யுகபாரதி

காமூஷியாவும் கருணாகரனும்

Posted by யுகபாரதி மேல் ஜூன் 27, 2011

 ழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதைவேறு எழுத வேண்டுமா என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதை கூட எழுதாமல் போய்விட்டேன்.இப்போது எழுதி யார் சாபத்துக்கு ஆளாகப்போகிறேனோ.கருணாகரனுக்கு அவ்வப்போது இம்மாதிரி எண்ணங்கள் வருவதுண்டு.எதைச் செய்தாலும் அதை செய்வதற்கு முன்பே நூத்தியெட்டு முன் அபிப்பாரயம் வந்துவிடும்.அந்த அபிப்ராயத்திற்கு அவனே மரியாதை தராததுதான் இதில் விசேஷம்.சமீப காலங்களில் அவனுக்கு ஒரு காதல் வந்து அந்தக் காதல் அவனை ராவும் பகலும் புரட்டி எடுக்கிறது.

தெருநடையில் அவனை அறியாமல் சிரித்துவிடுவதும் நேரங்கிடைக்கையில் எல்லாம் விட்டத்தை வெறிப்பதுமாக இருக்கிறான்.கழுத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருள்கிறது என்று வைரமுத்து எழுதியதுபோல.நீங்கள் கவனிக்க வேண்டியது காதல் கருணாவுக்குத்தானே தவிர அவன் காதலிப்பதாக சொல்லும் பானுமதிக்கு இல்லை.இவனாக பானுமதியைச் செல்லம் என்று அழைப்பதா இல்லை அம்மு என்று அழைப்பதா என யோசித்துக்கொண்டிருக்கிறான் அவ்வளவுதான்.பானுமதியை  அவன் குடியிருக்கும் வீட்டுக்கருகே உள்ள பலசரக்குக்கடையில்தான் முதல்முதலில் சந்தித்தான்.தன்னுடைய காதல் ஒரு பலசரக்குக் கடையில் தொடங்கியதே என்னும் வருத்தம் இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு ஏகமாய் இருக்கவே செய்தது.என்னசெய்ய எங்கே இருந்து தொடங்கினும் காதல் காதல்தானே.
அவனுடைய காதல் ஆரம்பம் எப்படி என்று கேட்டால் சிரித்துவிடுவீர்கள்.

இவன் தன்னுடைய துணிகளைத் துவைப்பதற்குச் சவுக்காரம் வாங்கப்போக பானுமதியும் தன்னுடைய துணியை வெளுப்பதற்காக சவுக்காரம் வாங்க அதே பலசரக்குக் கடைக்கு வந்திருக்கிறாள்.சவுக்காரம் என்றால் சோப்பு என்றுகூட தெரியாதவர்கள் கருணாகரனின் காதல் கதையைக் கேட்க தகுதியற்றவர்கள் என்றே நினைக்கிறேன்.தெரிந்தவர்களுக்காக கதையைத் தொடருகிறேன்.ஒரு குறிப்பிட்ட சவுக்காரத்தை இரண்டுபேரும் கேட்க கடைக்காரர் ஒன்று மட்டுமே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.உடனே,பிரிய மிகுதியில் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று பானு சொல்லப் போக கருணாவின் காதலுக்குப் பிள்ளையார் சுழி விழுந்தது.காதலித்த பிறகுதான் சோப்புப்போட வேண்டும்.ஆனால்,கருணாவுக்கோ சோப்புதான் காதலையே உண்டாக்கியிருக்கிறது.தனக்கு தேவையாய் இருந்தபோதும் அதை எனக்காக விட்டுக்கொடுத்தாளே என்னும் அங்கலாய்ப்பில் மாய்ந்து மாய்ந்து அவள்மீது காதல்கொள்கிறான்.

இதுவரை சோப்பு கம்பெனிகள் தயாரித்த சோப்புகளிலே அந்த சோப்பு மட்டுந்தான் மிக உயர்ந்ததென்று சொல்லும் அளவுக்கு அவன் காதல் கிறுக்குத் தலைகேறிவிட்டது.பாவி,அந்த சோப்பை அவள் விட்டுக்கொடுத்தாள் என்பதற்காக உபயோகிக்காமலேயே வைத்திருப்பதுதான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை.தினமும் அந்த சோப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு வருவதாகவும் அவளும் அதே சோப்பை வாங்க நினைத்தமையால் தன்னுடைய கருத்தும் அவளுடைய கருத்தும் ஒத்திருப்பதாகவும் நினைத்து பெருமிதம் கொள்கிறான்.கடையிலிருந்து கருணா கிளம்பிய பிறகு அவள் வேறு சோப்பை வாங்கிக்கொண்டு போனது அவனறியாத, உபதகவல்.
சோப்பில் இருந்து ஆரம்பித்த கருணாவின் காதல் பல்வேறு கற்பனை காட்சிகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.இப்போதெல்லாம் குறிப்பிட்ட சோப்பு விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தால் கூர்ந்து கவனித்து அதிலிருந்து விடுபட்டு வேறு சேனலுக்கு மாறவும் அவனுக்குத் தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.மின்னலடிக்கும் வெண்மை என்பது அவளுடைய பல்வரிசையாகவோ சிரிப்பாகவோ கருதி மெய்மறந்து கனவுகளில் ஆழ்ந்துவிடுகிறான்.அப்படி வரும் கனவிலும் சோப்பே செட் ப்ரார்ப்பட்டியாகவும் இருந்து அவன் காதலுக்கு ஆசி கூறுகிறது.அவள் வாங்க வந்தது சோப்பை அல்ல என்னைத்தான் என்று கவிதை வேறு.

பானுமதி அந்தப்பகுதி வார்டு கவுன்சிலரின் ஒரே மகள்.கொஞ்ச காலம்வரை சாராய வியாபாரம் செய்த பானுவின் தந்தை ஒரளவு காசு சேர்ந்ததும் அதைவிட சிறந்த வியாபாரமான அரசியலில் குதித்துவிட்டார்.ஆரம்பத்தில் அச்சத்தோடு பார்த்த பகுதி மக்கள் இப்போது அவரைப்போல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.குடி குடியை மட்டுந்தான் கெடுக்கும்.அரசியல் நாட்டையே கெடுக்கும் என்பதால் அவர் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகிறார்.வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏவாகி அமைச்சரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.சாராயம் விற்கும்போதும் கூட ஒருசொட்டு அவர் பல்லில் பட்டதில்லை.அத்தனை யோக்கியத்துக்குரிவராக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.பல்லில் பட்டிருந்தால் கள்ளச்சாராயத்தால் செத்துப்போன முப்பத்திரெண்டு பேரில் இவரும் ஒருவராக இறந்திருப்பார்.மக்கள் எப்போதும் கெட்ட விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்.அதாவது,தாங்கள் கெட்ட விஷயத்தை.

இன்றைய தேதிக்கு பானுமதியின் வீட்டில் இரண்டு கார்,வாடகைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு வீடு..என ஏற்குறைய முப்பது லட்சத்திற்கும் குறைவில்லாத சொத்து இருக்கிறது.சொத்து இருந்தாலும் பானுவோ பானுவின் அப்பாவோ அதை பெரிதாக கருதுவதில்லை.கடைக்கு தானே வந்து சோப்பு வாங்கும் அளவுக்கு எளிமை என்று வைத்துக்கொள்ளுங்கள்.அவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் பின்போஷனில்தான் கருணாகரன் கடந்த பதினோரு நாள்களாகக் குடியிருந்து வருகிறான்.கருணா ஏதோ ஒரு சிற்றிதழில் உதவியாசிரியராக இருக்கிறான்.சிற்றிதழ்களில் பல ஆழமான நுட்பமான அதிநவீன விஷயம் எல்லாம்  வருவதாக நம்புபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.ஆனால்,ஒரு சோப்பு விஷயத்தில் தெளிவில்லாத ஒருவன் அதில் எப்படி உதவியாசிரியனாக இருக்கிறான் என்பதுதான் புரியாத புதிர்.

நுரைபொங்கும் நீர்துகளில் வழியுமெனது பிரியங்கள் என்று கருணாவுக்கு எதை சிந்தித்தாலும் சோப்பைச் சுற்றியே சிந்தனை.ஒரு கட்டுரைக்கு அவருடைய ஆசிரியர் தலைப்பிடும் வாய்ப்பைக் கொடுத்தார்.அது,போப் ஆண்டவரைப் பற்றிய கட்டுரை.அவ்வளவுதான் கருணா, போப் ஆண்டவரை விட்டுவிட்டு  சோப் ஆண்டவர் என்று தலைப்பிட்டான்.ஆசிரியருக்கு கோபம் முற்றிவிட்டது.ஒரு மதத் தலைவரை இப்படித்தான் மரியாதைக் குறைச்சலாக எழுதுவார்களா என்று ஏதேதோ நாகரீக கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கினார்.அப்போதும் கருணா அசராமல் இல்லை சார்,போப் சிலருடைய பேச்சைக் கேட்டு நடப்பதாக வருகிறது இல்லையா அதனால்தான் போப், சோப் போடுகிறவர்கள் பின்னாலிருப்பதை நாசூக்காக கூறினேன் என்றான்.நீயும் ஆச்சு உன் நாசூக்கும் ஆச்சு வெளியே போ என்று சொல்லாத குறையாக முகத்தை ஆசிரியர் திருப்பிக்கொண்டார்.

இலக்கிய சிற்றிதழில் வேலை பார்க்கும் கருணா தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைவதில்லை.காரணம் தான் செய்வது தவறு என்று அவன் ஒருபோதும் நினைப்பதில்லை.தனக்கு தெரிந்த சமூகம் தன்னைவிட அறிவு குறைந்து இருப்பதாகவே அவன் கருதுகிறான். ஆகப்பெரிய இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிய சிற்றிதழில் தான் பணிபுரிவதன் மூலம் தன்னையும் அவ்வாறாகவே கருதும் நிலைக்கு அவன் ஆட்பட்டிருந்தான்.யார் சொல்வதைவிடவும் தான் சொல்வது மிகச் சரியாக இருக்கும் எனும் நம்பிக்கை அவனை பைத்தியக்காரனாக்கிக்கொண்டிருந்தது.மூர்க்கம் மிக்கவனாகவும் ஆகாயத்திற்குக் கீழ் உள்ள அத்தனையும் தனக்கு அத்துபடி என்பதுபோலவும் அவனுடைய நடவடிக்கைகள் இருக்கும்.இத்தனை இருந்தும் அவனால் தன்னுடைய சோப்புக் காதலியிடமிருந்து மீள முடியாதுதான் பரிதாபம்.

ஒருநாள் திடீரென்று அலுவலகத்திற்குப் போகாமல் அவளின் சௌந்தர்யங்கள் என எழுதத் தொடங்கினான்.அதை ஒரு குறுங்காவியமாக மாற்றிவிடுவது எனத்திட்டம்.அவளின் பார்வை,அவளின் உடை,அவளின் குறுநகை, அவளின் பவ்யம்,அவளின் கேசம்,அவளின் கால்நகம் என்பதாக தனித்தனி அத்தியாயமாக  எழுதும் ஆவல்.ஆவல் என்பதைவிட அதற்கு மேலாக ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்களேன்.இலக்கிய இதழில் பணியாற்றும் கருணா பானுவின் மீதூர்ந்த காதலால் புலனாய்வுப் பத்திரிகையாளனாகவும் தன்னை உருவகித்துக் கொண்டான்.ஏனெனில்,பானுவைப்பற்றிய குறுங்காவியத்திற்கு அவளுடைய குடும்பப் பின்னணியும் தேவைப்படுகிறது.அப்பா யார்? அம்மா எப்படி?உறவுகளின் நிலவரம் என சகலத் தகவல்களையும் சேகரிக்காமல் எழுத முடியாது இல்லையா.ஒருநாள் விடுப்பு போதாது என்பதால் மேலும் இரண்டு தினத்திற்கு தன்னுடைய விடுப்பை நீட்டித்தான்.விரைவில் வேலையையே விட்டுவிடுவான் போல தெரிகிறது.காவியம் எழுதுவதென்றால் சும்மாவா?

காவியத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் முதலாவது பிரச்சனை.தான் அவளை முதல்முதலாக சந்தித்த பலசரக்குக்கடையிலிருந்து தொடங்கினால் அந்தக்கடை,கடைக்காரரின் பெயர்.வழக்கமாக அவள் சாமான்களை வாங்கவரும் நேரம்- எல்லாம் தெரிந்தால்தான் தன்னுடைய காவியம் சிறப்பாக வரும் என்னும் தீவிரமான யோசனைக்கு உட்பட்டு முதலில் கடைக்காரரிடம் தகவலைச் சேகரிக்கக் கிளம்பினான்.இதுவரை கருணாவுக்கு தன்னுடைய காதலியின் பெயர் பானு என்பது தெரியாது.எனவே,விசாரனையை முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.கடைக்காரரிடம் சோப்பு வாங்க வந்த நிகழ்வில் இருந்து…..அன்னைக்கு சோப்புவாங்க வந்த பொண்ணுப்பேரு தெரிமாண்ணே.தினமும் இருபது முப்பதுபேர் சோப்பு வாங்குறாங்க.நீ யார கேட்குற.அதான்ணே,அன்னக்கி நானும் அந்தப்பொண்ணும் ஒரே சோப்ப கேட்டோமே… நீங்க கூட ஒன்னுதான் இருக்குன்னு சொன்னீங்களே.என்னைக்கு? ஒருவாரத்துக்கு முன்னால,நான் கூட மீதி சில்லறைய வாங்காம போனேனே.என்னப்பா உளர்ற.நீ யாரு?

நான் கவுன்சிலர் வீட்டில குடியிருக்கேன்ணே.குடிவந்து பத்து நாள் ஆவுது.நம்ம கடையிலதான் பொருளெல்லாம் வாங்குறேன்.நீங்கக்கூட ரொம்ப அன்பா நடந்துக்குவீங்களேன்ணே.கடை வச்சிருக்கிறவன் வாங்க வர்ற எல்லார்கிட்டேயும் அன்பாதான் நடத்துக்குவான்.நீ என்னமோ புதுசா கண்டதா பேசுற.போயிட்டு சாயந்திரம் வா.சாவகாசமா பேசலாம்.இப்ப வேல கெடக்கு.ஜனக்கு அரக்க பறக்க வேலைக்கு கிளம்புற நேரம் என்றதும் கருணாவின் முகத்தில் ஈயாடவில்லை.தன் காதலுக்கு உதவி புரியாத சமூகம் நாசமாய்ப் போகட்டும் என கருவினான்.எத்தனை பொறுப்பற்ற சமூகம் இது?

காதலால் ஜாதியும் சடங்கும் சமயமும் ஒழியும் என்ற வெந்தாடிக்கிழவனின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத மூடப் பிறவிகள். இதே பாதையில் இச்சமூகம் நடைபோட்டால் ஒருக்காலும் உருப்பட போவதில்லை.மேற்குலகில் காதலை கொண்டாடும் இந்த நூற்றாண்டில் இன்னும் நம்முடைய தமிழ்ச் சமூகம் தன்னை அங்குலமளவும் மாற்றிக்கொள்ளத் துணியவில்லையே என்றெல்லாம் ஒருவாறு யோசித்துக்கொண்டே வீடு திரும்பினான்.மனதை சோப்புக்காரி துவைத்தெடுக்கிறாள்.அழுக்கான தன் ஆடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய ஞாபகம் வந்துவிடுகிறது.மாலைவரை காத்திருக்க வேண்டும்.எந்தக் க்ளுவும் கிடைக்கவில்லை.எங்கே யாரிடம் கேட்பதென்றும் விளங்கவில்லை.ஒன்று செய்யலாம்.விடுப்பெடுத்த இரண்டு நாளும் அந்தக் கடை வாசலிலேயே நின்றிருந்தாள் எப்படியும் அவளை பார்த்துவிடலாம்.இரண்டு நாளில் ஒருநாள் கூடவா அவள் சோப்பு வாங்க வராது போவாள்?

கருணாவுக்கு லேசாக மயக்கும் வரத் தொடங்கியது.சுற்றி சுற்றி ஒன்றையே யோசித்து அவனுக்கு பழக்கமில்லை.உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவனுக்கு யோசித்தே பழக்கமில்லை.யாராவது எழுதுவதை நெட்ரூ போட்டு தான் சிந்தித்ததாக ஸ்தாபிப்பான்.அலாதியான மனப்பாட சக்தி உள்ளதால் தலைவர்களின் சிந்தனையாளர்களின் மேற்கோள்களை அவ்வப்போது ஒப்பிப்பான்.இரண்டாவது சந்திப்பில் ஒரே விஷயத்தை திரும்ப பேசுகிறோம் என்பதை அறவே மறந்துவிடுவான்.இதன் காரணமாக அவனுக்கு வாய்த்த பல நண்பர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.சுப்ரமணிய ராஜீவையும் லா.சா.ராவையும் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர்களாக கருதும் அவன்,அவர்கள் இருவரும் ஏன் ஒருமுறை கூட சோப்பு வாங்குவதையோ அதை வாங்க வருகிற பெண்ணைப் பற்றியோ சிந்திக்கத் தவறினார்கள் எனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒருவாறான  மன உளைச்சலில் இருந்து அவன் வெளியேறும்போது சாயங்காலம் வந்துவிட்டது.கடைக்காரரிடம் மீண்டும் விசாரணைக்குக் கிளம்பினான்.விட்ட இடத்தில் இருந்து மறுபடியும்…அண்ணே அந்த போப்பு வாங்கிய பெண்…வாப்பா,தம்பி தயவு செஞ்சு  என்ன விட்டுடு.சோப்பு வாங்கினவங்க சீப்பு வாங்கினவங்க பேரெல்லாம் எனக்குத் தெரியாது.பதினாறு வருசமாக கடை வச்சிருக்கேன்.அம்பாதாயிரம் சோப்பாவது வித்திருப்பேன்.அதெல்லாம் யார் யார் வாங்கினதுன்னு உனக்கு வவுச்சர் தர முடியாது.இல்லண்ணே, போனவாரம் என மீண்டும் ஆரம்பிக்க ,அந்த சமயத்தில் கடைக்கு வந்த யாரோ ஒரு வயதான பெண் குறிப்பிட்ட சோப்பைக் கேட்டதும் என்னமாதிரி முகத்தை வைத்துக்கொள்வதென தெரியாமல் கருணா வெளிறிப்போனான்.கடைக்காரர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.

அத்தோடு அவன் விசாரனை இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.சர்யலிஸ,பின் நவீனத்துவ கதைகளை எல்லாம் படித்து புரிந்துகொள்ளும் கருணாவுக்கு கடைக்காரரின் திடீர் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை.மாலை பேசுவோம் என்றவர் சட்டென்று மாறிப்போனதின் பின்னணியில் ஏதோ ஒரு சூழ்ச்சியிருப்பதாக யூகித்தான்.அந்த சூழ்ச்சியே தான் எழுதப்போகும் குறுங்காவியத்தின் மைய முடிச்சாக இருக்கும் எனவும் நம்பத்தொடங்கினான்.பாப் மார்லேயின் பாடல்களை இரவு முழுக்க கேட்டு தன் காதல் அப்பாடலில் கரைந்து வழிவதை கிறகித்துக்கொண்டான்.நோ வுமன் நோ க்ரை என்ற பாப்பின் ஒரு பதம் அவனை ரொம்பவே கவர்ந்துவிட்டது.
வழக்கம்போல் அல்லாமல் விடியப்போகும் இன்றைய நாள் தனக்கானதாக மாறும் என்னும் நம்பிக்கையில் எழுந்த கருணாவுக்கு சூரியன் சுடவில்லை.மிதமான மஞ்சள் நிறத்தில் வானம் சோபித்தது.எதிர்வீட்டு அக்காவின் குழந்தை அழுவது தன் இதயத்தின் பிரதிபலிப்பாகவும் நுணாமரக் காகம் கரைவது தனக்கு நேரப்போகும் மகிழ்ச்சியின் குறியீடாகவும் விளங்கிக்கொண்டான்.தன்னை மட்டும் விட்டுவிட்டு பூமி மிக வேகமாகச் சுழல்வது போன்ற தோற்றம்.கடைவாசலில் போய் நிற்கிறான்.

யார் வந்து பொருள் வாங்கினாலும் கவனமாகப் பார்க்கிறான்.கடைக்காரரும் இவனை விநோதமாகப் பார்ப்பதை கருணா பொருட்படுத்தவில்லை.கொண்ட லட்சியத்தை ஈடேற்றுவதற்காக குறுகுறு பார்வைகளை எல்லாம் உதாசீனப்படுத்திய வரலாற்று நாயகர்களை நினைத்துக்கொண்டான்.இப்படித்தான் பல்பஸ்லியா மகாணத்தில் ஒரு ஏழைக்காதலன் தன் காதலுக்காக அரை நூற்றாண்டு தெருவிலே நின்று வெற்றியடைந்தது ஞாபகத்திற்கு வந்தது.நேரம் ஆக ஆக காலும் வெயிலும் கடுத்தன.
இமைபொழுதும் சோராதிருத்தல் மட்டுமே இப்போதைய தேவை என்பதால் சிறுநீர் முட்டியதற்குக் கூட அவன் நகரவில்லை.சொல்லப்போனால் அன்று கடைக்கு வந்த அத்தனை பேரையும் அவன் பார்த்தான்.ஆனால்,பார்க்க வேண்டிய பானு வரவே இல்லை.மதியம் கடையில் மூன்று பிஸ்கட் வாங்கித் தின்றதோடு சரி.கடைக்காரரும் சந்தேகமில்லாமல் ஒரு பைத்தியம் கவுன்சிலர் வீட்டுக்கு குடி வந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்.முதல் நாள் தோல்வி.

கருணா,அசரவில்லை.தன் காதல் தீவிரமானது.எளிதாகக் கிடைக்கும் காதலுக்கு என்ன மதிப்பிருக்கிறது,காமூஷியாவும் நம்மைப்போலத்தான் பதினாறு நாட்கள் பட்டினி கிடந்து தன் காதலியைக் கண்டுபிடித்தான்.அவனோடு ஒப்பிடுகையில் நம்முடைய ஒருநாள் தோல்வி மிகச் சாதரணம் என தனக்கு தானே தைரியத்தை தருவித்தான்.மறுநாளும் கடைவாசல்.முகத்தில் களைப்பும் முதல்நாள் தோல்வியும்.சிகரெட் பிடிக்க பழகியிருந்தாலும் தான் ஊதிக்கொண்டிருக்கையில் அவள் வந்துவிட்டாள் என்ன நினைப்பாளோ என தவிர்த்தான்.கருணா,நீ எவ்வளவு நல்லவனாக மாறிக்கொண்டிருக்கிறாய்.உன்னை ஒரே தடவையில் அந்தப்பெண் சுத்தமாக துவைத்து பிழிந்து காயப்போட்டுவிட்டாளே என அவனைக் குறித்து அவனே பெருமிதம் அடைகிறான்.சோப்பில் தொடங்கியதால் சுத்தம் துவைப்பு காய்தல் ஆகியன கருணாவின் ஞாபக அடுக்களில் இருந்து அகல்வதாயில்லை.முதல் நாள் கதைதான் மறுநாளும் என்று கதையை முடித்துவிடாதிருக்க, பானு கடைக்கு வருகிறாள்.நல்ல ஷாம்புபோட்டுக் குளித்திருப்பாள் போல.முடி காற்றில் பரவப் பரவ…பூக்கள் பூக்கும் தருணம் பாடல் பின்னணியாகக் கேட்கிறது.கடைக்காரரின் பழைய ரேடியோ புதிய காதலுக்குப் பூபோட ஆரம்பிக்கிறது.இந்தப்பாடலுக்கு ஏன் தேசிய விருது தராமல் போனார்கள்?

இதற்காகத்தானே கருணா இத்தனை தவமும். இந்த பார்வைக்காகத் தானே இத்தனை தவிப்பும். பார் நன்றாகப் பார்.உன்னை அவமதித்து அருவருப்பான பார்வையில் உன்னை வெறுப்பேற்றிய கடைக்காரரை கம்பீரத்தோடு பார்.தான் அன்று பார்த்ததும் தனக்காக சோப்பை விட்டுத் தந்ததும் இவள்தான் என்பதை கடைக்காரரின் செவிகள் அதிர சொல் என்றது மனம்.பானு இம்முறை கடைக்கு வந்திருப்பது எதை வாங்க என்னும் ஆவல் இயற்கையானதுதானே.இவையாவும் குறுங்காவியத்தின் உபக்கதையாக மாறக்கூடும்.பானு கடைக்குள் நுழைவதை தூர நின்று பார்த்த கருணா ஆலயத்தில் தேவதை நுழைவதைப்போல வரித்தான்.அழுகிய தக்காளி ஒரு புறமும் வீணான முட்டைகோஸ் வாடை மறுபுறமும் அவன் நாசியில் சுகந்த மணத்தை பரப்பின.பானு இன்றைக்கு வாங்கப் போவது டாட்டாஸ் கொசுவர்த்தி என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கடையில் இருந்து பானு வெளியேறியதும் கடைக்காரரிடம் போய் இப்ப வந்த பெண்ணைப் பற்றித்தாண்ணே நான் விசாரித்தது என்றான்.அடப்பாவி,அது நீ குடியிருக்கிற வீட்டு ஓனருடைய பொண்ணுப்பா.அவ அப்பாதான் இந்த வார்டு கவுன்சிலர்.முன்னால சாராய வியாபாரி .இப்ப அரசியல்ல அவருக்கு செம செல்வாங்கு. ஏலே தம்பி எதாவது ஆசையில வம்பு கிம்புல மாட்டிக்காத.விஷயம் தெரிஞ்சா வீட்ட மட்டுமல்ல உன்னையும் காலி பண்ணிருவாங்க.கருணா,சிரித்துக்கொண்டான்.காதலில் சாவும் வாழ்வென்றே அர்த்தம்.இனி வருவதை நான் எதிர்கொள்கிறேன்.என் மெய்யான காதல் சோப்பு மற்றும் கொசுவர்த்தி வாங்கும் பெண்ணுக்குரியது.அவளுடைய சாராய மற்றும் அரசியல் அப்பனுக்கானதல்ல.மேலும்,காதலில் காதல்தான் முக்கியமே தவிர அவள் அப்பனின் பேக்ட் ராப் முக்கியமே இல்லை.சாராயம் விற்பதில் என்ன தவறு இருக்கிறது.அரசாங்கமே வீதிக்குப் பத்து சாராயக்கடையைத் திறந்திருக்கும்போது.

சில நாட்களுக்குப்பின் என்னும் சப்டைட்டில் தேவையில்லை.கருணா,வேலைக்கே போகாமல்காதலை துரிதமாக்கினான்.கைவசப்பட்டுவிடும் என்று அவன் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.இதே நாளை இதோ நாளை என்பதாகக் கடந்து பின்னொருநாளில் அவளும் சிரிக்க.. பரஸ்பரம் அறிமுகமானார்கள்.அந்த சோப்பு சம்பவத்தில் தொடங்கி கொசுவர்த்தியில் தொடரும் தன் காதல் பிளாஸ்பேக்கை அவளிடம் மிக நெகிழ்ச்சியோடு விவரித்தான்.கருணாவின் காதல் கதை ட்விஸ்டுகள் ஏதும் இல்லாமல் முடியப்போகிறது என்று நினைத்துவிடாதீர்கள்.எல்லாவற்றையும் கேட்ட பானு மௌமாக அங்கிருந்து கிளம்பும் தருவாயில் மிக மெல்லிய குரலில்,உனக்கும் விருப்பம் என்றாள் நாளை பிரவுன் சுடிதாரில் வா.அதுதானே நீ சோப்பு வாங்க வரும்போது போட்டிருந்தது.உள்ளே சிரித்துக்கொண்டு வெளியே கோபிப்பது போன்ற பாவனையோடு பானு அங்கிருந்து போய்விட்டாள்.போன பிறகு பானு வருவாளா மாட்டாளா என கருணா விக்கித்ததையெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.

சொன்ன நேரம் சொன்ன இடம்.கருணா காத்திருக்கிறான்.வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்திருந்தேன்.ஆனால்,பானு வந்தாள்.ஆயிரம் வீணைகள் ஒன்றாய் முழங்கத் தொடங்கியதுபோல கருணாவின் கண்ணும் காலும் வாயும் பல்லும் உற்சாக வெள்ளத்தில் நுரைபொங்கியது.என்னவொரு சந்தோசம்.எல்லாம் கொஞ்ச நேரந்தான். தூரத்தில் வந்த பானு அணிந்திருப்பது ப்ரவுன் சுடிதார் அல்ல.லேசான பச்சை நிறம் என்பது கிட்ட வந்ததும்தான் தெரிந்தது.ஆக,தன் காதல் பானுவால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கருணாவின் முகம் வாடியது.பானு எதுவும் பேசாமல் எதிரே வந்த ஒருத்தியோடு சிரித்துக்கொண்டே கடந்துவிடுகிறாள்.கருணாவிற்கு ஆத்திரமும் பெண்கள் மீதான அதிருப்தியும் பெருக்கெடுத்தது.சோப்பில் ஆரம்பித்து சுடிதாரில் முடியும் அளவுக்கு தன் காதல் அற்பமானதா?
இல்லை.இதை இப்படியே விட்டுவிட முடியாது.தன் குறுங்காவியத் தேடல் குப்புறக் கவிழ்ந்துவிடக் கூடாது.நாளையும் தொடருவோம். விடிந்தது.

பானுவுக்கும் இவன் சோகம் புரிந்திருக்கும் போல நேராக வந்து என்னங்க பயந்துட்டீங்களா,ப்ரவுன் சுடிதார் அழுக்காயிருந்துச்சுன்னு நேத்து பச்சை கலர் போட்டுவந்தேன்,வேற ஒண்ணும் இல்ல.சோப்பு யார் போட்டாலும் கரையும் நான் மட்டும் விதிவிலக்கா என்ன.. உங்க சோப்புதானே நானும் போடுகிறேன் அப்பறம் எப்படி உங்கமேல காதல் வராமல் போகும் ? என்றாள்.காதல்ல கலராங்க முக்கியம்.காதல், வெளியே தெரிவதில்லை.உள்ளே இருப்பது எனவும் முனுமுனுத்தாள் தலையை குனிந்துவாறு.

கருணாவின் இதயம் எகிறி எகிறி குதித்தது.அன்றைக்கு மட்டும் நான் அவளிடமிருந்து அந்தச் சோப்பை அபகரிக்காமல் போயிருந்தால் பானு ப்ரவுன் சுடிதாரை துவைத்திருப்பாள்.இப்பவும் என்னைக் காயப்படுத்திவிடக் கூடாதென்று என் அபகரிப்பை பெரிதுபடுத்தாமல் இயல்பாக நடந்துகொள்கிறாளே  என நினைத்துக்கொண்டான்.தன்னிடம் பறிகொடுத்தது அவள் சோப்பை மட்டுமல்ல இதயத்தையும் என்பதை உணர்ந்து அவன் கண்களில் நீர்க் கசிய ஆரம்பித்தது.பானு பற்றிய குறுங்காவிய முயற்சியைப் பாதியிலேயே இல்லை இல்லை தொடக்கத்திலேயே விட்டுவிட்டு பானுவிற்கான காதல் பரிசாக சோப்பை எடுக்க வீட்டுக்குப் புறப்பட்டான்.இவ்வாறாக ஓர் இலக்கியப் பத்திரிகையாசிரியனின்  காதல் இறுதியை அடையும் போது நான் எழுத வேண்டிய புதிய பாட்டுக்கான பல்லவியாக சோப்புக்காரி சோப்புக்காரி என்று சிந்திக்கத் தொடங்கினேன்.  

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: