யுகபாரதி

பெண்களின் அரசியல்

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 21, 2011

ஒவ்வொரு பெண்ணும் ஒரு புரட்சிவாதி பெரும்பாலும் தன்னைத் தானே எதிர்த்துத் தீவிரமாகப் புரட்சி செய்பவன் என்ற ஆஸ்க்கார் ஒயில்ட்டின் மேற்கொள் நினைவுக்கு வந்தது.அரசியலில் பெண்கள் ,பெண்களின் அரசியல் இரண்டைக் குறித்தும் இந்த தேர்தல் நேரத்தில் தீவிரமாக புரிந்துகொள்ள முடிந்தது.தில்லியில் சோனியாகாந்தி,மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி,தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்.ஜெ.ஜெயலலிதா மூவருக்கும் அரசியல் தெரிந்திருக்கிறது.

அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் தந்திரங்களைக் கற்று வைத்திருக்கிறார்கள். அவர்கள் கற்று வைத்திருக்கும் தந்திரங்கள்தான் இன்றைய தேர்தல் களத்தில் வெகுவான கவனத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதிகாரத்தைக் கைப்பற்றுத் துடிக்கும் பெண்கள் அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தொடங்கும்போது நேரும் சாதாரணச் சிக்கலாக இதைப் பார்க்க முடியவில்லை.அவர்களின் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும் ஆண் சமூகத்தின் மீதான வெறுப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.அரசியல் என்பது மக்களுக்கான நலம்சார்ந்த சிந்தனையாகவே இருக்க முடியும்.அவ்வாறிருக்க அந்தச் சிந்தனைக்கு அறம்சார்ந்த வழிமுறைகளை ஏன் பெண்களால் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை?

முற்று முழுக்க ஆண்களால் சூழப்பட்ட அரசியல் களத்தில் இன்று முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் பெண்களாக அமைந்திருப்பது காலத்தின் மேல் நோக்கிய வளர்ச்சியே என்றபோதும் சிந்தனைகள் ஒரு வியாபாரத் தந்திரத்தோடு அரங்கேற்றப்படுவது கீழ்நோக்கிய அபத்தம். பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் பெண்களுக்கான வழிகள் என்பது இன்றும் இருளடைந்தே இருக்கின்றன.இந்த இருட்டுப் பாதையில் தன்னுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் ஆற்றும் கடமையும் தனித்துவமும் அவ்வழிகளை கண்டடையும் லாந்தர் விளக்காக எனக்குத் தோன்றுகிறது.ஒருவேளை அவர்களின் பிடிவாதம் அல்லது வைராக்கியம் ஆணாகப்பட்ட ஒருவனுக்கு எரிச்சலை ஊட்டுவதால்தான் அவர்களின் முடிவுகள் விமர்சிக்கப்படுகின்றனவா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.கூட்டணிக் கட்சிகளை தன்னை அண்டிப் பிழைக்கவந்த எடுபிடிகளாகக் கருதுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?.ஏதேச்சதிகாரத்தின் ஒரு கூறாகவே இதனை கருத வேண்டும்.எனக்குக் கீழ்தான் எல்லாம் என்ற பண்ணையார்த்தனத்தை ஒருக்காலும் பெண்களின் விடுதலையாகப் பார்க்க முடியாது எந்ததெந்த தொகுதிகளில் யார் யார் நிற்க வேண்டும் என்பதை தாய்க் கழகமாகச் செயல்படும் கூட்டணிக்கட்சிதான் முடிவெடுக்கும்.அந்த முடிவுகளுக்கு கூட்டணியில் உள்ள ஏனையக் கட்சிகளும் ஒப்பதல் அளித்த பிறகு எடுத்த முடிவை அறிவிக்க வேண்டும்.ஜனநாயகத்தின் ஓரே சாவியாக இருக்கும் தேர்தலில் யாரை எப்படி பூட்டுவது என ஆலோசிப்பதா கூட்டணி தர்மம் என்பதை மேற்கூறிய அம்மையார்கள்தான் சொல்ல வேண்டும்.

கட்சியைக் காப்பாற்றுவதற்காக அல்லது ஆட்சியை கைப்பற்றுவதற்காக என்று அவர்கள் சொல்வார்களே ஆனால் அதைவிட அந்தக் கட்சிக்கும் பிடிக்கப்போகும் ஆட்சிக்கும் என்ன கதி என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். தேர்தலை முன்வைத்து நிகழ்த்தப்படும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் பெண்மணிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது கிருஷ்ணம்மாள்தான் நினைவுக்கு வருகிறார்.எத்தனை அற்புதமான பெண்மணி அவர்.தன் வாழ்நாள் முழுக்க மக்களுக்காக செயலாற்றி தன் தியாக வாழ்க்கையால் தனித்துத் தெரிகிறார்.

கீழ்வெண்மணி படுகொலையால் கம்யூனிஸ்கள் கொதித்துப்போயிருந்த தருணத்தில் அவர்களின் கோபம் முழுக்க சர்வோதயா தொண்டர்கள் மேல் இருந்தது.புரட்சி என்ற பெயரில் மக்களை சாகக் கொடுத்தவளாக சர்வோதயா தொண்டர்கள் கம்யூனிஸ்டுகளைக் குற்றம் சாட்டினார்கள்.இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் கிருஷ்ணம்மாள் ஒரு வருட காலம் கீழ் வெண்மணியிலேயே தங்கி மக்கள் பணியாற்றி இருக்கிறார்.1971ம் வருடம் என்று நினைக்கிறேன். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கீழ் வெண்மணியில் உள்ள 74 தலித் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்னும் கணக்கில் 74 ஏக்கர்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.அந்நிலங்களை நன்கு விளையக் கூடிய மகசூல் பூமி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபெண் தன் கோபத்தை சமூகத்தின் நலனுக்காக காட்டிய விதத்தை அறியும்போது தேர்தல் களத்தில் தன்னை முன்னிறுத்துவதற்காக மேற்கூறிய அம்மணிகள் செய்யும் சேஷ்டைகளை சகிக்க முடியவில்லை.இன்றைக்கும் கீழ்வெண்மணி மக்கள் கிருஷ்ணம்மாளைப் பார்வதியாகவும் அவருடைய கணவர் ஜெகந்நாதனை சிவனாகவும் பார்க்கிறார்கள்.காரணம்,1967ல் அரைப்படி கூலி உயர்வாகக் கேட்டதற்காக சாவுண்ட சேரி மக்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் என்பது எத்தகைய வெற்றியைத் தந்திருக்கிறது.அந்த வெற்றியைச் சாத்தியப் படுத்தியதற்காக கிருஷ்ணம்மாள் காலம் உள்ள காலம் வரை போற்றப்படுவார். அதிகம் இந்த தலைமுறை அறிந்திராத பூதான இயக்கத்தை தமிழகத்தில் கட்டி எழுப்பியவர்களில் கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் முக்கியமானவர்கள்.தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகள் தூக்கிய போர்க்கொடிக்கு மாற்றாக அமைதியான முறையில் வினோப பாவே தேர்ந்தெடுத்த முறைதான் பூதான இயக்கம்.அதாவது, உயர்சாதியினரிடம் இருந்து நிலங்களைத் தானமாகப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்குத் தானமாக தருவதுதான் பூதான இயக்கத்தின் கொள்கை.

எதை வேண்டுமானாலும் தானமாகப் பெறலாம்,பெற்ற தானத்தைப் பிறருக்குத் தானமாகத் தருவது என்ற நிலைப்பாடு சற்றே வித்யாசமானது.காந்தியின் சீடர்களில் வினோப பாவே செயலூக்கும் கொண்ட ஒருவராகவே கருதப்படுவார்.அந்த இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்றி நடத்தியதோடு மட்டுமல்லாமல் மூன்றே வருடத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் கிருஷ்ணம்மாள்- ஜெகந்நாதன் தம்பதியினர் பெற்றனர்.பெற்ற நிலங்களை இயக்கத்தின் வழிகாட்டுதலோடு பிரித்தும் கொடுத்திருக்கிறார்கள்.ஒருவர் தன் நிலத்தைத் தானமாக தர முன்வருவது நிலபிரப்புத்துவ சமுதாயத்தில் சாத்தியமில்லை.ஆனால்,அதையும் தங்கள் நடத்தையால் பேச்சால் கொள்கைகளால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். இந்தத் தம்பதிகள் தன் வாழ்நாள் முழுக்க காந்தியின் வழியே சரி என்று பணியாற்றிக்கொண்டு இருந்தாலும் மக்களுக்கான போராட்ட வடிவங்களை கைகொள்வதில் தவறியதில்லை.குறிப்பாக அகில இந்திய அளவில் கவனம் பெற்ற இவர்களின் போராட்டம்,இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம்.இறால் பண்ணைகளை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தின் சீர் கெடும் என்பது மட்டுமல்லாமல் பண்ணைகளுக்குத் தேவையான நீரை எடுப்பதற்காக ஆழ்கிணறுகளைத் தோண்டி உள்ள நீரை எல்லாம் உறிஞ்சிவிடுதால் பக்கத்து நிலங்கள் பாழ்பட்டு விளையும் பயிர்கள் நீரின்றி கருகும் அவலம் நேர்கிறது.பயிர்கள் கருவது ஒருபுறமும் பயிர்களை விளைக்கும் ஏழை வயிறுகள் இன்னொருபுறம் கருகுகின்றன.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றுக்கு வாழும் சாட்சியமாக இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் அவசியப்படுகிறது.இந்த போராட்டத்தின் விளைவாக உச்சநீதி மன்றம் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.தமிழகத்தில் ஏன் அகில இந்தியாவில் மக்களுக்கு எந்த நல்ல தீர்ப்பை நீதி மன்றங்கள் வழங்கினாலும் அதைச் செயல்படுத்தவிடாமல் ஆளும் கட்சிகள் முட்டுகட்டைகள் போடுகின்றன.இறால் பண்ணை விஷயத்திலும் அதுவே நடந்தேறி வருகிறது.

அதிகாரத்தைப் கைப்பற்றத் துடிக்கும் பெண்கள். அதிகாரத்திற்கு எதிராக போராடும் பெண்கள்,இந்த இரண்டு வகையினரில் நான் எப்பவும் அதிகாரத்தை எதிர்க்கும் பெண்களின் பக்கமே நிற்க விரும்புவேன்.காரணம்,அதிகாரம் என்பது துஷ்பிரயோகத்திற்கான துருப்புச்சீட்டாக இருக்கிறது.அதை ஏற்பதை விடவும் எதிர்ப்பதே சிறப்பு.முடிந்தவரைப் போராடி பின்னால் எதுவும் நடக்காத பட்சத்தில் கட்சியோ கொள்கையோ பிறழ்வது அரசியலில் சாணக்கியத்தனம்.மன்னிக்கவும் தேர்தல் அரசியலில். இந்தத் தேர்தல் வேறெந்த தேர்தலை விடவும் முக்கியமான தேர்தல்.சென்ற தேர்தலை விட ஓரளவு குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் யார் யார் அதிகாரத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அதுவரை,ஆண்களுக்கு சற்றும் அரசியலில் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துவரும் சோனியா,ஜெயலலிதா,மம்தாபானர்ஜி.மாயாவதி ஆகியோரின் ஆவலாதி காரியங்களைக் கண்டுகளிப்போம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: