யுகபாரதி

முன்னாள் சொற்கள் 9

Posted by யுகபாரதி மேல் மே 1, 2010


துறவியின் காவியுடை இயல்பாகவே மனதில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது.உடைக்கென்று தனி மதிப்பு எதுவும் இல்லை என்றாலும் சில குறிப்பிட்ட உடைகள் நம் மனத்தில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மைதான் என்ற ராமக்ருஷ்ண பரமஹம்சரின் கூற்றை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.நம்மைச் சுற்றி நிகழும் சகல விஷயங்களில் இருந்தும் படைப்புக்கான உந்துசக்தியைப் பெற்றுவிடலாம்.ஒரு மையப்புள்ளியில் குவியும் மனதைத் தொடர்ந்து இயக்கினால் வருவதுதான் படைப்பிலக்கியம்.அந்தப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றும் விலகாமல் தனக்குரிய கலைநேர்த்தியைக் கொண்டிருக்கவேண்டும்.

இயக்குநர்.கரு.பழநியப்பனின் இதயம் புத்தகங்களால் நிறைந்தது.அவருடனான என் உரையாடல் பெரும்பாலும் புத்தகம் தொடர்பானதாகவே அமையும்.வேறு யாரும் வாசிப்பதற்கு முன்பாக நாம் வாசித்துவிட வேண்டும் என்று புதுப்புத்தகங்கள் மீது அவருக்குள்ள வெறியே தொடர்ந்து அவரை நிலைப்படுத்தி வருவதாக உணர்கிறேன்.சிவப்பதிகாரம் திரைப்படத்திற்காக
ஒரு வித்யாசமான அழைப்பிதழைத் தயாரித்தோம்.தெருவோரங்களில் கவனிப்பாரற்று வாழும் மனிதர்களின் முகங்களைப் படம்பிடித்து அதற்கேற்றாற்போல் கவிதைகளை எழுதி எங்கள் மன ஆவேசத்தை வெளிப்படுத்தினோம்.படத்திற்கான எதிர்பார்ப்பாக அல்லாமல் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் பழநியப்பன் எப்பவும் தயங்காதவர்.முழுக்க முழுக்க நாட்டுப்புற பாடல்கள் குறித்த ஆய்வை சிவப்பதிகாரத்திற்காக அவர் மேற்கொண்டதை நேரடியாக நான் அறிவேன்.

நா.வானமாமலைத் தொடங்கி காவ்யா சண்முகசுந்தரம் வரை யார் யார் எல்லாம் நாட்டுப்புற பாடல்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அவர்களைப் படத்தில் நடிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.குறிப்பாக என் தந்தையின் நண்பரும் என் பிரியத்துக்குரியவருமான கே.ஏ.குணசேகரனின் பங்களிப்பை மறக்க முடியாது.காதல் திரைப்படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருந்த மாலையம்மா ஒருபாடலை பாடினால் சிறப்பாக இருக்கும் எனப்பட்டது.அவரைத் தமிழ்த்திரையுலகிற்கு அடையாளப்படுத்திய இயக்குநர்.பாலாஜி சக்திவேல் நினைவுக்குரியவர்.கதைப்படி கதாநாயகன் நாட்டுப்புற பாடல் ஆய்வாளன் என்பதால் காதலை பாடலையும் நாட்டுப்புற மெட்டிலேயே அமைத்தால் சிறப்பாக வரும் என்று எண்ணினோம்.வழக்கம்போல வித்யாசாகர், சொல்லாமலேயே எங்கள் இருவரின் ஆசையையும் இயல்பாக நிறைவேற்றினார்.

பாடலின் தொடக்கத்தை அதாவது தொகையறாவை மட்டும் மாலையம்மா பாட பின்வருவனவற்றை சொர்ணலதாவும் கார்த்திக்கும் பாடுவதாகத் திட்டம். மாலையம்மாவின் குரலும் உச்சரிப்பும் மும்பை பாடகர்கள் அறியக் கடவது.

தொகையறா

அப்படியோர் ஆணழகன்
என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன்
சின்ன செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன்
இல்ல இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல?
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

– மண்ணுக்குரிய பாடகர்கள் பாடும்போதுதான் பாடல் வரிகளின் ஊடே உள்ள உணர்வுகள் துல்லியமாக வெளிப்படுகிறது.ஒரு பாடலின் வெற்றி பாடப்படும் விதத்தில்தான் அமைந்திருக்கிறது என்பதை அடிக்கொருதரம் இசையமைப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ராமக்ருஷ்ணர் உடைக்கு சொன்னதைப்போல கால மாற்றங்களும்
எண்ணங்களை பிரதிபலிக்கும் தன்மை உடையன.ஒவ்வொரு பருவ காலமும் ஒவ்வொரு மனநிலையைக் கொண்டிருக்கிறது.மழைக்காலம் குளிரை நமக்குள் விதைக்கும்போது அந்தக் குளிர்தரும் உணர்வுகள் எப்படியானதோ அப்படியானதே சித்திரையும் அதுதரும் வெய்யிலும்.

பல்லவி

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில் சிந்துவதால் வெக்க வரும்?
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்டவரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

– எளிமைபோல வலிமையான ஆயுதம் ஒன்றில்லை என்று காந்தியைப் பற்றி அறிஞர்கள் குறிப்படுவார்கள்.பாடலும் கூட அத்தகையதே.எளிமையான வரிகள் மீட்டும் உணர்வுகள் வலிமையானவை.காதல் வயப்பட்டுவிட்ட ஒரு ஆணா அல்லது ஒரு பெண்ணோ தன் சகாவிடம் காணும் எளிமைக்காகவே ஈர்க்கப்படுகிறார்கள்.நவீன காதல் இந்த வரையறைக்குள் அடங்குவதில்லை .

சரணம்01
பாவிப் பயலால
இப்ப நானும் படும் பாடுயென்ன
ஆவி பொகபோல
தொட்டிடாம இவ போவதென்ன

கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள் பூசுற

நூலப்போல சீல – பெத்த
தாயப்போல காள
யாரப் போல காதல் – சொல்ல
யாருமே இல்ல

– ஆவிப்புகைபோல,கன்னத்தில் முத்தப் பவுடர்,யார்போல காதல் போன்ற அடுக்குகளை பாடலின் மெருக்காக பயன்படுத்தினேன்.இசைத்த மெட்டுக்கு வரிகள் இயற்றுவதுபோல இன்பமான காரியம் ஒன்றில்லை.உலகமே கேட்கப்போகும் ஒரு பாடலை என் தனித்த அறையில்
நான் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் என்ற மனநிலைக்கு எந்த சன்மானமும் சமமாகாது.

சரணம்02

கேணி கயிறாக
ஒங்க பார்வ என்ன மேலிழுக்க
கூனி முதுகாக
செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற…….

யாரும் ஏறச்சிடாத – ஒரு
ஊத்துப் போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம் – இவ
கண்ணுமுழி தூங்கி

கூனி முதுகாக என்ற உவமைக்காக அந்த படத்தில் மேலும் சில பாடல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாயிருக்கிறது.பாடலின் இயைபு நெருடல் இல்லாமல் அமைந்துவிட்டால் அதுதரும் சுகமே தனிதான்.கொஞ்ச காலத்திற்குப் பிந்தைய இந்தக் கோடையில், வெய்யிலின் சூடு தாளாத ஒரு பிற்பகலில் இப்பாடலைக் கேட்கும்போது மனசுக்குள் மழையடித்தது என்றால் மிகையாகச் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம்.உண்மை அதுவாக இருக்கும் பட்சத்தில் மிகையானதாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்றே கருதுகிறேன்.

Advertisements

2 பதில்கள் to “முன்னாள் சொற்கள் 9”

  1. karthick said

    Miga miga arumaiyaana padal thozhare….uvamaigal thamizhalal uyir perum padalgalil miga mukiyamaana padalgalil indhuvum ondru….

  2. உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். சொல்லும், செயலும் எளிதாகவும், எளியோருக்காகவும் இருக்க வேண்டும் என்ற தீவிர வாதம் உங்களிடம் எனக்கு பிடித்த ஒன்று. ஒரு நாள் நானும் திரைக்கு வருவேன் இயக்குனராக. நீங்கள் தான் எனது பாடல் இயக்குனர். மாடத்தில் விழும் மழை மண்ணிலும் விழுகாத என்ன ? மண் நான் மழை நீங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: