யுகபாரதி

Archive for ஓகஸ்ட், 2010

இடை வெளி

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 9, 2010

குடும்பத்தின் வற்புறுத்தலுக்காக காதலனைக் காட்டிக்கொடுத்த சுப்ரமணியபுரக் கதாநாயகியை யோசித்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று அப்பெண்ணைப் பற்றிய யோசனை ஏன் எனக்கு வந்ததென்றுத் தெரியவில்லை.திரும்பத் திரும்ப அப்பெண்ணின் நினைவு என்னைக் கலங்கடித்தது.எத்தனை பரிதாபத்துக்குரிய பெண் அவள்.தளும்பிக் கொண்டிருந்த தன் காதலை புறந்தள்ளிவிட்டு குடும்ப அமைப்பு என்னும் சுழலுக்குள் விழுந்து சின்னாபின்னப்பட்டுப் போகிறாள்.எந்த இடத்திலும் அவள் கொண்ட காதலில் களங்கமில்லை.ஆனால்,கடைசியில் கதாநாயகனின் மொத்த வெறுப்பும் அவள்மீது திரும்பிவிடுகிறது.

நாம் நம்முடைய முடிகளால்தான் அறியப்படுகிறோம்.ஆனால்,நம்முடைய முடிவுகள் எதுவும் நம்முடையதில்லை.காலங்காலமாக சமூகம் நம் மீது திணித்த, திணித்துக்கொண்டிருக்கும் முடிவுகள்.அந்த முடிவுகளை மீறி நம்மால் எதையும் தன்னிச்சையாக செய்துவிட முடியாது.அவ்வாறு செய்வோமானால் அதே சமூகம் நம்மைக் கொச்சைப்படுத்தும்.விமர்சன ஈடியால் குத்திச் சாய்க்கும்.ஒரு சுடுசொல்லை பொறுக்கமாட்டாமல் ஒவ்வொரு பெண்ணும் எதையுமே பேசாமல் போய்விடுவது எத்தனை விநோதத்துக்குரிய விஷயம்? தன் காதலையோ தன் காமத்தையோ ஒரு பெண் இயல்பாக வெளிப்படுத்தும் வெளியைக் குடும்ப அமைப்புத் தருவதில்லை.அதற்காக குடும்ப அமைப்பே கூடாது என்று போர்க்கொடி தூக்குவதிலும் நியாயமிருப்பதாகத் தோன்றவில்லை.பிறகு என்னதான் செய்வது?பேச வேண்டும்.பெண்கள் தங்களை அனைத்து மட்டத்திலும் வெளிப்படுத்தும் அவசியத்தை உணர வேண்டும்.அவள் அப்படித்தான் என்றொரு திரைப்படம்.இயக்குநர் ருத்ரைய்யா இயக்கியது.ஒரு பெண்ணின் உள்ள தாபத்தை உருக்குலைக்காமல் வெளிப்படுத்திய ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.அதில் பெண் என்பவள் வெளிப்படையானவள் என்பதை வெகு நேர்த்தியாகக் காட்டியிருப்பார்.ஆணிலிருந்து மட்டுமல்ல தன்னிலிருந்தும் விடுதலை பெறுவதே முழுமையான விடுதலை. திரைப்படத்தில் பொதுவாக சித்திரிக்கப்படும் பெண் தன்னிலை இழந்தவளாக முடிவுகள் எடுக்கத் தெரியாதவளாகவே இருக்கிறாள் அல்லது தவறான முடிவுகளை எடுப்பவளாக இருக்கிறாள்.இரண்டுக்குமே காரணம் இயக்குநர் ஆண் என்பதால் என்று சமாளித்தாலும் கூட பெண் இயக்குநர்கள் எடுக்கும் படத்திலும் பெண் அவ்வாறே புனையப்படுகிறாள். எனக்குத் தெரிய ஆண்டாளுக்குப் பிறகு துணிச்சலான பெண் வேறு எங்கும் இல்லை.கண்ணகி இருக்கிறாள் ஆனால் அவளும் விட்டுப்போன கணவனுக்காகவே ஒப்பாரி வைத்து ஊரைக் கொளுத்துகிறாள்.தன்னை தன் உணர்வை காதலோ காமமோ எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியவள் ஆண்டாள் மட்டுமே.அதையும் பக்தி என்பதாக பார்த்து பாவித்து விலக்கிவிடுகிறார்கள்.ஏன் பெண்ணால் பேச முடியவில்லை என்றால் ஆண்கள் அதிகம் பேசுகிறார்கள்.ஆண்கள் அதிகம் பேசுவதால் பெண்கள் மௌனமாகி விடுகிறார்கள்,அப்படியான ஒரு மௌனத்தையும் கூட, மௌனம் சம்மதம் என்றே சமூகம் அர்த்தப்படுத்திக்கொள்கிறது.

பருத்திவீரனிலும் களவாணியிலும் காட்டப்பட்ட கதாநாயகிகள் சுயமாக முடிவெடுக்கும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றும்.ஆனால்,இரண்டு பாத்திரங்களும் காதல் என்ற கற்பிதத்தில் தவறான நபர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.முடிவை சுயமாக எடுத்தால் அது தவறான விளைவுகளைத் தரும் என்பதுபோல அமைந்திருந்திருக்கிறது.பள்ளிக்கூட பருவத்தில் வரும் காதலுக்காக வீட்டைத் துறந்துவிடுவதுதான் புரட்சிகரமான முடிவா என சம்பந்தப்பட்ட இயக்குநர்களைக் கேட்க வேண்டும்.இரண்டு படங்களும் தனித்துவம் வாய்ந்த படங்கள்.மதுரை மாவட்டம் பருத்திவீரனிலும் தஞ்சை மாவட்டம் களவாணியிலும் மிக அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, தஞ்சை வழக்கு மொழியைப் பிழையில்லாமல் பயன்படுத்தியத்திற்காக இயக்குநர் சற்குணத்தை தமிழ் சினிமாவின் புது அடையாளமாகக் கருதலாம். என்னுடைய பிரச்சனை இரண்டு படத்திலும் வரும் பெண்கள் அதாவது கதாநாயகிகள்.இரண்டு நாயகிகளுமே பாவத்துக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்.காதல்,அவர்களுக்கு ஒருவிதமான வசியப் பொருள்போல தோன்றுகிறது.காதலுக்காக வீட்டைத் துறந்துவிடுவது என்னும் முடிவை எடுக்கிறார்கள்.பாசத்தை முன்வைத்து நடத்தப்படும் நாடகமாக பெற்றோரின் வார்த்தைகளை உதாசினப்படுத்துகிறார்கள்.வீட்டை விட்டு வெளியேறுதல் என்பது குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறுவதாகக் கருதி தாங்கள் அமைக்கப்போகும் வேறொரு குடும்ப அமைப்புக்குள் நுழைக்கிறார்கள் அவ்வளவே.

இந்தக் கொடுமையிலிருந்து வெளிவரலாம் என இராவணன் படத்துக்குப் போனேன்.அதில் மேலும் சில கொடுமை காத்திருப்பது தெரியாமல்.காட்டில் வாழும் வீரைய்யா கதாநாயகியைக் கடத்திக்கொண்டு போகிறான்.கதாநாயகி இன்னொருவனின் மனைவி.போலீஸ் அதிகாரிக்கு மனைவியான கதாநாயகி கடத்திக்கொண்டு போன வீரைய்யாவின் காதலுக்கு உரியவளாக ஆகிவிடுகிறாள்.நாயகி எந்த இடத்திலும் காதல் வயப்படாமல் தன் கணவனுக்கு உண்மையாயிருக்கிறாள்.கணவனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து பூஜிப்பவளாக இருக்கிறாள்.அதிகாரத்தின் சகல திமிர்தனத்தோடும் திரிகிற ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட ஒற்றைக் காரணத்துக்காகவே அவனை தன் உள்ளத் தாம்பாளத்தில் வைத்து தாங்கோ தாங்கென்று தாங்குகிறாள்.இருந்தும் மீட்க வரும் கணவன்,மனைவியை மீட்டதற்குப் பின் சந்தேக வார்த்தைகளை அவள் மீது உமிழ்கிறான்.அப்போது தர்மபத்தினி தன் கற்பை நிரூபிக்க மறுபடியும் வீரைய்யாவிடம் வருகிறாள்.அதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி வீரைய்யாவை கணவன் சுட்டுத்தள்ளுகிறான். ஆண் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லது தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதமாக பெண் மாறிப்போகிறாள்.பெரும் அவஸ்தையிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஏங்கிய தன்னை, கற்பு என்ற ஒரு வார்த்தையில் களங்கப்படுத்திய கணவனின் கன்னத்தில் ஓங்கி நான்கு அறைவிடாமல் வீரைய்யாவிடம் கிளம்பிவந்து நிரூபிக்கத் துடித்த துடிப்பைத்தான் கொடுமை என்கிறேன்.எல்லா இடத்திலும் உண்மையோடு இருந்த தன்னை கூச்ச நாச்சமில்லாமல் சந்தேகப்படுகிறவனோடு மேலும் தன் காலத்தை எப்படி அக்கதாயகி கழிக்கப் போகிறாள்? கதைதான் என்றாலும் கூட ஆணின் ஆசைக்கு ஆணின் தேவைக்கு மட்டுமே பெண் என்பதுதான் குடும்ப அமைப்பின் பிரதான நோக்கமா? சக உயிர்களோடு கலந்திருத்தலும் அந்தக் கலப்பில் தன் தனித்துவத்தை கண்டுகொள்வதும்தான் மனித வாழ்வின் மையம் எனும்போது ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணுக்கு அந்த மையம் மறைக்கப்படுகிறது?பிரிந்திருந்த நாள்களில் கணவனின் சுத்தத்தைப் பற்றி மனைவி எங்கேயும் சந்தேகப்படுவதில்லை.காரணம்,கடத்திக்கொண்டு போனவன் இராவணன் என்பதால் சீதையை இழந்தவன் இராமனாகிவிடுகிறான்.இராமன் பரிசுத்தமானவன்.அவன் மீது கேள்வி எழுப்புவது ஆகமத்திற்கும் ஆண்களுக்கும் கேடு விளைவிப்பதற்குச் சமம்.எனவே, பெண் அமைதியாக தன்னை நிரூபித்து பரிசுத்த கணவனின் பேரால் வாழ வேண்டும். மனதில் உறுதி வேண்டும் என்றொரு திரைப்படத்தில்வரும் கதாநாயகி தொடர்ந்து ஆண்களின் உலகத்தால் அவமதிக்கப்படுகிறாள்.முடிவில் அத்தனை பேரையும் தூக்கி எறிந்துவிட்டு தனியாக கிளம்பிவிடுவாள்.எதார்த்தத்தில் அந்த முடிவு சாத்தியமில்லை என்றாலும் குடும்ப அமைப்பின் நெருக்கடியிலிருந்து அப்பெண் வெளியேறுவதையே பாலசந்தர் தீர்வாக வைத்திருப்பார்.அந்தத் திரைப்படம் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே விவாதம் தொடர்ந்துகொண்டிருப்பதுதான் வேடிக்கை.

ஒரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கும் செய்திகளை மட்டும் தருவதில்லை.மாறாக சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி பலவீனங்களை மிகைப்படுத்துவதாக உணர்கிறேன்.அம்மா,தங்கை,அக்கா மனைவி என பெண் ஏற்கும் அத்தனை பாத்திரங்களிலும் அவர்கள் அபலைகளாகவோ அகதிகளாகவோதான் காட்டப்படுகிறார்கள்.விதவை என்னும் குறியீட்டுக்குப் பின்னால் தாலி என்கிற குறியீட்டுக்குப் பின்னால் சதா குடும்ப அமைப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.களவாணியில் வருகிற கதாநாயகனின் தாயும் கதாநாயகியின் தாயும் அறிவிலிகளாக இருக்கிறார்கள்.ஜாகத்தில் செய்வினையில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.இந்த கேட்டிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. சுப்ரமணியபுரக் கதாநாயகிக்கு ஏன் அப்படியொரு அவச்சொல் சேர்கிறது எனப்பார்த்தால் தன் தந்தையின் பதவி வேட்கை கைகூடாததால் எனலாம்.அதுவும் பெரிய பதவியில்லை.கட்சியின் மாவாட்டச் செயலாளர் பதவி.அந்தப் பதவிக்காகவே தன் சித்தப்பாவின் சூழ்ச்சிக்கு கதாநாயகனும் அவனது குழுவும் பலியாக நேர்கிறது.ஒன்றன் பின் ஒன்றாக சங்கலித் தொடர்போல கதை வேறு எங்கெங்கோ சுற்றிவிட்டு முடிவில் கதாநாயகி காட்டிக்கொடுக்கும் இடத்தில் முடிவடைகிறது.படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் கதாநாயகியைக் கொல்லு கொல்லு என்று கத்தினார்கள். அவளைக் கொல்லு என ரசிகர்கள் கத்தும்போது காரணமில்லாமல் ஒரு பெண் எப்படி பகடையாடப்படுகிறாள் என்பதை யோசிக்க வருத்தமாயிருந்தது.

ராவணன் கதாநாயகியானாலும் சுப்ரமணியபுரக் கதாநாயகியானாலும் இரண்டுபேருமே ஆண்களின் பார்வையிலிருந்து ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.இரண்டு பேரும் வலியுறுத்துவது குடும்ப அமைப்பை உடைத்துவிடாதே என்பதுதான். வடுவூர் துரைசாமி அய்யங்கார் நடத்திவந்த மனோரஞ்சனி இதழில் ஒருகாலம்வரை எழுதிவந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் தனியாக ஜகன் மோகினி என்றொரு இதழ் தொடங்கினார்.அந்த இதழில் தன் நாவல்களை வெளியிட்டுவந்த வை.மு.கோ.தன் படைப்புகளைச் செப்பனிட வடுவூராரைக் கேட்டிருக்கிறார்.ஆரம்பத்தில் அதை அன்போடு செய்து தந்த அவர் பின்னாளில் ஜகன்மோகினியால் தன் விற்பனை பாதிப்புக்குள்ளானதாக கருதி அவருக்கு எழுதத் தெரியாது.நான்தான் எழுதித் தருகிறேன் என்று தனது மனோரஞ்சினியிலே எழுதிவிடுகிறார்.இந்த விஷயம் வை.மு.கோவுக்கு தீராத வேதனைத் தருகிறது. முடிவில் வை.மு.கோ.தொடர்ச்சியாக எழுதி வடுவூராரின் அவதூறை பொய்யாக்குகிறார்.அதற்கு உதவி புரிந்தது வை.மு.கோ.வின் கணவர் பார்த்தசாரதி.வேறு ஒரு ஆண் அவதூறை கிளப்புகிறபோது அதை பொய்யாக்க கணவன் என்கிற குடும்ப அமைப்பின் உறுப்பினரே உதவ வேண்டியிருந்தது என்பதை எந்த திரைப்படத்திலும் நாம் பார்க்கக் கிடைக்காது.ஏனெனில்,எதார்த்தத்தின் சரடை விட்டுவிட்டு என்றென்றும் ஆண் விரும்பும் கருத்தியலுக்குள்ளே பெண் அடக்கப்படுகிறாள்.

இன்னும் ஆழமாக இன்னும் விரிவாக இவ்விஷயம் அலசப்பட வேண்டும். இப்போதைக்கு சின்ன இடைவெளி

Advertisements

Posted in கட்டுரைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | 3 Comments »