யுகபாரதி

முன்னாள்சொற்கள் 10

Posted by யுகபாரதி மேல் மே 15, 2010

மக்களுக்கு நீ தேவைப்படுகின்றாய்,மக்களுக்கு நீ நெருக்கமாய் இருக்கின்றாய் என்ற உணர்வே இன்பங்களில் தலையாதது.மகிழ்ச்சிகளில் நினையானது என்ற மார்க்சிம் கார்க்கியின் ஒரு புகழ்பெற்ற வாசகம் என்னை அடிக்கடி ஆட்கொள்ளும்.மக்களுக்கு நாம் தேவைப்படுகிறோமோ இல்லையோ மக்களுடன் நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சித் தரக் கூடிய விஷயங்களில் ஒன்று.அந்த ஒரு காரணத்துக்காக என்னுடைய எல்லா பிம்பங்களையும் புறந்தள்ளிவிட்டு அவர்களில் ஒருவனாக வாழும் விதத்தை அதிகம் விரும்புபவனாக இருக்கிறேன்.

என்னுடைய பள்ளிப்பிராயத்தில் நானொரு தீவிரமான சினிமா ரசிகன்.ரசிகர் மன்றங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லையே தவிர புதுப்படம் வெளிவரும் நாளில் அதைப் பார்க்கத் துடிப்பதிலும் சரி பார்த்தபின் அதைப்பற்றி பேசுவதிலும் சரி முனைப்போடு இருப்பேன்.அப்படி இருக்க நேர்ந்த ஒருவன், சினிமாவுக்குப்  பாட்டெழுதுபவனாக வந்தபிறகு சூப்பர் ஸ்டார் படத்துக்குப் பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்த தருணத்தை எப்படிக் கொண்டாடி மகிழ்வான்?மக்களுக்கு நெருக்கமான ஒருவரை, அருகில் இருந்து தரிசிக்கும் அற்புதமான சூழல் அது.

சந்திரமுகி திரைப்படத்திற்காகத்தான் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதே தெரியாமல் வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்திற்குப் போயிருந்தேன்.பாடலுக்கான சூழல், யாருக்கான பாடல்  என்பன போன்ற எந்தத் தகவலுமில்லாமல் ஒரு நல்ல காதல் பாடலை எழுதிக்கொடுங்கள் என்றார் வித்யாசாகர். மக்கள் திலகத்தை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் என்றார்.எனக்குச் சின்னதாக பொறிதட்டியது.இது,சந்திரமுகிக்காகவா என்றேன்.மெல்ல சிரித்தார்.

இயக்குநர்.பி.வாசுவைப் பற்றி சொல்லத் தேவையில்லை.வெகுசன சினிமாவுக்கானச் சகல இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.தன் அசாத்திய வெற்றிகளால் அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்கள் ஏதோ ஒருவிதத்தில் முக்கியத்துவம் கொண்டதாகவே அமைவந்துவிடும்.இப்போது இயக்குநர் படப்பிடிப்பில் இருக்கிறார்.நீங்களாக எழுதத் தொடங்குங்கள் அவர் வந்ததும் மேற்கொண்டு பாடலுக்குத் தேவையான சூழலை விளக்குவார் என்றார்.காதல்தான் பிரதானம் மற்றவை உங்கள் சாமர்த்தியம் என்றார்.

அன்று கொஞ்சம் பதற்றமாக இருந்தது.மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பும் உணர முடியாத வேறொரு பயமும் என்னை
மொய்க்கத் தொடங்கின.கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் குடிகொண்ட ஒருவரை என்ன என்ன விதத்தில் சொல்லி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையோடு எழுதத் தொடங்கி அது,காதல் பாடல் ஆகையால் எளிமையான பல்லவியே ஏற்றதென முடிவுக்கு வந்தேன்.இதுவே இறுதிப்படிவம் இல்லை என்பதால் முதலில் எழுதுவோம், இயக்குநர் அபிப்பிராயப்பட்டால் வரிகளை மாற்றி எழுதித் தரலாம் என எண்ணியிருந்தேன்.மெட்டைக் கேட்டதுமே சட்டென உள்வாங்கி அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்பும் பயிற்சியில்  பலமுறை பலரிடம் சபாஷ் வாங்கியவன் என்றபோதிலும் சந்திரமுகி என்னை அச்சப்படுத்திக்கொண்டே இருந்தாள்.

பல்லவி
கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?

அந்த நேரம்
அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

கொஞ்ச நேரம்
கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா?

இந்த நேரம்
இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?

– வெறும் வார்த்தை விளையாட்டுப்போல தோன்றினாலும் எண்பதுகளில் வந்த திரைப்பாடல் உத்தியை இப்பாடலில் எழுதிப்பார்த்தேன்.மரபான படிமங்கள் என் பாடலில் இயல்பாக வந்துவிடும். நான் வலிந்து செய்வதில்லை.ஆனால்,மெட்டைக்கேட்டதுமே அந்த மெட்டுக்கு எந்த விதத்திலும் என்னுடைய சொற்கள் ஊறு செய்துவிடக்கூடாது என்றெண்ணுவதாலோ என்னவோ மரபுச்சொற்களை என்மனம் தவிர்ப்பதில்லை.பல்லவி முழுக்க காதலாக மட்டுமே பாவித்து பின் சரணத்திற்கு வந்தேன்.

சரணம்: 01

கண்ணில் ஒரழகு
கையில் நூறழகு
உன்னால் பூமி அழகே

உன்னில் நானழகு
என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே

கண்ணதாசன்
பாடல்வரி போல
கொண்ட காதல் வாழும் நிலையாக

கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல
எந்த நாளும் தேகம் நலமாக

மழை  நீயாக
வெயில் நானாக
வெள்ளாமை இனி

– சரணத்தில் காணப்படும் முற்பகுதியை முதலில் வேறுவிதமாகத்தான் எழுதியிருந்தேன்.இரண்டு சரணங்களையும் முடித்துக்கொண்டு பாடல் இந்த தொனியில் இந்தப் போக்கில் இருந்தால் போதுமா என இயக்குநரிடம் விவாதித்து பின் தொடருவோம் என்றிருந்தேன்.படப்பிடிப்பு முடிந்த ஒருமாலையில் வர்ஷவல்லகி ஒலிப்பதிவுக் கூடத்திற்கு இயக்குநர் வந்திருந்தார்.அப்போதுதான் முதல் அறிமுகம். அதற்குமுன் அவருடைய படங்களுக்கு நான் பாடல் எழுதியதில்லை.அந்த சந்திப்பிற்கு பின் இவ்வளவு காலம் இவருக்கு பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் இருந்துவிட்டோமே என வருத்தமாயிருந்தது,அத்தனை வாஞ்சையோடும் அன்போடும் அவர் என்னைத் எதிர்கொண்டார்.வீணையின் மீது பரவும் மழைத்துளி என்பதே வர்ஷவல்லகி என்பதன் அர்த்தம்.எழுதிய வரிகளை நீட்டி இந்த தொனியில் பாடல் இருந்தால் சரியாக இருக்குமா? என்றேன்.இதுவே போதும் இதில் நான் நினைத்திருந்த அத்தனையும் வந்துவிட்டன முதல் சரணத்தின் தொடக்கத்தை மட்டும் சின்னதாக மாற்றித்தாருங்கள்  என்றார்  அந்த இடத்தில்சூப்பர் ஸ்டாரின் அழகை வர்ணிப்பதுபோல இருந்தால் தேவலாம் என்றார்.உடனே,கண்ணில் ஓரழகு என்று தொடங்கி யாவும் அழகு வரை சொன்னேன்.போதும் போதும் இதுதான் நான் எதிர்பார்த்தது என்று முழுபாடலை வாசித்து அற்புதமாக வந்துவிட்டது என்றார்.வீணையின் மீது பரவும் மழைத்துளி என்பதே வர்ஷவல்லகி என்ற வார்த்தைகான அர்த்தம்.

சரணம்: 02
கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா?

மக்கள் யாவரையும்
அன்பில் ஆளுகிற
உன்னைப் போல வருமா?

வெளி வேஷம்
போட தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்

பல கோடி
பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும் எதிர்காலம்

நீ என் நாடு
நான் உன்னோடு
மெய் தானே இது

– மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற உன்னைப்போல வருமா என்ற வரிக்காகவும் கண்ணதாசன் பாடல் வரிபோல என்ற வரிக்காவும் திரும்பத் திரும்ப பாராட்டினார்.ஒரு பாடலில் சொல்லப்படும் கருத்து எதார்த்தமாகவும் அதே சமயம் எளிமையாகவும் அமைந்துவிட்டால் அதன் அழகே தனிதான்.இன்றுவரை இந்த பாடலுக்காக சூப்பர்ஸ்ஸ்டாரின் ரசிகளால் நள்ளிரவிலும் என் கைபேசி சினுங்கிக்கொண்டிருக்கிறது.மக்களுக்கு நெருக்கமானவராக இருப்பது பெருமை.அந்த நெருக்கம் இன்னொரு நெருக்கமானவரால் என்பதால் கூடுதல் பெருமை.

இந்தப்பாடலை பிரபல இந்திப்பாடகி ஆஷாபோன்ஸ்லே பாடும் போது அருகிருந்தேன்.ஏறக்குறைய ஆறுமணி நேரம்.ழகரத்தை சிரம்மப்பட்டு அவர் உச்சரித்து உச்சரித்து சரியா என்று என்னைப் பார்த்துக்கேட்டுக்கொண்டேயிருந்தார்.தமிழ் உச்சரிப்பு இந்தி உதடுகளை சற்றே சிரமப்படுத்தினாலும் விடாப்பிடியாக சரியாய் உச்சரிக்க அவர் காட்டிய அக்கறையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. முதிய வயதிலும் ஆறுமணி நேரம் கால்வலியோடு ஒருபாடலுக்காக தன்னையே வருத்திக்கொண்டே அவரிடமிருந்து இன்றைய தமிழ்ப்பாடகர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.கொஞ்ச நேரம் பாடல், பாடுவதற்கு ரொம்ப நேரமானது என்ற வித்யாசாகரின் செல்ல அபிப்ராயம் பாடலை மேலும்  சுவாரஸ்யப்படுத்தியது.

மக்களுக்கு நெருக்கமானவராக இருப்பது கடினம்.எதிர்பார்ப்புகளை உள்ளடங்கிய அந்த உறவு
சிலசமயம் சந்தோசத்தையும் சிலசமயம் சங்கடத்தையும் ஏற்படுத்தும்.கொஞ்ச நேரமாவது நாம் நாமாக இருக்க அந்த உறவுஅனுமதிப்பதில்லை.

// <![CDATA[//

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: