யுகபாரதி

Archive for ஓகஸ்ட், 2011

தெரு நங்கைகள்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 6, 2011

ரவாணிகளைப் பற்றி அவ்வப்போது நினைத்துக்கொள்வதும் அவர்களின் நிலை குறித்து விவாதிப்பதுமாக பத்திரிகைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.மறுக்கப்பட்ட வாழ்வில் இருந்து அவர்கள் தங்களை ஊடகங்களின் வாயிலாக மீட்டெடுக்க முயல்வதும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில்பாராட்டுக்குரியன.தவிர,அரவாணிகள் எழுதிய நூல்கள் விற்பனையில் சாதனைப் படைப்பதாகவும் கேள்வி.விற்பனை ஆகிறதென்றால்  பிரச்சனைகளை மேலும் மேலும் ஊதிப் பெருக்குவதில் நம்முடைய ஊடகத் தோழர்களின் உதவிக்கு இணையே இருக்காது.எதையும் பரபரப்பாக்கி அந்த பரபரப்பை நமக்குள் பற்ற வைப்பதில்தான் தொலைக்காட்சிகளின் செய்திப் பிரிவுகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.பிடதி சாமியார் நித்தியானந்தா தான் ஆணுமல்ல பெண்ணுமல்ல அனைத்தையும் கடந்தவர் என்று  பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப்போக உடனே, ஒரு நிருபர் நித்தியானந்தாவை அப்படியானல் நீங்கள் ஒன்பதா எனக்கேட்டு அதுவும் சுவாரஸ்யமான செய்தியாக்கப்பட்டிருக்கிறது.நிருபராகப் பணியாற்றும் ஒருவருக்கு இருக்க வேண்டிய சமூக மற்றும் உளவியல் அறிவை குறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனம் பரீசிலிக்க வேண்டும்.ஒருவர் அரவாணியாக இருப்பது அத்தனை கேலிக்கும் கேட்டுக்கும் உரியதா.

தொடர்ச்சியாக அரவாணிகளைப் பற்றிய செய்திப்படங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.அவர்களின் போராட்டங்கள் முதன்மையான செய்தியாக்கப்படுவதும் கூட அக்கறையினால் அல்ல என்பதே நிதர்சனம். என்னுடைய தலையாய கவலைகளில் ஒன்று, அவர்கள் திரைப்படங்களில் காட்டப்படும் விதம்.வெறும் கேலிப் பொருளாக பாவிக்கப்படும் கொடுமை.இந்த கொடுமைக்கு நிரந்தர முடிவு கட்டியே ஆகவேண்டும்.காட்சிகளில் புதிது செய்கிறேன் பேர்வழி என்று நாலாந்தர படைப்பாளர்கள் செய்யும் அசட்டுத் தனங்களை காரி உமிழத்தோன்றுகிறது.தணிக்கைத் துறையில் ஒருவர் கூட அரவாணிகள் மீது கரிசனம் உடையவராக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

நம்முடன் சகஜீவியாக வாழத் தளைப்படும் ஒரு சமூகத்தை இத்தனை கொச்சையாக சித்திரிக்கிறார்களே என்று அவர்களுக்கு துளியும் வருத்தமோ இரக்கமோ தோன்றாமல் இருப்பது ஆச்சர்யமல்ல.அநீதி.அது எப்படி அவர்கள் தயாரிப்பாளர்களின் டி.போண்டாவில் மயங்கி எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்களோ. கூட்டமாகச் சேர்ந்து கும்மியடிக்கும் பாடல் என்றால் தவறாமல் நாலைந்து அரவாணிகளை அக்காட்சியில் இடம் பெறச் செய்கிறார்கள்.அதைவிட அக்காட்சிகளில் அவர்கள் பேசும் வசனங்கள்.நாராசத்தின் உச்சம்.அப்படியாக ஒரு அரவாணி பேசச் சாத்தியமே இல்லாத வசனங்களை வலிந்து திணித்து தங்கள் மேதாவிலாசத்தை மேன்மைப் படுத்திக்கொள்கிறார்கள்.

இன்னொரு விஷயம்.அரவாணிகளைப் பற்றி பேசுவதும் எழுவதும் ஏதோ கிளுகிளுப்பூட்டும் விஷயமாகச் சிலருக்குத் தோன்றுகிறது.உண்மையில்,அவர்களின் வாழ்க்கை வலி நிறைந்தது.அவர்களால் வெளிப்படுத்த முடியாத எத்தனையோ உணர்வுகளை நம்மால் கற்பனைக்கூட  செய்ய முடியாது அளவுக்கான விநோதம்.தங்களை மூன்றாம் பாலினமாகச் சொல்லிக்கொள்ளும் அரவாணிகள் சமீபத்தில் சேலம் பேருந்து நிலையத்தில் நிர்வாணக்கோலத்தில் அடித்துக்கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. சண்டைக்கான காரணம், விபச்சாரத்திற்கு உட்பட மறுத்த ஒரு குழுவை இன்னொரு குழு வலுகட்டாயப்படுத்தியிருக்கிறது அவ்வளவே. விரும்பாத ஒன்றை தங்கள் மீது திணித்தற்காக எழுந்த கோபமே சண்டையாக உருவெடுத்து தெருவில் நிர்வாணக் கோலத்தில் நிற்க நேர்ந்திருக்கிறது.இவ்வளவையும் வேடிக்கை பார்த்த சமூகம் தடுக்கவோ தகராறை விலக்கிவிடவோ முன்வரவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. திருநங்கைகள் இன்னும் எத்தனை காலத்திற்குத் தெரு நங்கைகளாகவே பார்க்கப்படுவார்களோ.

தொடர்ந்து என்னுடைய துள்ளலிசைப் பாடல்களில் அரவாணிகள் பாடுவது போல சில வரிகளை இணைக்க இயக்குநர்கள் விரும்புகிற போதெல்லாம் நான் அன்போடு தவிர்த்து வந்திருக்கிறேன்.எனக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை நாகரீகமாக மறுத்துவிடுகிறேன். மேலும் வற்புறுத்தினார்கள் என்றால் அவ்வாய்ப்பையே தவிர்த்துவிடுவது என் வழக்கம்.நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை எதற்காகவும் விட்டுத்தர நான் துணிவதில்லை.எனக்கு சந்தோசமும் கேட்பவர்க்கு உற்சாகமும் தரவே திரைப்பாடல் துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.அதற்கே கேடு என்றால் எதற்காக அப்பணியைச் செய்ய வேண்டும்.குறைந்தபட்ச சமரசங்கள் மொத்த வாழ்வையுமே கேவலப்படுத்திவிடக் கூடாது இல்லையா.சந்தோசம்,உற்சாகம் இரண்டு மட்டுந்தானா படைப்பின் தேவை எனக் கேட்கலாம்.நிச்சயமாக இல்லை.இரண்டுக்கு மேலேயும் சமூக அக்கறை என்ற ஒன்றிருக்கிறது.அதுவே,பிரதானம்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஊர் பெருமையைப் பற்றிய விவாதம் நிகழ்ந்தது.ஊரை நேசிப்பவர்கள்,ஊரை வெறுப்பவர்கள் என்று இரண்டு குழுக்கள்.இரண்டு குழுவிலும் சரியான டுபாக்கூர்களைப்  பொறுக்கி எடுத்து உட்கார வைத்திருந்தார்கள்.நடுவர் வழக்கம் போல இரண்டு குழுக்களின் கருத்தையும் உள்வாங்கி தானொரு பெரிய டுபாக்கூர் என்பதாக தீர்ப்புரைத்தார்.இரண்டு குழுக்களுக்கு மத்தியில்  சிறப்பு விருத்தினர்களாக இரண்டு பேர்.அதில் ஒருவர் தனக்கு பிடித்தது டிகிரி காப்பி என்றதும் இதுகூட  ஊரை நேசிப்பதால் வந்த பழக்கமே என்றார் நடுவர்.உடனே சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்பெஷல் டுபாக்கூர் அசடு வழிந்தது நிகழ்ச்சியின் ஹை லைட்.

அந்நிகழ்ச்சியில்,ஊரின் பெருமைகளை பேசுவதும் ஊரை நினைவில் வைத்திருப்பதும் நம்முடைய அடையாளம் என்பது மாதிரி அலசினார்கள்.ஊரின் அடையாளத்தைச் சொல்வது மேல்சாதிக்காரர்களின் சாதிப் பெருமிதம் என்பதை ஏனோ யாருமே சொல்லவில்லை.அல்லது சொல்ல விடவில்லை.எடிட்டிங்கில் தங்கள் கருத்துக்கு ஏற்ப கத்திரி போடுவதில்  நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கை தேர்ந்தவர்களாயிற்றே.தான் இந்த ஊர்க்காரன் என்று சொல்வதன் மூலம் இன்ன சாதிக்காரன் என்னும் அடையாளத்தைப் பிறர் கண்டுபிடிக்க வைத்திருக்கும் உத்தியாகவே பார்க்க வேண்டும்.வட ஆற்காடா,தஞ்சாவூரா,நெல்லையா,மதுரையா என்றால் உடனே அங்கே இன்னாருக்கு நீங்கள் சொந்தமா என்று அடுத்தக் கேள்வியைச் சொடுக்காத ஒருவரை நான் சந்தித்ததில்லை.இப்படி ஊர் பெருமை பேசிக்கொண்டு ஒரு அரவாணியால் வாழ முடியுமா. நான் மன்னார்குடி என்றால் அந்த ஊரில் இருந்து அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவருக்குச் சொந்தமா என்பதும் திருவாரூர் என்றார் முன்னாள் முதல்வருக்கு தூரத்து உறவா என்பதும் தொடர்ந்து  நடத்தப்படும் விசாரணைகள்.பெரும்பாலும் நகரங்களிலேதான் அரவாணிகள் வாழ்ந்து வருகிறார்கள்.ஏன்,என்றால் அவர்களால் தங்கள் சொந்த ஊர்களில் வசிக்க முடிவதில்லை.வசிக்க முடிந்திருந்தால் அவர்கள்  ஏன் நடுரோட்டுக்கு வந்து நிர்வாணக் கோலத்தில் சண்டை போடவேண்டும்.இதையெல்லாம் டுபாக்கூர்கள் மருந்துக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதுதான் ஊரின் பெருமை.சேரிகள் ஊரில் வராது.நீங்கள் எந்தச் சேரியைச் சேர்ந்தவர் என்று யாரையாவது பார்த்து நாம் கேட்கிறோமா.சேரி இழுக்குடையது.சேரிகளில் வாழ்வோர் விசாரிப்புக்குரியவர் அல்ல.அவர்கள் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டவர்கள்.உழைக்கவும் உழைப்பின் அசதிக்காக குடிக்கவும் பழக்கப்படுத்தப்பட்டவர்கள்.அவர்கள் தங்கள் சேரியை எந்த நிகழ்ச்சியிலும் அட்டனக்கால்போட்டுக்கொண்டு அலச முடியாது.எங்கள் சேரியில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம் என்று முழக்க முடியாது.நிகழ்ச்சியில், வியாபாரத்திற்காக பெரு முதலாளிகள் நம்முடைய ஊரின் அடையாளத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் நாம் நம்முடைய ஊரை எக்காரணம் கொண்டும் மறந்துவிட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிடக் கூடாதென்றும் டுபாக்கூர் குழுக்களின் நடுவர் கோர்ட்டை மாட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தார்.அய்யா,ஊரின் அடையாளத்தை முதலில் உங்கள் உடையிலாவது நீங்கள் கடைபிடிக்கலாமே.

பெருமுதலாளிகள் நடத்தும் தொலைக்காட்சியில் கருத்துருவாக்க மனிதனாக உள்ள நீங்கள் கோர்டை எந்த ஊரின் அடையாளமாகப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.உடையோ,ஊரோ,ஒருவரை அடையாளப்படுத்திவிட முடியாது என்பதால் உங்கள் வாதம் பக்கவாதமாகத் தோன்றுகிறது.முடக்குவாதமாக முன்னேறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.அரவாணிகள் பற்றி சொல்ல வந்துவிட்டு வேறு எங்கோ போய்விட்டதாக நினைக்காதீர்கள். இத்தனை பத்திரிகைகள்.இத்தனை தொலைக்காட்சிகள்.இத்தனை கருத்து கந்தசாமிகள்.ஆனால்,அவற்றில் ஒரு நிகழ்ச்சியிலாவது கருத்து சொல்லும் இடத்தில் அரவாணிகள் அமர்த்தப்படுகிறார்களா.அவர்களிடம் ஊரில் வாழ்வது பெருமையா ஊரைவிட்டு ஓடிவந்தது பெருமையா என்றால் கூடுதலாக ஊரின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ள முடியுமே.ஏன் அமர்த்தவில்லை நாங்கள் நிறைய நிகழ்ச்சிகளில் அமர்த்தியிருக்கிறோமே என்பார்கள்.அப்படியா என நாமும் ஆவலோடு விசாரித்தால் அந்த நிகழ்ச்சிகள் யாவும் அரவாணிகள் தொடர்பானவையாக இருக்கின்றன.பொதுவெளியில் சகல விஷயத்திற்கும் அவர்கள் கருத்து சொல்லும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நான் சொல்ல வருவது.மூன்றாம் பாலினர் இரண்டு பாலினரைவிடவும் அதிகமாகச் சமூகத்தை உணர்ந்தவர்களாக நான் கருதுகிறேன்.அவர்களுக்கே மெய்யான சமூக எதார்த்தம் தெரியும்.வேலை வாய்ப்பில்,வேண்டியதைப் பெறுவதில் என எல்லாவற்றுக்கும் அல்லப்படும் அவர்கள் நா.காமராசன் சொல்வதுபோல் சந்ததிப்பிழைகள் அல்ல.சமூகத்தால் பிழையாகப் பார்க்கப்படும் பிறவிகள்.

ரேனி குண்டா என்னும் திரைப்படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குநராக தெரிய வந்த பன்னீர்செல்வம் என் நண்பர்களில் ஒருவர்.அவர்,வழக்கமான சினிமாவையும் சினிமாத்தனங்களையும் வெறுப்பவர்.இளம் குற்றவாளிகளைப் பற்றிய திரைப்படமான ரேனி குண்டாவில் ஒரு விபச்சாரி தன் ஊமைத் தங்கையின் வாழ்வுக்காக தவிக்கும் தவிப்பை தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தார்.குடிகார கணவனால் தன்னுடைய தங்கையும் தன் போல் ஆக நேரும் பட்சத்தில் அவளை ஒரு கொலைகார இளைஞனோடு அனுப்பிவைக்க எண்ணுகிறாள்.அதற்காக ஒரு பாடல் எழுதித்தரும்படி அவர் கேட்க,ஆச்சர்யம் தாளாமல் அப்பாடலை வெகு சிரத்தையோடு எழுதிக்கொடுத்தேன்.ஒரு திரைப்படத்தில் பாடலின் அவசியம் இம்மாதிரியான சூழலுக்கு எழுதும்போதே நியாயப்படுகிறது.விளிம்பு நிலை மனிதர்களே அப்படத்தின் கதாபாத்திரங்கள்.தன்னைவிட தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் அற்புதமான பதிவுகள்.குற்றம்தான்.கோழைத்தனம்தான்.அயோக்கியத்தனம்தான்.ஆனால்,அதுவல்லவா வாழ்க்கையாகவும் எதார்த்தமாகவும் இருக்கின்றன என்பதுதான் கதையின் மைய்யம்.அதை அவர் சொன்னவிதத்திலும் காட்சிபடுத்திய விதத்திலும் சிலருக்கு மாற்று அபிப்ராயம் இருந்த போதிலும் அத்திரைப்படம்  முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று.அப்படத்திற்கு முதலில் எழுத்தாளர். ஜெயமோகனே வசன கர்த்தாவாக வேண்டப்பட்டு பிறகு ஜெயமோகனின் அறிவு மற்றும் அறிவுரை நெருக்கடி தாங்காமல் பன்னீர்செல்வம் அழுத கண்களோடு திரும்பியது தனிக்கதை.

தற்போது 18வயது என்றொரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.அத்திரைப்படத்திற்காக அரவாணிகளைப் பற்றி ஒரு பாடல் எழுத அழைத்திருந்தார்.அப்பாடலில் அரவாணிகள் தங்கள் வாழ்வை தாங்களே கூறுவதுபோலவும் இதுகாரும் வெளிவராத அவர்கள் உணர்வுகளை பாடல் வடிவத்தில் வரவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.அப்பாடலைப்பற்றி மேலதிகச் சிலாகிப்புகளை நான் சொல்லப் போவதில்லை.நான் எழுதியதால் அப்பாடல் சிறப்பு என்றோ அதுவே அரவாணிகளைப் பற்றிய முதல் பாடல் என்றோ சொல்வதுபோன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை.ஆனால்,அப்படி ஒரு பாடல்  எழுதப்பட்டது என்பதை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனெனில்,நம்முடையத் தொலைக்காட்சிகள் அப்பாடலை வியாபார நோக்கத்தோடு அணுகி ஒளிபரப்பாமலேயே கூடப் போகும் அபாயமிருக்கிறது.
1.
ஆணும் இல்ல பெண்ணும் இல்ல
ஆனா நாங்க நடுவில
வீடு இல்ல வேல இல்ல
வாழுறோமே தெருவுல

கடகடயா ஏறி இறங்கி
காசுவாங்கிப் பொழைக்கிறோம்
புடவ கட்டி பலதினுசா
உதட்டதானே சுழிக்கிறோம்

அப்பன் வெச்ச பேர மாத்தி
வேற பேரு வக்கிறோம்
ஒதுங்கக்கூட வழியில்லாம
ஓரத்திலே நிக்கிறோம்

2.
வேலகேட்டு போயி நின்னா
வெரட்டுறாங்க வெளியில
வேறவேல செய்யச் சொல்லி
மெரட்டுராங்க மறைவுல

அருவருப்பா பாத்துதானே
அதட்டுறாங்க ஆளுங்க
ஆண்டவன செஞ்ச தப்பு
கேட்குறது யாருங்க? 

கேடுகெட்ட பூமியில
கேவலமா இருக்கிறோம்
சொந்தநாட்டில் அகதிபோல
எங்க நாங்க சிரிக்கிறோம்

3.
ராசியின்னு எங்க மூஞ்சில்
முழிக்கிறாங்க வடக்குல
வாக்குச்சீட்டு இப்பக்கூட
எங்களுக்குக் கிடைக்கல

வருஷத்துக்கு ஒரு தடவ
விழுப்புரத்தில் கூடுறோம்
தாலிகட்டி விதவையாகி
தனித்தனியே பிரியறோம்

தெரிஞ்சவங்க யாரும்வந்தா
ஓடிப்போயி பதுங்குறோம்
எப்ப வாச்சும் வீட்ட எண்ணி
கண்ணு நாங்க கலங்குறோம்

– இந்தப்பாடலை எழுதி முடித்து ஒலிப்பதிவுக் கூடத்தைவிட்டு வெளியேறும்போது அவசியமான ஒரு செயலைச் செய்த திருப்தி ஏற்பட்டது.அரவாணிகளைக் கண்டு சிரிக்கவும் கைநீட்டி கேலி பேசவும் முனையும் ஒரு சமூகம் இப்பாடலைக் கேட்டு இரண்டு சொட்டாவது கண்ணீர் விடும் என நம்புகிறேன்.வாழ்க்கையில் இப்படி எத்தனையோ திரையில் பதிவு செய்யப்படாத விஷயங்கள் இருக்கின்றன.அதையெல்லாம் ஒரு இயக்குநர்,கதாசிரியர் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை.இம்மாதிரியான பாடல்கள் வெற்றி பெற்றுவிட்டால் உடனே இதே மாதிரியான பாடல்களை எல்லா நிறுவனங்களும் செய்யத் தொடங்கும்.அவசர அவசரமாக வெற்றி பெறுவதற்கு வெற்றியின் நகலைத் தேடும் மனோபாவம் நம்மிடமிருந்து எப்போது வெளியேறுமோ.அரவாணிகளின் வாழ்வை முழு நீள திரைப்படமாக்கும் முயற்சியில்  இயக்குநர் சிவா இறங்கியிருக்கிறார்.பால் என்னும் பெயரில் உருவாகிக்கொண்டிருக்கும் அத்திரைப்படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம்.

தமிழ் சினிமாவின் களங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.மாற்றத்தை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தேர்தலில் இருந்து நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.ஆனால்,அது வளர்ச்சியை நோக்கிய மாற்றமா அல்லது ஏமாற்றமா என்பது போகப்போகத் தெரியவரும்.சொல்வதில் புதுமையும் நேர்த்தியும் இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதை மைனா, தெய்வத் திருமகள் திரைப்படங்கள்  உணர்த்தியிருக்கின்றன.உற்று நோக்கக் கற்றுக்கொண்டால் உலகம் நம்மை கவனிக்கத் தொடங்கும்.

 

 

 

Advertisements

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | 3 Comments »