யுகபாரதி

Archive for ஏப்ரல், 2011

பதினாறு முறை தாகூரின் நினைவு வந்தது

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 24, 2011

01.
இதயத்திற்கு நெருக்கமானவர்களைப்பற்றி
என்ன எழுதுவது?

அவர்கள் நெருக்கமானதைப்பற்றியோ
ஒரு கட்டத்தில் இதயமாகவே மாறிப்போனது பற்றியோ
எழுதி புரிய வைப்பது
எளிதான காரியமில்லை

தாகூர்,இதயத்திற்கு நெருக்கமானவர்
இதயமாகவே மாறிப்போனவர்

02.
அவருடைய சொற்கள் ஞானிகளிடமிருந்தும்
செயல்கள் சித்தர்களிடமிருந்தும் பெறப்பட்டவை

ஞானிகளையும் சித்தர்களையும்
உணர முடியும், உணர்த்த முடியாது

தாகூர்,உணரத் தக்கவர்
உணர்த்த முடியாதவர்

03.
ஒருவரிடம் இருப்பது
இன்னொருவரிடம் இல்லாது போகையில்
புகழ்வதா இன்மைக்காக வருந்துவதா
எனத் தெரியவில்லை

பாரதியிடம் இல்லாதது
தாகூருக்கு இயல்பாயிருந்தது
தாகூரிடம் இருந்தது
பாரதியிடம் இல்லாமலேயே போனது

இரண்டு பேரிடமும் ஒன்றிருந்தது
அது,கவிதை
அந்தக் கவிதை இல்லாமலிருந்த
தேசத்திற்கு எல்லாம் கொடுத்தது

04.
தேசத்தைக் காதல் கொள்வது
எப்படியென தாகூர் நமக்குக் கற்பித்திருக்கிறார்

தேசத்தை காதலிக்க விருப்பமில்லாதவர்களும்
தாகூரைக் காதலிக்கலாம்
ஏனெனில்,
தேசமும் தாகூரும் வேறு வேறு அல்ல

05.
அழகில் இருந்து ஆன்மீகத்தைக் கண்டடைந்தவர்
தாகூர்…..அவர் ஓவியத்தில் இருந்தாலும்
நம்மோடு உரையாடிக்கொண்டே இருக்கிறார்

06.
சாந்தி நிகேதமென்றால் அமைதியின் உறைவிடம்
அமைதியை எழுத்துக்களாக மடைமாற்றிய
ஒரு மகாகவி
நம்முடைய சத்தமான புகழஞ்லிகளைச்
சத்தியமாய் விரும்பமாட்டான்

காற்றின் வழியாக நம்முடைய
நறுமண அன்பினை அனுப்பி வைப்போம்

07.
குறித்து வைத்ததை
குறிப்பிட்ட நேரத்தில் சொல்ல முடிந்தால்
அதுவே போதுமானது.ஆனால்,

தாகூரைப் பற்றிக் குறிக்கவும் முடியாது
குறித்த நேரத்தில் முடிக்கவும் முடியாது

அவர் ஒரு அகன்ற தீபம்
தீபத்தை தீபமென்றே சொல்லவேண்டும்
ஜோதியென்றோ விளக்கென்றோ
தரப்படுத்தக் கூடாது

08.
தாகூரின் கண்கள்
ஏழை இந்தியாவின் எதிர்கால வெளிச்சம்
கூலித் தொழிலாளியின் கொப்பளிக்கும் கனா
சோர்ந்துபோன காதலர்களின் சூரியத் தொடுகை

மலைகளின் நதிகள் எல்லாம்
மண்ணை நோக்கியே எனப்தைப்போல
அவருடைய ஒவ்வொரு இமைப்பும்
உதயத்திற்கான உத்திரவாதங்கள்

09.
தாகூர்,இப்போது இருந்தால் என
எப்போதாவது நினைப்பதுண்டு

இருக்க வேண்டும் என ஏன்
நினைக்கிறேன்?

அவர் இல்லாமல் போனதாக
யாராவது நினைக்க முடியுமா?

10.
புல்வெளியில் பூக்களில்
பூமிப்பந்திம் முதுகில்
ஈரம் தொலைத்த கோடை வெயிலில் என
எங்கும் எங்கெங்கும் அவர்
நிறைவாய் நிறைந்து சிரிக்கிறார்

காகிதங்களைக் கெளரவப்படுத்திய
அவருடைய இலக்கியங்களால்
எழுத்து தேவதை இளமையோடிருக்கிறாள்

தாகூரின் இரண்டு வரிகளை
மனப்பாடம் செய்துவிட்டால்
இரு நூறாண்டு வாழ்ந்ததற்குச் சமம்

11.
நாம் நம்முடைய தேசீய கீதத்திற்கு
எழுந்து நிற்பது
தாகூருக்கு எழுந்து நிற்பதே ஆகும்

படைப்புகள்
காலத்தைக் கடந்து மட்டுமல்ல
காலத்தின் சாட்சியங்களாவும் நிற்பதே
பெருமை

12.
இருக்கு நிலையில் இருந்துதான்
எதையும் பார்க்க முடியும் என்பது தவறு

எதையும் பார்க்கத் துணிந்துவிட்டால்
இருக்கும் நிலை இயல்பாகவே உயரும்

தாகூர்,
எஸ்டேட்டுகளின் முதலாளியாக அல்லாமல்
பூவனங்களில் தும்பியாகத் திரிந்திருக்கிறார்

13.
படுகொலைக்கு குமுறிய தாகூர்
சர் பட்டத்தை தூக்கி எறிந்திருக்கிறார்

ஒரு நல்ல படைப்பாளி
மக்களுக்காகப் பட்டங்களை ஒருபோதும்
சுமக்க விரும்புவதில்லை

மக்களே கொடுத்த பட்டமானாலும்
அதை மக்களுக்கே சமர்ப்பிக்கும் துணிச்சல்
மகாகவிகளுக்கே உரியது

14.
இருக்கும் போதே
உயரங்களைத் தொட்டவர் என்பதாலல்ல
இன்று வரையிலும் அதே
உயரத்திலேயே இருக்கிறார் என்பதுதான்
தாகூரின் தனித்துவம்

15.
தாகூரின் நூல்களைத் தொடுகையில்
தாயின் கர்ப்பத்திற்கே மீண்டும்
போவது போலிருக்கிறது

அவர் தொடங்கும் சொல் மந்திரமாகவும்
தொடரும் சொல் வேதமாகவும் மாறிப்போகின்றன

16.
மொழிபெயர்ப்பை வாசிக்கும் போதே
மூல மொழியை நேசிக்கத் தூண்டுபவர்கள்
யுகக்கவிகள்

ஒரு மொழியின் சிறப்பு
அதைப் புழங்கும் படைப்பாளிகளிடமிருந்தே
விருத்தி அடைகிறது

தாகூர்,
 பிரயோகிக்கும் சொற்களில் இருந்து
ஆத்மாவின் மூலத்தையே அறியத் தருகிறார்

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »