யுகபாரதி

Archive for செப்ரெம்பர், 2010

இடைவெளி 02

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 2, 2010

திரைப்படங்களில் வெறும் பதுமைகளாக வலம்வரும் பெண்கள் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வீரஞ் செறிந்தவர்களாக சித்திரிக்கப்படுகிறார்கள்.சூழலோ வாழ்க்கைத் தரமோ எவ்விதத்திலும் மாறுபாடு இல்லாத போது எப்படி இந்த சித்திரிப்புகளை உண்மை என நம்புவது?.திரைப்படங்களில் அழுமூஞ்சிகளாக இருப்பவர்கள் நெடுந்தொடர்களில் அடுத்த பெண்ணை அறை கொடுத்து அழவைப்பவர்களாக இருக்கிறார்கள்.கவர்ச்சியைப் பிரதானமான கொண்டு வருபவர்களாக திரைப்படத்தில் தோன்றும் பெண்கள் கண்ணியத்துக்குரிய மாதரசிகளாக நெடுந்தொடர்களில் வலம் வருகிறார்கள்.ஏனெனில்,திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் ஆண்கள் என்பதாலும் நெடுந்தொடர்களுக்கான பார்வையாளர்கள் பெண்கள் என்பதாலும் இப்படியான ரெட்டைத் தோற்றத்தை சமூகம் விரும்புகிறது.ஆக பெண்கள் எப்போதும் எங்கேயும் ஆண்களின் விற்பனைக்கு ஏதுவான பண்டமாகவே கையாளப்படுகிறார்கள்.ஏறக்குறைய பத்து நெடுந்தொடர்களுக்கான தலைப்புப் பாடல் எழுதியவன் என்கிற முறையில் நெடுந்தொடரில் வரும் பெண் கதாபாத்திரங்கள் குறித்து என்னால் ஓரளவு கிறகிக்க முடியும்.திரைப்படத்தில் எப்படி பெண்கள் முடிவுகள் எடுக்க முடியாதவர்களாகக் காட்டப்படுகிறார்களோ அவ்விதமே நெடுந்தொடர்களில் ஆண்கள் முடிவுகள் எடுக்க முடியாதவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.இங்கே நாம் கவனிக்க வேண்டியது, நம்முடைய சமூகத்தில் முடிவுகள் எடுக்க முடிந்தவர்களே அதிகாரத்திற்கு உரியவர்கள்.அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாகவே வாழ்வை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் கருதுகிறார்கள். உண்மையில் முடிவுகள் என்பன சூழல் நிமித்தம் எடுக்கப்படுவனவா இல்லை சமூகத்தின் கட்டமைப்பைக் கொண்டு எடுக்கப்படுவனவா என்பதை யோசிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் சூழ்ச்சியை இன்னொரு பெண் முறியடிக்க வேண்டும்.முதலில் கதாநாயகி அபலையாகவும் பின்னர் வில்லி அபலையாகவும் ஆக்கபடுவதே நெடுந்தொடர்களின் சூத்திரம்.இந்த சூத்திரத்தை யார் சுவாரஸ்யமாக புதிய புதிய உத்திகளில் காட்ட முயல்கிறார்களோ அவர்களின் டி.ஆர்.பி ரேட் கூடுகிறது.டி.ஆர்.பி ரேட் கூடும் நெடுந்தொடர்களே வெற்றிகரமான தொடர்களாக அறிவிக்கப்படுகின்றன.அவ்விதத்தில் பார்த்தால் சன் தொலைக்காட்சியில் வரும் திருமதிசெல்வம்,தென்றல் இரண்டுமே முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இரண்டுத் தொடருக்கும் இயக்குநர் என் நண்பர் குமரன்.இரண்டுத் தொடரையும் தயாரிக்கும் நிறுவனம் விகடன் டெலிவிஸ்டாஸ்.இரண்டுத் தொடருக்கும் தலைப்புப்பாடல் என்னால் எழுதப்பட்டவை.ஒரு சூத்திரத்தில்தான் இரண்டு தொடர்களும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இரண்டுத் தொடர்களிலும் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களின் குணங்கள் ஒன்றுதான்.சொல்லப்படும் உத்திகளாலும் காட்சிப்படுத்துவதில் உள்ள தத்ரூபத்தினாலும் அப்பெண்கள் சிறந்தவர்களாகவும் எதற்கும் அஞ்சாமல் வாழ்வை எதிர்கொள்பவர்களாகவும் தோன்றுகிறார்கள்.தொலைக்காட்சிகளில் நான் ரசிக்கும் மற்றுமொரு நிகழ்ச்சி நடிகை லெஷ்மி தொகுத்து வழங்கும் கதையல்ல நிஜம்.அந்நிகழ்ச்சி என்னைக் கவர்ந்ததற்கு காரணம்,முற்றுமுழுக்க அதில் இடம்பெறும் அல்லது பங்குபெறும் பெண்கள் தங்களுக்கு ஆண் சமூகத்தால் இழைக்கப்படும் அநீதிகளை அப்பட்டமாக சொல்கிறார்கள் என்பதால்தான்.எத்தனை சோகம் நிரம்பிய உண்மைகள் அவை?

சென்ற வாரத்தில், ஒரு இளம்பெண் தனது பெற்றோர்களை விட்டுவிட்டு பாட்டியிடம் போய்விடுகிறாள்.பாட்டியிடம் போய்விட்டதற்குக் காரணமாக அப்பெண் சொல்லியவை தனது: பெற்றோர்கள் தன்னை நடத்தும் விதம் சரியில்லை.  யாரோ ஒரு மூன்றாவது நபர் தனது அந்தரங்கத்திற்குள் பிரவேசிப்பதைக் கூட தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.தன்னுடைய தாய்க்கும் அந்த மூன்றாவது நபருக்கும் தொடர்பு இருக்கிறது.தன்னுடைய அப்பாவின் பேச்சை அம்மா கேட்பதில்லை.ஒரு ஆணுக்குரிய அல்லது தந்தைக்குரிய தகுதியில் இருந்து அவர் செயலாற்றவில்லை.மூன்றாவது நபர் என்னைப் பின் தொடர்வதையோ பாலியல் தொல்லை தருவதையோ கருத்தில் கொள்ளவில்லை.அந்த மூன்றாவது நபர் ஒருநாள் நான் யாரோடோ பேசியதை முன்வைத்து என்னை ஒருநாள் முழுக்க ஆடையில்லாமல் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தததைத் தடுக்கவில்லை.இவ்வாறான குற்றச்சாட்டுகளை மக்கள் முன்னால் தயக்கமில்லாமல் அப்பெண் எடுத்துச் சொன்னதும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் அப்பெண் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் பொய்யில்லை என அதே மேடையில் நிரூபிக்கப்பட்டது.

ஒரு பெண்ணாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளின் மையத்தை நன்கு உணர்ந்தவராக லெஷ்மி இருப்பதால் கேட்கப்பட வேண்டிய கேள்கவிகளைத் தவிர்க்காமல் கேட்கிறார்.பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அத்தனைக்குப் பின்னாலும் ஆண்கள் குரூர முகம் வெளிப்படுகிறது.அதே போல பெண்களின் அறியாமையும் கூட.பொது தளத்தில் பெண் தன் உணர்வுகளைச் சொல்ல முடியாதவளாக இருக்கிறாள் என்பதுதான் உண்மை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் வந்து பேசக்கூடிய தைரியத்தைக் காலம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3) என்று பெரியார் பெண் விடுதலை குறித்து குடியரசில் எழுதியிருக்கிறார். தேவைக்காகவே பெண் ஆணை சார்ந்திருக்க வேண்டிவருகிறது.எனவே,பெண் ஆணைச் சாராமல் வாழ வேண்டுமானால் தன்ன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையை எட்ட வேண்டும்.அந்த நிலையை எட்டிவிட்டால் பெண், பிள்ளைப் பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை.பெண்கள் சமத்துவம் பெற அக்காலத்திற்கு ஏற்ப பெரியார் கூறிய தீர்வு இக்காலத்திற்கும் ஏற்புடையதுதானா?

ஒரு பிரச்சனையை அணுகும்போது அதை அக்காலத்தின் சூழலுக்கு ஏற்பவும் உடனடி தீர்வாகவுமே பெரியார் கையாண்டு இருக்கிறார்.தவிர,பெண்கள் பிள்ளைபெறச் சம்மதிக்காதபோதே விடுதலை சாத்தியம் என்று அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.அவரே பிறிதொரு இடத்தில்,ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)-என்கிறார்

ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ளும் கோட்டையாக குடும்பத்தை வைத்திருக்கிறார்கள்.அந்தக் கோட்டை தகர்ந்துவிழும் காட்சிகளைத்தான் நெடுந்தொடர்கள் நம்பியிருக்கின்றன.ஒருவிதத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் மனவெளிப்பாடாகவே தொடர்களை ஆராதிக்கிறார்கள்.நூறுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் ஆக்‌ஷன் ஹீரோவை எப்படி விசிலடித்து ஒரு திரை ரசிகன் ரசிக்கிறானோ அதே மன இயல்பைத்தான் தொடர்களில் மெய்மறக்கும் பெண்களும் கொண்டிருக்கிறார்கள்.படையப்பாவில் ஒரு நீலாம்பரியை அடக்கியதற்காக கைதட்டல் பெற்ற ரஜினிகாந்தை ஒத்த ஆண்களை ஒவ்வொருநாள் தொடரிலும் நீலாம்பரியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் அடக்கிக்கொண்டே இருக்கிறாள்.ஒரு சின்ன வித்யாசம், படைப்பாவில் நீலாம்பரி காதல் வைராக்கியமுள்ள வில்லி.தொடரில் கதாநாயகி.

திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் வரும் பெண்கள் எப்படி கருத்தியல் ரீதியாகவே மாறுபடுகிறார்கள் என்பதில் இருந்தே நம்முடைய புரிதலை ஆரம்பிக்கலாம்.ஒரு கருத்தோ அல்லது சிந்தனையோ விற்பனைக்குரிய பொருளாக மாற்றப்பட வேண்டுமானால் அது தன் தன்மைகளை மாற்றிக்கொள்ளும் என்பதை
சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 
 
 
 
  

Advertisements

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | 4 Comments »