யுகபாரதி

முன்னாள் சொற்கள் 12

Posted by யுகபாரதி மேல் ஜூன் 15, 2010

பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஏதோ ஒரு மாயத்தன்மைப் பொதிந்திருக்கிறது.கேட்ட மாத்திரத்தில் சட்டென்று கவ்விப்பிடித்து இந்தப்பாடல் எந்தப்படத்தில் என கேட்க வைக்கிறது.ஒரு சில குரலுக்கு மட்டுமே அப்படியான மகிமையும் தனித்துவமும் உண்டு.என்னுடைய பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.அவற்றில் ரொம்பவும் என்னை கவர்ந்தது, கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் இடம்பெற்ற உப்புக்கல்லுத் தண்ணீருக்குப் பாடல்.மொத்த கதையும் ஒருபாடலில் வெளிப்படும் விதமாக அமைந்த அந்தப்பாடலின் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.என் பாடல்களில் முக்கியமான பாடலாக நான் கருவதுதில் இதுவும் ஒன்று.கொக்கித் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கரண் தன்னை கதாநாயகனாக ஸ்தாபித்துக் கொண்ட படம் கருப்பசாமி குத்தகைதாரர்.

மண்ணும் மரபும் மாறாத மதுரையைக் கதைக் களமாக கொண்டு அதன் பின்னணியில் கல்வியின் அவசியத்தைப் பேசிய படம்.கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு அதற்குள் தனது திரைமொழியைக் கட்டமைக்கும் நல்ல இயக்குநர்களில் என் நண்பன் ஏ.கே.மூர்த்திக்கும் இடம் இருக்கிறது.போதிய விளம்பரங்களைத் தேடிக்கொள்ளாமல் தன்னியல்பாக இயங்கிவரும் இவரிடம் எனக்கு உரிமையோடு கூடிய அன்புண்டு.

தாயையும் நோயையும் பிரதானமாகக் கொண்டக் கதைக்கருக்கள் பெரிய வெற்றி பெறாது என்ற கோடம்பாக்கத்து ஐதீகத்தை தன் தேர்ந்த படைப்பாளுமையினால் தகர்த்தெரிந்தவர்.பாடலுக்கான சூழலைச் சொல்லும் போதே இந்தப்பாடலின் தேவையை எனக்கு வலுவாக விளங்க வைத்தார்.படத்தின் மூன்றாவது ரீலில் அதாவது,ரசிகன் நிமிர்ந்து உட்காரும் இடத்தில் இப்படி ஒரு சோகப்பாடல் அவசியமா என்று கூட நானும் இசையமைப்பாளர் தினாவும் கருதினோம்.ஆனாலும் மூர்த்தி, விடாப்பிடியாக கதையின் மையமே இந்தப்பாடல் என்பதில் கவனமாயிருந்தார்.

படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அம்சத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும் கதையை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்பதிலும் மூர்த்தி காட்டிய அக்கறை குறிப்பிடத்தக்கது.வழக்கமாக எழுதி இசையமைப்பதில் ஆர்வம் காட்டும் இசையமைப்பதில் ஆர்வம் காட்டும் தினா இந்தப்பாடலை மெட்டமைத்து எழுதலாம் என்றார்.எனக்கும் அவர் சொல்வது சரியாகவே பட்டது.ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் நானும் தினாவும் இந்தப்பாடலை உருவாக்குவதில் தீவிரமானோம்.முதல் இரண்டு வரிகளை மட்டும் மெட்டுக்கு தோதாகச் சொல்லிவிட்டு அன்று பதிவாக இருந்த வேறொரு படத்திற்கான பாடலுக்காக மும்பை கிளம்பிவிட்டேன்.

மும்பையில் பாடல் பதிவில் நானிருந்த போதும் உப்புக்கல்லு மெட்டு என்னை தொல்லை செய்துகொண்டே இருந்தது.அங்கிருந்து தொலைபேசியில் தினாவை அழைத்து மேலும் அந்தப்பாடல் போகும் திசையைக் கேட்டேன்.அவரும் மகிழ்வோடு தொலைபேசியிலேயே மீதி மெட்டைப் பாடிக்காட்டினார்.மாலை மும்பையிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்துவிடுகிறேன் என்று தொலைபேசியைத் துண்டித்துவிட்டு சில நிமிடங்களில் பாடலை எழுதினேன்.சில நேரங்களில் மனது தன்னை அறியாமல் றெக்கைக்கட்டிக்கொண்டு பறக்கத் துவங்கிவிடும்.அது ஒரு அற்புதம்.அந்த அற்புதம் திட்டமிட்டு வருவதில்லை.அதை அற்புதம் என்பதே திட்டமிட்டு வராததால்தானோ என்னவோ?

பல்லவி
உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து -ஏங்
க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து – நீ
த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து

தேதித் தாளைப் போல வீணே
நாளும் கிழிய‌றேன் -நான்
தேர்வுத் தாளை க‌ண்ணீ ரால
ஏனோ எழுதுறேன்

இது க‌ன‌வா? இல்லை நிஜ‌மா?
த‌ற்செய‌லா? தாய் செய‌லா?
நானும் இங்கு நானும் இல்லையே

-இது தற்செயலா? தாய்செயலா? என்ற கேள்விதான் பாடலின் உள்ளீடு.உப்புக்கல் தண்ணீர் என்பது பழக்கப்பட்ட உவமைதான் என்ற போதிலும் சட்டென்று காட்சிக்கு ஏற்ப தேதித்தாளைக் கண்ணீரால் எழுதும் மனநிலைக்குப் பொருத்தமாக இருப்பதாக இயக்குநர் விரும்பினார்.மேலும்,ஓரிரு பல்லவிகளை நான் எழுதிக்காட்டினேன்.ஆனாலும் மூர்த்தியும் தினாவும் உப்புக்கல்லில் கரைந்துபோவதிலேயே குறியாயிருந்தார்கள்.

பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர் என்று தாகூரின் வார்தைகள் இந்தப்பாடல் எழுதிக்கொண்டிருக்கையில் நினைவுக்கு வந்தன.அதையே சற்று மாற்றி ஆண்கள் யாரை மனதார காதலிக்கிறார்கள் அவர்கள் முன் அந்தப் பெண்களும் அவ்விதமே ஆகிறார்கள் என்பதை சொல்லத் துணிந்தே மீசைவைத்த அன்னைப் போல உன்னைக் காண்கிறேன் என தொடங்கினேன்.ஒரு பெண்ணை படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது என்ற டிக்கன்ஸின் கூற்றையும் இணைத்தே இந்தப்பாடலை உருவாக்கினேன்.

சரணம்01
ஏதும் இல்லை வண்ண‌ம் என்று
நானும் வாடினேன் -நீ
ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய்
என்னை மாத்துன‌

தாயும் இல்லை என்று உள்ள‌ம்
நேற்று ஏங்கினேன் -நீ
தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால்
நெஞ்சத் தாக்கின

க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக்
காய்ப்ப‌ட்ட‌வ‌ள் – உன்
க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால்
ந‌ன்மைய‌டைகிறேன்

மிச்சம் இன்றி மீதம் இன்றி
சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள் – உன்
நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால்
உண்மைய‌றிகிறேன்

– பாடலின் பூரணத்திற்கு வாசிப்பு எந்த அளவுக்கு பயன்படுகின்றது என்பதை ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துவருகிறேன்.வெறும் வார்த்தைகளை அடுக்காமல் மூத்தோரின் ஞானத்தில் இருந்து பாடல்களைப் படைக்கும்போது கூடுதல் மதிப்பு உண்டாகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

சரணம் 2
மீசைவைத்த‌ அன்னை போல‌
உன்னைக் காண்கிறேன் – நீ
பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம்
வேத‌மாகுதே

பாழ‌டைந்த‌ வீடு போல‌
அன்று தோன்றினேன் -உன்
பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால்
கோல‌ம் மாறுதே

க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு
ஆன‌ போதிலும் – உன்
பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை
என‌து விழிகளே

தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு
ஆன‌ போதிலும் – க‌ண்
நாளும் இங்கு தீண்ட‌வில்லை
உன‌து நினைவிலே

சில பதிவுகள் காட்சியின் அவசியத்திற்காகவும் பாடலின் நகர்வுக்காகவும் தவிர்க்கமுடியாததாகிறது.அதிலும் புதிது செய்ய என் மனம் விரும்பினாலும் மக்களின் ரசனையையும் அவர்களின் மொழித் திறனையும் உத்தேசித்து கையாள்வது கட்டாயம் என்று நினைக்கிறேன்.மூர்த்தியின் அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு அவருடைய படங்களுக்கு என்னால் இயன்ற உதவியாக இம்மாதிரியான பாடல்களை எழுதுவதே.மூர்த்திக்கு மட்டுமல்ல மூர்த்தி போன்ற அனைவருக்கும்.

Advertisements

ஒரு பதில் to “முன்னாள் சொற்கள் 12”

  1. Kathir said

    ரொம்ப அழகான வரிகள். இந்த பாடலும் எனக்கு பிடித்தமான ஒன்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: