யுகபாரதி

முன்னாள் சொற்கள் 4

Posted by யுகபாரதி மேல் மார்ச் 28, 2010

வெற்றி பெறுகின்ற வரை ஒரு வெற்றியை நம்மால் கற்பனை மட்டுமே செய்ய முடியும்.ஆனால், அந்த வெற்றியை நாம் அடைகின்ற போது  செய்த கற்பனையை விட சற்றே குறைவானதாகவே தோன்றிவிடும்.யாராலும் கற்பனை செய்ய முடியாத வெற்றியாக அமைந்தது மன்மத ராசா பாடல்.அந்தப்பாடலை  எழுதும் போதோ, இசையமைக்கும் போதோ,குரல்பதிவின் போதோ,படப்பிடிப்பின் போதோ யாருமே அது அடையப்போகும் வெற்றியை யூகித்திருக்க முடியாது.ஏனெனில், யூகத்திற்கு அப்பாற்பட்ட வெற்றியை அப்பாடல் அடைந்தது.அதற்கு பலரும் பல காரணங்களைப் பட்டியலிடலாம்.என்னைப் பொறுத்தவரை அந்த வெற்றி முழுவதும் இயக்குநர்.சுப்ரமணியம் சிவாவுக்கே உரியது.

முதல்பட வாய்ப்பு கிடைக்கும் ஒரு இயக்குநர் எத்தனை வலிகளைச் சுமக்க வேண்டுமோ அத்தனை வலிகளையும் சிவா சுமந்தார்.அதற்கும் மேலாக என்று கூடச்சொல்லலாம்.தயாரிப்பு முறையிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி அந்தப் படம் என்வாழ்வில் மறக்க முடியாத பல தீர்மானங்களை என்னுள் கட்டமைத்தது.கடின உழைப்பு இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை என்பது மட்டுமில்லை.கடின உழைப்போடு நம்பிக்கையும் முக்கியம் என்பதை.சிவா, ஒருவரே அந்த வரிகளை நம்பியவர்.அந்த வரிகளுக்குள் கிடக்கும் கவர்ச்சியை உணர்ந்தவர்.அவருடன் பணியாற்றிய இரண்டாவது திரைப்படம் பொறி.

மன்மத ராசாவை எழுதியன் மூலம் முழுநேர பாடலாசிரியனாக நான் மாறவும் பத்திரிகை பணியைத் துறக்கவும் நேர்ந்தது.துள்ளலிசை நாயகர்களாக நானும் சிவாவும்  இசையமைப்பாளர் தினாவும் அறியப்பட்ட சூழலில் அதை முறியடிக்க விரும்பி செய்த பாடலே ”பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்”.காதலிக்கிறார்கள் என்பதைத் தாண்டி இப்பாடலுக்கான சூழலாக கொள்வதற்கு எதுவுமில்லை. ஒரு பாடலை எத்தனை சுதந்திரமாக எழுத விரும்புகிறோமோ அத்தனை சுதந்திரத்தோடு அணுக அனுமதிப்பவர் தினா.வேலை பளுவில் கூட வெகுளியாகச் சிரிக்கவும் வெளிப்படையாய் இருக்கவும் அவரால் முடியும். எழுதிக்கொடுங்கள், இசையமைப்போம் என்றார்.

நமக்குப் பிடித்த விஷயங்களை நமக்கு பிடித்தவருடன் பகிர்ந்து கொள்வது ஒரு விதம்.நமக்குப் பிடித்தவற்றை பிடித்தமானவராகவே கருதுவது இன்னொரு விதம்.இரண்டுவிதமாகவும் இப்பாடலை எழுதிப்பார்த்தேன்.இப்பாடலுக்கான பல்லவியை என்னுடைய தெருவாசகம் தொகுப்பில் உள்ள ரயில்பாடகன்  கவிதையில் வரும் பின்வாசல் துளசி மாடம்,பேருந்தின் ஜன்னலோரம் என்ற தொடக்கத்தை சற்றே மாற்றி வைத்து ஆரம்பித்தேன்.

முதல் இரு வரிகளைச் சொன்னதும் சிவாவுக்கு பாடல் மீது நம்பிக்கை வந்து விட்டது.அப்பறம் என்ன கவி, என்றார்.அவர் என்னை அவ்விதமே அழைத்துப் பழகியிருந்தார்.அடுத்தது என்ன என்று கேட்பதற்குள் அருவிமாதிரி பாடல் கொட்டிவிட்டது.இடையில் இரண்டொரு வார்த்தைகளை மட்டும் நீக்கிவிட்டு முழு பல்லவியையும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முடித்தேன்.சரியாக பத்து நிமிடத்தில் பாடலுக்கான இசையை தினா வடிவமைத்தார்.அந்த நாள் எங்கள் மூவருக்கும் முக்கியமான நாளாக அமைந்தது.

பல்லவி

பேருந்தில் நீயெனக்கு
ஜன்னல் ஓரம்
பின்வாசல் முற்றத்திலே
துளசி மாடம

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
செல்லக் கோபம

ஆளில்லா நள்ளிரவில்
கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயா?

-சின்னச்சின்ன பிரியங்களைப் பட்டியலிடுவதே பாடலின் தொனியாகப் பாவித்துக் கொண்டு சரணத்தை எழுதித் தொடங்கியதும் மனது சந்தோசத்தில் மிதந்தது.நீண்ட நாளாக நான் யோசித்து வைத்திருந்த அத்தனைப் பொறிகளையும் மணியாகக் கோத்தேன்.

சரணம்:01

பயணத்தில் வருகிற
சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற
முதல்கூச்சம

பரீட்ச்சைக்குப் படிக்கிற
அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும்
முதல்மால

புகைப்படம் எடுக்கையில்
திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானா?

அடைமழை நேரத்தில்
பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானா?

தினமும் காலையில்
எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானா?

– அப்பறம் என்னென்ன சொல்வது என்று தொடரத் தொடர பாடலின் சரடு நீண்டு கொண்டே போனது ஆச்சர்யமாயிருந்தது. வாழ்க்கையில் எத்தனை அற்புதமாக தருணங்கள் நம்மை மீட்டுகின்றன.அறிந்தும் அறியாமலும் நாம் கடந்து போகும் அத்தருணங்களைப் பதிவு செய்வதை விட மேலான ஒன்று இருக்கிறதா என்ன?

சரணம்:02

தாய்மடி தருகிற
அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின்
குறுஞ்சிரிப்பு

தேய்ப்பிறை போல்படும்
நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும்
கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட
குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானா?

பிடித்தவர் தருகிற
பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானா?

எழுதும் கவிதையில்
எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானா?

-நம்முடைய இளைஞர்கள் சினிமாவைப் பார்த்து கெட்டுப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் சினிமாப் பாடலைக் கேட்டு காதலிக்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டது இந்தப்பாடலை வைத்துத்தான்.

ஒரு மரம் பூத்துக் குலுங்குகிறது,அந்த வசந்த காலத்தை ஒருவித லயிப்போடு நீங்கள் வரவேற்கிறீர்கள்.அந்த மரத்தின் பச்சை நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் பொன் நிறத்தையும் நீங்கள் பார்க்கும்போது,வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறீர்கள்.இதுதான் ஞானமடைதல் என்பது” என்பார் ஓஷோ.பாடலின் பயணம் கூட அத்தகையதே.ஒரு பாடல் உருவாகும் போது அதன் செழுமைக்காக போராடும் தருணங்கள் ரொம்பவே நிறைவானவை.

சிவாவின் இடையறாத தேடலும் தினாவின் சோர்வில்லாத உற்சாகமும் இந்தப் பாடலை கேட்கும் தோறும் என்னை ஆட்கொள்கின்றன.நல்ல இசை,நமக்குள் ஞானத்தை ஏற்படுத்தி நம்மிடமுள்ள ஊனத்தை மறைத்துவிடுகிறது.

Advertisements

2 பதில்கள் to “முன்னாள் சொற்கள் 4”

 1. மேமன்கவி said

  நான் மிகவும் ரசித்த் பாடல்! காதலிக்க அல்ல. நுண்ணிய
  உணர்வுகளையும் திரைப்பாடல்களில் சொல்லாம் என்பதற்காக
  என்னை அறிந்து இருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த பின்னூட்டல்

 2. //ஆளில்லா நள்ளிரவில்
  கேட்கும் பாடல்///

  இந்த வரி தருகிற உணர்வும்.. இந்த இடத்தில் மட்டும் அழுத்தி நெளிந்து போகிற மதுஸ்ரீ-யின் குரல் பாவனை என நான் ரசித்த மெலடி இது. அருமையான பாடல் வரிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: