யுகபாரதி

Archive for நவம்பர், 2011

ஹீரோன்னா எங்க அப்பாதான்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 7, 2011

ம்மாவே நம்முடைய சகல பெருமைக்கும் வெற்றிக்கும் காரணம் என்று கருதப்பழகி அதையே முதன்மைப்படுத்திவிட்டதால் அப்பாக்களின் இதயங்களை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம்.ஆனால்,ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவின் அருமை புரிந்துவிடுகிறது.எனக்கு என் அப்பாவின் அருமை மிகச் சின்னவயதிலேயே புரிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அப்பாவை எல்லோரும் தோழர் என்றே அழைப்பார்கள்.த.கா.பரமசிவம் என்னும் பெயருடைய அவரை ஏன் அப்பாவின் நண்பர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் விளங்கவே இல்லை.சிவம் என்று அழைக்கலாம் அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர் இட்டு அழைக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் தோழர் என்கிறார்கள்.அப்பாவும் அவருடைய நண்பர்களை அவ்வாறே அழைப்பார்.ஒருசிலரை காம்ரேட் என்பார்.காம்ரேட் என்றாலும் ரஷ்யமொழியில் தோழர் என்றுதான் அர்த்தம் என்பதை என்னுடைய பத்தாவது வயதில் தெரிந்துகொண்டேன்.

ஒரு அளவுக்கு யூகித்திருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சகாக்களை தோழர் என்றோ காம்ரேட் என்றோதான் அழைப்பார்கள்.எனவே,மிகச் சின்ன வயதிலேயே என் அப்பா சராசரி அப்பாக்களை விட எனக்கு ஹீரோவாகத் தெரிந்தார்.அப்பாவை சந்திக்க எப்போதும் வீட்டிற்கு யாராவது வந்து கொண்டே இருப்பார்கள்.வருபவர்களை உபசரிப்பதிலும் நலம் விசாரிப்பதிலுமே அம்மாவின் பொழுதுகள் கழியும்.அம்மாவின் பெயர் வசந்தகுமாரி.இருவருமே அந்தக் காலத்து பத்து வகுப்பு படித்தவர்கள்.சரளமாக பேசவும் எழுதவும் உலக விஷ்யங்களை உற்றுணரவும் கற்றவர்கள்.ஆரம்பத்தில் அப்பா, பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்தவர்.ஆலையில் எழுந்த சம்பளப் பிரச்சனைக்காக பொதுவுடைமைச் சங்கம் ஏற்பட அச்சங்கத்தில் இணைந்த அப்பா பின்னாட்களில் தீவிர கட்சி ஊழியராக மாறிப்போனார்.கட்சி செயல்பாட்டில் ஏற்பட்ட தீவிரம் அப்பாவால் வேலையில் நீட்டிக்க முடியவில்லை.யார் ஆலோசனையும் கேட்காமல் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழுநேர கட்சி உறுப்பினராகிவிட்டார்.ஒரு எளிய மனிதன் தன்னை சமூக மனிதனாக மாற்றிக்கொள்ள துணிந்த தருணமாக அதைச் சொல்லலாம்.

எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய காலத்தில் அப்பாவுக்கு உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம் இருந்தது.வீட்டைப்பற்றியோ வீட்டில் உள்ள நெருக்கடிகளைப் பற்றியோ அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.அக்கா,நான்,தம்பி மூவரும் அப்பாவின் செயல்பாடுகளில் அதிருப்தியுறத் துவங்கினோம்.நம்மை கவனிக்காமல் ஊர் வேலையே முக்கியம் என்று கருதுகிறாரே என்பதாக.எத்தனையோ பேருடைய பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக விவாதித்து தீர்வு சொல்லக் கூடிய ஒருவர், எங்களுடையப் பிரச்சனைகளை புரிந்துகொள்ளவில்லையே என பேசிக்கொள்வோம்.ஆனால்,அதை எல்லாம் வெளியாட்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.அப்பாவுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவதோ கழுத்து நிரம்ப நகைகளை அணிந்துகொள்வதோ பிடிக்காது.நம்முடைய வசதி பிறரை கவலைக்கு ஆட்படுத்திவிடக் கூடாது என்பார்.சலவை செய்த ஆடைகளை மட்டுமே அணிவார்.வெள்ளுடையில் அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கம்.எப்படி சட்டை கலையாமல் வெளியே போய்விட்டுத் திரும்புகிறார் என்பதும் அந்த வயது ஆச்சர்யங்களில் ஒன்று.தஞ்சாவூர்க்காரர்களுக்கு உரிய தவிர்க்க முடியாத பழக்கமான வெற்றிலை போடுதல் அப்பாவின் விசேஷத் தகுதிகளில் ஒன்று.சீவல் பொட்டலத்தில் இருந்து ஒரு விழுது கூட கீழே இறையாமல் கடவாயில் சீவலை இடுக்கும் லாவகம் மற்றுமொரு பிரமிப்பு.

பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு புத்தகங்களை நான் வாசிக்க அப்பாவே முதல் காரணம்.அப்போது சோவியத் யூனியன் புத்தங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.கார்க்கியும் டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் குறைந்த விலையில் கிடைத்ததால்தான் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்கள்.அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அப்பாவின் தோழர்கள் அதாவது வீட்டுக்கு வரும் காம்ரேட்டுகளிடம் நான் பேசிப்பேசியே இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டேன்.அப்பா மாதிரியே தலைசீவப் பழகி பிறகு அப்பா மாதிரியே மீசையை அக்காவின் ஐபுரோ பென்சிலில் கிறுக்கிக்கொண்டதுவரை எத்தனையோ எண்ணிலடங்கா சம்பவங்கள்.அப்பா மீது ஒருபுறம் அதிருப்தி இருந்தாலும் எல்லோரும் அப்பாவை மதிக்கிறார்களே அது ஏன் என்று எண்ணத் தொடங்கியபோதுதான் அப்பா சினிமா ஹீரோ அல்ல ரியல் ஹீரோ என்று புரியத் தொடங்கியது.தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர் நல்ல அப்பா என்றால் என் அப்பா சகல பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர் மிக மிக நல்ல அப்பாதானே?

தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அதற்காக கடும் வார்த்தைகளில் அவர் ஏசியதில்லை.ஆனால்,அவருடைய பார்வை ஏசலைவிட எச்சரிக்கை நிரம்பியதாய் இருக்கும்.கல்வியின் அவசியத்தைப் பற்றியும் அதற்காக எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கும் அவரால் முடிந்த அளவு உதவி செய்தார்.எதையும் எங்களிடம் திணிக்காததே அவருடைய இயல்பு.அந்த இயல்பே நாங்கள் பட்டம் வாங்கவும் பள்ளி கல்லூரிகளில் சிறந்த மாணவராக விளங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிற்று.முழுநேர கட்சி உறுப்பினராக இருந்த அப்பாவுக்கு கட்சி மாத ஊதியம் தர முன்வந்தபோது மக்களுக்கு சேவை செய்வதற்கு ஊதியம் பெறமாட்டேன் என வலுகட்டாயமாக மறுத்துவிட்டார்.கிராமத்தில் செங்கல் சூளை இருந்தபடியால் ஓரளவு குடும்பத்தைச் சமாளிக்க முடிந்தது.கொஞ்சம் காலம் மரவியாபாரம் செய்தார்.மரத்தை வாங்கி வெட்டி திருப்பூருக்கும் ஈரோட்டும் ஏற்றுமதி செய்தார்.மரத்தை வெட்டுவதால் மழை இல்லாமல் போய்விடும் என்ற தெளிவு ஏற்பட பிறகு அதையும் செய்யவில்லை.பஞ்சாயத்து யூனியன் சார்பாக காலனி வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் பங்கெடுத்து எங்களிடம் செங்கல் சூளை இருந்ததால் சில வீடுகளைக் கட்டித்தரும் பணியை மேற்கொண்டார்.அதிலும் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் திட்டத்திற்கு அதிகமாக செலவு செய்யச்சொல்லி தாங்கள் தருவதாகச் சொன்ன தொகையைத் தராமல் போகவே செங்கல் காசும் மிஞ்சாமல் போனது.நான் சிரித்தே கொண்டே அம்மாவிடம் அப்போது சொல்வேன்.அப்பா எல்லோருக்கும் கல்லடிக்கிறார்.ஆனால்,அவர்களோ அப்பாவுக்கு மண்ணடித்து விடுகிறார்கள்.மண்ணடித்து என்றால் இல்லாமல் செய்வது என்பது எங்களூர் வழக்கு.அவர் முயன்று பார்த்து எல்லாவிற்றிலும் தோல்வியுற்றார் என்று சொல்ல முடியாது.முயற்சிகளில் இருந்து பாடம் கற்றார்.அவர் முயல்வதும் பின் தோற்பதும் சாகசங்கள் நிரம்பிய விளையாட்டு போல இருக்கும்.அவர் மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்றால் ஏதோ ஒன்றில் அவர் நஷ்டமாகியிருக்கிறார் என அர்த்தம்.இதுயெல்லாம் சரிவரவில்லை என்று அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு லாரி வாங்கினார்.அதையாவது சரியாக கவனித்தாரா என்றால் அதுதான் இல்லை.அந்த லாரி தெரிந்தவர்களுக்கு சும்மாவும் கட்சி மாநாடுகளுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனமாகவுமே பயன்பட்டு சேட்டுக்குக் கட்டவேண்டியத் தொகைக்கு பலியாகிப்போனது.பிறகு லாரி வேண்டாம் முகவாண்மைத் தொடங்கலாம் என முனைந்தார்.முகவாண்மை மூலம் செங்கல் மணல் ஆகியவற்றை வாங்கி விற்கும் தரகுத் தொழில்.முகவாண்மை என்றால் எண்டர்பிரைசஸ் என்று அர்த்தம்.அது ஏதோ சான்றாண்மை என நினைத்து கட்டட பொறியாளர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.முகவாண்மை கட்சியின் கிளை அலுவலம் மாதிரி செயல்பட்டு பின்னால் வாடகைக்கு கொடுத்தவரின் நிர்பந்தத்தால் காலி செய்யப்பட்டது.அவரால் எதையும் சரிவர கவனிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவருடைய கட்சி ஈடுபாடுதான்.அதை நாங்கள் புரிந்துகொள்வதற்கு நாள் பிடித்தது.அவரைக் கடிந்துகொண்டு எதும் ஆகப்போவதில்லை.அவரால் நாட்டுக்கு நல்லது கிடைக்குமே ஒழிய வீட்டுக்கு அல்ல என விட்டுவிட்டோம்.

ஒருவர் எவ்வளவு முயன்றாலும் அவர் கொண்டிருக்கும் கொள்கையில் இருந்து விடுபட இயலுவதில்லை.கெட்ட கொள்கையோடு இருப்பவர்க்கே சுயநலன் உண்டு.அப்பா,மக்கள் நலனில் அக்கறையுடையவர் அவரால் சுயநலனைப் பெற முடியவில்லை.ஒருநாள் என்பது நம்மைப் பொறுத்தவரை நமக்கானது.ஆனால்,என் அப்பா மாதிரியானவர்களுக்கோ முழுக்க முழுக்க பிறருக்கானது.நம்முடைய அப்பாவைப் பற்றியோ அம்மாவைப் பற்றியோ சொல்லும்போது அவர்கள் நமக்குள் பெருமிதம் ஏற்படுத்த வேண்டும்.பெருமிதம் ஏற்படுத்துபவர்களே நல்ல பெற்றோர்கள்.நம்முடைய வளர்ச்சிக்காக உழைப்பவர்கள்.நம்மைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் இருப்பவர்கள்.மகனுக்கு மகளுக்குப் பிடிக்கும் என்று கஷ்டப்பட்டு வாங்கித் தருபவர்கள் இவர்களே சாலச் சிறந்தவர்கள்.அப்படிப்பார்த்தால் என் அப்பா இதை எல்லாவற்றையும் விட மேலானவர்.அவருடைய மகன் என்று இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வதில் உள்ளூர பெருமிதம் இருக்கிறது.அவருடைய மகனா நீங்கள் என்று ஊரில் புருவம் உயர்த்துகிறார்கள்.சொத்துக்கு பதிலாக முகமறியாத பல நல்ல இதயங்களை சம்பாதித்து இருக்கிறார்.அவருக்கு ஒரு சிறு காயம் என்றாலும் பதறிக் கொண்டு வரும் நூற்றுக்கணக்கான தோழர்கள் இருக்கிறார்கள்.அவரிடம் தங்கள் குடும்பச் சிக்கலைச் சொல்லி தீர்த்துவைக்கக் கோருகிறார்கள்.அவர்போல் ஆகாது என்று எங்களிடம் சொல்பவர்கள் அவரை பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்.வேறு கட்சிக்குப் போயிருந்தால் சம்பாதித்து செட்டிலாகி இருக்கலாம் என்கிறார்கள்.வாழ்க்கை எனில் செட்டிலாவது என்று நினைப்பவர்களும் அப்பா சொன்னால் கேட்பவர்களாய் இருக்கிறார்கள்.ஒருமுறை அப்பா ஒரு கட்சித்தோழருக்காக காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப் போனார்.தோழருக்காக பரிந்துபேசும் போது காவல் துறை அதிகாரி ஒருவர் அப்பாவின் தோள்மீது கைவைத்து வெளியே போகச் சொல்லி விட்டார்.அவ்வளவுதான்.

அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எதிராக பகுதி மக்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள்.அவர்மீது கையை வைப்பதா என்று.அப்பா எவ்வளவோ மறுத்தும் பகுதி மக்கள் கண்டன கூட்டம்போட்டு சம்பந்த அதிகாரியை வேறு ஊருக்கு மாற்றும்படி போராடி வெற்றியும் கண்டார்கள்.அதிகாரியின் பெயரை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறேன்.அந்த கண்டன ஊர்வலத்தில்தான் அப்பாமீது எனக்கு தனி மதிப்பு ஏற்பட்டது.பூ விற்பவர்கள்,கைவண்டி இழுப்பவர்கள் இதர அடிமட்ட வேலை செய்யும் தொழிலாளர்கள் அத்தனைபேரும் அப்பாமீது காட்டிய அன்பும் பாசமும் இன்றைக்கு நினைத்தாலும் மலைக்க வைக்கிறது.எங்களுக்குஅப்பா மீதிருந்த அதிருப்தி எங்களிடமிருந்து முற்றாக விடுபட்டதும் அச்சம்பவத்தில் இருந்துதான்.

அப்பாவோடு வெளி ஊருக்கோ வெளி நாட்டுக்கோ குடும்பத்தோடு சென்றதே இல்லை.என் பதிமூன்று வயதுவரை வருடாவருடம் பொங்கலுக்கு மட்டும் மூன்றுநாள் அப்பா பிறந்து வளர்ந்த ஊரான பெரும்புலியூருக்குப் போயிருக்கிறோம்.திருவையாறில் இருந்து ஆறுகிலோ மீட்டர் தொலைவில் அச்சிறிய கிராமம் இருக்கிறது.நாங்கள் வசித்துவந்தது,வருவது தஞ்சை நகரத்தில் என்றாலும்  கிராமத்து நம்பிக்கைகளை பண்டிகைகளை நாங்கள் அறிந்துகொள்ள ஆசைப்படுவார்.தஞ்சை பூக்காரத் தெருவில் குடியிருந்தபோது ஒருசில ஆங்கில படத்திற்கு அப்பா என்னைக் கூட்டிப் போயிருக்கிறார்.ஒருமுறை உமர்முக்தர் என்னும் படத்தை வாடகைக்கு வீடியோ எடுத்து எங்களைக் காணசெய்தார்.அதோடு சேர்த்து டென்காமாண்மெண்ட்ஸும் பார்த்தோம்.முதல் மரியாதை வெளிவந்த சமயத்தில் அந்தப்படத்தை வெகுவாகப் புகழ்ந்தார்.பாரதிராஜாவைப் அப்பா தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அசல் கலைஞர் என்பார்.தண்ணீர் தண்ணீர் என்றொரு நாடகம்.கோமல்சுவாமிநாதன் அவர்கள் எழுதி கே.பாலசந்தர் அவர்களால் படமாக்கப்பட்ட அத்திரைப்படம் முதலில் நாடகமாக ஊர்தோறும் நடிக்கப்பட்டது.அந்த நாடகம் தஞ்சை பெத்தனன் கலையரங்கில் நடந்தது.அதற்காக அப்பா பலபேரிடம் நன்கொடை பெற்றுக்கொடுத்தார்.சமூக அக்கறைமிக்க படைப்புகளுக்கு அப்பா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயங்குவதில்லை.அந்த நாடகத்தைப் பார்க்கச்செய்து அதைப்பற்றி எங்களோடு விவாதித்து இருக்கிறார்.

அம்மாவோடு கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஒரு தருணத்தில் கடவுள் என்பது என்ன என்று அஸ்வகோஷ் எழுதிய நூலைக் கொடுத்து படிக்கச்சொன்னார்.அஸ்வகோஷ் என்பவர்தான் இராசேந்திரசோழன் என்னும் பெயரில் மிக அற்புதமான சிறுகதைகளை எழுதியவர் என்பதும் அப்பா சொல்லிய எனக்குத் தெரியவந்தது.கவிஞர்.தணிகைச்செல்வன் கவிதைகளை அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.அவருடைய மேதின கவிதையை உரக்கச் சொல்லிக்காட்டுவார்.நான் கவிதைகளோடு உறவு பூணுயதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.இன்குலாப்பின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்னும் பாடலுக்கு அப்பா அடிமை என்றே சொல்லலாம்.ஊரில் நடக்கும் கட்சிக் கூட்டங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார்.அக்கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களை குறித்து என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்கலாம்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதுரை மாநாட்டுக்கு என்னையும் அழைத்துப்போனார்.அங்கேதான் கவிஞர்.தணிகைச் செல்வன் எனக்குப் பாரதியார் கவிதை நூலை பரிசாக வழங்கினார்.பழ.நெடுமாறனிடமும் இன்னபிற தமிழ் ஆர்வலர்களிடமும் எனக்கு ஒட்டுதல் ஏற்படவும் அப்பாவே காரணாமாயிருந்திருக்கிறார்.ஒவ்வொரு சம்பவத்திலும் அப்பா எனக்கு வெவ்வேறு விதமான புரிதல்களை ஏற்படுத்தினார்.சராசரி அப்பாக்களைப் போல் ரொம்மாண்டிக் அப்பாவாக அல்லாமல் ரெவல்யூஷனரி அப்பாவாகத் தெரிந்தார்.என் வெற்றியில் அப்பாவுக்கு உள்ள பெருமிதத்தைவிட அவர் வாழ்க்கை மீதும் அவர் நடவடிக்கைகள் மீதும் எனக்கு கூடுதலான பெருமிதம் உண்டு.

இழந்த நிலங்களை மீட்கவும் அடகு வைத்த நகைகளைத் திரும்பவும் புதிதாக வீடு கட்டவும் காரில் போகவும் ஜந்து நட்சத்திர ஹோட்டல் சந்திப்புகளுக்கு என்னை தயாரித்துக்கொள்ளவும் இன்றைக்கு என்னால் முடிந்திருக்கிறது எனில் அது அவரிடமிருந்து பெற்ற தைரியம் என்றே சொல்வேன்.உலகத்தில் பலநாடுகளுக்கு போய்விட்டுத் திரும்பும்போது அங்கே நடக்கும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவதில் எனக்குள்ள ஈடுபாடு அப்பால் விளைந்ததே.எனக்கு கிடைத்திருக்கும் சொற்ப விளம்பரமும் புகழும் கூட அப்பாவுக்குக் கிடைத்திருக்க வேண்டியதே.அப்பாக்கள் தேராகத் தெருவில் இழுபட்டால் ஒழிய மகன்கள் ஊர் சுற்றிவர இயலாது.ஒழுக்கத்தையும் உயரிய பண்புகளையும் வாழ்வதற்கான தேவையான மனதிடத்தையும் தந்த அல்லது கற்பித்த ஒருவர் அப்பாவாகக் கிடைத்தது யான் பெற்ற பேறுகளில் ஒன்று.சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கும் அளவுக்கு சம்பவங்கள் இருக்கின்றன.பட்டுக்கொண்டிருந்த கஷ்டத்தில் இருந்து என்னால் விடுபட முடிந்திருக்கிறது.செல்வத்தை ஈட்ட முடிந்த அளவுக்கு அப்பாபோல் நல்ல இதயங்களையும் சம்பாதிக்கவே ஆசை.சுய பொறுப்புணர்வு கொண்டர்கள் சமூக பொறுப்பில்லாதவர்களாக இருக்கக்கூடும் என்று நான் உணர அப்பாவே காரணம்.அதேபோல சமூக பொறுப்புணர்வு உள்ளவர்கள் சுய பொறுப்போடு நடந்துகொள்ள முடிவதில்லை.அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை, அவர்களைத்தவிர என்னும் நிலையில் இருக்கிறார்கள்.அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறப்பவர்கள் ஆரம்பத்தில் கஷ்டத்தை அனுபவித்தாலும் உலகத்தை புரிந்தவர்களாக இருக்க முடிகிறது.உலகமே புரிந்த பிறகும் ஏன் அப்பா இப்படி என்று புரிய முடியாமலும்போய்விடுவது உண்டு.எங்களூர் எம்.எல்.ஏ.வுக்கும் எம்.பி.க்கும் அப்பாவை நன்றாகத் தெரியும் தெருவில் பார்த்தால் நின்று பேசிவிட்டு நலம் விசாரித்துவிட்டுப்போவார்கள்.கொஞ்சதூரம் கடந்து  போனதும் அண்ணன் அப்படியே இருக்கிறார் என்பார்களாம்.அவர்களுடைய காரோட்டிகளுக்கு நெருக்கமானவர்கள்  என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.அப்பா மாதிரியானவர்கள் அப்படியே இருப்பதால்தான் அவர்கள் மந்திரிகளாகவும் துணைமந்திரிகளாகவும் இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.

காதல் திருமணத்திற்கு அப்பா ஆதரவு தெரிவிப்பவர் என்றாலும் என் திருமணம் அப்பா அம்மா பார்வையில்தான் நடந்தது.தோழர் நல்லகண்ணு அவர்களின் தலைமையில் நடந்த அத்திருமணத்தில் அப்பாவின் தோழர்கள் உள்ளன்போடு செய்த பணிகளை என் வாழ்நாள் இருக்குமட்டும் மறப்பதற்கில்லை.கூட்டம் அரங்கு வழிந்தது.நல்ல மழை நாள் வேறு,அத்தனை கூட்டத்திலும் இறுதிவரை அப்பாவுக்கு உதவியது அப்பா சம்பாதித்த அன்பு.இதுதான் வாழ்க்கையில் அப்பாவை நான் முழு ஹீரோவாக எண்ணிய படலம்.நமக்கு எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்முடைய நல்வினை கணக்கிடப்படும்.அவ்விதத்தில் அப்பா நல்வினை நாயகராகவே தெரிகிறார்.பதவி,பணம்.புகழ் ,அந்தஸ்து இவற்றை எல்லாம்விட ஆத்மார்த்தம் முக்கியம்.அது,அப்பாவால் எனக்குக் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு பொதுவாழ்க்கை என்பது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.சக மனிதனிடம் அல்ல தன் வீட்டிலும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.லட்சத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படுபவர்கள் வாழத் தெரியாதவர்களாகவும் கேவலமானவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள்.என்னுடைய அப்பாவுக்கும் அது பொருந்தும்.ஊருக்கெல்லாம் தோழராய் இருந்த ஒருவரை நானும் தோழராய்ப் பார்க்க தவறியதை இப்போது நினைக்கையில் வருத்தமாயிருக்கிறது.உங்களுக்கு ஊறு செய்பவர்களை நீங்கள் மன்னிப்பது போலவே என்னையும் மன்னியுங்கள் அப்பா.வீட்டில் என் அப்பா போல் நடந்துகொள்ளாமலும் வெளியில் என் அப்பாபோல் மட்டுமே நடந்துகொள்வதுமே என் முன்னே நிற்கும் சவால்கள்.அதை முடிந்தவரை வெல்வேன் என நம்புகிறேன்.அப்படி வென்றால் அது யாவும் என் அப்பா எனக்கு எடுத்த மானசீகம் பாடம் என்பேன்.ஒரு அப்பாவாக அவர் எனக்களித்த இம் மாபெரிய பாடத்தை நாளை என் மகள் காவ்யாவுக்குச் சொல்லித் தருவேன்.

(பாக்யா வார இதழுக்காக எழுதியது)

Advertisements

Posted in அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »