யுகபாரதி

முன்னாள் சொற்கள் 7

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 18, 2010

 

ற்று நோக்கினாலும் எதைப் பார்க்கமுடியவில்லையோ அது வெறுமை எனப்படுகிறது.செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ அது அரிது எனப்படுகிறது என்பார் லாவோட்சு.படைப்பு மனம் என்பது கூட அத்தகைய வெறுமையையும் அரிதையுமே கொண்டு இயங்குகிறது.மெட்டில் சின்ன திருத்தம் வரமுடியுமா என்று அழைத்தார்கள்.வரிகளைத் திருத்தவே வழக்கமாக அழைக்கப்படும் நிலையில் மெட்டைத் திருத்துவதற்கு நான் எதற்காக அழைக்கப்பட வேண்டும்? என்ற யோசனையோடு போனேன். இப்போது இருக்கின்ற பல்லவிக்கான மெட்டை கொஞ்சம் திருத்தினால் இந்தப்பாடல் மேலும் சிறப்பாகும் என்றார் இசையமைப்பாளர்.வித்யாசாகர்.அருகில் ஆமோதிப்பது போன்ற புன்னகையோடு அமர்ந்திருந்தார்,இயக்குநர்.திருமுருகன்.மெட்டி ஒலி என்ற நெடுந்தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தவர்.எம்டன் மகனாக ஆரம்பிக்கப்பட்டு எம்மகனாக வெளிவந்த திரைப்படம் .முறைப்பெண்னைச் சந்திக்கப்போகும் நாயகன் அந்தப் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் பாடல்தான்.ஆனால்,அந்தக் காதலில் நீண்டநாளாக காத்திருக்கும் ஆவலும் அன்பும் வெளிப்பட வேண்டும்.

அந்தக் காலத்து காரைக்குடி வீடு.தனித்த அறை.அலமாரியின் மேல் தட்டில் உள்ள சமையல் பொருளை எடுப்பதற்காக சின்ன முக்காலி மீது முறைப்பெண் ஏறுகிறாள். அப்போது பின்னகட்டு வாசல் வழியாக வரும் நாயகன் அவளை நெருங்குகிறான்.தொட முயற்சிக்கும்போது ஆவென்று முறைப்பெண் அலறுவாள்.தான் தொடப் புகுந்ததை கருதியே அவள் அலறுகிறாள் என நாயகன் கருத உண்மையில், அலமாரியில் இருந்த தேள் அவளைக் கொட்டிவிட்டதாகச் சொல்வாள்.இதுதான் சூழல்.இந்தச்சூழலுக்கு ஏற்ப அமைத்த மெட்டில்தான் திருத்தம் என்று நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

நம்மை நாமே திருத்திக்கொள்ள முயலும் முடிவில்லா ஆசையே படைப்பு என்பதுபோல திரும்பத் திரும்ப ஒன்றில் திருப்திவரும்வரை உழைக்கும் இசையமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர்.நீங்கள் வரிகளைத் தாருங்கள்.நான் மெட்டும் தயார் செய்கிறேன் .இரண்டில் எது சிறப்பாக வருகிறதோ அதற்கேற்ப மேற்கொண்டு பணிபுரிவோம் என்றார்.உடன்பட்டு களமிறங்கும் போட்டியாளர்கள்போல ஒருவருக்கு ஒருவர் தீவிரமடைந்ததை திருமுருகன் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.கால்மணி நேரத்திற்குப் பிறகு கூடு சபைக்கு வந்தேன். என்ன பாரதி என்றார்? மெட்டை முதலில் வாசியுங்கள்.நான் எழுதிய வரிகளைப் பிறகு சொல்கிறேன் என்றேன். அவர் வாசித்ததும் எல்லோருடைய விழிகளும் மின்னத் தொடங்கின.நானும் இந்த மெட்டுக்கு எழுதுகிறேன் என்றேன். அதற்குள் திருமுருகன் நீங்கள் எழுதிய வரிகளை வாசியுங்கள் அதற்கப்பால் மெட்டா பாட்டா என யோசிப்போம் என்றார்.ஹார்மேனியத்தில் வித்யாசாகரின் கைகள் விளையாடிக்கொண்டிருந்தன.நான் வரிகளை வாசிக்கத் தொடங்கினேன்.

பல்லவி

கோலிகுண்டு கண்ணு
கோவப்பழ உதடு
பாலப்போல பல்லு
படிய வச்ச வகிடுஆளத் தின்னும் கன்னம்
அலட்டிக்காத கையி
சோளத் தட்ட காலு
சொக்கவைக்கும் வாயி

– நான் வாசித்துக் கொண்டிருக்கையிலேயே இசையமைப்பாளர் தானமைத்த மெட்டில் அந்த வார்தைகள் பொருந்தி வருவதை மீட்டத் தொடங்கினார்.தனித் தனியே நாங்கள் இருவரும் உருவாக்கிய கற்பனை எப்படி ஒரே கட்டுக்குள் அடங்கின என்பது இன்றும் ஆச்சர்யத்துக்குரிய விஷயமாகவே தோன்றுகிறது.இயக்குநர்,இந்த வர்ணனை சிறப்பு அதே சமயம் அந்தச் சூழலும் பொருந்தும்படி சில வார்தைகளை இணைத்துதர முடியுமா என்றார்.அவர் கேட்டதற்காக இறுதியாக இரண்டு வாக்கியத்தை இணைத்தேன்.

தேளு தொட்ட ஒன்ன
தேடி வந்தேன் தாயி

 -சூழலுக்கும் மெட்டிற்கும் மிகப் பொருந்தமாக அமைந்த பல்லவியைத் தொடர்ந்து முன்னமே எழுதிய சரணங்களை அப்படியே பயன்படுத்தினோம். நாட்டுப்புற பாடல்களின் தீவிரத்தன்மை சில சமயத்தில் அதீத கற்பனைகளாக தென்படக்கூடும்.ஆனாலும் அது ரசிக்கத் தக்கதாக இருப்பதே அதன் சிறப்பு.

சரணம்:01

சீரான ரோசாவே
சீம்பாலு சீசாவே
எட்டியிருப்பதும்
நெட்டி முறிப்பதும்
என்னக் எனக்கு?

தேனான ராசாவே
தேய்க்காத கூசாவே
தொட்டுப் பறிப்பதும்
கட்டியணைப்பதும்
செல்லக் கிறுக்கு

வேப்பல கூடயிப்ப
 தித்திக்குது தேனா
பாப்பா நீ பாதி கொடுத்தா

கேக்கல சோறுதண்ணி
கேட்டுக்க நீ மாமா
ஓம்பேச்ச யாரும் எடுத்தா

அருகம் புல்லுநான்
ஆடாக வேணுமா?

எலவம் பஞ்சுநான்
இடிபாடு தாங்குமா

நீ சாமியா பூதமா
ஒண்ணும் புரியல
ரெண்டும் புரியலயே

 சீம்பாலு சீசாவே,தேய்க்காத கூசாவே என்ற வார்த்தைகளில்  கிறங்கிப்போய் மேலும் மேலும் அது மாதிரியான வார்தைகளைக் கோர்க்கத் தொடங்கினேன்.பத்தாயம் என்ற சொல் விவசாய பூமியான தஞ்சாவூரின் குறியீடு.அதை வைத்துக்கொண்டு அடுத்த சரணத்தை ஆரம்பித்தேன்.பாடலில் எப்போதுமே விரவிவரும் வார்த்தைகளின் நேர்த்தியை பெரிதும் விரும்புபவன் நான்.நான் ரசிக்கும் பாடல்களில் கூட அத்தகைய தன்மையே அதிகம் இருப்பதாக நண்பர்கள் சொல்வதுண்டு.நாம் ரசிப்பதுதான் நம்மை  யாரென்று பிறருக்கும் உணர்த்துகிறது.இயல்பை மீறி  எதற்காகவும்  என்னை நான் மாற்றிக்கொள்ள முயலுவதில்லை.எனக்குத் தெரிந்த உலகத்தை எனக்குத் தெரிந்த  வடிவத்தில்  எழுதிக்கொண்டிருக்கிறேன். அது, மற்றவர்களும் விரும்பும்விதமாக அமைவது என் பாக்கியம்.

சரணம் : 2

பத்தாய நெல்போல
நின்னாயே முன்னால
வம்பு வளக்குது
வம்பு வளக்குது
அந்தச் சிரிப்பு

வெள்ளாவி கண்ணால
சுட்டாயே தன்னால
கொள்ளயடிக்குது
கொள்ளயடிக்குது
கள்ள நெருப்பு

கண்ணுல கொட்டிக்கிட்ட
சீயக்காயப் போல
அய்யோ நீ உறுத்துறியே

தண்ணில சிந்திவிட்ட
சீமயெண்ணப் போல
என்னநீ ஒதுக்குறீயே

கேணி சகடையா
எதுக்கென்ன உருட்டுற

மாதக் கடைசியா
ஏ(ன்)யென்ன வெரட்டுற

நீ வறுமையா வசதியா
அங்க குறையுது
இங்க நெறையுது ஏன்?

– கேணி சகடை,மாதக்கடைசி,சீயக்காய், சீமெண்ணை போன்ற வார்த்தைகள் கொண்டுவருகிற கிராமிய மணம் பாடலுக்கு வெகுவான அழகைக் கொடுத்தது.இடையறாத தேடலும் தொடர்ந்த வாசிப்பும் என்னை கூடுதலான படைப்பு சக்திக்கு ஊக்குவிக்கின்றன.ஒருபாடல் என்பது என்னை பொருத்தவரை ஒரு திரைப்படத்தின் அடையாளமாக மாறவேண்டும்.இல்லையெனில்,பாடலின் தேவை சந்தேகத்துக்குரியதாகிவிடும்.இந்தப்பாடலைக் கேட்டவர்கள் நடிகை கோபிகாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதினீர்களா என்றார்கள்.உண்மையில், இந்தப்பாடல் உருவாகும் தருணத்தில் எம்டன் மகனில் நடிக்க கோபிகா ஒப்பந்தமாகியிருக்கவில்லை.ஒரு பாடலின் வெற்றி அமைப்பதில் இல்லை.அமைவதில் இருக்கிறது.வெற்றிக்கான சகல லட்சணங்களோடும் ஒரு படைப்பு தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்கிறது.விற்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன் என்று ஜெயமோகன் அங்காடித் தெருவில் எழுதியிருப்பதைப்போல  பொருள் சந்தையிலும் படைப்பு அதன் நிறைவிலும் பொதிந்திருக்கிறது.

 

Advertisements

2 பதில்கள் to “முன்னாள் சொற்கள் 7”

 1. Shanmugam said

  If possible please write your comment for Angadith Theru movie.
  I saw your interview in coffe with Anu. It was good show. All the Best for your future projects.
  Regards,
  Shanmugam

 2. karthick said

  mettum variglum pinni peinaiyum pudhu mana thambadhigalai pola amaindha indha padal, naan nesikkum padalgalil ondru thozhare…

  vazthukkaludan
  karthick

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: