல் முட்களையே வெறித்து நோக்குவான் .ரோஜாவை கண்டவர்களில் நேற்று ஜேம்ஸ் வசந்தன்.இன்று பாண்டிராஜ்.நாளை நீங்கள்.

Advertisements

ஒரு பதில் to “முன்னாள் சொற்கள் 3”

  1. karthick said

    ஏணியே தேவையில்லை, ஏறலாம் மேலே என்ற உங்கள் வரிகளை மாற்ற சொல்லாமல் படமாகிய இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் அதனை சிதைக்காமல் இசை வடிவம் கொடுத்த இசையமைப்பாளர் வசந்தன் போன்றவர்களுடன் பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பு கிட்டியதால் நீங்கள் உண்மையிலேயே அதிஷ்டசாலிதான்.

    கார்த்திக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: