யுகபாரதி

Archive for பிப்ரவரி, 2011

என்ன செய்யலாம் இதற்காக?

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 17, 2011

என்ன செய்யலாம் இதற்காக? என்ற நூல் வெளியீட்டு விழா மூலம் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஈழக் கொடுமைக்கு எதிரான கேள்வியை நம்மிடையே முன் வைத்த மனித உரிமைப் போராளி நிமல்கா பெர்ணாண்டோவைப் பற்றி சிந்திக்கத் தோன்றுகிறது. அவர் ஒரு சிங்களப் பெண்மணி என்றபோதும் தமிழினத்துக்கு எதிராக நடந்த அத்தனை கொடுமைகளையும் காணச் சகியாமல் தன் மனித உரிமைக் குரலை எழுப்பி இருக்கிறார்.

 உலகத்தில் இன்னமும் மனித உரிமைகளுக்கான குரல் நெறிக்கப்படும்போது அதை முன்வைத்து நிமல்கா போன்ற பெண் போராளிகள் கிளர்ந்தெழுவது ஆரோக்கியமான விஷயம்.அவர் பாதிக்கப்பட்ட பெண்களைக் களத்திலேயே சென்று அவர்களுக்கான ஆறுதலை பாதுகாப்பை நல்கி இருக்கிறார்.ஒரு இனத்துக்கு நிகழ்ந்த கொடுமையை இன்னொரு இனம் எண்ணிப்பார்பதும் கொடுமைக்கு உள்ளான இனத்துக்காக குரல் கொடுப்பதும் வரலாறு நெடுக நாம் வாசித்திருக்கிறோம்.ஆனால்,எந்த இனம் அடித்ததோ அந்த இனத்திலே பிறந்த ஒரு பெண்மணி தன் இனம் புரிந்த அட்டூழியத்தை அப்பட்டமாக உலக அரங்கில் பேச முன்வருவது முக்கியமாகப்படுகிறது.இப்படி ஒரு குரலை எழுப்புவதற்காக ராஜபக்சே அரசு அவரை என்னவிதமான நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதும் சொந்த இனத் துவேசியாகப் பார்க்கப்படுவார் என்பதும் நாம் அறிந்ததே.

நிமல்கா அவர்கள் பேசிய விஷயங்களை இணையத்தில் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.தோழர்.தியாகு மிக அற்புதமாக மொழி பெயர்த்தார்.எந்தப் போர் ஆனாலும் அதில் அதிகமும் பாதிக்கப்படுவது பெண்களே.பெண்களை மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு கணக்கே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.பெண்கள் மீதான தாக்குதலுக்கு மிகுதியும் ஆண்களால் ஆன ராணுவ மனம் சற்றே கூடுதலான வெறியைக் கொண்டே இயக்குகிறது எனலாம்.இலங்கையில் போதிய அடிப்படை வசதி கூட இல்லாமல் முள்வேலி முகாமுக்குள் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காகவும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது நம்முன் நிற்கும் கேள்வி.இந்தக் கேள்வியை தமிழகத்தின் அறிவு சார்ந்த சமூகத்திடம் நிமல்கா எழுப்பியதைப் போல எல்லோரிடமும் நாம் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ராக்கி சாவந்த என்றொரு நடிகை.தொலைக்காட்சி ஒன்றில் ஒரு ஆண்மகனை ஆண்மை இல்லாதவரென்று அவமானப்படுத்தியதற்காக ஆணாகத் தன்னை உணர்ந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் அந்த இளைஞனின் குடும்பதினர் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வந்த செய்தியை வாசிக்க நேர்ந்தது. ராக்கி சாவந்தின் உரையாடலும் அதற்காக அந்த இளைஞர் மரணத்தைத் தொட்டதும் வருத்தக்கு உரியதே.ஆண்,பெண் என்று வித்தியாசப்படுத்திக் கொள்வதே ஈகோவின் வெளிப்பாடுதான் என்கிறார்கள்.

 ஒரு ஆண் தன்னை ஆண் என்று அடையாளப்படுத்திக் கொள்வதே பெண்னை விடவும் உயர்ந்த என்ற பொருளில்தான்.இந்த வித்யாசம் உடல் ரீதியான எண்ணத்தை அவனுக்குள் தோன்றுவிக்கிறது.ஆகவே சமூகம் சொல்லி வைத்திருக்கிற ஆணுக்குரிய இலக்கணங்களோடு தான் அறியப்பட வேண்டும் என ஆசைப்படுகிறான்.அந்த ஆசையை தவிடுபொடியாக்கும் எந்த உரையாடலையும் அவன் மனம் ஏற்க தயங்குகிறது.ராக்கி சாவந்தின் அனுகுமுறை கண்டனத்துக்குரியது.கண்டிக்கத் தக்கது.பொது அரங்கில்  யாரையும் யாரும் அவமானப்படுத்துவது அல்லது அவதூறு செய்வது மன்னிக்க முடியாத குற்றம்தான் என்றாலும் அதற்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அந்த இளைஞர் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது ஆண் மனத்தின் பரிதாபத்தையே காட்டுகிறது.

நம்முடைய ஊடகங்கள் முழுக்கவும் வியாபாரத்தை மையமாக வைத்தே செயல்பட துவங்கிவிட்ட  அபாயமான காலமிது.ஊடகத்தின் வாயிலாக நாம் பெற்றுவரும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.ராக்கி சாவந்த போன்ற நடிகைகளின் டாக் ஷோக்கள் அல்லது தாக் ஷோக்கள் வரைமுறையில்லாத புதிய பண்பாட்டை உருவாக்கி வருகின்றன.தமிழில் அத்தகைய கொடுமைகள் நிகழ இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம்.ஆனால்,நிச்சயம் அப்படியான நிகழ்ச்சிகளை நம்முடைய தொலைக்காட்சிகள் விரைவில் ஒளிபரப்பவே போகின்றன.ஜாக்கிரதையும் கறாரான கவனிப்பும் இல்லாத ஒரு துறை சார்ந்த சீர்கேடாக அதைக் கருதாமல் மக்கள் அவ்வாறான நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும்.

திருச்சியில் அன்பாலயம் என்றொரு அமைப்பு.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையமாகவும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகமாகவும் செயல்பட்டு வருகிறது.அதன் இருபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவுக்கு நானும் மைனா திரைப்பட இயக்குநர் பிரபு சாலமனும் போயிருந்தோம்.ஒரு நாள் முழுக்க அந்த குழந்தைகளோடு இருந்தோம்.அந்தக் குழந்தைகளின் சிரிப்போடு விளையாடினோம்.ஒவ்வொரு குழந்தைகளின் பின்னணி பற்றியும் அவர்களின் இன்றைய மருந்துவ நிலை குறித்தும் அன்பாலத் தோழர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அன்பாலத்தின் நிறுவனர் செந்தில்குமாரை பாராட்டியே ஆக வேண்டும்.அபலைகளை ரட்சிக்கும் ஆத்மாவை அவர் பெற்றிருக்கிறார்.உடனிருந்து அவருடைய செயல்பாடுகளைக் கேட்டறிந்தோம்.வாழ்வில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அன்பாலத்திற்குச் சென்று வரலாம்.

 தமிழகத்தைப் பொறுத்த வரையில் எய்ட்ஸ் நோயை முற்று முழுக்க ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முனைப்பு காட்டி வருகிறது என்றாலும் மக்களிடம் அதற்கான ஆதரவை இன்று வரையில் திரட்ட முடியாமல்தான் இருக்கிறது என்றார் வழக்கறிஞர்.செந்தில்குமார்.அவருக்கான உதவிகளையும் அவர் செல்லும் பாதைக்கு நம்மால் இயன்றதையும் செய்வதொன்றோ இப்பதிவிற்கான நோக்கம்.ஒரு நாள் அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியான முகம் இன்னும் சிலநாளில் இல்லாமல் போய்விடும் என்பதை எப்படி நினைக்க முடியும்?

 செந்தில்குமார் மற்றுமொரு தகவலைச் சொன்னார்.அன்பாலத்திற்கு பொங்கலை முன்னிட்டு  ஒரு தம்பதியர் உணவு வழங்க முன்வந்திருக்கிறார்கள்.இவரும் ஒப்புக்கொண்டு குறித்த நாளில் அவர்களை வரவழைத்து உபசரித்து கொண்டிருக்கும் வேளையில் உணவு வழங்க வந்த தம்பதிகள் ஓவென்று அழத் தொடங்கியிருக்கிறார்கள்.அவர்களை ஆற்றுப்படுத்தி காரணத்தை கேட்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட தன் உறவுக்காரப் பெண் பந்தியில்அமர்ந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தொலைந்துபோய் வெகுகாலமாகத் தேடியும் கிடைக்காத அந்தப் பெண்ணைக் கண்டடைந்த சோகமே அவர்களை அழ வைத்திருக்கிறது.தர்மம் தலைகாக்கும் என்ற சொல்லுக்கு இதைவிட எதார்த்த சம்பவம் இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை.நாம் பிறருக்கு செய்யும் நல்லவைகளே நமக்கும் நன்மை பயப்பன.

 நிமல்கா பெர்ணாண்டோவைப்பற்றிய குறிப்புகளின் ஊடே என்னுடைய நினைவிற்கு வந்தவர் திருமதி.அஸ்மா ஜஹாங்கீர்.பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையத் தலைவராக பணிபுரிந்துவரும் அவருடைய செயல்பாடுகளையும் வியக்கத் தோன்றுகிறது.பெண்களின் உரிமைகளுக்கான குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கான மதக் கட்டுப்பாடுகள் குறித்து தொடந்து சிந்தித்துவருகிறார்.சிந்திக்கத் தெரிந்த அல்லது முடிந்த ஒருவரால் அரசுக்கும் ஆதிக்க சக்திகளும் குடைச்சல் ஏற்படும்.அந்தக் குடைச்சலில் இருந்து தப்பிக்க அரசு புதிய சட்டங்களையும் ஆதிக்க சக்திகள் புதிய யுத்திகளையும் கைகொள்ள துடிக்கும்.அவற்றின் துடிப்பை முறியடித்து வெடிக்கும் பெண்களே காலத்தின் கவனத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

அஸ்மாவைப் பற்றி சொல்லும்போது அவர் 2005 இல் மகளிர் மீதான வன்கொடுமைக்கு எதிராக நடத்திய இருபாலர் நெடுந்தொலைவு ஓட்டத்தை மறந்துவிட முடியாது.அதற்காக அவர் தாக்கப்பட்டதும் கையெறி குண்டுகளால் அவர் போராட்டம் சிதறடிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.பெண்களைத் தூண்டிய குற்றத்திற்காக காவல்துறையினர் பொதுவில் வைத்து அஸ்மாவை ஆடை அவிழ்ப்பை மேற்கொண்டார்கள்.ஒரு ஆண் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் எந்த காவல்துறை நாயும் ஆடையை அவிழ்ப்பதில்லை.ஆனால்,ஒருபெண் என்றால் முதலில் அந்த நாய்களின் கவனம் அவளின் உடல் மேல் பாய்ந்துவிடுகிறது.நாடு வேறானாலும் நடப்பு ஒன்றுதான்.பெண் என்றால் பலாத்காரம்,வல்லுறவு.இந்தக் கேட்டை மன தத்துவ ரீதியாக அனுகி களைய வேண்டும்.பெண் என்பது உடல் மட்டுமல்ல.

சிம்மக் குரலோன் டி.எம். எஸ்ஸும் பி.சுசிலா அவர்களும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்து பாடினார்கள்.பாடி முடிந்ததும் டி,எம்.எஸ் .இப்போது வயது காரணமாக முன்புபோல பாட முடியவில்லை என்றார்.அதற்கு சுசிலா அவர்கள் கூறிய பதில் இப்போது நீங்கள் பாடியதையும் மக்கள் பழைய குரலிலே கேட்பார்கள் என்றார். என்ன அற்புதமான வார்த்தை அது. ஒருவரை நாம் உள்வாங்கி கொண்டால் அதிலிருந்து மீள்வதில்லை. கருத்துக்கள்,சிந்தனைகள் எல்லாமே அப்படித்தான் போல.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் மனத்தில் உள்வாங்கிய பெண்ணடிமைச் சிந்தனைகளை நம்மால் வெளியேற்றவே முடியவில்லை இல்லையா?

Advertisements

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »