யுகபாரதி

முன்னாள் சொற்கள் 6

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 17, 2010


ழை ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு அற்புதத்தைக் கொண்டு தருகிறது.மழை என்றால் ரம்மியம் என்றும் மழை என்றால் பேரின்பம் என்றும்   நம்முடைய இதயம் இயல்பாகவே எண்ணத் தொடங்கிவிடுகிறது. காதலாய் மழையையும்,மழையைக் காதலாகவும் கருதும் மனமுடைய இயக்குநர்.ஆர்.பன்னீர்செல்வம்.`ரன்’ திரைப்படத்துக்கான பாடல் பணிகள் தொடங்கிய நிலையில்தான் பன்னீர் எனக்கு அறிமுகமானார்.தொலைபேசி உரையாடலைக்கூட கவித்துவமாக மாற்ற விரும்புவர்.இரண்டொரு சந்திப்பிலேயே நெருக்கமான தோழராகிவிட்டவர்.அவருக்குப் பட வாய்ப்பு வந்ததும் பாட்டெழுத அழைக்கப்பட்ட முதல் நபராக நானிருந்தது,அவருடைய அன்பின் அடையாளம்.பன்னீர்செல்வம் இயக்கிய ரேனிகுண்டா திரைப்படம்  விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.நான் மேற்கூறிய மழைப்பிரசங்கத்திற்கான பொருள், அப்படத்தைப் பார்தவர்களால் மட்டுமே  ஏற்க முடியும்.காலத்தின் நெடிய பாதையில் கால்வைக்கத் தடுமாறிய அபலை இளைஞர்கள் பற்றிய கதை.செய் அல்லது செத்துமடி என்றில்லாமல் கொல் அல்லது கொல்லப்படுவோம் என்ற நவீன உலகத்தை வன்முறைக் குருதியோடு வடித்தெடுத்த படம்.

படத்தின் கதாநாயகன் எப்போதும் மலர்ச்சியற்ற முகமுடையவன்.சோகம் எனும் பறவை தலைக்கு மேல் பறப்பதைத் தவிர்க்க இயலாது.ஆனால்,தலையில் கூடுகட்டுவதைத் தவிர்க்கலாம் என்றொரு புகழ்பெற்ற பொன்மொழி உண்டு.அவனுக்குள் ஆழ்ந்த சோகமொன்று இருக்கிறது, அந்த சோகம் அவனை புற உலகத்தையே முற்றாக வெறுக்க வைக்கிறது.தந்தையைத் தாயைக் கொலை புரிந்தவனை பழிக்குப்பழி வாங்க தன்னுடன் சிறையிலிருக்கும் சீரழிந்த சிறுவர்கள் உதவுகிறார்கள்.அந்த உதவி அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு மேலும் சில கொலைகளுக்கு வழி வகுக்கிறது.அந்த சந்தர்ப்பத்தில் ஒருத்தி,அவளுக்கும் ஒரு விடுதலை தேவையாயிருக்கிறது.இவனுக்கும் அவளுக்கும் மெல்ல அரும்புகிறது புன்னகை.அந்தப் புன்னகை, மழையாகவும் காதலாகவும்…… இயக்குநர்,இந்த சூழலைச் சொல்லக் கேட்க வேண்டும்.கண்கள் விரிய ஒரு கவிஞனே அந்த கரகரத்தக் குரலில் எழுந்து வருவான்.

பல்லவி

மழைபெய்யும் போதும்
நனையாத ஈரம்
இதுயென்ன மாயம்
யார் செய்ததோ?

நடக்கின்ற போதும்
நகராத தூரம்
இதுயென்ன கோலம்
யார் சொல்வதோ?

இது மின்னலா?
இல்லை தென்றலா?
அறியாமலே அலைபாயுதே

இது வண்ணமா?
இல்லை வன்மமா?
விளங்காமலே விளையாடுதே

– முரண்களின் மையத்தில்தான் காதல் முளைவிடுமா எனத் தெரியவில்லை.கைதியாக அவன்.விடுதலைக்காக அவள் என்ற நேர்கோட்டில் கதை பயணித்தாலும் உள்ளுக்குள் கிளைக்கும் உணர்வுகளை எப்படியாவது இசைக்குள் கொண்டுவர அறிமுக இசையமைப்பாளர்.கணேஷ்ராகவேந்திரா தன்னையே கரைத்துக்கொண்டு பெரும்பாடுபட்டார்.சிகரங்கள் அவருக்குரியதாக மாறும் காலம் வெகு தொலைவிலில்லை.வரிகளுக்கு ஊடாக இசையும் சூழலும் பொருத்தமாகப் பின்னிக்கிடப்பதைத்   தத்ரூபமாக பதிவு செய்த ஒளிப்பதிவாளர்.சக்தி என்றென்றும் என் பாரட்டுக்குரியவர்.

சரணம் 01

சிலநேரம் மயிலிறகால்
வருடிவிடும் புனிதமிது
சிலநேரம் ரகசியமாய்த்
திருடிவிடும் கொடுமையிது

மூடாமல் கண்கள் ரெண்டும்
தண்டோரா போடும்
பேசாமல் மவ்னம் வந்து
ஆராரோ பாடும்

பகலிலே தாயைப் போல
தாலாட்டும் காதலே
இரவிலே பேயைப் போல
தலைகாட்டும் காதலே

– பகலிலே தாயைப்போல என்றதுமே இரவிலே பேயைப்போல என்று யூகிக்க முடிகிறது இல்லையா? மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா, என்பது நவீனக்கவிதை ஒன்றின் புதிய பதிவு.எனக்குத் தெரிந்த உலகத்தை எனக்குப் பிடித்த வகையில் பார்ப்பதும் பழகுவதுமே என் அனுகுமுறை.எந்த வியாபார குயுக்திக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை.நதி மாதிரி ஓட ஆசை.நீர் வற்றிப்போனால் மணலாகக் கிடக்க ஆசை.தொலைந்துவிடாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதுதான் எந்திரயுகத்தின் இயல்பாக இருக்கிறது.நம்மை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்வது?

சரணம் 02

தொலையாமல் தொலைந்துவிடும்
நிலமையிது முடிவதில்லை
விலகாமல் தொடர்ந்துவரும்
வெளிப்படையாய்த் தெரிவதில்லை

கொல்லாமல் கொல்லும் இது
பூப்போல சைவம்
சொல்லாமல் கொள்ளை இடும்
பொல்லாத தெய்வம்

குடையுதே ஏதோவொன்று
அதுதான் காதலே
உடையுதே உயிரும் சேர்ந்து
அதுதான் காதலே

– கொல்லாமல் கொல்லும் இது பூப்போல சைவம் என்ற பதம் பன்னீருக்கு ரொம்பவே பிடித்துப்போனது.கதைக்குப் பொருத்தமானதாகவும் அமையும்போதுதான் பாடல் நிலைத்து நிற்கும்.வெற்றி பெற்ற பல பாடல்கள் அவ்விதமே அமைந்திருப்பதை போகிற போக்கில் கூட அறியலாம்.கவிதைக்கு இலக்கணம் கூற இயலாதது போலவே காதலுக்கும் இலக்கணம் கூற முடியாது.எனவேதான், பாடலின் இறுதி வரிகளைச் சற்றே புதிர்போல அமைத்தேன்.முற்றாக உணர மட்டுமே முடிந்த பல விஷயங்களில் முக்கியமானது காதலும் நட்புமே ஆகும்.நட்பைப் பன்னீரிடமும் காதலை இந்த பாடலிடமும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.ஜேம்ஸ ஆலனுமிடருந்து ஒரு செய்தி,எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய இயலாது.

Advertisements

ஒரு பதில் to “முன்னாள் சொற்கள் 6”

  1. இந்தப் பாடலை பலமுறை மீண்டும் மீண்டும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். தங்களது அற்புதமான எழுத்தும், அதன் உயிரான இசையும், பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமும்… எக்காலத்திலும் சிலாகிக்கக் கூடிய பாடல். வாழ்த்துக்கள் கவிஞரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: