யுகபாரதி

Archive for பிப்ரவரி, 2012

நானும் விகடனும்

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 12, 2012

கிறிஸ்தவ இறை வணக்கப் பாடலோடு துவங்கும் எங்கள் பள்ளியின் ப்ரேயர் மீட்டிங்கில் ஒருநாள் தலைமையாசிரியர் ஹாரீஸ்,நம்முடைய பள்ளி மாணவன் யுகபாரதியின் கவிதை ஆனந்தவிகடன் என்னும் தலை சிறந்த பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.அவரைப் போல மற்ற மாணவர்களும் கல்வி தவிர்த்த பிற துறைகளிலும் சாதனை படைத்து புகழ்பெற வேண்டும் என்றார்.ஒரு கவிதை பத்திரிகையில்  பிரசுரமாவதையே என் தலைமையாசிரியர் சாதனையாகக் கருதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆனந்தவிகடனாக இருந்தால் அதில் ஒரு கவிதை என்ன ஒரு துணுக்கு வெளியாவது கூட சாதனைதான்.எழுத்தாளர்.படுதலம் சுகுமாரனின் ஒரு துணுக்கு நாட்டையே அமளி துமளியாக்கிய நேரத்தில்தான் தலையாசிரியர் அவ்விதம் சொன்னதாக ஞாபகம்.உண்மையில்,அப்போது என் கவிதை ஆனந்தவிகடனில் பிரசுரமாகவில்லை.உள்ளூர் தனிச்சுற்று இதழ் ஒன்றில்தான் வெளியாகி இருந்தது.ஆனந்தம் என்பது அந்தப் பத்திரிகையின் பெயர்.ஆனந்தம் பத்திரிகையை ஆனந்தவிகடனாகச் சொல்லிவிட்டாரே என நினைத்தாலும் அவர் சொன்னவுடன் எழுந்த கரவொலி என்னை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.ப்ரேயர் மீட்டிங்கில் கைதட்டு வாங்கிய மிகச்சில மாணவர்களில் நீயும் ஒருவன் என்று இப்போதும் என் தலைமையாசிரியர் நெகிழ்வார்.

தலைசிறந்த என்ற அவருடைய அடைமொழி மேடைக்கானதோ என்னைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திலோ எழுந்த சொற்களில்லை.அவர் ஆனந்தவிகடனைத் தொடர்ந்து வாசிப்பவர்.அதில் என் பெயரும் கவிதையும் வர வேண்டும் என்பதே அவர் அவா.அன்று அவர் பொய்யாக எனக்கு வாங்கிக்கொடுத்தக் கைதட்டை உண்மையாக்குவதற்காக இன்றுவரை எத்தனையோ கவிதைகளை விகடனின் பிரசுரத்திற்குக் தந்திருக்கிறேன்.இன்றைக்கு என் தம்பி ராஜூமுருகன் வட்டியும் முதலுமாக அப்பாராட்டை மெய்யாக வாங்கிக் கொண்டிருக்கிறான்.

இளையராஜாவும் விகடனும் இருந்துவிட்டால் பாரதிக்கு எதுவுமே தேவையில்லை என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.ஒருமுறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து திரைப்படத்திற்குக் கிளம்பினோம்.நான்குபேர் கிளம்பிப்போக மூன்று டிக்கெட் மட்டுமே கிடைத்தது.உடனே,நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தவார ஆனந்தவிகடனை வாங்கி என்கையில் கொடுத்துவிட்டு இதை படித்துக்கொண்டிரு நண்பா என்று சொல்லிவிட்டு அபேஸ் ஆனார்கள்.அவர்கள் படம் முடிந்து திரும்பி வரும்வரை திரையரங்க வராந்தாவிலேயே முழு விகடனையும் வாசித்த அனுபவமுண்டு.படம் எப்படி என்று படம் பார்த்துத் திரும்பிய நண்பர்களைக் கேட்டேன்.ரொம்ப சுமார் என்றார்கள்.படம் ஏமாற்றும். விகடன் ஏமாற்றுவதில்லை என்று நான் சொன்னபோது அவர்கள் முகத்தில் கொள்ளும் எள்ளும் வெடித்தது.ஆனந்த விகடனை அட்டை டூ அட்டை படிக்காமல் ஒருவாரம் கூட கழிந்ததில்லை.தலையங்கம் தொடங்கி காட்டூன் வரை அதிலுள்ள அத்தனை விஷயங்களும் என்னைக் கவர்வன.

நல்ல இலக்கியங்களை சிற்றிதழ்களே வளர்க்கின்றன என்னும் கருத்தோடு இயங்கி வந்த எத்தனையோ எழுத்தாளர்கள் எனக்கு விகடன் மூலமே அறியக் கிடைத்தார்கள்.என் வாசிப்புப் பழக்கம் தீவிரப்பட்ட காலத்தில் சுபமங்களா வந்துகொண்டிருந்தது.கோமல் சுவாமிநாதன் அதன் ஆசிரியராக இருந்தார்.அப்போது எழுத்தாளர் தஞ்சை.ப்ரகாஷின் பற்றி எரிந்த தென்னமரம் என்றொரு கதை அதில் வெளிவந்தது.அக்கதையை வாசித்த அத்தனை நண்பர்களும் இது விகடன்ல வந்திருக்கனும் ஆசானே என்றார்கள்.ப்ரகாஷை ஆசானே என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள்.அவரும் ஆமாம்..ஆமாம்..கோமல் கேட்டாரேன்னு கொடுத்தேன்., இல்லாட்டி விகடனுக்குத்தான் அனுப்பியிருப்பேன் என்றார்.நான் வியந்த மதித்த அத்தனைபேரிடமும் விகடனைப்பற்றிய எண்ணம் உயர்வாக இருந்தது.இருக்கிறது.இருக்கும்.ஒரு பத்திரிகை எட்டிப் பிடிக்க வேண்டிய எல்லா உயரங்களையும் விகடன் வெகு சாதரணமாகச் செய்துவிடுகிறது.தர்மத்திற்கான துணையும் அதர்மத்திற்கான எதிர்ப்பும் விகடனின் கொள்கைகளாக இருக்கின்றன.ஈழப்போராட்டத்தில் இன்றுவரை பிறழ்வான செய்திகளை அது வெளியிடவில்லை என்ற ஒன்றைச் சான்றை அதன் மொத்தத் தகுதியாகக் கருதலாம்.சிலசமயங்களில் அதன் மொழிப் பிரயோகத்தில் எனக்கு மாற்று அபிப்ராயம் இருந்தபோதும் அதன் செல்நெறியில் சிராய்ப்பு ஏற்பட்டதில்லை.

நுணுங்கி நுணுங்கி உலகத்தைப் பார்க்கும் வண்ணதாசனின் படிமங்களும் சுஜாதாவின் தெறிப்புகளும் எஸ்.ராவின் உவமைகளும் ஜெயமோகனின் நுட்பமும் நாஞ்சில்நாடனின் சங்க இலக்கியப் பகிர்வும் என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.ஒரு வாரத்து விகடன் என்பது ஒரு மாதம் பேசுவதற்கான கச்சாப்பொருளைக் கொண்டிருக்கிறது.மதனின் கேள்வி பதில்களுக்காகவே என் சைக்கோளாபிடியாவை வாங்கினேன்.மனுஷன் ஒருதடவையாவது சிக்குவார் என்று பார்த்தால் ஒவ்வொரு தடவையும் கூடுதல் தகவல்களோடு என்னை மண்கவ்வ வைத்துவிடுகிறார்.பத்திரிகை என்பது என்ன என்ற கேள்விக்கு தமிழில் நாம் காட்டக் கூடிய இதழாக விகடன் வாய்த்திருக்கிறது.இடது சிந்தனைகளின் இருப்பிடமாக தன்னை தகவமைத்துக்கொண்ட விகடன் இல்லாவிட்டால் மாவோயிஸ்டுகளின் மெய்முகம் நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.ஜனங்களுக்கு சொல்லப்படப் வேண்டிய உண்மைகளை அது ஒருபோதும் தவிர்த்ததில்லை.ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தொடரை அது வெளியிடாது போயிருந்தால் தமிழருவி மணியனின் எழுத்து முகம் எனக்கும் தெரிந்திருக்காது.அவர் தொடரில் எழுதிய பெருந்தகைகளைப் பற்றி அறிமுகத்திற்குப் பின்னே மேலதிக தகவல்களைத் தேட ஆரம்பித்தேன் என்பது மிகையில்லை.

விகடன் திரை விமர்சனத்திற்காக படம் எடுக்கும் பல இயக்குநர்களோடு எனக்கு நேரடி பரிச்சயமுண்டு.நேர்ப்பேச்சில் அவர்கள் விகடனின் மதிப்பெண் சூத்திரத்தை அறிந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.சென்ற படத்தைவிட இந்த படத்திற்கு மூன்று மதிப்பெண் கூட்டியிருக்கிறார்கள் என்று ஒரு இயக்குநர் எனக்கு விருந்து கொடுத்தார்.விகடனில் மதிப்பெண் கூட்டியதற்கும் எனக்கு விருந்து தருவதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை.பலமுறை என்னுடைய திரைப்பாடல்களைக் குறிப்பிட்டு விகடன் பாராட்டியிருக்கிறது.ஒரு குடுவை குளுகோஸை ஒன்றாகக் குடித்ததுமாதிரி.படைப்பாளிகள் தங்கள் தராசாக விகடனை வைத்திருக்கிறார்கள்.தங்களைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகக் கருதுகிறார்கள்.தெருவாசகம் என்னும் தலைப்பில் விகடனில் நான் எழுதிய தொடர்க் கவிதைகளைப் பற்றி நேற்று கூட ஒருவர் குறிப்பிட்டார்.

விகடனின் வடிவமைப்புக்கு நான் தீவிர ரசிகன்.ஒரு படைப்பை அல்லது செய்தியை விகடனைப்போல் அழகாக வடிவமைத்து வெளியிடும் பத்திரிகை தமிழில் வேறு இல்லை.அதன் வடிவமைப்பு, கத்திரித்து ஆல்பமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கான நேர்ந்தியுடையது.சமீப காலங்களில் திருமாவேலன் என் பிரத்யேக பிரியத்துக்குரியவராக மாறியிருக்கிறார்.முந்தைய ஆட்சியை இப்போதைய ஆட்சியை அவர் பார்க்கும்விதம் எளிய மனிதனின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது.அடடே, சரிதானே எனச் சொல்ல வைக்கும் தொனிதான் ஒரு நல்ல பத்திரிகையாளனின் வெற்றி.

குறிப்பிட்டு சொல்லத்தக்க இன்னொரு அம்சம்.அய்யா நெடுமாறனின் நேர்காணல்கள்.எனக்குத் தெரிய அவருடைய நேர்காணலை அதிகமும் பிரசுரித்தது விகடனே.ஈழம் பற்றி எரியும் போதெல்லாம் ஒற்றைக் குரலாக அவர் வெளிப்படுத்தும் செய்திகளை சூடு குறையாமல் தந்துகொண்டிருக்கிறது.அதேபோல தமிழ்த்தேசியம் என்ற சொல்லாட்சியை வேறு எந்த வெகுஜன ஏடுகளும் நானறிய இதுவரை பயன்படுத்தியாகச் சொல்வதற்கில்லை.தமிழ் இன அடையாளம் என்பது பத்திரிகைத் துறையில் தீண்டத்தகாத விஷயமாக இருந்துவரும் சூழலில் சீமான்,தொல்.திருமாவளவன்,தியாகு,வேல்முருகன் போன்றோரின் பெயர்களும் செய்திகளும் தவறாமல் விகடனில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

தனிப்பட்ட முறையில் விகடன் என்னை அவ்வப்போது ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறது.கதை,கவிதை,நேர்காணல் என்று அவ்வப்போது திரைப்படப்பாடலைத் தாண்டி நான் இயங்குவதற்கான வெளியை உருவாக்கித்தருகிறது.என் முதல் சிறுகதை விகடனில்தான் வெளிவந்தது என்று நண்பர்.நா.முத்துக்குமார் போல நானும் சொல்லிக்கொள்ள இடம் அளித்திருக்கிறது.கபிலன்,தாமரை ஆகியோருடன் உரையாடுவதற்கும் அவர்கள் என்னோடு பகிர்ந்துகொள்வதற்கும் விகடனில் வெளிவரும் படைப்புகள் உதவுகின்றன.விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைப் பற்றி நாகூர் ரூமி சொல்லிக்கொண்டிருந்தார்.1968ல் வெளிவந்த தூயவனின் கதைப்பற்றி அப்பேச்சு நீண்டது.அக்கதை விகடனின் முத்திரைக் கதையாக வெளிவந்த தகவலையும் அவரே குறிப்பிட்டார்.

மனித தர்மங்கள் என்பது அக்கதையின் தலைப்பு.வாழ்வின் சகல சரடுகளையும் இழுத்து நம்முன் கேள்வியாக நிறுத்தும் அக்கதையைப் படித்ததில் இருந்து தூயவனின் எழுத்துக்கள் மீது காதல் மீதூறிவிட்டது.திரைத்துறையைச் சேர்ந்தவராக மட்டுமே நான் அறிந்த தூயவன் அற்புதமான கதைசொல்லியாகவும் இருந்திருக்கிறார்.அவருடைய எழுத்துக்களைத் தொடர்ச்சியாக விகடன் வெளியிட்டிருக்கிறது என்னும் தகவல் கூடுதல் ஆர்வத்தைக் கொடுத்தது.மனித தர்மங்கள் கதையில் தூயவன் இறுதியாகச் சொல்லும் வரிகள் இவை.நான் திரும்பி நடந்தேன். நானோர் அசடன். ஆமாம். மனித உலகத்தின் தர்மங்களைப் புரிந்துகொள்ள முடியாத மடையன். சாகிறவனைப் பற்றி எழுதிப் பிழைப்பது எழுத்தாள தர்மம். சாகிறவனைப் பற்றிப் பேசிப் பிழைப்பது பேச்சாள தர்மம். சாகிறவனைக் காட்டிப் பிழைப்பது, ஓவிய தர்மம். இவற்றையெல்லாம் கலை, இலக்கியம் என்கிற புனிதத் தன்மைக்கு உயர்த்திவைத்து ரசித்துக் கொண்டிருப்பது என் போன்ற ரசிகர்கள் தர்மம். மொத்தத்தில் இவையெல்லாமே மனித தர்மங்கள்தானே? தூயவனின் இந்தக் கேள்விக்குப் அப்பால் கலை இலக்கியத் தேடலை என்வென்பது?

சென்றவாரம் என்னுடைய பத்தாவது தமிழாசிரியர் தொலைபேசினார்.தற்போது அரசுப் பள்ளியில் பணியாற்றும் அவருடைய மாணவன் ஒருவன் சொல்வனத்திற்குக் கவிதை அனுப்பியிருப்பதாகவும் அதுபற்றி விசாரிக்க முடியுமா எனவும் கேட்டார்.இல்லயே அய்யா…விகடனில் தேர்வாகும் வரை அதுபற்றி விசாரிக்க முடியாதே என்றேன்.இல்ல பாரதி,நல்ல எழுதாறன் அதான் உற்சாகப்படுத்தலாமேன்னு என்றார்.விரைவில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும் ஒரு அரசுப் பள்ளியில் என்னைப்போலவே ஒரு பையன் கைதட்டு வாங்கப்போகிறான்.அத்தனைக் கைத்தட்டலையும் மெய்யாக்க திரையரங்க வாசலிலோ தெருவோர பூங்காவிலோ விகடனோடு பொழுதுகளை கழிக்கப் போகிறான்.விகடன் ரிலே பந்தம் போல. ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாறிக்கொண்டே இருக்கும்.கையில் வைத்திருப்பவன் வெளிச்சத்தோடு ஓடுவான்.வெளிச்சம் வேண்டுபவன் கைகளை நீட்டுவான்.

Advertisements

Posted in கட்டுரைகள், Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | 2 Comments »