யுகபாரதி

நேரசை

Posted by யுகபாரதி மேல் ஜூன் 18, 2010

பெண்களுக்கான இயல்புகளாக நான்கு குணங்களை வரையறுத்து  வைத்திருக்கிறார்கள். அந்த வரையறைகள் காலத்தின் தேவையாலும் நீட்சியாலும் இன்று முற்றிலும் மாறிவிட்டன. இந்த மாற்றத்தை எல்லோராலும் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. ஏனெனில், பெண்ணின் இயல்புகள் மாறிவிட்ட போதிலும் ஆண்களின் பார்வைகள்  அப்படியே இருப்பதுதான் காரணம்.

ஒரு பெண்கவிஞர் இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற கட்டமைப்பை ஆண் எதிர் பார்க்கிறான். அவளது தனித்த இயல்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவனது மனம் ஒப்ப மறுக்கிறது.

மலரை மென்மையோடும் நறுமணத்தோடும் மட்டுமே ரசித்துப் பழகிய கண்கள் அதன் உயிரை, மனதை சிலாகிக்கச் சிரமப்படுகின்றன. எனவே தான் பெண் தனது அந்தரங்க அபிலாஷைகளைப் பதிவுசெய்கிற எழுத்தைக் கண்டனத்தோடு விமர்சிக்கின்றன.

இயல்புக்கும் நடத்தைக்கும் வேறுபாடுண்டு. இயல்பைப் போல் நடத்தை இருந்தால் மெச்சுவது; இல்லாவிட்டால் கொச்சைப் படுத்துவது என்கிற நிலை கவனத்துக்குரியது.  இது, தமிழ் மனம். இத்தனை நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் துணிச்சல். இதில், சரி  தவறைப் பார்ப்பதைவிட  இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதே சிந்தனையின் அடுத்த தளத்தை அடையப் பயன்படும்.

சில பெண்கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாகப் பேசப்படுகிறது. ஆபாசம் என்பது வார்த்தையா? சிந்தனையா? எனத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். வார்த்தைகளில் ஆபாசம் அநாகரிகமானது. சிந்தனையின் ஆபாசம் மனம் சார்ந்தது. ஒருவருடைய மனதின் தவிப்பை, காம இச்சைகளை வெளிப்படையாக உரைப்பது பண்பாட்டுச் சீரழிவல்ல.

காமம் உன்னதத்தைக் கொண்டிருக்கிறது. இடைக்கால இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் காமத்தின் சுவை கொண்டு மிளிர்கின்றன. சுவை கருதி, ரசனை கருதி அதை இன்றும் வாசிக்கிற நமக்கு எந்தத் தயக்கமுமில்லை. முலை, யோனி, அல்குல் போன்ற பிரயோகங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. தெய்வத்தை, பக்தியை முதன்மைப்படுத்தும் போது இந்தச் சொற்களில் விரசமில்லை. ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்பது போல அந்தந்தச் சொற்கள் அந்தந்த இடத்தில் மிகச் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சுகிர்தராணி, சல்மா, குட்டி ரேவதி, இளம்பிறை, வெண்ணிலா என நீளும் பெண்கவிஞர் பட்டியலில் புதிதாகவும் சிலர்  இணைகிறார்கள். இந்தப் பெயர்களில் சிலரது எழுத்தில் தனித்த அடையாளத்தை என்னால் சுட்ட முடியும்.

பார்வைகளும் பதிவுகளும் அவர்களை நினைவூட்டுகின்றன. மொழியோடு அவர்களுக்குக் கிடைத்திருக்கிற இணக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. ‘ஆண் போலவே பெண் எழுதுகிறாள்’ என்ற குற்றச்சாட்டை தகர்த்து எறிகிறார்கள். இது, தமிழுக்கும் கவிதைக்கும் சிறப்பு.

கவனம் பெறுவதற்காக எழுதிறார்கள் என்பதும் இல்லறத்தில் திருப்தி பெறாமல் எழுத வருகிறார்கள் என்பதும் மனதின் சுருக்கங்கள். இதை எந்த இலக்கிய இஸ்திரிப் பெட்டியாலும் நீக்க முடியாது. எழுதினால் என்ன? என்கிற மூர்க்கமே அவளை மேலும் அவ்விதம் செயல்படத் தூண்டும். எழுத வந்திருக்கும்  பெண் கவிஞர்களில் ஓரிருவரைத் தவிர அரசியல் சார்பை வரவேற்றோ அல்லது அரசியல் பிரச்சினைகளை உள்வாங்கியோ படைப்பைத் தரவில்லை என்பது என் ஆதங்கம். இது எனக்கே எனக்கான பார்வை. இதைப் பொது விவாதத்திற்கு வைக்க விருப்பமில்லை. அப்படியான கவிதைகள் என் கண்களில் தட்டுப்படாமலும் போயிருக்கக்கூடும்.

அடக்குமுறைக்கு எதிரான கவிதைகள் என்றால் ஆணின் அடக்குமுறைக்கு எதிராகத்தான் எழுதுகிறார்கள். வேற்றுமைக்கு எதிரான குரல் என்றால் பாலின வேற்றுமையைத்தான் முன்வைக்கிறார்கள். சாதியம், ஏகாதிபத்தியம்  இவற்றைச் சாடுகிற கவிதைகள் பெண் கவிஞர்களிடமிருந்து வரவேண்டும். புதிய அணுகுமுறைகள் போற்றுதலுக்குரியன.

அரசியலைக் கேவலமாகக் கருதுகிற மனோபாவம் இன்றைய சராசரி மனிதனுக்குச் சரியாகப்படுகிறது. படித்த, நடுத்தர வர்க்கத்துக்கு நகைப்புக்குரியது. இந்த மனோபாவம்தான் இலக்கியத்திலும் மேலோங்கி நிற்கிறது. தீவிரவாதிகள் என்றால் மக்கள் விரோதிகள் எனத் திரைப்படங்கள் சித்தரிப்பைப் போல. அரசியல் புரிதலற்று ஒரு படைப்பை உருவாக்குதல் எத்தனை அர்த்தமற்றது என்பதை நாம் அறிவதில்லை. அரிசி முதல் அத்தனை பொருளிலும் உணர்விலும் அரசியல் பங்காற்றுகிறது. ஆனால், இலக்கியத்தில் பதிவு செய்தால் இழுக்கு.

ஒரு கவிதையைப் புரிந்து கொள்வதிலும் அரசியல் இருக்கிறது. ஒரு கவிதை புரியவில்லை என்பதிலும் அரசியல் இருக்கிறது. புறவயமான பார்வைகள் ஒரு அரசியல் என்றால் அகவயமான அணுகுமுறையும் ஒரு அரசியல்தான். பசி என்ற சொல்லிலுள்ள அரசியல்; வேதனையை, எரிச்சலை, கோபத்தை, இயலாமையை, அலட்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. இத்தனையும் ஒரு சொல்லின் விரிவு. பிரா விளம்பரங்கள் பகிரங்கமாக இருக்கும் போது  ’முலை’ என்ற சொல்லை ஏன் பயன் படுத்தக்கூடாது? ’ஆணுறை’ தெருவெங்கும் பேசப்படுகிறபோது அல்குல் என்ற சொல்லை எதற்காக உச்சரிக்கக் கூடாது?

தகர்த்து வருகிற பிற்போக்குச் சிந்தனைகளின் அடையாளங்களே இக்கூக்குரல்கள். இதைப் பெண் படைப்பாளிகள் எதிர் கொள்ள வேண்டும். சக படைப்பு மனதோடு அணுக வேண்டும். தமிழின் வளத்தோடு  நோக்க வேண்டும். எதிரியைப்போல் முகந்திரும்பாமல் காலத்தின் அரசியலைக் கவனிக்க வேண்டும். பெண்ணியம் என்பது ஆணை நிராகரிப்பதல்ல. பெண் விடுதலையை முன்னுறுத்திய ஆண் படைப்பாளிகள் அனைவரும் அப்படியே புரிந்து கொண்டார்கள். பாரதி மூத்தவன்.

எண்பதுகளுக்குப் பிறகு எழுத வந்த பெண் கவிஞர்களின் கவிதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். மரபின் தொடர்ச்சி போல அவர்களது படைப்புகள் அமைந்திருக்கின்றன. விதி விலக்காகச் சிலர் பிந்தங்கினாலும் பலரும் கவிதைகளில் சத்தியத்தையே கொண்டிருக்கின்றன. எதிரான குரல்களின் குரல்வளையைச் சாதுர்யமாக நெறிக்க முயன்றிருக்கிறார்கள்.

ஒரு படைப்புக்கான விமர்சனத்தை இன்னோரு படைப்பின் மூலமே நிவர்த்தி செய்ய முடியும் என நம்புகிறேன். சொல்லப்பட்டது விமர்சனமே இல்லையென்றால் விட்டுவிடலாம்.

Advertisements

ஒரு பதில் to “நேரசை”

  1. Karthick said

    aan sonnal karpanai, adhuve penn sonnaal kaamam ennum indha pirpokku samugathin ethirpugalai penn kavingargal edhir kondu vella, innum thudipudan ezhudha vendum…adhai ungalai pondravargal padipadhodu nillaamal parappavum vendum…puranathin mudhugil maraindhirukkum indha aanadhikka samugathin mugathirai kizhiya vendum, andru penniya kodi vaanathu mugangalil urasa vendum….

    ungal padaippugal thorattum thozhare…

    Nambikaiyudan,
    Karthick

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: