சொற்களைப் பிளந்தவர்

https://www.amazon.in/dp/B08F27MBYZ

ஸ்லாமியப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட கபீர், தம் வாழ்நாளின் இறுதிவரை இராமநாமத்தை ஓதியிருக்கிறார். ஏக இறைவனுக்கு இணையில்லை என்கிற இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அவர், இராமனைக் கடவுளாகக் கண்ட ஒற்றைக் காரணத்துக்காகவே அவரை ஞானியாக அறிகிறவர்களும் அறிவிக்கிறவர்களும் உண்டு. எனக்கோ அவர் தம்முடைய அந்திம காலம்வரை இஸ்லாத்திலிருந்து வெளியேறவில்லை என்பதுதான் முக்கியமாகப்படுகிறது.

மதம் கடந்த மனோநிலைக்கு தம்மை உட்படுத்திய கபீரின் கவிதைகளை வாசித்தால் அவர் முரண்களின் மொத்த உருவமாகத் தென்படுகிறார். ஆனால், அதுதான் அவருடைய தனித்துவமாக அமைந்திருக்கிறது. மதத்தில் இருந்தும் அதைச் சாராத ஓர் இந்தியத் தன்மையை அவரிடத்தில் காணலாம்.

தெய்வம் என்கிற கருத்தியலுக்கு எதிராகக் கவிதைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய கபீர், வடக்கிலும் வடகிழக்கிலும் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்கிறார். வழிபாட்டுக்குரிய கடவுளாக ஒரு கவிஞன் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பர், சுந்தரர், ஆண்டாள் என தமிழிலும் அப்படிச் சிலர் உண்டு. என்றாலும், கபீரின் தன்மைகள் வேறு. பிறப்பின் அடிப்படையிலும் வளர்ப்பின் அடிப்படையிலும் ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றவேண்டிய கட்டாயத்திலிருந்து அவர் தம்மை விடுவித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, சிவபுரியான காசியில் விஸ்வநாதரை விலக்கிய அவர் ஆன்மீகம், இராமனை நோக்கி நகர்ந்திருக்கிறது. கபீரை விளங்கிக்கொள்வது எளிதல்ல. எளிய விளக்கங்களால் அவரை அறிந்ததாகவும் புரிந்ததாகவும் சொல்வோமேயானால் அது, அவருடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடும்.

மீரா, சர்தாஸ் போன்று வடக்கில் பக்தி இயக்கத்தை வளர்த்த மகான்களில் ஒருவரே கபீர் என்றாலும், அவருடைய வாழ்க்கையோ நிகழ்ந்த சம்பவங்களோ முறையாக யாராலும் எழுதப்படவில்லை. கபீரை விளக்கமுடியாதே தவிர, உணரமுடியும். ‘சந்தன மரத்தைச் சுற்றிய சர்ப்பம்’ என்றொரு உவமையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். சந்தனமரத்தையும் சர்ப்பத்தையும் விளக்குவது கடினம். ஆனால், அவ்வுவமை தரக்கூடிய உணர்வை ஊகிக்கலாம். உணர்வுகள் மொத்தமுமே ஊகத்தை அடித்தளமாகக் கொண்டே எழுப்பப்படுகின்றன.

உணர்வுகள் கிளர்த்தும் உன்னதங்களுக்கு விளக்கங்கள் விரோதமானவை. நாம் நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றைப் புரிந்துகொள்ள முற்படுகிறோம். அவ்விதம் புரிந்துகொண்டதையே பிறருக்கும் கடத்துகிறோம். அறிவினால் அனைத்தையும் துலக்கிவிடும் ஆர்வத்திலோ வெறியிலோ நாம் செய்யும் அக்காரியங்கள் இதுவரை அங்குலமாவது மனிதகுலத்தை உயர்த்தினவா என்பது சந்தேகம். கபீரின் கவிதைகள், புரிதலுக்கு அப்பாற்பட்ட விஸ்தீரணத்துடனும் வெளித் தோற்றத்துடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சந்தனமரத்தைச் சர்ப்பம் சுற்றியிருந்தாலும் சர்ப்பத்தின் நஞ்சு மரத்திற்கு ஏறுவதில்லை. அதேபோல, சந்தனத்தின் மணமும் சர்ப்பத்தில் அடிப்பதில்லை. ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் இந்த மனநிலையே அவருடைய ஆத்ம பரிபாலனம். சராசரி குடும்பஸ்தன் ஞான விசாரத்தில் ஈடுபட இயலாதென்கிற கற்பிதத்தை முதன்முதலில் களைந்தவராகக் கபீரைக் கருதலாம். அத்துடன், ஆடியும் பாடியும் இறைவனை அடையும் வழியை அவரே கண்டுபிடித்திருக்கிறார். இல்லறத்தில் இருந்தபடியே துறவையும், அமைதியற்ற சூழலில் தியானத்தையும் மேற்கொள்ளும் முயற்சிகளே அவருடையவை. ‘கல்லை வணங்கினால் கடவுள் தெரிவார் என்றால் / கல்லுக்குப் பதிலாக நான் மலையை வணங்குவேன். / ஆனால் பாருங்கள் மாவு அரைக்கும் ஆட்டுக்கல் / கடவுளை விடவும் பயனுள்ளதாக இருக்கிறது’ என்ற கபீரை, ஒற்றைப் பரிமாணத்திற்குள் அடக்குவது இயலாது.

1448 முதல்1518 வரை அவர் வாழ்ந்தாகச் சொல்லப்படுகிறது. காசியில் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருந்தாலும், அவருடைய மரணம் சம்பவித்த இடம் மகார் மாநிலம் என்கின்றனர். காசியில் மரணமுற்றால் புனிதமென்கிற ஐதீகம் அவர் காலத்தில் இருந்ததா எனத் தெரியவில்லை. காசியிலிருந்து அவர் மகார் மாநிலத்திற்குத் துரத்தப்பட்டார் எனவும் சொல்கிறார்கள். தம்முடைய எதிர்க்குணம் நிரம்பிய கவிதைகளால் இஸ்லாமியர்களாலும் இந்துக்களாலும் அவர் கைவிடப்பட்டவராகவும் ஒரு தொன்மக் கதையுண்டு. ‘நீ எழுப்பிய மாளிகையை நிமிர்ந்து பார்த்துக் கர்வப்படாதே / நாளை நீ அதன் கீழே / உன்மேல் வளரும் புல்’ என்ற தோஹா அவரால் எழுதப்பட்டிருக்கிறது.

ஈரடிக் கவிதைகளே ‘தோஹா’ எனப்படும். பொதுவாக கபீரின் கவிதைகளை மூன்று வகைகளில் பிரிக்கலாம். தோஹா, சபத், ரமைணி. இந்த மூன்றில் தோஹா இரண்டடிகளை உடையவை. சபத், குறும்பாடல்களைப்போல இரண்டடிக்குக் கொஞ்சம் கூடுதலானவை. ரமைணி, மிக நீண்ட பாடல்கள். தோஹாவைச் சாகி என்றும், சபத்தை பத் என்றும் அழைப்பதுண்டு. அடிகளின் அளவு நீண்டோ குறுகியோ இருக்கிறதே தவிர, அவை எல்லாவற்றிலும் கபீர் சொல்லக்கூடிய செய்தி என்னவோ ஒன்றுதான்.

சில ஆண்டுகளுக்குமுன் சேஷாத்ரி ராஜகோபாலன், கபீரின் சில ஆன்மீகக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அக்கவிதைகளை அவர் இந்தியிலிருந்து தமிழுக்குத் தந்ததாக நினைவு. அக்கவிதைகளில் ஒன்று, ‘எள்ளின் உள்ளில் எண்ணை எப்படி உள்ளதோ / சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு எப்படி உள்ளதோ / நம் உள்ளேயும் சாயீ என்கிற இறைவன் குடிகொண்டிருக்கிறான். விழித்துக்கொண்டு முயற்சிசெய்தால் அவனை அடையாளம் காணலாம். / எங்கேயும் போகவேண்டாம்’ என்பது. தெரிந்த உவமைகளே ஆனாலும், கபீர் அவற்றினூடாக விளக்கப்படுத்த முயலும் மறைபொருள்கள் கவனித்தக்கவை. இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ தம்மை வெளிப்படுத்த விரும்பாத கபீரின் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகள், சீக்கிய மதநூலான ‘குரு க்ரந்த சாஹிப்’பில் இடம்பெற்றிருக்கின்றன.

இசைப்பாடல்களாக இந்தியில் பிரபலமடைந்த அவருடைய கவிதைகளின் நேரடி மொழிபெயர்ப்பே சேஷாத்ரி அளித்திருந்தது. எனினும், இந்தியோ இசையோ தெரியாத என்னை அக்கவிதைகள் ஈர்த்தன. இந்தி அட்சரங்களைக் குறிப்பிட்டு, அதற்கேற்ற விளக்கங்களைத் தமிழில் கொடுத்திருந்தார். அவ்விளக்கங்கள், இந்துமதத்தின் நம்பிக்கையைப் பற்றியிருந்த ஒருவரால் சொல்லப்பட்டவை. அதிலும், வைணவத் தரப்பிலிருந்து வைக்கப்பட்டவை. என்றாலும், அக்கவிதைகளின் உட்பொதிந்த இசையும் கருத்துகளும் இதயத்தை விசாலப்படுத்துபவை.

இந்தியும் இசையும் தெரியாத எனக்கு, இப்போதும் அவ்வரிகள் நினைவில் இருக்கின்றன. கபீரின் கவிதைகளை இந்துமதத்துக்குள்ளிருந்தோ இஸ்லாத்துக்குள்ளிலிருந்தோ விளக்குவது போன்ற விபரீதம் எதுவுமில்லை. ஆனாலும், சேஷாத்ரியின் அவ்விளக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தன. காரணம், விளக்கவுரைக்கு முன்பாக ‘ஜைசே தில் மே தேல், ஜைசே சக்மக் மே ஆக் / தேரா சாயீ துஜ்மே சகே தோ ஜாக்’ என்ற இந்தி வரிகளையும் அவர் குறித்திருந்தார்.

அதனால், ஓசை ஒழுங்குடன் அமைக்கப்பெற்றிருந்த அவ்வரிகளின் இறுதியில் வரக்கூடிய ஆக், ஜாக் என்னும் இயைபை ரசிக்க முடிந்தது. தமிழ் மரபிலக்கியப் பயிற்சியுடைய எவரையும் அப்படியான பிரயோகங்கள் வசீகரித்துவிடும். ஈரடி என்றதுமே சட்டென்று நம்முடைய நினைவுக்கு வருவது திருக்குறள்தான். அந்தவிதத்தில் திருக்குறளில் இல்லாதவற்றை கபீர் சொல்லியிருக்கிறாரா எனப் பார்ப்பதைவிட, இரண்டடி இயைபுகளில் என்னுடைய கவனம் சென்றுகொண்டிருந்த காலம் அது. அவ்வரிகளில் விரவிவந்த ஓசையழகுகள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தின. கபீரின் கவிதைகளை குமார்கந்தர்வா, ஜெக்தித்சிங், பீம்சேன் ஜோஷி, லதாமங்கேஷ்கர், ஆனந்தமூர்த்தி குருமா போன்றாரின் குரலில் கேட்பது தனி அனுபவம். அவர் கவிதைகளைப் பாடாத இந்துஸ்தானி பாடகர்களே இல்லை எனும் அளவுக்கு அத்தனைபேரையும் கபீர் கவர்ந்திருக்கிறார்.

இசைப்பாடலின் இன்பத்தை நுகரவும் பகிரவும் இந்துஸ்தானியில் கபீரின் வார்த்தைகளைக் கேட்கவேண்டும். இசையை அவரும் அவரை இசையும் உணர்ந்துகொண்ட அரிய தருணங்களை அக்கவிதைகளில் அறியமுடிகின்றன. மிகச் சாதாரண பாடகர்கள்கூட கபீரின் வார்த்தைகளை மெய்மறந்து பாடினால் கேட்கும்படி அமைகின்றன. ஏனெனில், கபீரின் வார்த்தைகளும் வாக்கியங்களும் அத்தகையவை. இந்த இடத்தில் கபீரின் கவிதைகளைத் தொகுத்த ஒருவரைப் பற்றிக் குறிப்பிடவேண்டும்.

கபீர் எதையும் எழுதுபொருள்கள்கொண்டு எழுதிவைக்கவில்லை. அவருடைய கவிதைகள் என இன்று அறியப்படும் அனைத்துமே அவர் வாய்மொழியாக வழங்கியவைதாம். அவ்வப்போது அவர் வழங்கிய மொழிகளை அவரைப் பின்பற்றிய சீடர்களே எழுதியிருக்கின்றனர். அதனால், அவற்றுள் அவர் சொல்லாத சிலவும் இடைச்செருகல்களாக இணைந்துள்ளன என்கிறார்கள். இந்தக் குழப்பத்தை நீக்கும்விதமாக ஷிட்டிமோகன் சென் ‘சாங்க்ஸ் ஆஃப் கபீர்’ என்னும் தலைப்பில் 1915இல் தொகுத்திருக்கிறார். இந்த ஷிட்டிமோகன் சென் வேறுயாருமல்லர். இந்தியப் பொருளாதார மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியாசென்னின் தாய்வழி பாட்டனார்.

கபீரின் சொற்கள் கேட்ட மாத்திரத்தில் சிந்தனையைத் தூண்டுவன. வானத்திலிருந்து இறங்கிய நீர்த்தாரைகளைப்போல் களங்கமற்றவை. கற்கவும் கற்பிக்கவும் சொல்பவை. ஒரு நல்ல கவிதை, இன்னொருவருக்குத் தம்மைத் தாமே பரிந்துரை செய்துகொள்ளும் பாக்கியமுடையது என்பார்கள். அந்தவகையில் ஷிட்டிமோகன் சென் தொகுத்த கவிதைகள், தாகூரை வந்து சேர்ந்திருக்கின்றன. ஏறக்குறைய இந்தியமொழிகளில் அத்தனையிலும் கபீர் இன்று வாசிக்கப்படுகிறார் என்றால் அதற்கு முதன்மையான காரணம் தாகூரே. தம்மைச் சேர்ந்த கபீரின் கவிதைகளை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உரியதாக ஆக்கிய பெருமை அவருடையது.

கபீரின் வாய்மொழிகள் முழுவதுமே இன்று அன்றாடப் புழக்கத்திற்குரியவையாக மாறிவிட்டன. ‘பூக்களைப் பறிக்காதே வலிக்கும் / அதற்கும் எனக்கும்’ என்ற கபீரின் ஒரு வாய்மொழியை எத்தனையோ கவிஞர்கள் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டுள்ள அறியாமையை அறியலாம். பதினைந்து வடிவங்களில் அவருடைய கவிதைகள் அமையப்பெற்றாலும், முக்கியமாக மூன்று வடிவங்களே பிரதான வடிவங்களாகக் கருதப்படுகின்றன என்று மேலே குறித்திருக்கிறேன். அதேபோல, அவருடைய கேள்வி பதில்களும் தனியான புரிதலுக்குரியவை.

நேர்ப்பேச்சில் அவரிடமிருந்து வெளிப்பட்டதாகச் சொல்லப்படும் பதில்கள் புனைவிற்கு நிகரான தன்மையுடன் விளங்குகின்றன. ஒருமுறை, ‘கடவுள் என்பவர் யார்’ என அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் ‘நீ சுவாசிக்கும் காற்றுக்குள் இருப்பவர் எவரோ அவரே கடவுள்’ என்றிருக்கிறார். அப்பதிலில் திருப்தியடையாத அந்த நபர், ‘அவர் எங்கே இருக்கிறார்’ என்னும்போது, ‘அவர் வெளி இடங்களில் எங்கும் இல்லை. போய்த் தேடவேண்டிய அவசியமும் இல்லை. அவர் உன்னுள்ளே தான் உறைந்திருந்திருக்கிறார். அவரை தேடித் தெரிந்துகொள்ள முயற்சி செய்தால் அகப்படுவார்’ என்றிருக்கிறார்.

கபீரைப் பலர் நெருங்கிய இடமாக அப்பதிலைச் சொல்லலாம். இறைவனை ஏற்பவர்கள் கபீரை நெருங்குவதைவிட, இறைவனே இல்லை என்பவர்கள் அவரை அதிகம் நெருங்கிவர அம்மாதிரியான பதில்களே உதவியிருக்கின்றன. ஆன்மீக நாட்டமில்லாத ஒருவர் அப்பதிலால் இந்திய தத்துவவியலின் அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம். ‘நமக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது அதை உற்றுப்பார்த்தால் உயரலாம்’ என்பதைவிட, நம்பிக்கையான சொற்கள் வேறு இருக்கின்றனவா என்ன? பக்தியும் பகுத்தறிவும் சந்தித்துக்கொள்ளும் இந்தப் புள்ளியில் இருந்தே கபீரின் அநேகக் கவிதைகள் அரும்பியுள்ளன. இறைநிலையை வலியுறுத்தும் பாவகைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. இடைக்கால பக்தி இலக்கியம் முழுவதுமே அவைதாம். இருந்தாலும்கூட, கபீரின் சொல்லாட்சிகள் நீட்டி முழக்காத நேரடித் தன்மையைக் கொண்டிருப்பவை. ‘நீ வளர்ந்து உயர்ந்துதான் விட்டாய். அதனாலென்ன / பனைமரம்கூடத்தான் உயர்ந்திருக்கிறது / நிழலா தருகிறது?’ என்றொரு கவிதை. அக்கவிதையில் பூடகம் எதுவுமில்லை. பூடகம் எதுவுமற்ற எளிமை, சிந்தனையின் வெவ்வேறு சிறகுகளை விரிக்கத் தோது செய்கிறது.

எவற்றுடனும் அதனைப் பொருத்திக்கொள்ளலாம். அறியாமை, பக்தி, தத்துவம் என சகல கிளைகளையும் விரிக்கும் சாத்தியங்களை அக்கவிதை வரிகள் கொண்டுள்ளன. அதேபோல, மற்றொரு கவிதையும் பனைமரத்தை உவமித்து வரக்கூடியது. ‘பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்க்கமாட்டாய் / பனைமரத்தில் ஏறித் தெரிகிறானா எனத் தேடுவாய்’ என்பது அது. மக்களுக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்குக் கடத்தும் செயலையே அவருடைய கவிதைகள் மிகுதியும் செய்கின்றன.

அவர் தத்துவவாதியா, சீர்திருத்தவாதியா எனப் பகுக்க முடியாத சிக்கலை அவர் கவிதைகளே செய்துவிடுகின்றன. ஒருசாரார் அவரைத் தத்துவவாதியென்றும் இன்னொரு சாரார் அவரை மதங்களைச் சீர்திருத்த வந்தவரென்றும் சொல்கிறார்கள். இரண்டு சாராரிலும் சேராத மேலும் சிலர், அவரை ஞானியாகவும் யோகியாகவும் பார்க்கிறார்கள். மத நம்பிக்கையுடையவர்கள் இறைவனின் தூதராகவும் இறைப் பிரசங்கியாகவும் கருதுகிறார்கள்.

நாகூர் ஆண்டவரின் வருகையை முன்னே அறிந்து அறிவித்தவர் கபீர்தாஸர் என்றொரு குறிப்பை எங்கேயோ வாசித்திருக்கிறேன். டெல்லி சுல்தானாக இருந்த சிக்கந்தர்லோடி அங்கிருந்து நூற்றைம்பது மைல் தொலைவில் அமையவிருந்த ஆக்ராவை மத நல்லிணக்கமுள்ள பகுதியாக மாற்றுவது குறித்து யோசித்திருக்கிறார். ஏனெனில், அப்போது இந்துமன்னர்களுக்கும் இஸ்லாமியமன்னர்களுக்கும் இடையே அடிக்கடி போர்மூண்டு அமைதியற்ற சூழல் நிலவியிருக்கிறது. ஒரு மன்னனாக மக்களுக்கு நிம்மதியான வாழ்வை அமைத்துத்தர விரும்பிய அவர், அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த மதகுருமார்கள் பலரையும் அழைத்து ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அக்கருத்தரங்கில் பீகாரைச் சேர்ந்த ராமானந்தர், வங்கத்தைச் சேர்ந்த சைதன்ய மகாபிரபு, மகாராஷ்டிர நாமதேவர் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதில், கபீஸ்தாஸரும் கலந்துகொண்டு தம் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

அனைத்துக்குமுரிய ஒரே சக்தி ஆதிமூல சக்தியே என்பது அவர் நம்பிக்கை. அதனடிப்படையில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு மெய்யடியார் வருவார். அதுபடி நபி பரம்பரையில் இருந்தும் ஒருவர் அயோத்தியில் தோன்றவிருக்கிறார். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய அடக்கஸ்தலம் சகல மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முக்தி பெறும் இடமாக அமையும் என்றிருக்கிறார்.

கபீர் சொன்ன அந்த அவரே நாகூர் ஆண்டவர் என்பதாகப் படித்த ஞாபகம். சிக்கந்தர் அப்படி ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்ததும், அதில் கபீர்தாஸர் கலந்துகொண்டதும் வரலாற்று நூல்களில் வருகின்றன. ஆனால், கபீர் அக்கருத்தரங்கில் பேசியது குறித்து நாகூர் நாயகம் அற்புத வரலாறு நூலில் இருப்பதாக அறிகிறேன். கபீரின் தீர்க்கதரிசனங்கள் பிற்காலத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்கு பல்வேறு சான்றுகளை காட்டுகிறார்கள். ஆக, கபீரைச் சொற்களால் வெளிச்சமேற்றிய சுடரென சொல்லலாம்.

கபீர் கவிஞரென்னும் வட்டத்திற்குள் நிற்பதில்லை. கவிஞரென்பது அவருடைய வெளிவட்டமாக இருக்கலாம். ஆனால், அவருக்குள் வெவ்வேறு உள் வட்டங்கள் உள்ளன. யாருக்கு எவ்வட்டம் தேவையோ அந்த வட்டத்தில் அவரை அடைத்துக்கொள்ளலாம். தண்ணீரைப்போல எந்தக் குடுவையிலும் தம்மை அடைத்துக்கொள்ளும் சாதுர்யமிக்கவையே அவரும் அவருடைய கவிதைகளும். தத்துவவாதிக்கு மெய்யியலையும் சீர்திருத்த சிந்தனையுடையவர்களுக்குக் கலகக் குரலையும் தரக்கூடிய தன்மை அவர் கவிதைகளுக்குண்டு. அவர் காலத்திலேயே அவரை ஓரு வட்டத்திற்குள் நிறுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. என்றாலும், அதை அவர் புன்னகையோடும் அலட்சியத்தோடும் கடந்திருக்கிறார்.

கபீருக்குள் இருப்பதைத் தேடுவதைக் காட்டிலும், கபீர் எங்கெங்கெல்லாம் தென்படுகிறாரோ அவற்றைப் பார்த்துவிடுவது என இறங்கிய சமயத்தில், ‘கபீரின் நூறு பாடல்கள்’ எனும் தலைப்பில் எழில்முதல்வன் வெளியிட்ட நூல் ஒன்று என் கைக்குக் கிடைத்தது. அந்நூல் 1914இல் தாகூர் தொகுத்த கபீரின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. தாகூர் தம்முடைய ரசனைக்கும் கவித்துவத்திற்கு ஏற்ப தேர்தெடுத்த கவிதைகளே அவை எனினும், கபீர் என்னும் சித்திரத்தை அக்கவிதைகள் அழகாகக் காட்டக்கூடியவை.

எழில்முதல்வனின் மொழிபெயர்ப்பு இரண்டாயிரத்தில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். ‘புதிய உரைநடை’ நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசுபெற்ற பேராசிரியர் மா. இராமலிங்கமே எழில்முதல்வன் என்பதும், அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தாரென்பதும் தெரியாததல்ல. எழில்முதல்வனின் மொழிபெயர்ப்பில் கபீரை ஓரளவு புரிந்துகொள்ளலாம். நான் திரும்பவும் சொல்வது, கபீரை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். கபீருடைய கவிதைகளை அல்ல.

ஆகாயத்தின் லீலா விநோதங்களை அழகிய சொற்செட்டுக்குள் அடக்கிவிடும் கபீரின் கவிதைகள், இன்றுவரை தொடர்வதற்கும் அதுவே காரணம். எளிய புரிதலுக்கு இடமளிக்காத ஒன்றுதான், காலம்கடந்தும் வாழ்கிறது. காலத்தே விளங்கிவிடும் எதையும் இலக்கியம் சுமப்பதில்லை. அப்படியே சுமந்தாலும் அதை மற்றொரு காலம்வந்து இறக்கிவைத்துவிடும். ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கபீரால் சொல்லப்பட்ட கவிதைகளை இன்றைக்குப் படித்தாலும் புதிது போலவே இருக்கின்றன.

காலத்தின் தூசி படியாத தெளிந்த கண்ணாடிக்கு நிகராக அவற்றைச் சொல்லலாம். நம்மை நாம் பார்த்துக்கொள்ளவும் பிறரை எப்படிப் பார்க்கவேண்டும் எனவும் அக்கண்ணாடி சொல்லித்தருகிறது. மொழியின் மர்மத்துடன் கபீரின் கவிதைகள் இயங்குகின்றன. அதேசமயம், மொழிகளுக்கு அப்பாலுள்ள வெளிகளில் அவருடைய ஞானம் சஞ்சரிக்கிறது. தாகூரின் தேர்வும் ஆங்கிலமொழிபெயர்ப்பும் சொல்லும்படியானவை இல்லை என்பவர்கள் உண்டு. எனக்கு அதைப்பற்றி கூடுதலாகத் தெரியாது. எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்டவற்றை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். எனவே, அதுகுறித்துச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.

எவ்வளவு சுமாராக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், கபீர்மீது எனக்கேற்பட்ட காதல் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. உண்மையில், கவிதைகளின் உட்பொருளை உணர மூலமொழியை நோக்கியே செல்லவேண்டும். நம்பிக்கைதரும் மொழிபெயர்ப்புகளை விநய் தார்வாட்கரும் அரவிந்த் கிருஷ்ண மெரோத்ராவும் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.என் நண்பரும் பேராசிரியருமான பா. இரவிக்குமார் ‘எஷன்சியல் ஆப் கபீர்’ என்னும் அரவிந்த் கிருஷ்ணா மெரோத்ராவின் நூலை ஒளியச்சு செய்து வாசிக்க அனுப்பியதை மறவாமல் குறிப்பிட வேண்டும்.

மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் துல்லியத்தைத் தருவதில்லை. எந்தமொழியாக இருந்தாலும் அந்த மொழிக்கென்று தனியான குணங்களுண்டு. அந்தக் குணங்கள் இன்னொரு மொழிக்கு இல்லாதபோது துல்லியத்திற்கு இடமில்லாமல் போகிறது. தமிழால் இன்னொரு மொழியின் துல்லியத்தைக் கைப்பற்ற முடியாதா எனக்கேட்கலாம். மூலமொழியிலும் பெயர்க்கப்படும் மொழியிலும் சமவிகித ஆற்றல் எவர்க்குண்டோ அவரால் முடியும். எழில்முதல்வன் ஆங்கிலத்தில் இருந்தே தமிழில் தந்திருக்கிறார்.

தாகூரின் கையிலிருந்து எழில்முதல்வனின் கைக்கு இடம்பெயரும்போது அக்கவிதைகளின் தரம் இன்னும் குறைந்திருக்கலாம். என்றாலும், அறியாத ஒருவரை முதலில் அறியத் தந்த எழில்முதல்வனை என்னால் தவிர்க்கமுடியவில்லை. தமிழ் அலை வெளியீடாக வந்த அச்சிறுநூல் கபீரை அறியவும், அவருடைய கவிதைகளுக்குள் நுழையவும் வசதியானது. இன்றைக்குக் கபீரைத் தெரிந்துகொள்ள நிறைய நூல்கள் கிடைக்கின்றன. தாகூரின் தேர்விலும் சிக்காத பல நல்ல கவிதைகளை ‘ஏகாந்தன்’ தம்முடைய வலைப்பூவில் ஒருமுறை வெளியிட்டிருக்கிறார். கபீரின் ஆன்மீக தரிசனத்தை உற்றுணர அவை உதவின. அதுமட்டுமல்லாமல், கபீரின் ஈர்க்கும் சக்தியை ஏகாந்தனால் எட்டித் தொட முடிந்திருந்தது. தம் வாழ்விலிருந்தும் தரவுகளிலிருந்தும் கபீரை தமக்கே உரிய மொழிநடையில் ஏகாந்தன் எழுதியிருந்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை.

கபீரின் கவிதைகளை நினைவில் வைத்துச் சொல்லும்படியான மொழிபெயர்ப்பு அவருடையது. தாகூர் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பில் ‘ஆண்டவன் உள்ளேதான் இருக்கிறானெனில் / இந்த உலகம் யாருக்குச் சொந்தமானது / நீ மேற்கொண்ட புனித யாத்திரையில் காண நேர்ந்த கற்சிலைதான் இராமனெனில் / உலகத்தில் நிகழ்வனவற்றை அவனல்லாமல் அறிவான் யார்? / ஹரி கீழ்த்திசையில் இருக்கிறான் / அல்லா மேற்திசையில் இருக்கிறான் என்கிறாயே / நீ உன் இதயத்தை உள்நோக்கி பார் / அங்கே கரீம் ராம் இருவரையும் காண்பாய்’ என்னும் கவிதை இடம்பெற்றிருக்கிறது. தமிழில் இல்லாத கருத்துகளோ கவிதைச்செறிவோ கபீரிடம் இருக்கிறதா எனக்கேட்டால் என்னிடம் பதிலில்லை.

என்வரையில் அக்கேள்வியைத் தவிர்த்துவிட விரும்புகிறேன். ஏனெனில், கபீரும் துளசியாரும் எழுதிய ‘அவதி’ மொழி, தமிழ்போல பன்னெடுங்கால வரலாறு உடையதல்ல. இன்னும் சொல்லப்போனால், கபீரின் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்துருவில் அமையப்பெறவில்லை. வாய்மொழிகளாக அவர் வழங்கியவையே பஞ்சாபி, ராஜஸ்தானி, கடிபோலி, போஜ்புரி, பிரஜ் ஆகியவற்றில் புழக்கத்திற்கு வந்துள்ளன. எனினும், காலம் கழித்தே அவர்மீது அபிமானம் கொண்டவர்களால் சமஸ்கிருதம், பார்சி, வங்காளம் கைத்தி ஆகிய எழுத்துருவில் பதிக்கப்பட்டுள்ளன.

ஆக, கபீரின் சொற்களாக நாம் கருதக்கூடிய எதுவுமே தெள்ளத் தெளிவாக அவருடையதென்று சொல்லமுடியாத சூழல் நிலவுகிறது. ஏற்கெனவே சொல்லிய செய்தியை மீண்டும் குறிப்பிடக் காரணமிருக்கிறது. கபீரின் பல கவிதைகளில் சொற்கள் குறித்து படிமம் அடிக்கடி வருகின்றது. எழுத்துருவை அறியாத ஒருவர், அடிக்கடி சொல்குறித்த உரையாடலை ஏன் மேற்கொண்டிருக்கிறார் என்பது கவனத்துக்குரியது. சமூகத்தின் கீழ்த்தட்டைச் சேர்ந்தவர் என்பதால் கபீருக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் இந்துமதக் குருமார்களும், இன்னொரு பக்கம் இஸ்லாமிய மௌலவிகளும் கபீரைக் கற்கவிடாமல் செய்திருக்கின்றனர். எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டுதான் வெளியே வந்திருக்கிறார். அவரே அதுகுறித்து ‘கற்றுக்கொண்டே இருப்பவனின் மனம் கல்லாகிவிடும் / எழுதிக்கொண்டே இருப்பவனின் கைகள் திருடப்பழகிவிடும் / கடவுளின் வீட்டைக் கண்டறியப் படிக்கவேண்டும், வேறு புத்தகங்களை’ என்றிருக்கிறார். கபீரின் பெருமை என்னவெனில், எல்லாமொழிகளுக்கும் எல்லா மனிதர்களுக்கும் உரியவராக மாறிப்போனதுதான்.

மரபுக்கல்வி மறுக்கப்பட்டதால் தனித்த பிரதேச அடையாளங்களில் இருந்து அவர் தம்மை தவிர்த்துக்கொண்டிருக்கிறார். கபீரின் மற்றுமொரு பெருமை, தம்மைவைத்து உருவாக்கப்பட்ட தொன்மங்களில் வாழ்ந்துகொண்டிருப்பது. இந்துமதம் அவரை சுவீகரித்துக் கொண்டதா அல்லது மெய்யாகவே இந்துமதத்தின்பால் அவருக்கு ஈர்ப்பு இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், அவரை வைத்துக் கட்டமைந்துள்ள தொன்மங்கள், அவர் இந்துதர்மத்தை ஏற்றவராக அறிவிக்கின்றன. தமக்கு ஒரு குரு தேவை என்ற எண்ணம் வந்ததும் அவர் இராமானந்தரை நோக்கிச் சென்றதாகவும், ஆரம்பத்தில் ஏற்கமறுத்து பின் எதேச்சையாக தீட்சை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

நெசவுத் தொழிலைச் செய்துவந்த கபீர், அத்தொழிலில் நாட்டம் செலுத்தாமல் இராமரைப் பாடித் திரிந்த காலத்தில் அவர் நெய்த துணியை வாங்கிச்செல்ல ஒரு பெரியவர் வந்ததாகவும், அவர்மூலம் கண்ணனின் லீலைகள் அவருக்கு உணர்த்தப்பட்டதாகவும் சொல்லப்படும் கதைகள், இஸ்லாமிய கபீரை இந்துவாக்கும் முயற்சியென்று சிலர் கருதுகிறார்கள்.

குறிப்பாக, இந்தியவியல் ஆய்வாளர் வெண்டி டோனிகர், ‘இந்த முயற்சிகள் கபீர்தாசரை ஓர் இந்துவாக உலகில் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள்’ என்றிருக்கிறார். அதற்காக அவருடைய நூல்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அவருடைய ‘இந்துக்கள்: ஒருமாற்று வரலாறு’ என்னும் நூலை 2009இல் பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டது. இந்துமதத்தையும் அதன் பழக்கவழக்கங்களையும் அந்நூல் இழிவுபடுத்திவிட்டதாகக் கருதி, ‘சிக்சா பச்சாவோ அந்தோலன் சமிதி’ என்னும் அமைப்பு அவர்மீது வழக்குத் தொடுத்தது. விளைவாக, அப்புத்தகத்தை பெங்குயின் விற்பனையிலிருந்து விலக்கிக்கொண்டிருக்கிறது. அறிவுமட்டத்தில் பெரும் சலசலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய வெண்டிடோனிகர் சமஸ்கிருதப் புலமையுடையவரென்பதும், சிக்காகோ பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்றுத் துறை பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. கபீர் குறித்த ஆய்வுகளில் டேவிட் லாரென்சென், ஹசாரி பிரசாத் த்விவேதி ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் வெண்டி டோனிகரின் ஆய்வுமுடிவுகளை ஆதரித்தனரா எதிர்த்தனரா என்பதை இனிதான் வாசிக்கவேண்டும்.

கபீரின் விஷயத்தில் நடந்தவை என்ன என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடைய கவிதைகள் சமயத்திற்கு எதிர்நிலையை கொண்டிருக்கின்றன. யோகம், தானம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை கடுமையாகச் சாடியுள்ள கபீர், குறிப்பிட்ட மதத்தையும் அதன் போதனைகளையும் உள்வாங்கியிருப்பார் எனச் சொல்வதற்கில்லை. ‘சடங்கைவிடவும் தானத்தைவிடவும் பாடல்களே சிறந்தவை’ என்றிருக்கிறார்.

கபீரின் செல்வாக்கைக் கருத்திற்கொண்டே ஏனைய மதங்கள் அவரையும் அவருடைய கவிதைகளையும் சுவீகரித்துள்ளன. ஒரே ஓர் ஆறுதல், இன்றுபோல் எவரையும் தனக்கு மட்டுமே உரியவர் என ஆக்கவும் காட்டவும் எண்ணாத வகையில் மதங்களின் ஆரம்பக்காலங்கள் இருந்திருக்கின்றன. சொல்பவரின் மதம் குறித்தோ பிறப்பு குறித்தோ யோசிக்காமல், சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து தம்முடைய மதநூல்களில் அக்கருத்துகளை இடம்பெறச் செய்துள்ளன.

‘பிராமணரும் களிமண்தான் / பனியாவும் களிமண்தான் / இந்த உலகில் உள்ள அனைத்துமே களிமண்தான் / இந்தக் களிமண்ணில்தான் நாம் எல்லோரும் சந்திக்கிறோம்’ என்ற கபீரின் கவிதை நினைவுக்கு வருகிறது.மதங்கள் தங்களுடைய தார்மீக குணத்திலிருந்து வேறுபடும்போது, ஒரு சராசரி என்னவிதமான பாதிப்புக்கு உள்ளாவானோ அத்தனை பாதிப்புகளையும் கபீர் சந்தித்திருக்கிறார். தம்மை முன்வைத்து நிகழ்ந்த பூசல்களையும் விவாதங்களையும் அறியாமல் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ‘மனம் தெளிந்து குளிர்ந்தபின்னே / எதிரிகள் யாருமில்லை. / அகங்காரம் அழிந்தபின்னே அனைவரும் உறவினர்தாம்’ என்பதும் கபீர் முன்வைத்த சிந்தனைதான். ஒன்றுபட்ட மக்கள் கூட்டத்தில் மதம் புகுந்தபின் அவர்களுக்குள் இருந்த சகோதரத்துவம் சிதறியிருக்கிறது. அதுவரை இணைந்தே வாழ்ந்த அவர்களுக்குள் விரோதங்கள் விளைந்திருக்கின்றன.

அன்பை மட்டுமே சார்ந்திருந்த மனித குலத்தை அகங்கார எண்ணங்கள் பீடிக்கத் தொடங்கியதும், அந்த வாய்ப்பை ஒரு சில குருமார்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குலப்பெருமையற்ற ஒரு கண்ணியை யாரோ எங்கேயோ அறுத்திருக்கின்றனர். ஐந்நூறுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மதத்தின் பேராலும் இறைவனின் பேராலும் நிகழ்ந்துள்ள போட்டிகளும் பொறாமைகளும் அருவருப்பானவை. அவற்றுக்குள் நுழைவதால் ஆவது ஒன்றுமில்லை.

‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தம்பி ராஜூமுருகன், காசிக்கு ஒருமுறை வரும்படி அழைத்திருந்தான். அங்கே போயிருந்தபோதுதான் ‘கபீர்சந்த்’ பிரிவினரைப் பற்றியும் கபீர் சௌராவையும் தெரிந்துகொண்டேன். கபீர் மடத்தில் நிகழ்த்தப்படும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது துக்கமே. ஜிப்ஸி திரைப்படம் இந்து, முஸ்லிம் இடையே ஏற்பட்டுள்ள பேதங்களைப் பேசுவது. நாடோடியாக காஷ்மீரிலிருந்து இந்தியாவெங்கும் செல்லக்கூடிய ஒரு குதிரைக்காரனின் கதை.

அத்திரைப்படத்தை விவரிக்கும் போதெல்லாம் ராஜூமுருகனுக்கு கபீரின் கவிதைகளே கைகொடுத்தன. பாடல்களில் கபீரை முடிந்தவரை கொண்டு வந்திருக்கிறேன். ‘காத்தெல்லாம் பூமணக்க’ என்னும் பாடலில் ‘வைக்காமல் போவோம் தடயங்களே’ எனும்வரி கபீரிடமிருந்து பெற்றதுதான். கபீரின் காலம், ஏறக்குறைய நம்முடைய சித்தர்களின் காலத்திற்கு நெருக்கமானது. தமிழில் சித்தர்கள் எப்படியோ அப்படியே அவதி மொழியில் கபீரும் என்பவர்கள் உண்டு. சித்தர்களுக்கு இணையாக கபீரை, அவருடைய ஒருசில கவிதைகளை வைத்து ஒப்பிடுகின்றனர். சித்தர்கள், இறைமறுப்பை முழுவீச்சில் கைக்கொண்டவர்கள். கபீரோ இறைவனை எங்கேயும் மறுக்கவில்லை. இறைவனை அடையும் வழிகளையே விமர்சித்திருக்கிறார். நம்முடைய ஆசைக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஆழ்வார்களுடனும் நாயன்மார்களுடனும் ஒப்பிடலாம். ஆனால், சமயச் சார்பற்ற நாத்திகவாதிகளுக்கே கபீர் தம் வாசல்களைத் திறந்துவைத்திருப்பதாக எனக்குப்படுகிறது. கடவுள் சிந்தனை கடந்தும் அவரை சிந்திக்கலாம்.

சித்தர்களைப் போலே காத்திரமாக தெய்வ நம்பிக்கையை அவர் எதிர்க்கவில்லை. தேவைப்படும்போது உதிரிவாக்கியங்களாகச் சிலவற்றை உதறியிருக்கிறார். அதைவைத்து அவரை சித்தர்களுக்கு இணையாகச் சொல்வது பொருத்தமற்றது. மதங்களையும் வழிபாட்டுமுறைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய அவர், தனக்கு முன்னே இருந்த எந்தச் சாதுவையும் பின்பற்றவில்லை.

தம்மை நல்வழிப் படுத்தவும் ஞானமார்க்கத்தை நோக்கி நகர்த்தவும் குரு வேண்டுமென எண்ணியிருக்கிறார். ஆனால், குருவே எல்லாமென்று நம்பவில்லை. கபீரின் பல கவிதைகளில் ‘இராமா, இராமா’ எனும் சொல்வருகின்றது. ஆய்வாளர்கள் அக்கூற்றை கடவுள் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளும்படி சொல்கின்றனர். கபீரின் காலத்தில் ‘இராமர் எனும் சொல், பொதுவான கடவுளாக இருந்திருக்கலாம்’ என்கின்றனர். ‘அவனுக்குத் தலையோ தனிமுகமோ இல்லை / ரூபனுமில்லை அரூபனுமில்லை / நறுமலரின் வாசனையிலும் அரிதானது / அவனது சுகந்தம்’ என்னும் கவிதை கபீர் எழுதியது.

அக்கவிதையில் கபீர் ஏகத்தையோ பிரம்மத்தையோ சொல்வதாக எனக்குப்படவில்லை. அவர் தன்னைப்பற்றிச் சொன்னதாகவே எண்ணுகிறேன். கபீரென்றால் சுகந்தம். அச்சுகந்தம் நுகர்பவரின் மனத்திற்கேற்ப மணம்தரும் மனோரஞ்சிதத்திற்கு ஒப்பானது. மிகசமீபத்தில் செங்கதிரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ‘புன்னகைக்கும் பிரபஞ்சம்’ நூலில் இருந்தே மேலுள்ள கவிதையைத் தந்திருக்கிறேன். இதுவரை வெளிவந்துள்ள கபீர் கவிதை நூல்களில் இது, முக்கியமானது. அனைத்துக் கவிதைகளையும் நவீனகவிதை வடிவத்தில் பெயர்த்துப் பார்த்திருக்கிறார். சில கவிதைகள் வசீகரிக்கின்றன.

கடும் உழைப்பைக் கோரியுள்ள அந்நூலில், இடம்பெற்றுள்ள கவிதைகளில் சந்தங்களை அறவே செங்கதிர் தவிர்த்திருக்கிறார். அது, அவருக்கு நியாயமாகவும் நேர்த்தியாகவும் பட்டிருக்கலாம். ஆனால், எனக்கோ இயல்பாக நிகழும் கபீரின் இயைபுகளில் மயக்கமுண்டு என்பதால் சற்றே ஏமாற்றமளிக்கிறது. இயைபைத் தவிர்க்காமல் கபீரன்பனும் சிவகுமாரனும் சில கவிதைகளை மொழிபெயர்த்திருப்பதை இணையத்தில் வாசித்திருக்கிறேன். கபீரன்பன் முழுக்க தமிழ் பக்தி இலக்கியத்தின் பாதிப்பில் பெயர்த்திருக்கிறார். சிவகுமாரனின் சில கவிதைகள் அப்படியில்லாததால் ஈர்க்கின்றன.

உதாரணமாக, ‘ஆசை ஒழிந்தால் அல்லல் ஒழியும் / அகத்தில் ஏதடா துன்பம்? / ராசா அவனே, எதுவும் வேண்டான் / எல்லாம் அவனுக் கின்பம்.’ தமிழின் இயைபுச்சுவையுடன் கூடிய சிவகுமாரனின் மொழிபெயர்ப்புகள் இசைக்குத் தோதானவை. செங்கதிர் சந்தங்களை முற்றாக விலக்கியிருக்கிறார். கபீரை நவீனபடுத்த வேண்டுமென எண்ணி அப்படி ஒரு மொழிபெயர்ப்பை மேற்கொண்டிருக்கிறார். இயைபினால் ஒருவர் பழசாகிவிடுவாரா என்ன? சாகியிலும் ரமைணியிலும் கபீரே இயைபுகளைத் தவிர்த்திருப்பதால் குறைந்தபட்சம் ‘தோஹாக்களை’யேனும் இயைபுகள் வரும்படிச் செய்திருக்கலாம். ஒரு நூலாக வரும்போது அவை துருத்தக்கூடுமென நினைத்தாரோ என்னவோ. எல்லாவற்றையும் வாக்கிய வடிவிலேயே தந்திருக்கிறார்.

பொதுவாக, இயைபுகளைத் தவிர்ப்பதுதான் நல்லகவிதை என்றும், நவீனகவிதை என்றும் யாரோ அவருக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். அப்படியும் ஒரு முயற்சி தேவைதானே? செங்கதிர் தம்முடைய மொழிபெயர்ப்பில் நுட்பமாகச் சில வேலைகளைச் செய்திருக்கிறார். சொற்களின் தேர்வில் முதிர்ச்சி தென்படுகிறது. எது சைவச்சொல், எது வைணவச்சொல் என்று தேர்ந்தே பயன்படுத்தியிருக்கிறார். தமிழில் ஒரு கவிதையையோ நூலையோ மொழிபெயர்க்கும்போது தேவையான கறார்தன்மை அவரிடம் கூடியுள்ளது. ‘கெட்டழிதல்’ என்றொரு கவிதை, ‘சந்தனத்தின் நட்பால் வேம்பும் கெட்டழிந்து சந்தனமாகியது / ரசமணியின் தொடுதலால் இரும்பும் கெட்டழிந்து தங்கமாகியது / கங்கையை வந்தடையும் பெயரற்ற ஓடை ஒவ்வொன்றும் / கெட்டழிந்து கங்கையாக மாறியது / கபீர் சொல்கிறான், இராமனின் பெயரை உச்சாடனம் செய்யும் எவரும் கெட்டழிந்து இராமனேயாகிறார்’ என்று பெயர்த்திருக்கிறார். ரசமணி, உச்சாடனம் போன்ற சொற்கள் தமிழுக்காக செங்கதிர் தேர்ந்துள்ளவை.

மூலமொழியிலோ ஏனைய மொழிபெயர்ப்புகளிலோ ‘உச்சாடனம்’ எனும் சொல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. போலவே, பூக்களைப் பற்றிய குறிப்புகள் வரும்போதெல்லாம் வைணவச் சமயத்திற்கு ஏற்றபடி பதங்களை மாற்றியமைத்திருக்கிறார். செங்கதிர் மொழிபெயர்ப்பில் வந்துள்ள மற்றொரு கவிதை, ‘வேதமந்திரம் ஓதிச்செல்வோர் / வரிசையைப் பின் தொடர்ந்த நான் / வழியில் ஒரு குருவைக் கண்டேன். நின்றெரியும் ஒரு விளக்கை கையளித்துச் சென்றார் / அவரெனக்கு’ என்பது.

அக்கவிதையின் இறுதியில் வரக்கூடிய ‘அவரெனக்கு’ என்னும் சொல், அவசியமே இல்லை. குருவைக் கண்டேன், அவர் எனக்கு நின்றெரியும் விளக்கை கையளித்துச் சென்றார்’ என்பதுடன் கவிதை முடிந்துவிடுகிறது. ஆனாலும், செங்கதிர் அவரெனக்கு என்னும் உபரிச்சொல்லை உபயோகித்திருக்கிறார். ஒருவேளை, இசைப்பாடலின் தாக்கத்திலிருந்தே அச்சொல் அவரைப் பெயர்க்க வைத்திருக்கலாம்.

பாடல்வேறு, கவிதை வேறு என்கிற புரிதலுக்குள் அவர் செல்லவில்லை என்றாலும், ஆங்காங்கே சில சொற்களை அவ்விதம் காணமுடிகிறது. பிரதியாக ஒன்றைப் பார்ப்பதைவிட, பாடலாக அதை உணர்வதற்கு மேலதிக அனுபவம் தேவை. குமார் கந்தர்வா போன்றோர் தம் குரலால் மெருகேற்றிய கபீரின் கவிதைகளை, ஓசை ஒழுங்கில்லாமல் வாசிக்க உவக்கவில்லை. என்றாலும், கபீரின் உள்ளொளியைச் செங்கதிர் கடந்துவிடவில்லை. வார்த்தைகளைச் சிக்கனமாக பிரயோகித்து கருத்துகள் பிறழாமல் கவிதைகளை ஆக்கி அளித்திருக்கிறார். முன்னுரையில் கபீரின் கவிதைகளைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அம்முன்னுரையில் கபீரின் கவிதைகள் ‘உலட்பான்சி’ என்னும் உத்தியை அடிப்படையாகக் கொண்டதெனவும் குறித்திருக்கிறார். உலட்பான்சி எனில், ‘புல்லாங்குழல் வாசிப்பு தலைகீழாகும் தருணம்’. அதாவது, புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கும் ஒருவன், இறுதியில் புல்லாங்குழலால் வாசிக்கப்படுவதே உலட்பான்சி.

உலட்பான்சியை, உல்டா பானி என வேறு ஒருவர் விளங்கிக்கொண்டு எழுதியதை ‘தமிழ் இந்து’ பத்திரிகையில் முன்னெப்போதோ வாசித்திருக்கிறேன். முரண்களின் தொகுதியிலிருந்து தம் கவிதைகளுக்கான கச்சாப்பொருள்களைத் தேர்ந்துகொள்ளும் கபீர், கடைசியில் அம்முரண்களுடன் தம்மையும் இணைத்துக்கொள்வதுதான் உலட்பான்சி எனத் தோராயமாகப் புரிந்துகொள்ளலாம். இசையும் இசைப்பவனும் ஒன்றாகும் நிலையை அல்லது தருணத்தை உலட்பான்சி உத்தியாகக் கருதினால், அதற்கு எத்தனையோ உதாரணங்களைத் தமிழில் காட்டலாம். ‘குருடனுக்கு வாய்த்தது துல்லியப் பார்வை / பார்வை வாய்த்த கண்களுக்கோ ஒன்றுமே புலப்படவில்லை’. செங்கதிர் மேலும் சில கவிதைகளை உதாரணமாகத் தந்திருக்கிறார்.

தமிழில் அதிக முரண் தொடைகளைப் பயன்படுத்திய அப்துல்ரகுமானின் கவிதைகள் முழுக்க உலட்பான்சி உத்தியென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு முரண்களிடம் சரணடைந்த கவிஞர் அவர்தான். அவருடைய பித்தன், ஆலாபனை போன்ற கவிதை நூல்களை வாசித்தால் உலட்பான்சி உத்தியைக் கூடுதலாக விளங்கிக்கொள்ளலாம்.

வேறு எவர்க்கும் முன்பே கஜலையும் இன்னபிற கவிதை வடிவங்களையும் எழுதிக்காட்டிய அப்துல்ரகுமான், அக்கவிதைகளின் வடிவ அமைதி குறித்தெல்லாம் ‘இது சிறகுகளின் நேரம்’ நூலில் எழுதியிருக்கிறார். ‘ஜூனியர் போஸ்ட்’ என்னும் இதழில் தொடராக வெளிவந்த அக்கட்டுரைகள் எண்பதுகளில் தமிழிலக்கியத்திற்குள் பெரும்பாய்ச்சலை ஏற்படுத்தின. இன்றைக்கு அப்துல்ரகுமானின் பெயர், நவீன கவிஞர்கள் பட்டியலில் இடம்பெறுவதில்லை. தலையில் வைக்கும் குல்லாவுக்கும் குடுமிக்கும் தமிழிலக்கிய விமர்சகர்கள் மத்தியில் வெவ்வேறு அர்த்தமுண்டு. கபீரின் கவிதைகளைப் போலவே அவருடைய தோற்றங்களும் என்னை வெகுவாக கவர்கின்றன. தலையில் குல்லா, கழுத்தில் உத்திராட்சம், நெற்றியில் திருநீறு அல்லது நாமம் என வெவ்வேறு தோற்றங்களில் அவர் தென்பட்டிருக்கிறார். அவை அவருடைய மெய்யான உருவமில்லை. வரையப்பட்டவையே எனினும், அவ்வோவியங்களைத் தீட்டிய ஓவியர்கள் கபீரைச் சரியாக பிரதிபலித்திருக்கின்றனர்.

இந்தியத் தன்மை என்று ஏற்கெனவே நான் கபீரை அடையாளப்படுத்தியது அவ்வோவியங்களை வைத்துத்தான். வேறு எந்த கவிஞருக்கும் ஞானிக்கும் இத்தனை உருவங்கள் இல்லை. அதிலும், தலையில் குல்லாவும் மயிலிறகுமான ஓர் ஓவியத்தில் கபீரின் மொத்தமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓவியங்களில் ஒற்றுமையும் மதசார்பின்மையும் வெளிப்படும் அதே சமயத்தில், கபீரைப் பற்றிய தொன்மங்கள் பிரச்சனைக்குரியவை.

இந்து விதவைக்குப் பிறந்தவரே கபீர் என்பதும், அந்த விதவைத்தாய் அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, சிறுகுழந்தையான கபீரைக் கங்கைக் கரையருகே போட்டுவிட்டுப் போனதாகவும் ஒரு தொன்மம் வழக்கிலுள்ளது. விதவை ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்வது பிரச்சனையில்லை. அந்த விதவை இந்துவாக இருந்ததால்தான் பிரச்சனை. எனவே, கபீரை அவளால் வளர்க்கமுடியவில்லை. அவள் வளர்க்க இயலாமல் போன குழந்தையை ஒரு முதிய இஸ்லாமியத் தம்பதியர் தூக்கி வளர்த்தனர். இத்தொன்மத்தில் இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன.

ஒன்று, கபீர் இந்து. இந்து விதவைக்குப் பிறந்தவர். மற்றொன்று, இஸ்லாமியத் தம்பதிக்கு கபீர் சொந்தமானவரல்லர். கபீரின் சொற்களும் செல்வாக்கும் இந்துக்களுக்குத் தேவைப்படுகின்றன. இந்துமதத்தை நிறுவவும் இந்துத்துவாவை நிலைநிறுத்தவும் கபீர் அவசியப்படுகிறார். ஆனால், அவரோ அவரை வளர்த்தவர்களோ சார்ந்த மதம் தேவையற்றது. இந்தச் சிக்கலை மிகக் கவனமாகப் புரிந்துகொண்டு கபீரை வாசிக்கவேண்டும். இல்லையென்றால், கபீரின் சொற்கள் அர்த்தப்படுத்தும் ஆன்மீகமும் நெறிகளும் ஆபத்தை விளைவிக்கும். இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கபீரின் கவிதைகள் மேற்கூறிய ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டன. எதிர்க்குணம் நிரம்பிய அவருடைய கவிதைகளின் சீற்றம், வாழும் காலத்தில் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. இரண்டு மதத்தினரும் அவருடைய பூத உடலைப் பெற்று இறுதிக் காரியங்களைச் செய்யச் சண்டையிட்டதை அறிகிறோம். ஆனால், அவருடைய இறப்புக்குப் பின், இந்துமதம் அவரை தனத்தாக்கிக் கொண்டிருக்கிறது.

தனதாக்கமும் தன்னுரிமையும் கபீருக்கான சாதகங்கள் என்றாலும், கபீர் இன்றுவரை வாழ்வது தம்முடைய கவிதைகளால் மட்டுமே; மதங்களால் அல்ல. மதநிறுவனங்களின் பாதுகாப்பினால் அல்ல. ‘ஆற்றுவிக்கும் சொல்லும் செயலும் ஒன்றானால் / நஞ்சும் பரிணமிக்கும் அமுதாக’ என்றொரு கவிதையில் கபீர் எழுதியிருக்கிறார். ஒருவரைத் தமதாக்கும் சொல்லுக்குப்பின்னே நஞ்சுமுண்டு; அமுதுமுண்டு.

வறிய நிலையில் வாழ்ந்த கபீர், தம்மை நோக்கி வருபவர்களை மதிப்புடன் நடத்தியிருக்கிறார். ஆடியும் பாடியும் அற்புதங்களில் பொழுதைக் கழித்த அவர், தம்மை நாடியும் தேடியும் வருபவர்களைச் சாப்பிட வைத்தே அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த வழக்கத்தைத் தொடர அவருடைய மனைவியும் மகனும் பெரும்பாடுபட்டிருக்கின்றனர். ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கானவர்கள் கபீரிடம் வரும்போது, அத்தனைபேருக்கும் சமைத்துப் பரிமாறுவது சாத்தியமே இல்லை.

வந்தவர்கள் தாமாகக் கிளம்பினாலும் கபீர், அவர்களைச் சாப்பிடாமல் போகக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறார். கூத்திலும் கும்மாளத்திலும் இறைவனைக் கண்ட கபீரின் மூத்த மகன் கமாலுக்கு இது பிடிக்கவில்லை. ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் குடும்பத்தை மேலும் மேலும் சிரமத்துக்குள்ளாக்குகிறாரே என்னும் வருத்தம் ஒருபக்கம். அதுமட்டுமல்ல, தெரிந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் கடனும் இரவலும் பெற்றாயிற்று. இனிமேலும் வழியில்லை என்ற நிலையில். கபீரிடம் கமால் வாதிட்டிருக்கிறான். கமாலுக்கும் ஞானமார்க்கத்தில் ஈடுபாடுண்டு என்பதால், ஆடாமலும் பாடாமலும் அடுத்தவரை உபசரிக்காமலும்கூட இறைவனை மௌனத்தால் அடையலாம் என்றிருக்கிறான். எதுசொல்லியும் கபீர் தம்முடைய நடவடிக்கையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக, எப்படியாவது வருபவர்களுக்கு உணவுதர வேண்டுமென்றிருக்கிறார். அதற்கு கமால், அப்படியானால் திருடத்தான் போகவேண்டும் என்றதும், அடுத்தவர்க்காகத் திருடினாலும் தப்பில்லை என்று கபீர் தெரிவித்திருக்கிறார். சரி, அப்படியானால் திருடுவதற்குத் துணையாக என்னுடன் நீங்களும் வரவேண்டும் என்றிருக்கிறான்.

கபீரும் கமாலும் பேசியதுபோலவே ஒரு நாள் ஒரு வசதியானவர் வீட்டுக்குத் திருடப் போயிருக்கிறார்கள். போனால் போன இடத்தில் கமால் திருட்டில் ஈடுபட, கபீர் அங்கேயும் ஆடலும் பாடலுமாக இருந்திருக்கிறார். வந்திருப்பது திருட எனத்தெரிந்தும் கபீரால் தம்மைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கமாலும் பலமுறை நினைவூட்டியிருக்கிறான். என்றாலும், கபீர் கமாலின் சொற்களைச் செவிமடுக்கத் தவறியிருக்கிறார். திட்டப்படி, கமால் பொருளை வீட்டுக்குள் இருந்து எடுத்துப்போடுவது. கபீர், அவற்றை வெளியில் இருந்து பற்றிக்கொள்வது என்பதுதான். ஆனால், கபீரின் செய்கை எல்லாவற்றையும் குழப்பிவிட்டது.

கபீரின் குரல்கேட்டு பலபேர் அந்த நள்ளிரவிலும் கூடிவிட, என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் திணறியிருக்கின்றனர். அப்போது கமால் எப்படியும் என்னைப் பிடித்துவிடுவார்கள் என்றிருக்கிறான். உடனே கபீர், என்னிடம் ஒரு கத்தி இருக்கிறது. அதைக்கொண்டு உன் தலையை வெட்டி எடுத்துவிடுகிறேன். தலையில்லாத உன்னை யாராலும் அடையாளம் காண முடியாதே என்றிருக்கிறார். சொன்னதுபோலவே கமாலின் தலையுடன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். மறுநாள் தலையில்லாத கமாலின் உடல், ஊராரால் தெருவில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. யாரோ யார் வீட்டிலோ திருடியதால் இந்தநிலை என்று ஊர்மக்கள் பேசுவதைக் கேட்டு, கபீரின் சீடர்கள் போய்ப்பார்த்தால் தலையில்லாத கமாலின் உடல், அவர்களைப் பார்த்து வழக்கம்போல வணங்கியிருக்கிறது. தலைபோனபிறகும் சீடர்களைக் கண்டுகொண்ட அவ்வுடல், கபீரின் மகனான கமாலுடையது எனக் கண்டுகொண்டதாக அத்தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கபீர் ஞானத்தின் எல்லைவரை சென்றிருக்கிறார் என்றால், கமாலும் அந்த ஞானத்தை நோக்கி நடைபோட்டதாக நம்பப்படுகிறது. தலையில்லாதபோதும் ஞானத்தை நோக்கி வருபவர்களை வணங்கக்கூடியதே கமாலின் கைகள் என்பதுதான் அத்தொன்மம் தெரிவிக்க விரும்புவது. இந்தத் தொன்மத்தை ஓஷோ வேறுமாதிரி அணுகியிருக்கிறார்.

ஓஷோ சொல்லும் தொன்மத்தில் திருடப்போன வீட்டுக்காரர் சீடர்கள் மூலமாக விஷயத்தைத் தெரிந்துகொண்டு, கபீரிடம் வருகிறார். வந்தவர், ‘சொந்தமகனின் தலையையே வெட்டியிருக்கிறீர்களே, உங்களை ஞானிபோல் என்று ஊரில் சொல்வது உண்மையில்லையா’ எனக் கேட்கிறார். அதற்கு கபீர், ‘ஞானிபோல் இருந்திருந்தால் தலையை வெட்டியிருக்க மாட்டேன். ஞானியாக என்னை உணர்ந்ததால்தான் தலையை வெட்டி வீட்டுக்கு எடுத்துவந்தேன்’ என்றிருக்கிறார்.

ஞானிபோல இருப்பதற்கும் ஞானியாகவே வாழ்வதற்கும் உள்ள வித்யாசம் அதுவே என்று ஓஷோ ‘பிரபஞ்சத் தன்னுணர்வு’ பற்றிய கட்டுரையில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் இறுதியில் ‘தன்னுணர்வுக்கு முன்னால் எதுவுமே சரியில்லை. எதுவுமே தவறில்லை’ என்ற வரிகள் கவனத்துக்குரியவை. ‘புரிதல் பற்றிய புத்தகம்’ எனும் நூலிலும் கபீர் எழுதிய ஒரு கவிதையை ஓஷோ குறிப்பிட்டிருக்கிறார்.

வெறுமனே நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதை வலியுறுத்த, ‘பிறக்கும்போது எனக்கு வழங்கப்பட்ட ஆத்மாவை அதே தூய்மையுடனும் அதே கூர்மையுடனும் மரணத்திடம் கொடுப்பேன்’ என்ற கபீரின் கவிதையை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். ஓஷோவின் நூல்களில் கபீர் அடிக்கடி வருகிறார். மெய்யான ஞானியைப்பற்றி எங்கெல்லாம் ஓஷோவுக்குச் சொல்லத் தோன்றுகிறதோ அங்கெல்லாம் கபீரை அழைத்துக்கொள்கிறார். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நிகழக்கூடிய சம்பவங்களை மட்டுமல்ல, பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் இருப்பவை பற்றியும் கபீரால் யோசிக்க முடிந்திருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் இரண்டு பிரதான மதங்கள் இருந்திருக்கலாம் என்பது ஊகம். அந்த ஊகத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட தொன்மம் ஒன்றில், அவர் இறந்து கிடத்தப்பட்ட நிலையில் அவரைப் புதைப்பதா எரிப்பதா என இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் சண்டையிட்டிருக்கின்றனர்.

அப்போது கண்களைத் திறந்த கபீர், ‘என்னைப் போர்த்தியிருக்கும் துணியை பிரித்துப் பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அவ்விதமே அவர்கள் பிரித்துபார்க்க, அவர் இரு மலர்களாக மாறி இருந்ததாக அத்தொன்மம் கூறுகிறது. அம்மலர்களை இருதரப்பாரும் பங்கிட்ட செய்தியும் அத்தொன்மத்தில் வருகிறது.

இன்று கபீர் எத்தனையோ மலர்களாக மலர்ந்திருக்கிறார். ஏற்கெனவே சொன்னதுபோல. எல்லா மலர்களின் நறுமணத்திலும் அவருடைய சுகந்தம் வீசுகிறது. ‘அடைதல்’ என்னும் கவிதையில் ‘கோவிந்தனை அடைய குறுக்குவழி எதுமில்லை’ என்று தொடங்கி ‘பொருள்பித்து / காமத்தின் வசியம் / அகங்காரத்தின் பிடிக்கு அகப்படாமல் தப்பவேண்டும் / கல்லுக்குப் பூசாத்தி / கரையேற இயலாது / கபீர் சொல்கிறான் / இயல்பிலேயே களங்கமற்ற ஒருவன் / எளிதாக அடைகிறான் இராமனை’ என்றிருக்கிறார். ‘கல்லுக்குப் பூ சாத்தி / கரையேற இயலாது’ என்பதை ‘நட்டகல்லை சுற்றிவந்து நாலுபுஷ்பம் சாத்தியே’ என்கிற சித்தர் பாடலுடன் ஒப்பிடலாம்.

சித்தர்களின் துறவிலிருந்து கபீர் மாறுபடக்கூடிய இடம், ‘எளிதாக அடைகிறான் இராமனை’ என்பது. வழிகளை விமர்சித்தாலும் இறைவனை கபீர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு கவிதை போதுமானது. தமிழில் கபீரை, ஆண்டாளுடன் பொருத்தலாம். இறைவன்மீது பற்றுகொண்டு இறுதியில் இறைவனாகவே மாறிவிட்ட தன்மையில் கபீருக்கும் ஆண்டாளுக்கும் அதிக வித்யாசமில்லை. பெண் என்பதால் இயல்பாக நாயகி பாவத்தை ஆண்டாள் எட்டியிருக்கிறார். கபீருடைய நாயகி பாவ கவிதைகளில் அத்தகைய நெருக்கமில்லை. ஒருவேளை, மூலமொழியில் அதே நெருக்கத்தைக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் கபீர் வாசிக்கப்படுவதற்குக் காரணம், கபீர் கண்ட கனவுகளில் ஒன்றுகூட ஈடேறவில்லை என்பதால்தான்.

மதமும் ஜாதியும் அரசியல் சூதாடிகளின் கைக்குள் அகப்பட்டுள்ளதால், கபீரின் கனவுகள் ஈடேற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரைக்கும் நாமிருப்போமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கபீர் அதே குல்லாவுடனும் அதே உத்திராட்சத்துடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். ‘தீபத்தின் சுடரொளியில் தெறித்தோடியது இருள்’ என்னும் கவிதையை கபீர் எழுதியிருக்கிறார். அவர் தீபமாகவும் சுடரொளியாகவும் இருக்கப் போகிறார். இருள்கள்தாம் எப்போது விலகுமென்று தெரியவில்லை. சொல்லை உய்த்துணரும் ஒருவனுக்கே அனைத்தும் இனிதா

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s