யுகபாரதி

Archive for ஜூன், 2010

என்னை விட்டுவிட்டு

Posted by யுகபாரதி மேல் ஜூன் 30, 2010

எதோ ஒரு புள்ளியில்
என்னை விட்டுவிட்டு எல்லோரும்
போய்விடுகிறார்கள்

அவர்கள் வேகமாக நடக்கிறார்கள்

அவர்களைப் பின்தொடர்வதில்
எனக்குச் சிக்கல் ஏற்படுகிறது

நிதானமிழந்து
நின்ற இடத்திலேயே நிற்கிறேன்

அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,
இன்னும் கொஞ்சம் வசதியான
இன்னும் கொஞ்சம் எழிலான
புகழுரைகளை என்னிடமிருந்து

அவர்களுக்குக் கீழாக
நான் என்னை வைத்துக்கொள்ள
விரும்புகிறார்கள்

நான் பேச்சைக் குறைக்கவேண்டும்

அவர்கள் பேசும்படி
என் நடத்தையில் சிறிதாகவேணும்
மாறுதல் தேவைப்படுகிறது

என்னிடம் ஒரு நல்ல குணம் உண்டு
தோற்றால் அழுவதில்லை
தோற்றுக்கொண்டே இருப்பதுமில்லை

என்னைவிட்டுவிட்டு மட்டுமே
அவர்கள் போகிறார்கள்
கடந்து போவதில்லை
Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »