யுகபாரதி

Archive for மே, 2011

பழக்கத்தின் அடிமைகள்

Posted by யுகபாரதி மேல் மே 28, 2011

 

ன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா என்றொரு பாடல்.என்னுடய நண்பர் கபிலனால் எழுதப்பட்ட அப்பாடல் குறித்து நிறைய எதிர்வினைகள் வந்தன.பெண்ணென்றால் அவளுக்கு சமையல் அறை மட்டும்தான் சொந்தமா அதைத்தாண்டி அவளுக்கு உலகத்தில் வேறு எதுவுமே இல்லையா என்பதுபோல வந்த விமர்சனங்களை அடுத்து திரைப்பாடலில் பெண்களைப் பற்றிய சித்திரிப்புகளைக் கவனிக்கத் தோன்றியது.கபிலனுக்கு பெண்ணைக் கீழ்மைப்படுத்தும் நோக்கமோ விருப்பமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.என்றாலும்,பெண்களை எழுத நேர்கையில் ஓர் ஆணின் மனம் பொதுபுத்தியில் செயல்பட்டிருக்கிறது அவ்வளவே.என்பாடலிலும் சில இடங்களில் இந்த பொதுபுத்தியின் அடையாளங்கள் தென்படுகின்றன.நான் மட்டுமல்ல,தமிழ்த்திரையுலகில் தற்போது குறிப்பிடத்தக்க பெண் பாடலாசிரியராக அறியப்படும் தாமரையிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பொதுபுத்தி எங்கிருந்து தொடங்குகிறது. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு கருத்தில் இருந்து படைப்பாளன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.உண்மையில்,படைப்பாளன் தன்னை விடுவித்துக் கொண்ட போதிலும் அப்படைப்பை உள்வாங்கும் சமூகம் பழக்கப்பட்ட பாதையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்புவதில்லை.என்னிடத்தில் உனக்கு  என்ன வேண்டும் என ஆண் கேட்க,நூறு ஜென்மம் உன்னோடு வாழ வேண்டும் என்று பெண் பதில் சொல்வதாக எத்தனையோ பாடல்கள். எதார்த்ததில் அவ்வாறுதான் ஒருபெண்ணும் ஆணும் யோசிக்கிறார்களா.எதார்த்த சினிமா எதார்த்த காமிரா எதார்த்த இசை என்று ஏகப்பட்ட எதார்த்த சொல்லாடல்களுக்கு நடுவில் பாடல்கள் இன்னும் எதார்த்தின் எந்த எல்லையையும் தொடவே இல்லை.பாடல்களே எதார்த்தத்திற்கு முரண்பட்டதுதானே என்று சிலர் கருதக்கூடும்.பாடல்கள் எதார்த்தத்திற்கு முரண்பட்டதாக தமிழ்ச்சமூகம் எந்த காலத்திலும் கருதாது.ஏனெனில், தமிழ் மரபு இசை மரபோடு இரண்டறக் கலந்தது.

பாடல்களை மட்டையடியாக அடித்து எதற்கும் தேறாது என சொல்வதற்காகவே பட்டிமன்றப் படைகள் ஊர்தோறும் முளைத்துக்கொண்டிருக்கின்றன.எனக்குத் தெரிய எந்த பட்டிமன்றத்திலும் ஒரு நல்ல விவாதம் நிகழ்த்தப்பட்டதில்லை.வீட்டைக் கூட்டுவதில் சிறந்தவர்கள் ஆண்களா அல்லது பெண்களா? சோப்புப்போடுவதில் சோபிப்பவர்கள் அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்பதுமாதிரி நடத்தப்படும் பட்டிமன்றங்களில் மீண்டும் மீண்டும் திரைப்பாடல்கள் குறித்து தப்பிதமாகவே கற்பிக்கப்படுகின்றன.

ஒருபாடல் எழுதப்படுவதும் அதை காட்சிப்படுத்தி மக்கள் முன்பு கொண்டுவருவதிலும் உள்ள நெருக்கடிகளைப் பற்றி யாரும் புரிந்துகொள்வதில்லை.பொதுபுத்தி நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் ஒரு படைப்பாளன் படும் அவதிகளும் சமசரங்களும் யார் கண்ணிலும் படுவதே இல்லை.இந்த நெருக்கடிகள் அவதிகள் தாண்டி ஒரு பாடல் அல்லது படைப்பு கொண்டுதரும் கருத்து என்னவிதமான வினைகளை ஏற்படுத்துகின்றன என்பதே நம்முடைய கவலை.ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படிவரைதானே – ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே – என்று கம்பன் ஏமாந்தான் பாடலில் கண்ணதாசன் எழுதியிருப்பார்.ஆதிக்க நாயகன் சாதிக்க வரும்போது ஏன் அடங்க வேண்டும் என அப்பாடலை இன்றும் கேட்டு ரசிக்கிறவர்கள் நம்மில் எத்தனைபேர் யோசித்திருக்கிறோம்? ஒரு திரைப்படம் பார்க்கிறபோது அந்தத் திரைப்படம் நம்மில் ஏற்படுத்தும் அதிர்வுகளை கண்டுகொள்ளாமலேயே கடந்துவிடுகிறோம்.

சமீபத்தில் பயணம் என்றொரு திரைப்படம்.நல்ல சில திரைப்படங்களை இயக்கிய ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்தது.பழைய நம்பிக்கையில் படத்தைப்போய் பார்த்தால் திராபதையிலும் திராபதை.
விமானத்தை முஸ்லீம் தீவிரவாதிகள் கடத்துகிறார்களாம்.பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசை அச்சுறுத்துகிறார்களாம்.நூறு கோடி பணமும் சிறையில் இருக்கும் தங்கள் தலைவரான யூசுப்கானின் விடுதலையும் நிபந்தனையாக விதிக்கிறார்களாம்.பல முயற்சிகளுக்குப் பின் கொடூரமான அந்த கும்பலின் பிடியில் இருந்து மக்களை அதாவது பயணிகளை விடுவிக்க வேறு வழியில்லாமல் யூசூப்கானை விடுதலை செய்ய அரசாங்கம் ஒத்துக்கொள்கிறதாம். ஆனால்,விடுதலை செய்து அழைத்துவரும் வழியில் விபத்து ஏற்பட்டு யூசூப் கான் இறந்துவிடுகிறாராம்.உடனே,அவர் போலவே இருக்கும் ஒரு சினிமா துக்கடா நடிகரை வரவழைத்து அந்த நடிகரை யூசூப்கான் போல வேடமணிய வைத்து அதைப் புகைப்படமாக எடுத்து விமானத்தில் இருக்கும் தீவிரவாதிகளிடம் காட்டுகிறார்களாம்.அதை விரல் சூப்பிக்கொண்டு தீவிரவாதிகள் நம்பி பயணிகளை விடுவிக்க சம்மதிக்கிறார்களாம்.இடைஇடையே சுவாரஸ்யத்துக்காக பல  டிவிஸ்ட்டுகள்.அதையெல்லாம் விவரிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைப்பு.இந்த கதையில் துக்கடா நடிகராக வருவபவரின் உண்மையான பெயர்.ரெங்கநாதன்.ஊர்.கும்பகோணம் என்பது துணைச்செய்தியாக தருகிறார்கள்.யூசூப்கான் போல எடுக்கப்படும் புகைப்படத்தில் யூசூப்கானின் கையில் வலுகட்டாயமாக இந்து நாளிதழ் திணிக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பயணிகளைக் காப்பாற்ற ரெங்கநாதன் என்னும் கும்பகோணத்து பிராமணனே உதவுகிறான் என்பதும் அவன் தன் கையில் இந்துத்துவாவை வைத்திருக்கிறான் என்பதும்தான் படம் நமக்கு தரும் செய்தி.படம்  முழுக்க நகைச்சுவை இருந்ததால் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தோம் நானும் இயக்குநர் பிரபுசாலமனும்.எங்களுடன் கலை இயக்குநர்.வைரபாலனும் வந்திருந்தார்.பாதிவரை சிரித்துகொண்டிருந்த எங்களுக்கு பாதிக்குமேல் எங்கள் சிரிப்பைப் பற்றிய அச்சம் ஏற்பட்டது.இந்தியாவில் மட்டும்தான் இப்படியான எரியும் பிரச்சனைகளுக்கு இடையே சிரிப்பை வரவழைக்க படைப்பாளர்கள் முயல்கிறார்கள்.கவனமாகவும் சரியான அரசியல் புரிதலோடும் அனுகப்பட வேண்டிய  ஒரு விஷயத்தை எவ்வளவு மொக்கையாக பார்க்கிறார்கள் அல்லது பார்க்கத் தூண்டுகிறார்கள் என வருத்தமாக இருந்தது.உயிரின் மதிப்பை உரிமைகளின் மதிப்பை உணராதவர்களுக்கு இது கேளிக்கை.ஆனால்,களத்தில்  நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் சிறுபான்மைப் போராளிகளுக்கு? தணிக்கைத்துறை என்பது இம்மாதிரியான அபச்செயல்களை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.தணிக்கைத்துறையின் உண்மையான செயல்பாடுகள்தான் என்ன என்பதை அதன் உறுப்பினர்களாவது அறிந்திருப்பார்களா என்பது அய்யமே.

திரும்பவும் பொதுபுத்திக்கு வருவோம்.இந்தியா என்பது இந்துக்களுக்காகவும் இந்தி பேசுபவர்களுக்காகவும் உருவான நாடு.இந்தி பேசாதவர்களும் இந்துக்களாக இல்லாதவர்களும் இந்தியாவைப் பாகிஸ்தானோடு இணைக்கத் துடிக்கும் தீவிரவாதிகள்.இந்தக் கருத்தை நம்பி நம்மூர் ஜனங்கள் கிரிக்கெட் மேட்சில் யாரிடம் தோற்றாலும் பாகிஸ்தானோடு தோற்கக் கூடாது என பிரார்த்தனை செய்கிறார்கள்.ஜெயித்தால் வெடிவெடித்துக் கொண்டாடுகிறார்கள்.முதலில் அடிமையாக இருந்து பழகி தற்போது பழக்கத்தின் அடிமைகளாக மாறிப்போயிருக்கிறோம்.

பழகத்தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே என்ற மிஸ்ஸியம்மா திரைப்பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.தஞ்சை ராமைய்யாதாஸ் 1955 ல் எழுதியது.அதில் பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்குக் கூடவே கூடாது என்றொரு வரி.தனக்குத் தேவையானதைக் கேட்பதில் பிடிவாதமும் தனக்கு விருப்பமில்லாதவற்றை திணிக்கும்போது எதிர்வாதமும் செய்யக்கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்கிறார்கள்.அதைவிட கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ கன்னியர்கள் புன்னகையால் ஆடவரை வென்றிடவே பழகத்தெரிய வேணும் என்கிறார்கள்.பெண் எப்படி பழக வேண்டும் என்பதற்கு பாடம் நடத்தும் ஆண்கள்,தங்கள் சிந்தனைகளை பொதுபுத்தியில் இருந்து கைகொண்டிருப்பதுதான் வெட்கக்கேடு.

இன்னொரு பாடல்,கணவன் வீட்டில் வாழப்போகும் தங்கைக்கு அண்ணன் கூறும் அறிவுரைப்பாடல்.அது,அறிவுரைப்பாடலா சுயமரியாதையை விற்கச்சொல்லும் சொரணைகெட்ட பாடலா என்பதை வரிகள் தெரிந்தவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.மாமனாரை மாமியாரை மதிக்கணும் அது சரிதான்.பெரியவர்களை கண்டிப்பாக மதிக்கத்தான் வேண்டும்.அடுத்தவரி மாலையிட்டக் கணவனையே துதிக்கணும்.துதிக்கத் தக்கவனாக இருக்கும் பட்சத்தில் துதிப்பதிலும் தவறில்லை.அதற்கடுத்து அண்ணன் ஆண் என்னும் பொதுபுத்திக்கு வருகிறான்,சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சி சாணம் தெளிச்சி கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்.தங்கைக்கு அறிவுரை கூறும் அண்ணனும் தனக்கு மனைவியாகப் போகிறவளிடம் இதையே எதிர்ப்பார்ப்பான் என்று எந்தப் பாவப்பட்ட தங்கையும் நினைத்திருப்பாளா?பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற திரைப்படத்தில் வெளிவந்த இப்பாடலை எழுதியதும் தஞ்சை ராமைய்யாதாஸ்தான்.1958ம் வருடத்து கருத்தாக மட்டுமே இப்பாடலைக் கருதுவதற்கில்லை.  இரண்டாயிரத்திலும் இதேதான் நிலை.

ஒவ்வொரு பாடலாசிரியரும் பொதுபுத்தியில் இருந்து எழுதிய வரிகளை பட்டியலிட்டு குறைகாண்பது என்  நோக்கம் அல்ல.ஒருபாடல் உருவாகும் சூழல்.அது வெளிவரும்போது ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆகிய வற்றோடு சமூகத்தின் கருத்தோட்டத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் ஆவல்.ஒட்டுமொத்த சமூகமுமே பெண்களுக்கு எதிராக இயங்கும்போது பெண்கள் இந்த இக்கட்டுகளில் இருந்து எப்படி கரையேறுவார்கள் என்பதே கேள்வி.அதற்கும் ஒரு திரைப்பாடல் உண்டு.மனதில் உறுதி வேண்டும் என்னும் படத்தில் புலவர்.புலமைப்பித்தன் எழுதியது.சித்ரா மிக அற்புதமாக பாடிய அப்பாடலில் சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா என்பதோடு நில்லாமல் வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும், ஊமைகள் போலவே இன்றும் ,ஓயாமல் கண்ணீர் சிந்தும்,ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆளில்லை,சமநீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை? உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை என்பார்.இதுவும் ஆணால் எழுதப்பட்ட வரி என்பதால் பொதுபுத்தியில் இருந்து புனையப்படும் வரிகளை அன்பார்ந்த பெண்ணியவாதிகள் பொறுதருள்வீர்களாக.

கேள்வியின் வலிமை கேட்கும் இடத்தைப் பொறுத்தது என்பதால் எதையும் கேட்டுத் தெளிவது நல்லது.

Advertisements

Posted in கட்டுரைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »