யுகபாரதி

இசையும் இறைவனும்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 7, 2011

குணங்குடி என்கிற ஊர்ப்பெயரை நான் தெரிந்துகொண்டது ஒரு சர்பத்தின் மூலம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம்.ஆனால்,அதுதான் உண்மை என்னும் பட்சத்தில் வேறு எப்படி உங்களிடம் அவ்வூரைப்பற்றி பகிர்ந்து கொள்வது.தஞ்சாவூரில் குணங்கடி சர்பத் என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.நான் சொல்வது எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் குணங்குடி சர்பத் கொடிகட்டி பறந்த காலம்.கடையில் நிற்பதற்குக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்.அந்த வழியாகப் போகிறவர்கள் எல்லோரும் அந்தக் கடையில் ஒரு சர்பத்தாவது குடித்துவிட்டே மறுவேலைக்குக் கிளம்புவார்கள்.ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு சர்பத்தைக் குடிக்காமல் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் தஞ்சை.ப்ரகாஷ் அவ்விடத்தை விட்டு நகரமாட்டார்.

எழுத்தாளர்.தஞ்சை ப்ரகாஷ் ருசிகளில் தனித்த ருசி கண்டவர்.ஒரு பதார்த்தம் அது செய்யப்படும் இடத்தில் இருந்து அது தொடங்கிய காலம் வரை சகலவிதமான தகவல்களையும் எங்கிருந்துதான் படிப்பார் என்றே தெரியாத அளவுக்கு விஷயங்களை கொட்டுவார்.அவர்தான் எனக்கு குணங்குடியைப் பற்றிச் சொன்னார்.குணங்குடி என்ற ஊருக்கு உள்ள பெருமையும் மஸ்தான் சாகிபு அவர்களால் வந்தது என்றும் அவர்  சித்தர் மரபைச் சார்ந்தவர் என்றும் அவர் சொல்லச்சொல்ல அத்தகவல்களைக் கேட்க ஒரு சர்பத்திற்குப் பின்னால் இவ்வளவு செய்திகளா என மலைத்துப்போனேன்.சமீபத்தில் என் நண்பர் பாலமுருகன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.அஞ்சலைப் பிரித்துப்பார்த்தால் நான் வெகுகாலமாக தேடியும் கிடைக்காமல் இருந்த மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களை மயிலை வேணு என்னும் பாடகர் கானா பாடல் வடிவத்தில் பாடியளித்திருக்கும் ஒலிச்சுட்டி.கேட்கத் தொடங்கிய நான் தினசரி ஒரு அரைமணி நேரமாவது அவ்வொலிச்சுட்டியை இசைக்கிறேன்,வெகு அற்புதம்.ராமநாதபுரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நயினார் முகம்மது – பாத்திமா தம்பதியாரின் புதல்வரான மஸ்தான் சாகிபின் இயற்பெயர்.சுல்தான் அப்துல் காதர்.

சூஃபியிசை மரபுகளில் இருந்து மஸ்தான் சாகிபின் பாடல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என தஞ்சை.ப்ரகாஷ் எனக்குச் சொன்னபோது அது ஏதோ அறிவுக்கு எட்டாத வேற்று கிரகத்து விஷயம் எனக்கருதியிருந்தேன்.ஆனால்.அப்பாடல்கள் நம்முடைய சென்னை நகர கானாப் பாடகர்ளால் பாடப்பெறுவது புதுசெய்தி. இப்பாடல்களை ஒலிவடிவமாக்க பெருமுயற்சி மேற்கொண்ட என்.எஸ்.எஃப்.சி.க்கும் அதன் பொறுப்பாளராக இருக்கும் எழுத்தாளர்.எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும் என் வாழ்நாள் வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.எதிர்க்கலாச்சார கலை வெளிப்பாடாக கானா பாடல்களை அனுக வேண்டும் என்பதும் அப்பாடல்களில் மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களும் கலந்திருப்பதை முத்துக்குமாரசாமி ராமகிருஷ்ணனின் உதவியோடு ஆராய்ந்திருக்கிறார்.மயிலை வேணு சென்னை நகர நடைபாதைவாசிகளில் ஒருவர்.அவர் அப்பாடல்களை எங்கிருந்து கற்றார் என்பதும் அப்பாடல்களின் தொனியை உள்வாங்கி வாழ்ந்தவரா என்றும் கேட்பதற்கு வேணு தற்போது இல்லை.நடைபாதைவாசியாக இருந்த அவர் நடைபாதையிலேயே மரணமுற்றதாகத் தகவல்.

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களை குணங்குடியார் பாடற்கோவை என்னும் தலைப்பில் சிலபல வருடங்களுக்கு முன் கவிஞர்.அப்துல்ரகுமான் தொகுத்தளித்திருக்கிறார்.அந்நூலின் முன்னுரையைச் சிலாகித்து எழுத்தாளர்.நாஞ்சில் நாடனும் எப்போதோ எழுதியதாக நினைவு.சென்னை நகர மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பாடலாக கானா இருந்தபோதும் அது ஏன் மேலான இசை வடிவமாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது யோசனைக்குரியது.சினிமாவில் இசையமைப்பாளர் தேவா தொடர்ந்து தன்னுடைய படங்களில் அப்பாடல்களை பயன்படுத்திய போதிலும் அப்பாடல்களை ஆய்வு மாணவர்களைத் தவிர வேறு யாரும் கூடுதல் சிரத்தையோடு கவனித்ததாகத் தெரியவில்லை.கானா பாடல்களை ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றிருக்கும் பாடலாசியர்.நண்பர் கபிலனும் அதையே திரைப்பாடல் மொழியாக மாற்றும் முயற்சியில் செயல்பட்டு வருவதை நானறிவேன்.ஆல்தோட்ட பூபதி என்னும் பதிவுக் கூட அவரால்தான் கவனம் பெற்றது.

மரணமுற்றவர்களின் வீட்டில் சைக்கிள் டயர்களைக் கொளுத்தி அவ்வெளிச்சத்தில் பாடப் பெறும் பாடல்களாக ஆரம்பத்தில் கானா பாடல்கள் இருந்திருக்கின்றன.சென்னை பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வசிப்போரின் வாழ்விடமாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில் இங்கேயே பலதலைமுறைகளாக வாழ்ந்துவருவோரின் கலை இலக்கியங்களுக்கு நேர்ந்த கதிதான் கானா நேர்ந்தது.அது ஏதோ குப்பத்து மக்களின் குத்துப்பாட்டு என்பதாக முகஞ்சுழிப்பவர்கள் மயிலை வேணு பாடியிருக்கும் மஸ்தான் சாகிபு பாடல்களை கேட்க வேண்டும்.வறியவர்களின் உடல்மொழியும் உதட்டு மொழியும் கவனம் பெறுவது அவ்வளவு எளிதல்ல.திரைப்படங்களில் வடிவேல் மதுரைக்காரர்களின் உடல்மொழியை வெகு நேர்த்தியாகக் கையாண்டு பாராட்டு பெற்ற அளவுக்கு சென்னையைச் சார்ந்த ஒருவர் சென்னை மக்களின் உடல் மற்றும் மொழியைப் பிரயோகித்து வெற்றி சாதிக்கும் வாய்ப்பு இல்லை.காரணம்,மதுரை என்பதற்குப் பின்னால் சாதியும் கலாச்சார பின்னணியும் அடங்கி இருக்கிறது.பாரதிராஜாவின் வருகைப் பின் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் வெறும் காட்சிமாற்றங்கள் மட்டுமில்லை.சாதியக் குறியீடுகள் நிரம்பிய அதிர்ச்சி மாற்றங்கள்.இந்த கோணத்தில் பாரதிராஜாவின் படங்களைப் பார்ப்போமேயானால் சமூக அரசியலின் உள்ளீடுகளை உய்த்துணரலாம்.

குணங்குடியாரைச் சொல்ல வந்துவிட்டு சினிமாப் பக்கம் போவதுபோல் தோன்றுகிறது.சினிமாப் பாடல்களையும் சினிமாவையும் சொல்லாமல் கலை இலக்கிய வெளிப்பாடுகளை அனுக முடியாததுதான் தற்போதைய நிலை.மஸ்த் என்றை இறைக்காதல் போதை என அர்த்தம்.உயரிய குணங்களில் குடிகொண்டிருக்கும் இறைவனை குணங்குடியார் என்றும் அவர்மீது இறைக்காதல் போதை கொண்ட தான் மஸ்த்தான் என்றும் சுல்தான் அப்துல் காதர் தன்னை அழைக்கச் செய்திருக்கிறார்.பதினேழாவது வயதில் தன்னை சூஃபியாக உணர்ந்து இசைப்பயணத்தை மேற்கொண்ட குணங்குடியார் நாற்பத்தி ஏழாவது வயது ஏக இறைவனை எட்டியிருக்கிறார்.அவருடைய பெயருக்கான காரணமாக இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.அதாவது,குணங்குடி என்பது தொண்டிக்குப் பக்கத்தில் இருப்பதால் முதலில் அவர் தொண்டியார் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.பிறகு வழக்கத்தில் தண்டியார் ஆகிவிட்டிருக்கிறது.தொண்டியில் இருந்து தேசந்திரம் தேசந்திரமாகப் இறைப்பயணம் மேற்கொண்ட குணங்குடியார் தம்முடைய இறுதிகாலங்களில் சென்னை ராயம்புரம் பகுதியில் கழித்திருக்கிறார்.சென்னையில் அவர் வசித்த பகுதியே தண்டியார் பேட்டை என்றும் பின்னால் அதுவே தண்டையார்ப்பேட்டையாகவும் ஆகி இருப்பதாக இசை அறிஞர் நா.மம்மது தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து இறைநிலை எய்திய ஒருவரைப்பற்றிய செய்திகள் மக்கள் வழக்கில் இருப்பதுதான் என்னைக் கவர்ந்தது.

ஏட்டில் எழுதிவைப்பதை விட காற்றில் எழுதி வைப்பதுதான் காலங்கடந்த ஆய்வுக்கு உதவுகின்றது.வழி வழியாக மக்கள் அப்பாடல்களை தங்கள் புழங்கத்தில் ஒன்றாக பாவித்து அதற்கு காவிய அம்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.சூஃபி ஞானிகளைப் பற்றிய விவாதத்துக்குள் நான் நுழைய விரும்பவில்லை.அவர்கள் ஏக இறைவனை புகழ்ந்தார்கள் அல்லது ஏக இறைவனுக்கு மாறுபாட்டை தருவித்தார்களாக என்பதைப் பற்றி தெளிய ஞானமும் மதம் தொடர்ப்பான பார்வையும் அவசியம்.எனக்கு மதங்கள் நிறுவனமயமாவதில் உடன்பாடு இல்லை என்பதால் குணங்குடியாரின் பாடல்களை இலக்கிய நயத்திற்காக திரும்பத் திரும்ப கேட்டு வருகிறேன்.பாடலுக்கு உள்ளே போனால் நாமும் சித்த மனநிலையை எய்திவிடலாம் போல்தான் தோன்றுகிறது.இந்தக் குணங்குடியாரை வெறும் பாவலராக அணுகாமல் சமய நல்லணக்கக்காரராக பார்த்து ஏனைய மதப் பாவலர்கள் புகழ்ந்திருப்பது தனிச்சிறப்பு.குறிப்பாக,திருத்தணிகை சரவணபெருமாள் அய்யர்,கோவளம் சபாபதி முதலியார்,வேங்கட ராயப்பிள்ளை முதலானோர் மஸ்த்தான் சாகிபுக்கு சீடர்களாக இருந்திருக்கிறார்கள்.
துவளும் துடியிடையும்
தோகை மயில் நடையும்
பவள இதழும் என்று பார்ப்பேன்
மனோன்மணியே
– என்று அவர் இறைவனைக் காதலியாக பாவித்துப்பாடும் கண்ணிகளை படிக்க படிக்க மெய் சொக்குகிறது.இப்படி கூட பாடமுடியுமா இறைவனை என தோன்றும் அளவுக்கு எத்தனையோ அற்புதமான கண்ணிகள்.
 
என்னைவிட்டால் எத்தனையோ
மாப்பிள்ளைமார் உந்தனுக்கே
உன்னைவிட்டால் பெண் எனக்கு
உண்டோ மனோன்மணியே
– என்று ஆரம்பித்து மிக நீளமாகச் செல்லும் இக்கண்ணிகளில் ஓசையும் ஒழுங்கும் விரவிவரும் இலக்கிய தத்துவ சிந்தனைகளையும் எழுதி புரியவைக்க இயலாது.நீங்களாக படித்தும் கேட்டும் உணர்ந்தும் கொள்ள வேண்டியவை.குணங்குடியாரின் பாடல்களைப் பற்றி எழுதுவதற்கு முதலில் இரண்டு காரணம்.ஒன்று பாலமுருகன் அனுப்பிய ஒலிச்சுட்டி.மற்றது பாடகி ஆஷாபோன்ஸ்லேயின் கின்னஸ் சாதனை.ஒருவர் இருபதுமொழிகளில் பதினாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார் எனக்கேட்கவே ஆச்சர்யமாயிருக்கிறது.தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடியிருப்பார் எனத் தெரியவில்லை.ஆனால்,நிச்சயமாக இருபது மொழிகளில் பாடியிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.இந்திப்படங்களில் பாடுபவர்களுக்கே இந்தியாவின் பிராந்திய மொழிகளில் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது.வாணிஜெயராம் இந்தியில் பாடி அப்பாடல் வெளிவந்த சமயத்தில் அப்பாடல் தாங்கிய ஒலிநாடாக்களை மொத்தமாக வாங்கி யாரோ சில இந்தி வாலாக்கள் மறைத்தும் சிதைத்தும் எரித்தும்விட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவ்வளவுதான் தமிழ்ப் பிரதேச கலைஞர்களுக்கு இந்தியா அளிக்கும் வெளி.ஆறுமுறை தேசிய விருதைப் பாடலுக்காக வாங்கி இருக்கும் கவிஞர்.வைரமுத்துவின் வரிகளை இந்திக் கவிஞர்கள் எத்தனைபேர் உள்வாங்கி தங்கள் பாராட்டைத் தெரிவித்தார்கள் என்பதும் கேள்விக்குறியே.கின்னஸ் சாதனை செய்திருக்கும் ஆஷா போன்ஸ்லே தமிழில் பாடிய பாடல்களில் ஒன்று என்னுடையது என்பது நான் சொல்லியே உங்களுக்குத் தெரிய வேண்டிய நிலை.சந்திரமுகி திரைப்படத்தில் கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடலை அவர் பாடியபோது உடனிருந்தேன்.உச்சரிப்புக்காக அவர் ஏறக்குறைய ஆறுமணி நேரத்துக்கு மேலாக அவர் அவதிப்பட்டார்.தமிழில் ஒரு பாடலுக்கு ஆறுமணி நேரம் அவதிப்பட இருந்ததென்றால் இருபது மொழிகளிலும் அவர் பாட எத்தனை மணிநேர அவதிக்கு ஆளாகியிருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்.இன்றும் மும்பைப் பாடகர்களுக்கு தமிழ் இசையமைப்பாளர்களிடம் தனி மரியாதை உண்டு.காரணம்,நம்முடைய இசையறிவை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.ஆனால்,தங்களுக்கான வெளியை விட்டுத்தர விரும்புவதில்லை.

ஏ.ஆர்.ரகுமானின் வருகைக்குப்பின் தமிழ்ச் சினிமாவின் வியாபார வெளி பரவியிருக்கிறதே தவிர தமிழ் இசையின் மகிமை உணரப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.அரபு இசையும் மேற்கத்திய இசைக்கோர்ப்புகளையும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த அளவுக்கு நம்முடைய நாட்டுப்புற இசை மேதமைகளை உலகுக்கு இட்டுச்செல்லவில்லை எனலாம்.ஒருமுறை ஆனந்தவிகடன் நேர்காணலில் குணங்குடியார் பாடல்களுக்கு இசைவடிவம் தர இருப்பதாகத் தெரிவித்தார்.ஆனால்,அது இன்னும் காரிய சித்தி பெறவில்லை.என்னவளம் இல்லை இந்தத்திருநாட்டில் என்பதுபோல இசையும் கவிதையும் நம்மால் இன்னும் முழுமையாக நுகரப்படவில்லை.முழுமையாக நுகரவதற்கானப் பயிற்சியை நாமின்னும் பெறவில்லை.ஆஷாவின் சாதனைக்காக இந்திப்பட உலகம் நிகழ்த்தும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில் இருப்பதையும் தேடி எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமே என வருத்தம் கவ்வுகிறது.

வேட்டை பெரிதென்றே
வெறிநாயைக் கைப்பிடித்தே
காட்டில் புகலாமோ
கண்ணே றகுமானே
 
– என்ற குணங்குடியாரின் பாடலை நினைத்துக்கொள்வோம்.வேட்டைக்கு உரியதை விட்டுவிட்டு வீட்டுத் தேவைக்காகவே கலையும் இலக்கியமும் செய்துகொண்டிருக்கும் நம்முடைய சூழ்நிலையை என்னவென்பது.
 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: