யுகபாரதி

நான் யுகபாரதி ஆனது எப்படி?

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 14, 2010

                          

                   அப்போது நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பூக்காரத் தெரு நெட்டுக்கட்டு வீட்டின் முகப்பில் காரல்மார்க்ஸ்,லெனின் இருவருடைய நிழற்படங்களும் இருந்தன.அந்த நிழற்படங்கள் மீது தூசி படிந்தாலோ எலிகள் எச்சமிட்டுவிட்டாலோ அப்பாவுக்குப் பொறுக்காது.உடனே,தன் தோளில் கிடக்கும் சிவப்புத்துண்டால் அதனை சுத்தம் செய்யத் தொடங்கிவிடுவார்.அவரைப் பொறுத்தவரை அவை வெறும் நிழற்படங்கள் அல்ல.நிகழப்போகும் விடுதலைக்கான நினைவுச்சின்னங்கள்.அந்தப் நிழற்படங்களில் உள்ளவர்கள் யார் என்றும் அவர்கள் மீது அப்பாவுக்கு ஏன் இத்தனை பக்தி என்றும் ஒன்பது வயதான எனக்கு தெரியாது.ஆனால்,அவர்களை அப்பா போற்றிய விதத்தால் நாளடைவில் அவர்கள் மீது எனக்கும் மரியாதை வரத் தொடங்கியது.

                வீட்டு அலமாரியில்   ராதுகா பதிப்பகத்தின் மார்க்சீய நூல்களும் திராவிடக் கழகத்தின் வெளியீடாக வரும் பெரியாரிய நூல்களும் நிறைந்திருக்கும்.முற்றத்தில் தோழர்கள் நிறைந்திருப்பார்கள்.அனல்பறக்கும் அரசியல் விவாதங்களும் உணர்வைக் கிளர்த்தும் இலக்கிய சொல்லாடல்களும் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.வாய் பார்க்கும் சிறுவனாக தூணில் சாய்ந்தபடி நான் நின்றிருப்பேன்.அந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் ஆவலிருந்தாலும் போதிய வாசிப்பு இல்லாத நிலையை உணர்ந்து மெல்ல படிக்கத் தொடங்கினேன்.மார்ச்சிம் கார்கியின் தாய் நாவலே நான் வாசித்த முதல் நூல்.அந்த நூல் மேலும் பல நூல்களை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது.எதிர்வாதம் புரிவதற்காகவே வாசித்து வாசித்து ஒருகட்டத்தில் நூல்களின் தீவிரக் காதலனாக மாறிப்போனேன்.அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் கவிதையின் மூலவிதை எனக்குள் முளைவிட்டிருக்க வேண்டும்.

                             எண்பதுகளில் விஸ்வரூபமெடுத்த ஈழப்பிரச்சனையே என் முதல் கவிதைக்கு கருவானது.ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். அது கவிதையா? வசனமா? என்றெல்லாம் தெரியாமல் தொடர்ந்து எழுதுவதும் வாசிப்பதுமாய் இருந்தேன்.வாசிப்பில் சுகம் கண்டுவிட்ட என்னை அப்பாவும் அம்மாவும் ஊக்குவித்தார்கள்.பள்ளிப் பாடங்களை விட எனக்கு கவிதை இலக்கியங்கள் மீது ஆர்வம் மிகுந்திருப்பதை உணர்ந்து உனக்குப் பிடித்ததை செய், என்றார்கள்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கிளம்பும் அதிகாலையில் கூட  கவிதை எழுதி அம்மாவின் அழுகைக்கு காரணமாகியிருக்கிறேன்.இதைவிட பெரிய விஷயம், பள்ளி நிர்வாகமே என் கவிதைகளைப்  பாராட்டித் தொடர்ந்து எழுதச் சொன்னார்கள்.பள்ளிக்கூட அறிவிப்புப் பலகையில் பிரசுரமாகும் என் கவிதைகளைக் கத்தரித்து ஒட்டிவைத்து கெளரவப்படுத்தினார்கள்.பெயரை அச்சில் பார்க்கும் போதைக்கு அடிமையானவனைப்போல ஒய்வில்லாமல் நாள்தோறும் பத்திரிகைகளுக்குப் படைப்புகளை அனுப்பிக்கொண்டே இருந்தேன்.இடையறாமல் நான் எழுதும் கவிதைகளில் தென்படும் ஒற்றுப்பிழைகளை அம்மாவே நீக்கித்தருவாள்.அம்மா வாசித்துவிட்டு தந்தால் அது,பத்திரிகையில் வெளியாகும் என்ற குருட்டு நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.

   ஒருவனுக்கு நல்ல குரு கிடைத்துவிட்டால் அதைபோன்ற பேறு வேறில்லை என்பார்கள்.அப்படித்தான் எனக்கு தமிழ்ப் பாடம் எடுத்த ராஜேஸ்வரி அம்மா.அவர்கள்தான்  என்னைக் கவிதை எழுதத் தூண்டிக்கொண்டே இருந்தார்கள்.வகுப்பில் எனக்காகவே சில விசேஷக் கவிதைக் குறிப்புகளைத் தருவார்கள்.தன் வீட்டில் இருந்த பல புகழ்பெற்ற கவிதை நூல்களைக் கொண்டுவந்து கொடுத்து புதுக்கவிதையின் செல்நெறியை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.அவர்கள் மாற்றலாகி வேறு ஊருக்குப் பணியாற்றப் போனபோது நான்கைந்து நாள் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டுவிட்டு அழுதுகொண்டே இருந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது.

                  அவர்களுக்குப் பின் அந்த இடத்தில் அப்பாவின் சிநேகிதரும் என் மீது அளவில்லா அன்பும் கொண்டவருமான புலவர்.செல்லகணேசன். முறையாகத் தமிழைக் கற்பிக்க தினந்தோறும் மாலை வேளைகளில் அவர் வீட்டுக்கு அழைத்துப்போவார்.ஏறக்குறைய அந்த குருகுல வாசம் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தன.சங்க இலக்கியத்தின் சாறு முழுக்க நிலா கரையும் அவர் வீட்டு பின்வாசலில் அமர்ந்து குடித்தது நல்ல அனுபவம்.இலக்கியத்தின் இண்டு இடுக்கெல்லாம் அவரால் எனக்கு சொல்லித்தரப்பட்டது.

                        ஒரு போருக்குத் தயாரிப்பதைப் போல அவர் என்னைத் தயாரித்தார்.வெண்பாவுக்கு ஈற்றடி கொடுத்து மறுநாள் எழுதிவரச் செய்வார்.உடம்புக்குச் சுகமில்லாமல் என்றாவது பாடம் கேட்கத் தவறிவிட்டால் அவரே தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.ஏன் என்னை சூழ்ந்தவர்கள் அத்தனை பேரும் என் மீது அதீத அக்கறை கொண்டிருந்தார்கள் என்று இந்த நொடிவரை யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

       எழுத்தாளர் தஞ்சை.பிரகாஷ்,அவரே என் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களை வடிவமைத்தவர்.க.நா.சு தொடங்கி கலாப்பிரியா வரை, வால்ட் விட்மன் தொடங்கி வைரமுத்துவரை போதித்தார்.அவரிடம் சந்தேகம் கேட்கப்போனால் அவர் அளிக்கும் விளக்கத்தில் மெய்மறந்து போக நேரும்.காலத்தைப் பொருட்படுத்தாமல் பிறருடைய கேள்விகளுக்காகவே நாம் முழுவாழ்வையும் செலவழித்தவர்.அத்தனை தகவல்களையும் விரல்நுனியில் அல்ல இதழ் நுனியில் வைத்திருப்பார்.தன் தாடியை நீவிக்கொண்டே அவர் பேசும் இலக்கிய உரையாடல் ஓஷோவின் பிரசங்கம் போலிருக்கும்.தஞ்சை சோழன் சிலைக்கு அருகே வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபாதையில் அமர்ந்துகொண்டு அவர் பேசிய இலக்கிய விஷயங்கள் உள்ளத்தைச் சிலிர்க்க வைத்தன.அலாதியான இலக்கிய வெறியை ஊட்டியது. மென்மையாகவும் அதே சமயம் ஆழமாகவும் அவர் எனக்குள் இடம்பெயர்ந்தார்.கருத்துக்களால் என்னை அவர் கரைத்த சம்பவங்கள் நிறைய.

                மணிக்கொடி ,வானம்பாடி என்று வகைப் பிரித்து இலக்கியஆளுமைகளை வாசிக்கப் பண்ணினார்.கணையாழி,சுபமங்களா போன்ற இலக்கிய பத்திரிகைகளுக்குக் கவிதைகளை அனுப்ப வைத்தார்.சிற்றிதழ்களே தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் என்பார்.நீ ஏன் சினிமாவுக்கு பாட்டெழுதப் போகக்கூடாது என்றும் கேட்டிருக்கிறார்.நல்ல இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நீங்களே சினிமாவுக்குப் பாட்டெழுதப் போகச் சொல்கிறீர்களே ஆசானே, என என் சக நண்பர்கள் அவரைக் கோபித்துக் கொண்டதுண்டு.எதையும் எழுதும் விதத்தில் எழுதினால் இலக்கியமாகும் என்று கோபத்தைக் குறும்பாக்கிச் சிரிப்பார்.அவரைக் காணுவதற்காக தமிழகத்தின் அத்தனை ஊர்களில் இருந்தும் இலக்கியவாதிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.அவர்களை அறிமுகப்படுத்திவைத்து நான் எழுதிய கவிதைகளின் புகழத்தக்க வரிகளை அவர்களுக்கு ஒப்பிப்பார்.வாஞ்சையும் வழிகாட்டலும் ஒருசேர அவரிடம் இருக்கும்.அவர் இப்போது இல்லை என்பதும் அவருக்கு என் வளர்ச்சியை சமர்பிக்க இயலாமல் போனதும் பெரிய துக்கம்

    சென்னைக்கு வந்து ராஜரிஷி பத்திரிகையில் உதவியாசிரியராக வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது வாரம்,வார்த்தைச்சித்தர் வலம்புரிஜானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.வீடே நூலகமாக நூல்களே வாழ்வாக கொண்ட ஒருவரை நான் சந்தித்த அந்தத் தருணம் ஏனோ என் கைகள் நடுங்கின.நீதான் யுகபாரதியாப்பா…. என்ற அந்த கணீர் குரல் இன்னமும் இதயத்தை மிரட்டிக்கொண்டே இருக்கிறது.

              வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் வாங்கவே நான் போயிருந்தேன்.ஒவ்வொரு வேள்விக்கும் பதிலளித்து கொண்டே வந்தவர்.இந்த இதழில் நீ எழுதியிருக்கும் கவிதை அபாரம்பா என்றார்.அந்த ஒற்றைப் பாராட்டு ஓடிவந்த என் கால்களுக்கு ஒத்தடமாயின.வேர்த்துநின்ற தேகத்திற்கு விசிறி விசின.பின்னால் அவரிடம் எனக்கேற்பட்ட நெருக்கமும் தேடலும் அறிவு ஊற்றுக்கண்ணாக மாறியது தனிக்கதை.

                ராஜரிஷி காலத்தில் வறுமை பீடித்து மேலும் இளைக்கத் தொடங்கினேன்.நண்பர்கள், அறைக்கு வாடகை தர இயலாத என்னை வெளியேறச் சொன்னார்கள்.பொறியியல் படித்த நீ ஏன் தேவையில்லாமல் கவிதையைக் கட்டிக்கொண்டு அழுகிறாய் என்றார்கள்.திக்கற்று திகைத்த அந்த நொடி என்னை சூடாக்கியது.எதிர்கொள்ளும் சிரமங்களை எப்படியாவது வென்றுவிட மனம் துடித்தது.அதன் விழைவாக ஒரு கோடை மாதத்து நள்ளிரவில் கோடம்பாக்க குறுக்குச்சந்தில் பரதேசிகளில் ஒருவனாக படுக்க நேர்ந்தது.அப்போது அறிமுகமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பழனியாப்பிள்ளையும் பாலாவும் தங்கள் விடுதிக்கு அழைத்துப் போய் அடைக்கலம் கொடுத்தார்கள்.அந்த மழையிரவை நான் மறப்பதற்கில்லை.மழையில் நின்று அழுதால், அழுவது தெரியாது என்பதால் மழையில் நனைவது பிடிக்கும் என்று உடல் கூச முதல்பொய்யை உரைத்தேன்.நான் ஓடிக்கொண்டே இருந்தேன்.ஓய்வெடுக்கும் நேரத்தில் வாசிப்பதும் யாரையாவது சந்தித்து புதுத் தகவல்களைத் தெரிந்து கொள்வதுமாய் இருந்தேன்.

               பத்திரிகை நின்று போனது.சும்மா இருக்கக் கூடாதென்று பிளாஸ்டிக் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன்.உடம்பு நோக சக்கர மிஷினைச் சுற்றும் வேலை.அதிலிருந்து மீள நினைத்தும் வேறு வழியில்லாமல் சில மாதங்கள் கழிந்தன.அப்போதுதான் ராஜரிஷியில் ஆசிரியராய் இருந்த துரை உன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போடேன் என்றார்.சோற்றுக்கே வழியில்லாதபோது சொந்தமாகப் புத்தகம் போடுவதா?என்றேன்.தயக்கத்தை உனக்குள் தங்கவிடாதே முயற்சி செய் என்றார்.சொன்னதோடு மட்டுமில்லாமல் என் கவிதைகளை அவரே சீர்படுத்தி மனப்பத்தாயம் என்ற என் முதல் கவிதைத்தொகுப்புக்குக் காரணமாகவும் இருந்தார்.வடிவமைப்பாளர்,அண்ணன் மதிராஜும் தோழன் அரவிந்தனும் எல்லா வகையிலும் உதவினார்கள்.

                   தொகுப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.கூடவே கணையாழிப் பத்திரிகையில் வேலையும்.தமிழக அரசுப் பரிசும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் அந்நூல் பெற்றதும் எழுதி வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணத்தை உறுதிபடுத்தியது.இந்த நேரத்தில் என் இதயத்தில் முகாமிடும் மூன்று பெயர்கள்,சாமிநாதன்,தமன்பிரகாஷ்,ம.ராஜேந்திரன்.தசரா அறக்கட்டளை நிர்வாகிகள்.கணையாழி மீண்டுவர காரணமானவர்கள்.கணையாழி மாதப் பத்திரிகை என்பதால் சிலநாட்களே வேலை. மீதமுள்ள நாட்கள் முழுக்க வாசிப்புத்தான்.மதிப்புரைக்கு வரும் நூல்களை ஒன்றுவிடாமல் வாசிப்பேன்.வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ள நண்பர்களும் கிடைத்தார்கள்.

           எழுத்தாளர்.இந்திராபார்த்தசாரதி,ஜெயகாந்தன்,கஸ்தூரிரங்கன்,அசோகமித்திரன்,வெங்கட் சாமிநாதன்,ஞானக்கூத்தன்,சா.கந்தசாமி,பிரபஞ்சன்,ந.முத்துசாமி என்று வரிசையாக பலருடனும் நேரடி பரிச்சயம் ஏற்பட்டது.என்னை செழுமைப்படுத்திக் கொள்ளும் சூழலும் வாய்த்தது.முதல் தொகுப்பில் பரவலாக அறியப்பட்ட என்னுடைய கவிதைகளைப் பாராட்டி எழுத்தாளர்.சுஜாதா தனது கடைசி பக்கத்தில் குறித்திருந்தார்.வளர்ச்சியை நோக்கிய வாழ்கிறோம் என்பதால் பொருளாதாரத் தேவைகளைப் பொருட்படுத்தவில்லை.அம்மாவுக்கு எப்போதாவது ஐந்நூறு ரூபாய் மணியார்டர் செய்வேன்.அதையும் அம்மா, நீ எதாவது புத்தகம் வாங்க வச்சிக்கோப்பா எனத் திரும்பி அனுப்பிவிடுவார்கள்.வறுமையிலிருந்தும் சந்தோசமான அந்த காலங்கள் மீண்டும் வருமா என ஏக்கமாயிருக்கிறது.

                 பார்த்துவந்த வேலைகள் பறிபோகிற போதெல்லாம் கிடைத்த வேலையைச் செய்ய நான் தயக்கியதே இல்லை.அதே போல, எந்த வேலை செய்தாலும் என் கனவும் ஆசையும் கவிதையாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.புதிய நண்பர்கள் கிடைத்தால் அவர்களிடம்

படித்ததை, படைத்ததை பகிர்ந்துகொண்டு கருத்து கேட்பேன்.எந்தக் கருத்தாக இருந்தாலும் தர்க்க பூர்வமாக அணுகும் பக்குவத்தைப் பெற்றிருந்தேன்.வேலை என்பது சோற்றுக்கானது மட்டுமில்லை அதிலும் ஆத்ம திருப்தியைத் தேடுவது அவசியம் என்பதை உணர்ந்திருந்தேன்.என்னுடைய தனிப்பட்ட கஷ்டங்களை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்டேன்.எல்லா நேரங்களிலும் விழிப்போடு இருந்தாலும் என் பசி முகத்தைப் பார்த்து சிலர் பரிதாபப்பட்ட சம்பவங்களும் உண்டுதான்.எழுத்து சமூகம் சார்ந்தும் அந்த சமூகத்தின் மதிப்பீடுகள் சார்ந்துமே இயக்குகின்றன என்பதில் ஆழமான நம்பிக்கையை எந்த காரணத்துக்காகவும் நான் கைவிட்டதில்லை.ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒரு புதிய தேடலை ஒரு புதிய வெளிச்சத்தை காண்பதிலேயே குறியாய் இருப்பேன்.ஏனெனில், என்னை விடவும் எனக்காக கவலை கொண்டவர்கள் என்னை சுற்றியிருந்தவர்கள் இல்லையா,அவர்களை எப்படி நான் ஏமாற்ற முடியும்?

              என் மனப்பத்தாயம்,பஞ்சாரம் கவிதைத் தொகுப்புகளைப் படித்துவிட்டு என்னை பாடலாசிரியனாக ஆக்க விரும்பியவர்கள் வாசுவும் தியாகுவும்தான்.இவர்களுக்கு முன்பே இணை இயக்குநர் செழியனும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தனும் குறிப்பிடத்தக்கவர்கள்.ஜேம்ஸ் வசந்தன் அப்போது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.எனினும்,அவருள் கனன்று கொண்டிருந்த இசை ஜீவாலையை நானறிவேன்.வாசனை என்றொரு இசை ஆல்பத்திற்காக ஐந்து பாடலை எழுத வைத்து சின்னதாக எனக்குள் பாடல் பயிற்சியை மேற்கொண்டார்.தியாகு நல்ல கவிதை ரசனை உள்ளவர்.அவரே இயக்குநர் லிங்குசாமியிடம் என்னை அறிமுகப்படுத்தி திரை வாய்ப்பை ஏற்படுத்தினார்.முன்பின் அறிமுகம் இல்லாமல் வெறும் கவிதையாலேயே ஒருவனை அடையாளம் கண்டு அவனுக்கு வாய்ப்பை ஏற்படுத்த எத்தனை தியாகுகள் நம்மில் முன்வருவார்கள்?

         பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற ஒருபாடல் என் இலக்கிய, லெளகீக முகங்களை எல்லாம் மாற்றி ஜனரஞ்சக அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.யுகபாரதி என்கிற பெயர் மணிக்கு ஒருதரமாவது பண்பலை வானொலிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.இதுவும் வேறு எங்கோ போவதற்கான வழி மட்டுமே.

Advertisements

5 பதில்கள் to “நான் யுகபாரதி ஆனது எப்படி?”

 1. thamilannan said

  வணக்கம்
  நல்ல பதிவு முயற்சி என்றும் தோற்றதில்லை
  வாழ்த்துக்கள்

 2. குறிக்கோளும் அதை அடைவதற்கான அயராத முயற்சியும் இருப்பவர்கள் என்றுமே தோற்றதில்லை.

  அருமையான பதிவு.

  வாழ்த்துகள்.

  ஏன் நீங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலே தருவதில்லை?

 3. ஏன் நீங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலே தருவதில்லை?

  சமரசம் இல்லாத காரணங்கள் உங்களிடம் இருக்குமெனில் சொல்லுங்களேன்? இல்லாவிட்டால் எல்லோரும் மேலே வந்தவுடன் சொல்லும் நானும் ரொம்ப கஷ்டப்பட்டவன் தான்?

 4. rammohan1985 said

  அற்புதமான, தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய கட்டுரையை விகடன் எனர்ஜி பக்கங்களிலேயே படித்தாயிற்று…வாழ்த்துக்கள்….

 5. I am excited to see your site. It is amazing to come closer to Yugabharathi, as everything gather to sing the gloru of the poet. The excellent coinage and the extraordinary humility in recollecting the trodden path of thorns of humiliation, is really marvellous. The time will make him furthur great and will take him to still greater heights.

  Kasimyndhan K.Palaniswamy

  Devendra Ilakkya mandram Coimbatore

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: