யுகபாரதி

நினைவிருக்கிறதா?

Posted by யுகபாரதி மேல் ஜூலை 8, 2010

நிகழ்வுகள் நினைவில் இருக்கும் அளவுக்கு தேதிகள் நினைவில் இருப்பதில்லை.அது ஒரு குறைதான் எனில் என்னிடம் அந்தக்குறை நிறையவே உண்டு.கணையாழியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது விதவிதமான மனிதர்களை விதவிதமான ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பிருந்தது.தினசரி ஒரு நல்ல நபரையாவது சந்தித்துவிடக்கூடிய பேறு பெற்றிருந்தேன்.ஒரு பத்திரிகையில் பணியாற்றுவதன் காரணமாக நேரடியாக சமூகத்தோடு தொடர்புகொள்ள முடிந்தது.எழுத்தாளர்களின் இன்னொரு முகமும் வெளிவராத அகமும் வியப்பில் ஆழ்த்தும்.எல்லா நேரமும் நம்மைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ள உதவும்.என்னுடைய வாழ்வில் நான் பெரிதாக நினைக்கும் காலங்கள்,கணையாழியில் பணியாற்றிய காலங்களே என்று இப்பவும் நம்புகிறேன்.தசரா அறக்கட்டளை கணையாழி மீது செலுத்திய அதே அக்கறை என்மீதும் செலுத்தியது.அங்கே நான் என்னை முழுதாக உணர்ந்தேன்.கிழக்குப் பதிப்பக பா.ராகவனும் இன்றைய கல்கி ஆசிரியர்.ஆர்.வெங்கடேஷும் அப்போது நண்பர்களாகக் கிடைத்தார்கள்.

தீவிர இலக்கியம் என்ற வகைமாதிரியை நான் கண்ணுற்று பழகிய இடம் அது.மாதந்தோறும் எழுத்தாளர். இந்திராபார்த்தசாரதி வீட்டிற்கு படைப்புகளைத் தூக்கிக்கொண்டு போய் தேர்ந்தெடுத்த படைப்புகளைப் பிரசுரத்திற்காகத் தயார்செய்வேன்.அவர் தரும் அறி்வுரையும் அன்பும் மறக்கக் கூடியதல்ல.பொதுவெளியில்நான் அறியப்பட்டவனாக ஆனதற்கு இ.பாவும் கஸ்தூரிரங்கனும்பெரிதும்உதவியிருக்கிறார்கள்.எந்தவிதத்தில் என்றசொல்லவேண்டியதில்லை,எல்லாவிதத்திலும்.

திருப்பூர்.கிருஷ்ணன்அப்போது தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.இருந்தபோதும், இலக்கிய செய்திகளை கணையாழிக்குத் தர விரும்பி அவர் நேரில் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்காக ஏதாவது ஒரு புதிய தகவலோடு வந்ததை நினைத்துப்பார்க்காமல் இருக்க இயலாது.கணையாழியை எல்லோரும் விருப்பத்தோடு வாசித்தார்கள்.கலைஞர் அட்டைப்படம் வருகிறவரை யாரும் அதன் கண்ணியத்தை சந்தேகிக்கவில்லை.கருத்து மாறுபாடு உடையோரும் கணையாழியை வாசித்தது சுஜாதாவின் கடைசிப் பக்கத்திற்காக மட்டுமில்லை என்பது என் தெளிவு.வேலைக்குச் சேர்ந்த முதல் வாரத்தில் ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன்.திடீரென்று தொலைபேசியில் அசோகமித்திரன் வருவார்.வைத்த கொஞ்சநேரத்தில் வண்ணதாசன் பேசுவார்.இப்படி மாறி மாறி பிரபல மற்றும் என் விருப்பத்துக்குரிய படைப்பாளிகளோடு உறவு கொள்ளவும் என்னை செழுமைப்படுத்திக் கொள்ளவும் முடிந்த காலங்கள் அவை .

 வெயிலும் மழையும் கலந்திருந்த விநோதப் பொழுதொன்றில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கணையாழி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.கையில் ஏதோ ஒரு படைப்பு.பிரசுரத்திற்காக கொண்டுவந்திருந்தார்.என்னிடம் சுருக்கமாகப் பேசினார்.பெரிய பதவியில் இருப்பவராகவே அவர் தோற்றம் காட்டிற்று.நல்ல அன்பு.இயல்பாக இருந்தார்.காபி அருந்துவதற்காக தன்னுடைய காரில் பாண்டிபஜார்வரை அழைத்துப்போனார்.போகின்ற வழியில் என்னைப்பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார்.என்மீது தனியான பிரியம் கொண்டவராக நடந்துகொண்டார்.அதுவரை அவருடைய படைப்புகளில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதென்று தெரியாமல் இருந்தேன்.பிறகுதான் மெல்ல மெல்ல அவரைப் படிக்க ஆரம்பித்தேன்.மனுசன் சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டு இன்றளவும் நகர மறுக்கிறார்.தொடர்ச்சியாக அவருடைய ஆக்கங்களை கவனிக்கும் போது காபியகத்தில் நேரடியாக பார்த்த அதே பரிவைக் காண முடிகிறது.இப்போது சினிமாவுக்கு பாட்டெழுதுகிற பையனோடு தான் ஒருமுறை காபி அருந்தினோம் என்கிற நினைவு அவருக்கு இருக்குமா தெரியவில்லை.அந்த சந்திப்பிற்குப் பின் அவர் கதைகள் கட்டுரைகள் நேர்காணல் என்று வரிசையாக அவரை கவனித்துக்கொண்டே இருக்கிறேன்.உயரங்களின் படிக்கட்டுகளில் அவர் ஏறிக்கொண்டே இருக்கிறார்.

பகடி பண்ணுவதில் அவர் எழுத்து தனி இடம் வகிக்கிறது.உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபை ops பிரிவிலும் பணியாற்றிய ஒரு சீரியஸ் ஆசாமிக்கு இந்த பகடி எப்படி தன்னியல்பாக வருகிறது?பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவரும் சிரித்து மகிழத்தான் விரும்புகிறார்கள் இல்லையா?

சில கட்டுரைகளில் அவர்தரும் தகவல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கிறது.வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் எதையும் சொல்லிச் செல்கிறார்.மணிமேகலை பிரசுரத்தில் இருந்து உயிர்மை பதிப்பகம் வரை அவர் கடந்து வந்திருக்கும் தூரம் முக்கியமானது.பத்தி எழுதுபவர்களில் என்னை அதிகம் கவர்ந்த முத்துலிங்கத்திடம் எல்லாவற்றையும் எழுதும் ஆற்றல் இருக்கிறது.ஆனால்,சிலசமயத்தில் வெறும் சம்பவங்களை எழுதிவிடுவதுதான் அபாயம்.அந்தச் சம்பவங்கள் அவருக்கு முக்கியமாகப்பட்டாலும் வாசிக்கிறவனுக்கு எதையும் சொல்வதில்லை.எனக்கு பெரிய இலக்கிய ஞானமில்லை என்றாலும் தோன்றுவதைச் சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அவருடைய ஒவ்வொரு நூலிலும் நான் காண்பது தீராதத் தேடல்.மிக சமீபத்தில் அவருடைய வியத்தலும் இலமே நூலைப்பற்றி தினமலரில் எழுதப்போக அந்த நூல் எங்கே கிடைக்கிறது எனக்கேட்டு வாசித்தவர்கள் நச்சரித்துவிட்டார்கள்.எத்தனைதூரம் அ.முத்துலிங்கத்தின் எழுத்து பிரபலபட்டு போயிருக்கிறது என உள்ளூற மகிழ்ந்தேன்.

இடதுகையில் கோர்ட்டும் வலது கையில் படைப்புமாக அவர் கணையாழிக்கு வந்த அந்த காலங்களில் அவர் இத்தனை முனைப்போடு எழுதவில்லை என்றே சொல்லவேண்டும்.அதன்பின் அவருக்குள் கனன்று நிமிர்ந்தெழுந்த படைப்பின் ஆகுதியைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.வாசித்துக்கொண்டே இருப்பதும் வாசித்தவற்றிலிருந்து புதிய தடத்தைத் தெரிவுசெய்வதிலும் அவருக்கு நிகர் அவரே.தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் அனைவரும் அவர் எழுத்தை சிலாகித்துவிட்டார்கள்.

மறக்கவொண்ணா நினைவுகளில் இருந்து நம்மை மீட்பது யதார்த்தம்.பத்திரிகையாளனாக நானிருந்த சமயங்களில் நல்ல வாசகராகவும் இருக்க முடிந்தது.ஆனால்,இந்தப் படைப்பாளிகள் என்னை வெறும் பத்திரிகையாளனாக மட்டுமே பார்த்து விடைபெற்றுவிட்டார்கள்.அவர்கள் என்னைத் தவறவிட்டார்களா இல்லை நான் அவர்களைத் தவறவிட்டேனே தெரியவில்லை.ஒரு பத்திரிகையாளனுக்கும் படைப்பாளனுக்கும் இடையேயான உறவு சடுதியில் முடிந்துபோவதுதானா என்று ஒவ்வொரு எழுத்தாளரை நினைக்கும்போது நினைத்துக்கொண்டிருக்கிறேன். வேறு எதற்காகவும் ஒரு பத்திரிகையாளனின் முகம் படைப்பாளனுக்குத் தேவைப்படுவதில்லை. பிரசுரிக்க தகுதியில்லாத ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னேயும் ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு சோகமும் இருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: