யுகபாரதி

ஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை

Posted by யுகபாரதி மேல் மார்ச் 30, 2012

ரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்றார் பிரணாப் முகர்ஜி.அவர்,சரியான அவசரக் குடுக்கை.அவர் எந்த விஷயத்தையும் தெளிந்த புத்தியோடு பேசியதே இல்லை.முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.அது,ஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானமா இல்லை ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய படுகொலைக்கு எதிரான தீர்மானமா என்பது கூட தெரியாதவராக அவர் இருப்பதில் ஆச்சர்யம்ஒன்றுமில்லை.

மிஸ்டர்.பிரணாப்,உங்களுடைய பாரம்பரிய நிலைப்பாட்டை எதன் நிமித்தம் விட்டுக்கொடுத்தீர்கள் என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது.இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டை மீறியதாக அவர் ஏன் இன்னும் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றப்பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்.?

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க எடுத்த முடிவிற்கு பின்னால் தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம்  இருக்கிறது.ஒருமித்த குரலில் அத்தனைக் கட்சிகளும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் இது சாத்தியப்பட்டிருக்கிறதே தவிர,இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எழுந்த மனித நேய கரிசனமென்று இதைச் சொல்வதற்கில்லை.அமெரிக்கா உலகத்தில் உள்ள அத்தனை நாடுகள் மீதும் இதே கரிசனத்தோடுதான் நடந்து கொள்கிறதா என்றால் அதுவும் இல்லை.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் இம்முறை தமிழர்களின் உணர்வுகளுக்கு லாபம் கிடைத்திருக்கிறது அவ்வளவே.

இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களித்தால் அது இந்தியாவிற்கு ஒருபோதும் நல்லதல்ல என்று சில ஆங்கில பத்திரிகைகள் தலையங்கம் தீட்டின.ஆங்கில ஊடகங்களில் பொறுப்பு வகிக்கும் மலையாள பத்திரிகையாளர்கள் தமிழர் பிரச்சனைகளில் காட்டும் மாற்றான்தாய் மனப்பான்மையே இதிலும் வெளிப்பட்டன.எனினும்,தமிழக அரசியல் கட்சிகள் விடாப்பிடியாகக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க நேர்ந்தது.இந்தியா வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும்.ஆனால்,இந்தியாவிற்கு அதுவே தீரா வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.இதுவே வெற்றி என்பதுபோல சிலர் கொண்டாடுகிறார்கள்.உண்மையில்,இதுவாவது வெற்றி பெற்றதே என்பதுதான் நிலை.

இலங்கையில் நடத்தப்பட்ட குற்றப்போரும் போர்க்குற்றமும் முதல்முறையாக உலகத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.தமிழக அரசியல் கட்சிகளில் குறிப்பாக தி.மு.க. இந்த விஷயத்தில் காட்டிய அக்கறை,தங்களுடைய கடந்தகால நாடக ஒத்திகையை மெய்ப்பிக்கும் முயற்சி என்று மாற்றுக் கட்சிகாரர்கள் சொன்னாலும் தீர்மானத்திற்கு ஆளும் காங்கிரஸ் அரசை நிர்பந்தித்த வகையில் தி.மு.க.விற்கு கணிசமான பங்கு உண்டு என்றே சொல்ல வேண்டும்.

முப்பது ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த தமிழர்களின் உரிமைப்போர் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின் முடிவுக்கு வந்ததாக சிங்கள பேரினவாத அரசு அறிவித்தது.விடுதலைப் புலிகளை வேரோடு வீழ்த்திவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் இலங்கை ராணுவம் உலக ஊடகத்திடம் பீற்றிக் கொண்டது.ஊடகவியலாளர்கள் யாரையுமே உள்ளே அணுமதிக்காமல் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை இந்தியாவும் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்தது. மௌனம், கொடூரமானதென்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணராதவர்கள் அல்ல.இலங்கைக்கு அடிக்கடிப் போய், போரை நிறுத்த வலியுறுத்தியதாக ரீல்விட்ட சிவசங்கர மேனன் அன் கோக்கள் ஒவ்வொரு புகைப்படத்திலும் ராஜபக்சேவுடன் சிரித்தபடியே காட்சி தந்தார்கள்.ஒரு கொலைகாரனோடு நின்று சிரித்துக்கொண்டிருப்பவர்கள் கொலைகாரனைவிட கொடியவர்கள் என்பதை நாமறிவோம்.இன்று,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா கொடிபிடித்திருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிற வேலையை இந்தியா செய்திருக்கிறது.இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் கோபமுறுமோ என அஞ்சி மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இத்தனை கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் பிரதமருக்கு இலங்கையை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது.ஏன் என்றால் அதில்தான் திருடனுக்கு தேள் கொட்டிய சமாச்சாரம் அடங்கியிருக்கிறது.இந்தியாவின் துணையில்லாமல் இந்தப்போரை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது என்றது இலங்கை ராணுவம்.அப்போது இந்தியாவைச் சேர்ந்த பிரணாப்போ ப.சிதம்பரமோ மன்மோகன் சிங்கோ நாங்கள் எங்கே துணைபுரிந்தோம் எனக் கேட்கவில்லை. இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுக்கவும் இல்லை.அன்றைக்கு காத்த அதே மௌனம் இன்றைக்குப் பிரச்சனையாக வாய்ப்பிருக்கிறது என்பதால் இலங்கையை எதிர்க்க அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வாக்களித்திருக்கிறது.வாக்களிக்க மறுத்திருத்தால் இந்தியாவின் நிலை இருக்கிற மோசத்தை விட இன்னும் மோசமாகிப் போயிருக்கும்.

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தை சித்திரிக்கும் ஒரு ஆங்கில தினசரி ஆசியாவில் இந்தியா தனி என்றது.அதாவது,ஆசிய நாடுகளில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிராக வாக்களித்திருப்பதால் ஆசிய நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது என்பதுபோல அக்கட்டுரைச் சொல்கிறது.தனித்து நிற்பதற்கும் தனிமைப்பட்டு நிற்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட புரிந்து கொள்ளாத இந்திய பத்திரிகையுலக அசடுகளை என்னவென்பது?என்னைக் கேட்டால் ஆசியாவிலேயே இந்தியா மட்டும்தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்திருக்கிறது என்பேன்.இன்னும் கொஞ்ச நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா இலங்கைக்குப் போராயுதங்கள் தந்து உதவியதே தவிர போர்க்குற்றங்கள் செய்ய உதவவில்லை என்றும் சொல்லக் கூடும்.இந்தத் தீர்மானத்திற்கான ஆதரவை தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீவிரமாகக் கோரியதைப் பார்த்த இலங்கைத் தூதர்,  இவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று பேசி பிறகு மன்னிப்புக் கேட்டார். அதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றி கருத்து கூற ஒரு தூதருக்கு எந்த அருகதையும்  உரிமையும் இல்லை என்பது கூடவா தெரியாது.அதிபர் என்றால் ஆளைக் கொல்பவன் என்ற ராஜபக்சேவின் காட்டு தர்பாரில் நரிகளுக்கு தூதர் வேலை தரப்பட்டிருக்கிறது போல.

ஈராக் உள்ளிட்ட அநேக நாடுகளில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட அந்தந்த நாடுகளில் அநீதிகளைக் கட்டவிழ்க்கும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் கியூபாவும் ஒன்று.அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையை ஆதரித்திருக்கிறது.இலங்கையை ஆதரிக்க அது சொன்ன காரணம்:பிற உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடும் உரிமை அமெரிக்காவிற்கு இல்லை.தங்களுடைய நாட்டு விடுதலைக்கே இன்னொரு நாட்டில் இருந்து வந்த சேகுவேரா என்னும் ஆஸ்மா நோயாளிதான் காரணம் என்பதை கியூபாவால் எப்படி மறக்க முடிந்தது?

அமெரிக்கா, தங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்ததும் இலங்கை அரசு உடனே அமெரிக்க காலனி நாடுகளாக ஆசிய நாடுகளை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது.தங்கள் குற்றத்தை மறைக்க பிறர் மீது குற்றப்பழி சுமத்துவது நேர்மையற்றவர்களின் தந்திரம்.இலங்கை அரசு தைரியமிருந்தால் தங்கள் மீது கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியதுதானே.அதைவிடுத்து அமெரிக்காவை விமர்சிப்பதும் காலனி நாடு பற்றி கதை விடுவதும் உலகத்திடம் தங்கள் குற்றங்களை குழிதோண்டி புதைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை.

இந்திராதான் விடுதலைப்புலிகளை வளர்த்தார்.இலங்கையில் நடப்பது உள்நாட்டு பிரச்னையில்லை.இனப்படுகொலை என்றார்.இனத்துக்கு எதிராக தொடுக்கப்படும் போரை ஆதரிக்க முடியாது என்று நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.ஆனால்,அதே இந்திரா இருந்த காங்கிரஸ் இனப்படுகொலைக்கு ஆதரவான நிலையை இந்திராவின் மகன் ராஜீவ் கொலையால் எடுக்க நேர்ந்தது.தங்களுக்கு சாதகம் என்றால் ஆதரிப்பதும் பாதகம் என்றால் எதிர்ப்பதும் இந்தியாவுக்குப் புதிதில்லை.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவான திருத்தங்களை செய்வித்த பிறகே இந்தியா வாக்களித்திருக்கிறது.தீர்மான நகல் குறித்த விளக்கங்கள் வெளியாகும்போதுதான் இந்தியா தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா இல்லை நிர்பந்தத்தின் காரணமாக வாக்களித்ததா எனத் தெரியவரும்.ஈழப் பிரச்சனையில் வடகத்திய பத்திரிகைகளின் கையாண்ட மௌனத்தைக் குறிப்பிட்ட ஆக வேண்டும்.அவர்களுக்கு இலங்கையில் நடந்தது நடப்பது பற்றி எப்போதுமே பெரிய அக்கறை இருந்ததில்லை.அமெரிக்க தீர்மானித்தை ஆதரிக்கக் கூடாது என்றுதான் கருத்து வெளியிட்டன.பாலஸ்தீனத்தில் பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனைகளை ஆர்வமாக வெளியிடும் அவர்கள் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த இந்திய அரசு ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலை வற்புறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜீன் மாதம் 8ம்தேதி தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.சிங்கள பேரினவாத அரசு தமிழர்களைச் சமமாக நடத்தவும் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கவும் இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வர வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.தமிழக அரசு கொண்டுவந்த அத்தீர்மானத்தைப் பற்றி மத்திய அரசு இதுநாள்வரை  எந்தக்கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் மத்திய அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.மனித உரிமை மீறலை கண்டிக்கவும் இல்லை.தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய நிலையில் அப்போராட்டத்தை ஒடுக்கவே இந்தியா உதவி செய்தது.சீனாவும் இந்தியாவும் உதவிய காரணத்தால்தான் முப்பதாண்டு கால போராட்டத்தை ஒடுக்கினோம் என்று வெளிப்படையாக ராஜபக்சே அரசு சொல்லியது.சீனாவின் நோக்கம் எதுவாக இருப்பினும் இந்தியாவின் நோக்கம் தமிழர்களுக்கு எதிரானது என்றே பார்க்கத் தோன்றுகிறது.இலங்கைத் தமிழர்கள் அத்தனைபேரும் விடுதலை புலிகள் என்றுதான் இந்திய ஊடகங்கள் சித்திரிக்கின்றன.மனித அவலத்தை கண்டிக்கவும் மக்களுடைய உரிமைகளை பரிசீலிக்கவும் ஓர் அரசை நிர்பந்திக்காமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வாக்குமூலங்களை வெளியிட்ட வடகத்திய பத்திரிகைகள் இவ்விஷயத்தை எப்படிப் பார்க்கும் என போகப் போகத்தான் தெரியும்.

இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள பற்றை முற்றாக விலக்கிக்கொள்ளும் தருணமிது.தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அப்பாவித் தமிழர்களின் துயர்துடைக்க மேலும் சில ஆக்கினைகளைச் செய்ய முன்வர வேண்டும்.மீள் குடியேற்றத்துக்கான வாய்ப்புகளை தமிழர்களுக்கு உருவாக்கவும் கொடுங்கோல் ஆட்சியாளன் ராஜபக்சேவை உலக நீதி மன்றத்தில் நிறுத்தி
தண்டிக்கச் செய்யவும் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் இதுநாள்வரை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்த மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிப்பார்கள்.இல்லையென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மண்கவ்விய நிலையை தமிழகத்திலும் அடைய நேரும்.புரட்சி இளைஞராக தன்னை முன்நிறுத்தும் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் தமிழகத்திலும் பாவத்துக்குரியதாக மாறும்.இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.மூன்று ஆண்டு காலமாக இடையறாமல் அவர்கள் தொடந்து வலியுறுத்தி வந்த முழக்கத்தை உலகம் கேட்க தொடங்கியிருக்கிறது.ராஜபக்சே அரசுக்கு எதிராகத் தமிழ்ச் சமூகம் நடத்திய போராட்டத்திற்கான பலனாகவே அமெரிக்கா தீர்மானம் அரங்கேறியிருக்கிறது.இது,போராட்டத்தின் வெற்றி அல்ல.போராட்டத்தின் வெற்றிக்கான முதல் படி.இந்தப் படிக்கட்டில் ஏறி அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி தமிழர்கள் நடைபோட வேண்டும்.

பத்து வயது சிறுவன் மீது திரும்பத் திரும்ப ஐந்து குண்டுகளை செலுத்திய ஒரு கொடூர அரசை தண்டிக்க எந்த நிபந்தனையும் தேவையில்லை.அப்பாவித் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட சோகக்கதைகளை இனியும் வாசித்து வருத்தம் தெரிவிப்பதை விடுத்து வேறு எதையாவது செய்யவதற்கு உதவி புரிய வேண்டும்.அது,தமிழன் இன்னொரு தமிழனுக்கு செய்யும் உதவி அல்ல.மனித உரிமை மீறலுக்கு எதிரான போர்.உலக பயங்கரவாதத்தை எதிர்க்க அரசாங்கங்கள் ஒன்றிணையும் போது உலக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனும் இருக்கிறது.நாம் தமிழர் என்பதைக் கூட பிறகு யோசிக்கலாம்.முதலில் மனிதர் என்பதை உலகிற்கு அறிவிப்போம்.இலங்கையை ஆதரிக்கும் அரசுகளுடனான உறவை முறித்துக்கொள்ள இந்தியாவை நிர்பந்திப்போம்.அதுவே நாம் செய்ய தற்போது செய்யத் தக்கதும் செய்ய வேண்டியதும்.பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் சொற்களுக்கு உதாரணமாக இருக்கும் இலங்கை அரசை கூண்டோடு கூண்டிலேற்றுவோம்.கொக்கரித்த ராஜபக்சே போர் முடிவை அறிவிக்க வருகையில் மண்ணில் விழுந்து முத்தமிட்டு தன் தாய்நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.அதே மண் தன் மீசையில் ஒட்டியதற்காக வருத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: