யுகபாரதி

முன்னாள் சொற்கள் 11

Posted by யுகபாரதி மேல் மே 24, 2010

நீயா பேசியது
என் அன்பே ?

ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்வது என்பதே தெரியாத ஒருவனின் காதலைப் பற்றிப் பாடல் எழுத வேண்டும் என்றார் இயக்குநர்.ரமணா.தானும் நேசிப்பதாகச் சொன்ன அந்தப்பெண் இறுதியில் தான் அவ்வாறு சொன்னது பொய் என்று சொல்லும்போது அவனது இதயம் என்ன பாடுபடும்? காதலில் பொய்கள் உண்டுதான்.ஆனால்,காதலே பொய்யாகும் பட்சத்தில் அந்த இளைஞனின் மனக்குமுறல் என்னவாக இருக்கும்? ரமணா சூழலை விளக்குகையில் அப்படியே திரையில் பார்ப்பது போலிருக்கும்.உணர்வுப்பூர்வமாக காட்சியை நமக்குள் கடத்துவதில் சமத்தர்.திருமலை என்னும் தலைப்பில் வெளிவந்த திரைப்படத்தில்தான் நான் மேற்கூறிய சூழல் அமைந்திருக்கிறது.கவிதையைத் தவிர்த்துவிட்டு எதார்த்தமான வார்த்தைகளே சூழலுக்குப் பொறுத்தம் என்பதால் அவ்வாறே எழுதும்படி பணிக்கப்பட்டேன்.

முதல்முதலில் காதல் கொள்ளும் ஒருவனுக்கு காதலில் கையாளப்பட வேண்டிய சாதுர்யங்கள் அல்லது சாமர்த்தியங்கள் தெரியாது.இயல்பாக தனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கத் துணிவான்.எதிரே இருப்பவர்க்கு அந்தச் செயல் என்னமாதிரியான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்ற அக்கறையில்லாமல் நடந்துகொள்வான்.பொது இடங்களில் நான்குபேருக்கு முன்னால் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கூட அறியாதவனாகவே இருப்பான்.இசையமைப்பாளர் வித்யாசாகர் எழுதி மெட்டமைப்பதில் எப்போதுமே ஆர்வமாயிருப்பவர்.கவிதைகளின் தீவிர காதலர்.எழுதிக்கொடுக்கும் வார்த்தைகளுக்கு இசை வர்ணமேற்றி அவ்வார்த்தைகளைப் பட்டாம் பூச்சிகளாய் பறக்க விட்டுவிடுவார்.பல்லவிக்கு முன்பாக ஆவேசமான சில தெறிப்புகளைக் கதை போக்கிற்கு ஏற்ப இயக்குநர் விரும்பினார்.

தொகையறா

நீ என்பதும் எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை
சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை
காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்

பல்லவி

நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது
என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே
பொய்க்காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது நீயா பேசியது

– நானறிந்த வரையில் வித்யாசாகர் எந்தப்பாடலுக்கும் பத்து நிமிடத்திற்குமேல் மெட்டமைக்க செலவிட்டதில்லை.ஏற்கனவே மனதில் பதிந்த ஒருபாடலை மறு உருவாக்கும் செய்வதுபோலவே வெகு லகுவாக இசைக்கூட்டுவார்.அதன் ரகசியமும் ரசனையும் அவரே அறியக் கடவது.பல்லவி முடிந்ததும் எங்கே சரணம் என்று கேட்கத் தொடங்கினார்.சரணத்தை நான் எழுத எழுத ரமணாவும்உடன் இருந்தார்.வரிக்கு வரி  சிலாகித்து தனக்குத் தேவையானதை அவரே தெரிவு செய்தார்.

சரணம்: 01

ஏதோ நான் இருந்தேன்
என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன்
அன்பே சொல் மூச்சை என் பறித்தாய்?

இரவிங்கே பகலிங்கே
தொடுவானம் போனதெங்கே?
உடலிங்கே உயிரிங்கே
தடுமாறும் ஆவி எங்கே?

உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன்

நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது?

– வரிகளில் கூடுதலாகச் சொல்ல எதுவுமில்லாதபடிக்கு முழுக்க முழுக்க உணர்வுகளை மட்டுமே கொட்டிச் சமைத்த இப்பாடலை ஷங்கர் மகாதேவன் ஒரே மூச்சில் பாடிய விதத்தை வியக்காமல் இருக்க இயலவில்லை.எத்தனை நுட்பங்களை வரிகளில் வைத்திருந்தாலும் அது,வெளிப்படும் குரலில்தான் ஜீவமர்மம் இருக்கிறது.

சரணம்: 02

வேரில் நான் அழுதேன்
என் பூவோ சோகம் உணரவில்லை
வேசம் தரிக்கவில்லை
முன் நாளில் காதல் பழக்கமில்லை

உனக்கென்றே உயிர் கொண்டேன்
அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவுண்டு
அதனாலே வாட்டம் இல்லை

மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது?

– வேரின் சோகம் மறைத்திடத்தானே கிளைகளில் பூக்கள் சிரிக்கின்றன என அண்ணன் அறிவுமதி ஒருஇடத்தில் எழுதியிருப்பார்.படைப்பாக்கப்படும் கருத்துகள் மறு படைப்புக்கான உந்துசக்தியைத் தரவல்லதாக இருக்க வேண்டும் என்பார்கள்.அந்தவகையில் அண்ணனின் வரிகள் என்னை ஊக்கின என்பதை அறிந்து அவரும் வாழ்த்துரைத்தார்.வேசம் தரிக்கவில்லை,முன்நாளில் காதல் பழக்கமில்லை என்ற வரியில் முதல்காதலின் தன்மை முழுவதுமாக வெளிப்பட்டதாகவே உணர்கிறேன்.

மிகச் சமீபத்தில் நான் வாசித்த வா.மு.கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற காதல் கவிதைகளும் நூலில் ஒரு கவிதை.உன்னைப்பற்றிய ஞாபக ஓசைகளை கடத்திவந்து தாள் நிரப்புவது,எனது வேசங்களை அழுக்கு வேட்டியாய் அவிழ்த்துப்போட.நம்முடைய படைப்பின் பிரதிகளாக நாம் உணரும் சூழல்கள்தான் வாழ்வை மேலும் மேலும் தரிசிக்க வைக்கிறது.ஒருபாடல் என்பது எதார்த்தில் இருந்து விலகாதபோது எல்லோராலும் ஏற்கப்படும்.இடைவேளைக்கு முன் இந்தப்பாடல் இடம்பெற்றதால் சினிமா ரசிகன் தொய்வாகக் கருதுவான் என  தியேட்டர் ஆப்ரேட்டர்களால் முதலில் வெட்டி வீசியப்பட்ட இப்பாடல் ரசிகர்களின் விருப்பக் கோரிக்கையை முன்வைத்து மீண்டும் படத்தில் இணைக்கப்பட்ட வரலாறு இந்தப்பாடல் பெற்ற விசேஷத் தகுதிகளில் ஒன்று.

நீண்ட பாலை வெளியில் இதை படமாக்கிய ஒளிப்பதிவாளரும் அப்பாடலுக்கு தன் முகபாவங்களால் மெருகூட்டிய விஜய்யும் ஜோதிகாவும் என் பரிசுத்தமான அன்புக்குரியவர்கள்.பாடலைக் கேட்டதும் எனக்கும் இசையமைப்பாளருக்கும் மலர்கொத்தைத் தருவித்து கெளரவப்படுத்தினார் தயாரிப்பாளர் புஷ்பாகந்தசாமி.பாடல்கள் சென்றுசேரும் பாதைகள் மலர்க்காடுகளின் மத்தியில் இருந்து தொடங்குகின்றன என்ற யாரோ ஒருவரின் கூற்றை நினைத்துக்கொள்கிறேன்.மறைப்பதால் காதல் மட்டுமல்ல படைப்புகளும் மறைந்துபோவதில்லை.

Advertisements

ஒரு பதில் to “முன்னாள் சொற்கள் 11”

  1. இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. சங்கர் மஹாதேவன் மிகவும் உருகிப் பாடியிருப்பார். வித்யாசாகரின் இசையும் உங்களது வார்த்தைகளும் பாடலுக்கு மேலும் மெருகூட்டியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: