மூன்று நீலமணிகள்

ன்றைய கவிதைகளின் நிலைகுறித்து உரையாடவும் விவாதிக்கவும் நிறைய உண்டு. புழக்கத்திலுள்ள எல்லா இசங்களையும் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி எழுதப்படும் தங்கள் கவிதைகள், பிரபஞ்சத்திற்கே சவால்விடும் பெருமையுடையவை எனச் சிலர் சொல்லிக்கொள்கின்றனர். அதெல்லாம் அவர்கள் பாடு. அதற்குள் நான் போகவில்லை. ஒருமுறை கவிஞர் நீலமணி சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. ‘இசங்களில் தங்களுக்கு பிடித்த இசம் எது’ என்பது அவரிடம் வைக்கப்பட்ட கேள்வி. அதற்கு அவர் ‘எனக்குப் பிடித்த இசம், மாமிசம்’ என்றிருக்கிறார்.

அப்படி ஒரு பதிலை அவர் அதிர்ச்சியூட்டுவதற்குச் சொல்லவில்லை. கவிதை எழுதுகிறவர்களைப் பார்த்துத் தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனத்தை முறியடிக்கவே அப்படிச் சொல்லியிருக்கிறார். ஒரு கவிதைகூட எழுதாத விமர்சகர்கள், கவிதைக்குள்ளும் கவிதைகளிலும் இயங்குபவர்களைப் பார்த்து வைக்கக்கூடிய எரிச்சல் கலந்த ஏகடியங்கள் சலிப்புக்குரியவை. மிகநீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள தமிழிலக்கியப் பரப்பை, சில நூறாண்டுகளுக்கு முன்வந்த இசக் கோட்பாடுகளுடன் அளக்கும் மேற்படி ஸ்கேல்களை பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், அரிப்பெடுத்த வாய்க்கு அவலும் அருகம்புல்லும் வெவ்வேறல்ல.

நீலமணி என்னும் பெயருடைய கவிஞரைப் பற்றி முதல்முறையாக கேட்பவர்க்கு சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். ஒரு கவிஞரின் பெயரை முதல்முறையாகக் கேட்பது பிரச்சனையில்லை. பல ஆண்டுகளாக எழுதிவரும் ஒருவரை முதல்முறையாகத் தெரிந்துகொள்கிறோமே அதுதான் பிரச்சனை. நீலமணி, நேற்றோ இன்றோ எழுதியவர் என்றால், முதல்முறை கேட்பதில் நியாயமிருக்கலாம். அவரோ ஐம்பது ஆண்டுகளாக எழுதி வந்திருக்கிறார். சோர்வில்லாமல் எழுதியதுடன், காலத்திற்கேற்ப மாறிவந்த கவிதைகளின் போக்குகளையும் அவதானித்திருக்கிறார். தம்மை முன்னிறுத்தாதபோதும், கவிதைகளால் தம்முடைய இருப்பை அவர் தெரிவித்து வந்திருக்கிறார். ஒருசின்ன பின்னோட்டத்தைப் பார்த்துவிடலாம். நீலமணி என்கிற பெயரை நான் எப்போது முதலில் கேட்டேன்?

முப்பதாண்டுகளுக்கு முன் கவிதையெழுதும் ஆர்வம் துளிர்த்த சமயத்தில், அண்ணன் சீனு என்னை ஓர் உள்ளூர் இலக்கிய தாதாவிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திவைத்தார். அவரிடம், ‘கவிதைகளைப் பற்றித் தம்பிக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்’ என்று என் சார்பாகக் கேட்டுக்கொண்டார். சீனு அண்ணன் என் இலக்கிய வாழ்வில் தவிர்க்கமுடியாதவர். பலநேரங்களில் அவருடைய வழிகாட்டுதல்கள் உதவியுள்ளன. அந்த சீனு அண்ணன், தீவிர இடதுசாரியாக இருந்தவர். தற்போது மும்பையில் புரோகிதராக பணிசெய்துவருகிறார். இடதுசாரி எப்படி புரோகிதரானார் என்பது தனிக்கதை.

உள்ளூர் இலக்கிய தாதாவுடன் அண்ணனுக்கு நல்ல பழக்கம். எனவே, எனக்கு அவர் எந்தவிதத்திலேனும் உதவுவார் என நம்பினார். உள்ளூர் இலக்கிய தாதாவின் பெயரைத் தவிர்க்கிறேன். காரணமிருக்கிறது. அந்த உள்ளூர் இலக்கிய தாதாவோ டிப்ஸூக்கு பதிலாக எனக்குக் கொடுத்த ஏராள டோஸ்களை விவரிக்க இது தருணமில்லை. ஆனால், தாதாவின் வார்த்தைகள் முக்கியம். ‘கவிதை என்றால் எப்படி இருக்கணும் தெரியுமா, நீ கிறுக்கியிருக்கிறியே இப்படியில்ல. இதுல நீ இருக்குற, கவித இல்ல. நான் எப்போ இல்லாமப் போவுதோ அப்பதான் கவித வருது. கவித எங்கேயும் இல்ல. அது ஓங்கிட்டதான் இருக்குது என அடுக்கிக்கொண்டே இருந்தார். ஒரே ஒருமுறை நான் குறுக்கிட்டு, ‘உள்ளே இருக்குற நான நான் எப்படி எடுக்கிறது’ என்றேன். அதில் அவருக்கு லேசான கோபம் வந்துவிட்டது. ‘ஒனக்குள்ள இருக்கிற ஒன்ன, நான் எடுக்கமுடியாது. நீ தான் எடுக்கணும்’ என்றார். ‘எனக்குள்ள இருக்குற நான, நான் எப்ப எடுப்பேன்‘ என்றேன் மறுபடி. ‘அது ஒனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனா ஓங் கவிதயில அது தெரியாமப் பாத்துக்க’ என்றார்.

இன்றுவரைகூட எனக்கு அவர் சொல்லிய நானைப் பற்றி தெரியவில்லை. அகம்பிரம்மாஸ்மி மாதிரி. அத்துடன், ‘அது பட்டர் நானா, ஜிஞ்சர் நானா’ என்கிற குழப்பத்திலேயே வருடங்கள் ஓடிவிட்டன. அவருடைய அந்த மூன்றுமணிநேர லெக்சர்முடிவில் சில புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார். ‘இதுமாதிரி எழுதுவது சிரமம். இருந்தாலும் படித்துப்பார்’ என்றார். ‘நானே முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்’ என்றும் தெரிவித்தார். எனக்கு அவருடைய நேர்மை ரொம்பவும் பிடித்திருந்தது.

‘தன்னால் முடியாதது யாராலும் முடியாதென்று சொல்லாமல், பாவம் தம்பி பிழைத்துக்கொள்ளட்டும்’ என நினைத்தாரே அது, பிரமாதம். அந்த உள்ளூர் இலக்கிய தாதா கொடுத்த நூல்களில் ஒன்று, ‘தன்மை முன்னிலை படர்க்கை’ என்னும் தலைப்புகொண்ட நீலமணியின் கவிதைநூல். அன்னம் வெளியீடு. இலக்கிய தாதா அளித்த மூன்றுமணிநேர லெக்சரைவிட, அந்த ஒரு கவிதை நூல், சட்டென்று என்னுடைய நானை உருவியெடுத்து வெளியே போட்டது. நூலிலுள்ள கவிதைகள் தாதாவைப்போல் மிரட்டவில்லை. அலுப்புடனும் அதிருப்தியுடனும் என்னை அணுகவில்லை. விஷயங்களைப் புரியும்படி சொல்லிற்று.

அறுபதுகளில் எழுதத்தொடங்கிய நீலமணி, மரபுக்கவிதையிலும் புதுக்கவிதையிலும் தனித்திறமுடைய படைப்பாளி. தமிழக அரசு கே.பி. நீலமணி என்பவருடைய நூல்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது. அவரும் இவரும் ஒருவரல்லர். ‘புல்லின் இதழ்கள்’ என்னும் நாவலை எழுதியுள்ள கே.பி. நீலமணி, மயிலாப்பூர்க்காரர். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலைப்போல இசையைக் கதைக் களமாகக்கொண்டே ‘புல்லின் இதழ்கள்’ நூலும் வெளிவந்திருக்கிறது. யாருடைய வம்புக்கும் தும்புக்கும் போகாத கே.பி. நீலமணி, முப்பத்தி ஆறு ஆண்டுகள் தினமணி பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியாற்றியவர். குழந்தைப்பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வமுடைய அவர், ஏராளமான சங்கீதக் கட்டுரைகளைச் சுருதி சுத்தமாக எழுதியிருக்கிறார்.

இன்னொரு நீலமணியும் உண்டு. அவர் கோவில்பட்டி நீலமணி. அவரைப் பற்றி அதிக செய்தியில்லை. பாரதிதாசனின் குயில் பத்திரிகையில் கவிதை எழுதியவர் என்றும், கிருபானந்தவாரியார், கி.வா.ஜகந்நாதன், காஞ்சிப் பெரியவர் ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவரென்றும் தெரிகிறது. தற்போது நான் சொல்ல நினைப்பது, மூன்றாவது நீலமணியைப் பற்றி. நான் அறிந்த நீலமணி கும்பகோணத்தை அடுத்த ஆவூரில் பிறந்தவர். தமிழறிஞரும் முன்னாள் துணைவேந்தருமான ஔவை நடராசனின் வகுப்புத் தோழர். உருவகக்கடல், கவியரசு ஆகிய அடைமொழிகள் அவருக்குண்டு.

உவமைக் கவிஞர் சுரதாவின் வாரிசாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டவர். பிறகு, அவரையும் தாண்டிய பெருமைக்குரியவர். சுரதாவையே தாண்டியவரா எனும் ஆச்சர்யக்குறிக்குப் பின்னால் பதிலிருக்கிறது. நவீன இலக்கியத்தை முன்னெடுத்த கசடதபற, கணையாழி, முன்றில் போன்ற இதழ்களில் தொடர்ந்து நீலமணியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. நாற்பது ஐம்பது ஆண்டுகளாகக் கவிதைகளின் உருவத்திலும் உள்ளடகத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகளை அவர் செய்துபார்த்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ‘செகண்ட் தாட்ஸ்’ என்னும் தலைப்பில் அவருடைய ஆங்கிலக் கவிதைகளும் நூலாக வந்துள்ளன. இருந்தும்கூட, இன்றைக்கு நாம் வியந்துபேசும் கவிஞர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறுவதில்லை. என்னசெய்தால் ஒரு கவிஞரை இந்த இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டாடுமோ தெரியவில்லை. குறிப்பிட்ட குழுவில் இடம்பெறவில்லை எனில், அவரை முற்றாக மறந்துவிடுவதும் அல்லது மறந்ததுபோல் நடித்துப் புறக்கணிப்பதுமே தொடர்கதை. நானோ நீங்களோ இந்தக் கதைக்கு முடிவுகட்டிவிடமுடியாது. ஏனெனில், கதையை உருவாக்குபவர்களும், அக்கதையையே உண்மையைப் போல உலகிற்குத் தெரிவிப்பவர்களும் வெவ்வேறு நோக்கங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த விளையாட்டில் நமக்குத் தெரிந்த கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ சேர்த்துக்கொள்ளும்படி கோரிக்கைவைத்து, அதனால் நம்முடைய விருப்பத்துக்குரிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் கட்டம் கட்டப்படுவார்களோ என்னும் கவலை எனக்குண்டு. போதாதகுறைக்கு சினிமா பாட்டெழுதும் உனக்கெல்லாம் கவிதையைப் பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் என்ன தெரியும் எனவும் அவர்கள் கேட்கக்கூடும். அதுபற்றி எனக்கு ஒன்றுமில்லை. அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் தெரிந்த இலக்கிய விஷயங்களை எழுதவே செய்வேன்.

என் தயக்கம் என்னைத் தவிர்ப்பதாகவோ காலிசெய்வதாகவோ நினைத்து, நான் போற்றும் இலக்கிய ஆளுமைகளை மேலும் இருட்டடிப்பு செய்ய எண்ணுவார்களே என்பதுதான். ஆனாலும், அவர்கள் ஆடும் அந்த விபரீத விளையாட்டைக் காலம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ‘ஆடு ராஜா ஆடு’ எவ்வளவு காலத்திற்கு உன்னுடைய ஆட்டமும் ஓட்டமும் என்று சொல்லவில்லையே தவிர, நடக்கக்கூடிய நலிசெயல் அதற்குத் தெரியாமல் இல்லை. ஒருவேளை மேற்படி ஆசாமிகளின் பட்டியலில் நீலமணி போன்றோர் இடம்பெறவில்லை என்பதால்தான் எனக்குப் பிடிக்கிறாரோ என்னவோ?

‘எதிர்காலத் தமிழ்க் கவிதை’ நூலில், கவிஞர் மீரா நீலமணியின் ஒருகவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். ‘காளியம்மா காளியம்மா / ஏன் நாக்கை நீட்டுகிறாய் / நான் என்ன டாக்டரா’ என்னும் கவிதையைக் குறிப்பிட்டு, ‘குறட்பாக்களைப் போல குறுகிய வரிகளில் அமைந்த புதுக்கவிதைகளை சிறு சிறு இலக்கியப் பத்திரிகைகளிலே காணமுடிகிறது. அவற்றில் பெரும்பாலானவை வணிக நோக்கில் வெளிவரும் பெரிய பத்திரிகைகளில் வரும் பெட்டிச் செய்திகளைப் போலவும் துணுக்குகளைப் போலவும் உருவ அமைப்பைக் கொண்டுள்ளன. பொதுவாக அவை விகடமும் குத்தலும் வக்கிரமும் கொண்டவையாகக் காணப்படுகின்றன’ என்றிருக்கிறார். இதே கருத்தை ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’ நூலில் பாலா, வேறு வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார். நீலமணியின் கவிதைகள் எனக்கு நெருக்கமாகத் தோன்றிய காரணமும் அதுதான். என் கவிதைகளில் விகடமும் குத்தலும் சமூகப் பார்வைகளாக வெளிப்பட்டுள்ளன. மீரா குறிப்பிட்டுள்ள வக்கிரம், என் கவிதைகளில் இருக்கின்றனவாயென்று வேறு யாராவது சொல்லலாம். நானே சொல்வது நாகரிகமல்ல.

நீலமணியின் கவிதைகள் பெரும்பாலும் மீரா சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு உட்பட்டவை. சந்தேகமில்லை. ஆனால், அதுமட்டுமே நீலமணி என்று நினைத்தால் பிழையாகிவிடும். எம்.ஜி.ஆர் காலத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாடு குறித்து ‘இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டுக்கு / சென்னையில் திறக்கப்பட்டன / இருபத்தியொரு புதிய லெட்ரீன்கள்’ என்னும் கவிதை பலருக்குத் தெரியாது. அதேபோல, ‘பாதச் சிலம்பால்  / பதியை இழந்தவள் / பருவச் சிலம்பைத் திருகி எறிந்தனள்’ என்றொரு கவிதை. இரண்டுமே ‘கசடதபற’ இதழில் வெளிவந்தவை. 1971இல் என்று நினைவு.

அப்போது நான் பிறக்கவே இல்லை. நண்பரும் பத்திரிகையாளருமான துளசி என்கிற வெங்கடேஷ்மூலம் கசடதபற இதழ் பிரதிகள் கைக்குக் கிடைத்தன. அதிலிருந்துதான் ‘வண்டோடு சம்போகம் / செய்துவிட்டுக் / குளிக்காமல் / கடவுள் தோளேறும் / மாலைப்பூ’ என்னும் கவிதையையும் ‘நிரோத் உபயோகியுங்கள் / நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன / வாயேன்’ என்னும் கவிதையையும் வாசித்தேன். வாசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. குத்தலும் வக்கிரமும் என்று மீரா வாசித்த குற்றப்பத்திரிகையின் விபரங்களும் புரிந்தன.

‘இருட்டில் என்னுடன் / ஒதுங்கிய புதுவிபச்சாரி /இடுப்பில் / தன் பிள்ளையை வைத்திருந்தாள்’ என்ற கலாப்ரியாவின் கவிதையும் கசடபதறவில் வந்திருக்கலாம். பெண்ணியவாதிகளின் பெரும்கோபத்திற்கு ஆளான பல கவிதைகளை கசடதபற வெளியிட்டிருக்கிறது. அதுவரை கவிதைகளில் வெளிவராத பாடுபொருள்களை முன்வைத்து, கவிதைகளின் செல்நெறியைத் தீர்மானிக்க கசடதபற எடுத்த முயற்சிகளாக அவற்றைக் கொள்ளலாம். பெண்களைக் கொச்சைப்படுத்துவதில் அப்படியொரு முயற்சியா என்றெல்லாம் கேட்டால் என்னிடம் பதிலில்லை. தவிர, நான் பிறப்பதற்கு முன்பே நடந்த அவ்வட்டூழியங்களையும் அழிச்சாட்டியங்களையும் சரியென வாதிடுவது என் வேலையில்லை.

இன்னொன்று, அவ்விதம் வாதிடுவதால் என்ன புரிதல் ஏற்படுமென்றால், பிறந்ததிலிருந்தே ஏதோ நான் அந்த மாதிரிக் கவிதைகளைத் தேடித்தேடி வாசித்து வந்திருக்கிறேன் என்றாகிவிடும். அது என்னுடைய இமேஜூக்கு நல்லதில்லை. உனக்குக்கூட ஒரு இமேஜ் இருக்கிறதா என்பவர்கள், தனியே போய் பலம்கொண்டமட்டும் சிரித்துக்கொள்ளலாம். இந்த இடத்தில் அழகிய சிங்கர் கசடதபற இதழ் குறித்தும், நீலமணி குறித்தும் எழுதிய ஒரு சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது.

நீலமணியின் இரண்டு கவிதைகளை மேற்கோள் காட்டிவிட்டு, ‘பாலுணர்வுக் கவிதைகளைக் கசடதபற கொண்டுவர இவர் ஒரு காரணம்’ என்பதுடன், ‘கசடதபறவில் பெண் கவிஞர்கள் யாருமில்லை. ஆனால் இதுபோல பெண்பற்றி கவிதைகள் நிறைய உண்டு’ என்றிருக்கிறார். அழகிய சிங்கர் எழுதியிருப்பதைப் பார்த்தால் கசடதபற பத்திரிகை ஏதோ ஆண்கள் மட்டுமே தங்கியிருந்த பேச்சிலர் மேன்ஷன்போலவும், சிற்றின்பக்காரர்கள் தங்கள் ஆசைக்கு நடத்திய மடம்போலவும் தோன்றுகிறது. உண்மையில், அழகியசிங்கர் சொல்ல நினைத்ததுவேறு. சொல்லியிருப்பது வேறு.

நீலமணி தம்முடைய கவிதைகளில் பாலுணர்வை வெளிப்படையாக எழுத முனைந்தது நவீன கவிதைகளில் சோதனைகளை செய்துபார்க்கும் ஆவல் மட்டுமல்ல, மரபுக் கவிதைகளின் தொடர்ச்சியைப் புதுக்கவிதையிலும் எழுதமுடியும் என்னும் நம்பிக்கை. ‘பூக்கள்மீது போர், தீக்கடை கோல்கள், ஆதிபருவம், அம்பறாத்துணி, ஒருகொத்து அகம், காபூல் திராட்சைகள், குயில் தோப்பு, எழுத்தின் நிறம் கருப்பு, தூந்திர இரவுகள்’ போன்ற அவருடைய கவிதைத் தொகுப்புகளை முழுவதுமாக வாசித்ததால் எனக்குத் தோன்றும் எண்ணம் இது. அழகியசிங்கரும் அவற்றை வாசித்திருக்கலாம். ஆனால், அவருடைய எண்ணம் வேறுமாதிரி.

நீலமணியின் கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் எனக்கென்னவோ அவர் தொடக்கத்திலிருந்தே ஒரேவிதத்தில்தான் கவிதைகளை அணுகி வந்திருக்கிறார் எனப்படுகிறது. வித்யாசம் என்னவெனில், மரபுக்கவிதைகளில் தென்படும் கவித்துவத் தெறிப்புகளைப் புதுக்கவிதை வடிவத்திற்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். அம்மாற்றத்தை புதுக்கவிதையின் வரையறைக்குள் அவரால் செய்யமுடிந்திருப்பது விசேஷம். ‘காபரேக்காரியைக் / கட்டிக்கொண்டேன் / மியூசிக் இன்றி / அவிழ்க்க மறுக்கிறாள்’ என்னும் கவிதையோ ‘ஒண்டுக்குடித்தனக் கூட்டுக்குடும்பிக் / கண்டுபிடித்தது ரப்பர் வளையல்’ என்னும் கவிதையோ மரபை முற்றாக விலக்கியுள்ளதை அறியலாம்.

மியூசிக், ரப்பர் போன்ற ஆங்கில சொற்கள் கலந்துள்ளதால் மரபை விலக்கியதாகச் சொல்லவில்லை. கவிதையின் சொல்முறையையும், சுருங்கச் சொல்லி விளக்கும் முறையையும் கணக்கிலெடுத்தே அம்முடிவுக்கு வந்திருக்கிறேன். குறிப்பாக, ராமன் தடவி / அணில் கோடு பெற்றதேல் / சீதையைத் தொட்டதே இல்லையோ என்ற கவிதையையும் சேர்த்துப் பார்க்கலாம். அக்கவிதை விகடமா, குதர்க்கமா, வக்கிரமா என்பதைப் பொதுவில் வைத்துவிடலாம்.

எனக்கு அக்கவிதை விகடமாகத் தெரிகிறது. உங்களில் சிலருக்கு குதர்க்கமாகப்படலாம். ராமநாமத்தை ஜெயிப்பவர்களுக்குச் சந்தேகமேயில்லாமல் அது, வக்கிரம்தான். மேற்கொண்டு இக்கவிதையை விவரித்து எழுத மனமில்லை. ராமநாமத் தோழர்களின் இதயம் புண்படும் என்பதனால் அல்ல. அவர்களைத் தாக்கி அதில்வரும் சோகம் நம்மையும் தாக்க அழும்நிலைக்கு போகவேண்டாமே என விட்டுவிடுகிறேன். அத்துடன், இப்படியெல்லாம் சிந்திப்பதும், அதற்கு ஆதரவாகக் கட்டுரைகளை எழுதுவதும் அரசுக்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படலாம். எல்லாவற்றையும் தாண்டி, மீண்டுமொருமுறை தேசதுரோகியாகவோ ஆண்டி இண்டியனாகவோ ஆக விரும்பவில்லை. எண்பதுகளில் வெளிவந்த புதுக்கவிதைகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளில் மிகுதியும் நீலமணியைக் குறைத்தே சொல்லியிருக்கின்றனர். அவருடைய கவிதைகள் கவிதைகளே அல்ல, துணுக்குகள் என்றுதான் பலரும் வாதிட்டிருக்கின்றனர்.

ஆறுதலுக்கு எழுத்தாளர் சுஜாதா மட்டும் நீலமணியின் ‘வள்ளல் பாரி’ கவிதையைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். ‘நடந்தான் பாரி / நடந்தான் பாரி / நடந்த மக்களின் / தோள் மீதேறிய  / சிவிகைச் செல்வர் / செலுத்திய வரியால் / உருவான தேரைக் / கொடிக்கு நிறுத்தி / முதல் தடவையாக / நடந்தான் பாரி’ என்பதே அக்கவிதை. தமிழரின் பெருமிதங்களில் எப்பவும் இடம்பெறும் கடையேழு வள்ளல்களில் ஒருவனே பாரி. அவன் முல்லைக்கு தேரைக் கொடுத்தான் என்று சங்க இலக்கியக் குறிப்பு இருக்கிறது. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்கிற ஒற்றைக் குறிப்பை முன்வைத்து எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’யைப் பலர் வாசித்திருக்கலாம். நடையிலும் கற்பனையிலும் அபாரமான உழைப்பைக் கோரியுள்ள நூல் அது.

பெருமித உணர்வில் எழுதப்பட்ட ஆயிரம் பக்கங்களைவிட, சுளீரென்று நெஞ்சில் தைக்கும் இரண்டு வரிகளில் ஒரு கேள்வியை நீலமணி கேட்டிருக்கிறார். பறம்புமலைத் தலைவனான பாரி, அந்தக் காலத்தில் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கும் அவனுக்குரிய வள்ளல் தன்மைக்கும் நம்மிடம் ஆதாரமில்லை. மன்னன் எனில், வரி வசூலிப்பவன் என்கிற புரிதல். அவன் வாங்கக்கூடிய வரியினால் செய்யப்பட்டதே அத்தேர். எனவே, அதை அதே மண்ணுக்குச் சொந்தமான முல்லைக் கொடிக்கு கொடுப்பதில் என்ன பெருமை என்னும் கேள்வியை அக்கவிதை கேட்கிறது.

ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கும் மண்ணுக்கும் உட்பட்டதென அக்கவிதை சொல்லாமல் சொல்கிறது. ‘பொதுவுடைமைக் கருத்தைச் சொல்லியதால் அக்கவிதையை சுஜாதா பாராட்டவில்லை. தமிழர்கள் தங்கள் பெருமைகளாக எதையெதை ஓவராக பீற்றுகிறார்களோ அவற்றை கிண்டலடிப்பது அவர் பாணி. அந்தவிதத்தில் பாராட்டியிருக்கலாம்’ என்று சொல்பவர்கள், ‘தாம் செய்யும் அதே காரியத்தை நீலமணியும் செய்திருப்பதால் பாராட்டியிருக்கிறார் என்கிறார்கள். பாராட்டுக்கெல்லாம் அர்த்தம் கற்பிப்பது நோய்மையுடைய மனத்தின் வெளிப்பாடா எனும் அசரீரி கேட்காமலில்லை.

வேறு யாரையாவது பாராட்டினால் அர்த்தம் கற்பிக்கலாம். நம்மையோ நமக்குப் பிடித்தவரையோ பாராட்டினால் அது நிச்சயம் தவறில்லை. தொடர்ந்து கவிதைகள் குறித்து சுஜாதா தமக்குத் தோன்றிய அபிப்ராயங்களை தெரிவித்து வந்திருக்கிறார். புதுக்கவிதையின் இன்றைய வளர்ச்சியில் அவருடைய பங்கு கணிசமானது. கணையாழி கடைசிப் பக்கத்தில் அவர் பார்வைக்கு வந்த கவிதைகளையும் கவிஞர்களையும் பற்றி ஓரிருவரியாவது எழுதியிருக்கிறார். மனுஷ்யபுத்திரன், மகுடேஸ்வரன், சே.பிருந்தா, உமாமகேஸ்வரி, நா.முத்துக்குமார் வரிசையில் என்னையும் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

விகடம், குத்தல், வக்கிரம் என்று ஆரம்பத்தில் விமர்சித்த மீரா, பிற்காலங்களில் நீலமணியைத் தவிர்க்கமுடியாத புதுக்கவிஞராகப் பார்த்திருக்கிறார். அத்துடன், புதுக்கவிதைப் பட்டியலுக்கு நீலமணியின் பெயரைக் கொண்டுவந்ததும் அவர்தான். ‘தீர்க்கரேகை, ஒருபிடி சூரியன், பாற்கடல் தீவுகள், பௌர்ணமிப் பொழுதுகள், உதிர் இலைகள், உப்பு’ ஆகிய நூல்களை அவரே வெளியிட்டிருக்கிறார். அன்னம் வெளியிட்ட நீலமணியின் சில நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன.

‘மூன்றாம்பால்’ என்னும் தலைப்பில் நீலமணி, காமத்துப்பாலுக்கு புதுக்கவிதையில் உரையெழுதியிருக்கிறார். தனித்து வாசித்தால் அது உரையில்லை. எளிய மொழியில் எழுதப்பட்ட நீலமணியின் தனிக் கவிதைகள். எதையும் சரியானவிதத்தில் கவிதைப்படுத்தும் அவரது ஆற்றலை அறிந்துகொள்ள அந்த ஒரு சிறுநூலே போதுமானது. தொண்ணூறுகளில் வெளிவந்த நீலமணியின் நூல்கள் குறித்து “இன்னொரு சுரதாவோ என ஆரம்பத்தில் கவனிக்கவைத்த நீலமணி, பாற்கடல் தீவுகளுக்குப் பிறகு பல படிகளைக் கடந்து தமிழ்க் கவிதையில் பல புதிய பரிமாணங்களைக் காணச் செய்துள்ளார். செட்டான வார்த்தை, தொய்வில்லாத நடை, நூதன உவமை, ஆழமான எள்ளல், எல்லாவற்றுக்கும் மேலாக நிகழ்காலப் பிரக்ஞையுடன்கூடிய சமூகப் பார்வை நிறைந்திருப்பதால் நெஞ்சில் நிறுத்தும் கவிஞராகத் தெரிகிறார்” என எழுதிய மீரா, முன்பு தமக்கிருந்த விமர்சனத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

இலக்கியத் துலாபாரத்தைத் தாங்கிப்பிடித்து கவிஞர்களை நிறுப்பதில் மீரா சமரசம் இல்லாதவர் என்கின்றனர். அத்துடன், இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பல மூத்த புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருடையது. விக்ரமாதித்யனின் ‘ஆகாசம் நீலநிறம்’ காசியபனின் ‘பேசாத மரங்கள்’ போன்ற முக்கியமான கவிதைநூல்கள் மீரா வெளியிட்டவை. அவர் வெளியிட்ட நூல்களில் நிறைய குறிப்பிடத்தக்கவை. கல்யாண்ஜி, ராஜசுந்தரராஜன், கலாப்ரியா, ராஜாராம் என அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய கவிஞர்கள் பட்டியல் மிகப்பெரிது.

தற்போது அத்தனை முகாமைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைங்க அவர்போல ஒருவர் இல்லையென்பதும், அவருடைய மனம்போல வாய்க்கப்பட்டவர்கள் தேடினாலும் தென்படவில்லையென்பதும் உண்மை. நீலமணியின் ‘தட்டினால் திறப்பாராம் / தாராளக் கடவுள் / சாத்தி வைப்பானேன்’ என்ற கவிதை, கோயில் வீதிகளைக் கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வருவது. இரண்டுமூன்று வார்த்தைகளில் அவர் தமக்குத் தோன்றுவதை கவிதையாக்கிவிடுகிறார்.

சிந்தனையின் நெருப்புக்கங்கை எதிர்பாராத திசையிலிருந்து வீசிவிட்டு, அது பற்றியெறியத் தொடங்கும் நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்குப் போவதுபோல அவர் கவிதைகள் நம்மைக் கவனமாகக் கனிய வைக்கின்றன. கடவுளைப் பற்றிய நீலமணியின் மற்றொரு கவிதை, ‘என்னவரம் வேண்டும் என்றார் கடவுள் / அதுதெரியாத நீர் என்ன கடவுள்’ என்பது. அக்கவிதை, பல திரைப்படங்களில் அவர் பெயரை சொல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புராண இதிகாசக் கதைகளையும் கதைமாந்தர்களையும் கேள்விக்கு உட்படுத்தி அவர் எழுதியுள்ள நெடுங்கவிதைகள், பத்துத் தொகுதிகளுக்கும் மேலிருக்கும். ஒவ்வொரு தொகுப்பிலும் மின்னல்போல் தெறித்துவிழும் சொற்செட்டுகளை வியக்கச்சொன்னால் வியந்துகொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு அவர் என்னை ஈர்த்திருக்கிறார்.

எதைச் சொல்கிறோம் என்பதைவிட, எப்படிச்சொல்கிறோம் என்பதில்தான் அவர் அதிகமும் கவனம் செலுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு. ‘நங்கையும் நாவுக்கரசும்’ என்றொரு கவிதை. ‘பாற்கடல் தீவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அதேகவிதை பாற்கடல் தீவுகளுக்கு முன்பே வெளிவந்த ‘குயில்தோப்பு’ நூலிலும் இடம்பெற்றிருக்கிறது. அக்கவிதையில், விண்மீன்களைக் ‘காக்கை நிறச்சட்டியில் பொறியும் பொறிகள்’ என்றிருக்கிறார். அதைவிட, ‘வான இருட்பரப்பில் விண்மீன்கள் நெருப்பு மலர்களைப் போல் மலர்ந்தன’ என்றிருக்கிறார்.

நாவுக்கரசர் இகவாழ்வைத் துறந்து, அகவாழ்வுக்கு ஆட்படும் சம்பவத்தை விவரிக்க அடுக்கடுக்கான உவமைகளை அக்கவிதையில் அள்ளித் தெளித்திருக்கிறார். இன்னொரு கவிதை, ‘இரவில் இராமலிங்கம்’ என்னும் தலைப்புடையது. வள்ளலாரைப் பற்றியும் அவர் உருவாக்கிய சன்மார்க்க சபை குறித்தும் ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறோம். திருமணம்முடித்த அவர், முதலிரவு நேரத்தில் மனைவியை நெருங்காமல் திருவாசகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்பதையும் வாசித்திருக்கிறோம்.

அந்த ஒரு செய்தியைக் கருவாக வைத்துக்கொண்டு, ‘வாடியுள்ள பயிர்கண்ட போது எல்லாம் / வாடிவந்தேன் என்றுருகும் இந்த அன்பர் / வாடவிடலாமா தன் மனைவியாரை’ என்று கவிதையின் வழியே தூவியுள்ள பொடி, நெடியேறக்கூடியது. அக்கேள்வி நியாயமானதே எனினும், வள்ளலாரை அவ்விதம் பார்க்கலாமா என்பதில் சிக்கலுண்டு. நம்முடைய புரிதலில் இருந்து இறைநேசர்களையும் இறை ஞானிகளையும் தெருவுக்கு இழுப்பது சரியல்ல. திருவருட்பாவை தமக்குள் இறக்கிக்கொண்டு நீலமணி, அதே சிந்தனையை ‘தன்மை முன்னிலை படர்க்கை’ நூலில் வேறு மாதிரி தந்திருக்கிறார். ‘திருவாசகத்து இனிப்பில் திளைத்ததால் / தேனிலா இரவையே மறந்துபோனார் / வடலூர் இராமலிங்கம்’ என்பதே அது. ‘புதையலோ புத்தகமோ’ எனும் தலைப்பில் வரக்கூடிய இந்தச் சிந்தனைக்கும் முந்தைய சிந்தனைக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒன்றில் கேள்வி, மற்றொன்றில் பதில். வள்ளலாரின் ஏனைய சிறப்புகளை முந்தைய கவிதையிலும் சொல்லியிருக்கிறார். எனினும், அது விமர்சனத்துடன் வெளிப்பட்டிருக்கிறது.

அருட்பெருஞ்சோதியைப் பார்த்தபடியே வள்ளலார் தவறவிட்ட இரவை அவர் மனைவியின் பார்வையில் பார்த்திருக்கிறார். இரவுகள் அத்தனையிலும் இருந்து விடுபட விரும்பிய வள்ளலார், அதைத் தம்முடைய முதல் இரவிலிருந்தே ஆரம்பித்தார் என்பது நீலமணிக்குத் தெரியாததில்லை. கதைகளைக் கவிதையாக்குவதில் நீலமணிக்கு இருந்துள்ள ஆர்வம் அலாதியானது. ஒருவிதத்தில் காப்பிய ஈடுபாடுகள் அவரிடம் அதிகம் காணக் கிடைக்கின்றன. ‘பௌர்ணமி பொழுதுகள்’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு கதையைச் சொல்கின்றன.

தமிழில் அம்முயற்சியை வேறு எவரும் அவர் அளவுக்கு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மக்களுக்குத் தெரிந்த கதைகளைப் புதுமுறையில் சொல்லிப்பார்க்கும் சுவையில் தன்நிலை மறந்து திளைத்திருக்கிறார். அவரே ஒருமுறை கதைகளைக் கவிதையாக்கும் உத்திமுறையைச் சுரதாவிடமிருந்து கற்றதாகச் சொல்லியிருக்கிறார். தெரிந்த கதை என்பதால் கதையை விவரிப்பதில் சுவாரஸ்யமில்லை. எனவே, கதையை விவரிக்கும் முறையில் உவமைகளை அடுக்கி அவற்றின்மூலம் புது ஒளியை ஏற்படுத்தியிருக்கிறார். அவ்வழகையும் ஒளியையும் மேம்படுத்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த கதையை எழுதும்போது, ‘அனிச்சப்பெண் எச்சில்மொழி கேட்டதாலே / அதிகமான் நிலைத்தபுகழ் அதிகமானான்’ என்றிருக்கிறார். அதியமான், அதிகமானான் என்ற பிரயோகத்தை ரசிக்கலாம். கவிதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார் என்பதைக் காட்டிலும், கவிதைகள் தங்களை அவர்மூலம் எழுதிக்கொள்கின்றனவோ எனத் தோன்றுகிறது. ஆற்றோட்டமான நடையழகும் கற்பனைவளமும் ஒன்றையொன்று விஞ்சுவன. ‘நிலவுக்கொப்பளம்’ என்றொரு கவிதை. தாஜ்மகாலைப் பற்றியது. மும்தாஜூக்கும் ஷாஜகானுக்கும் இடையே நிகழ்ந்த காதலையும் காமத்தையும் எழுதிவிட்டு இறுதியாக, ‘தோலுரித்த நுங்கைப்போல் மண்மேல்வந்த / சுடர்நிலவின் கொப்பளம்போல் பூமிப்பெண்ணின் / மேலெழுந்த தனிமார்பைப் போலே இந்த / மின்னல் வீடென்றைக்கும் இருக்கும்; ஆனால் / நீலவிழிப் பெண்நீயும் நானும், சாவு / நித்திரையிலே இருப்போம், பளிங்குப்பெண்ணின் / சேலையற்ற நிலையாம் இத் தாஜூள் வந்து / சேர்ந்திடுவேன் உன்பக்கம் படுப்பதற்கு’ என்று முடித்திருக்கிறார்.

தாஜ்மகாலுக்கு எத்தனை உவமை? தோலுரித்த நுங்கு, சுடர்நிலவின் கொப்பளம், பூமிப்பெண்ணின் மேலெழுந்த மார்பு, மின்னல்வீடு என ஒரே கவிதையில் தாஜுமகாலுக்கு எத்தனையோ உவமைகளைச் சொல்லியிருக்கிறார். இந்தக் கவிதை என்றில்லை. எல்லாக்கவிதையிலுமே இம்மாதிரியான உவமைகளில் நம்மைத் திக்குமுக்காட வைத்துவிடுகிறார். இந்தத் திக்குமுக்காடலை அவர் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்தளிக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் உவமைகளின் தோரணம்போல் தோன்றும். உற்றுக்கவனித்தால், அந்த உவமைகளுக்குள்ளே அவர் சொல்ல நினைத்த கருத்துகளையும் வைத்திருப்பார்.

‘கங்கா, உனது நீர் அமிழ்தென்றால் / உன் முதுகின்மேல் பிணங்கள் மிதப்பதேன்’ என்றும் ‘பொய்களை எழுத நாங்கள்போடும் பிள்ளையார்ச்சுழி / சத்யமேவ ஜெயதே’ என்றும் அவரால் எழுதமுடியும். தாஜ்மகால் பற்றி பிற்காலத்தில் எழுதிய ‘பளிங்குத் திவலை’ கவிதையில், ‘இந்த வெள்ளை ரோஜா மொக்கு / நிலவில் சிவக்குமா? / யமுனை ஒதுக்கிய பளிங்கு தெப்பமோ / இறக்கி வைக்கப்பட்ட பல்லக்கு இங்கே / வந்த பயணங்கள் எங்கே’ என்றும் எழுதியிருக்கிறார். 1984இல் தாஜ்மகாலை பார்த்து அங்கேயே அமர்ந்து எழுதிய கவிதையாகத் தெரிகிறது. முன்பே சிந்தித்த ஓர் உவமையை மறுபடி மாற்றிச் சிந்திப்பதில் அவருக்குத் தடையோ தயக்கமோ இருக்கவில்லை. கடவுளையும் கடவுள் நம்பிக்கைகளையும் இந்தக் காட்டுக் காட்டுகிறாரே ஒருவேளை அவர் திராவிடக் கழகத்துக்காரரோ என நினைக்கலாம். நானறிய அவர் எந்தக் கட்சியிலும் தம்மை இணைத்துக்கொள்ளவில்லை. பொதுவான தளத்தில் பயணித்திருக்கிறார். ஆனால், அவருடைய ஒரு கவிதை பெரியாரை அதிகமும் பாராட்டியிருக்கிறது. ‘எழுத்தின் நிறம் கறுப்பு’ என்று நினைக்கிறேன்.

அதில், ‘பொத்தல் குடிசையில் மக்கள் தவிக்கையில் / பொற்கூரை எதற்கு கற்பாறைக்கென்று யார் கேட்டார் / பெரியார் கேட்டார்’ என்றிருக்கிறார். அதே கவிதையில் ஒருவரி, ‘விபூதியால் ஒருவன் பாண்டியன் கூன் நிமிர்த்தினான் / விவேகத்தால் மக்களின் கூனை நீர் நிமிர்த்தினீர்’ என்றும் புகழ்ந்திருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், ‘நாடே வேண்டாமெனப் போனவன் நீ / உனக்கொரு வீடு கட்டுவதற்கென நாடே போகவேண்டுமா / உன் பேரைச் சொன்னால் உண்டியல் நிரம்பியது / இப்போது ஓட்டுப் பெட்டிகளும் நிரம்புகின்றன’ என எழுதியிருக்கிறார். சமூக அக்கறையும் சமூகச் சிந்தனையும் அவருடைய கவிதைகளில் அதிகமுண்டு. பெரியாரியச் சிந்தனைகளை உள்வாங்கிய ஒருவர், பெண்களைப் பற்றி விபரீதமாக சிலசமயம் எழுதியிருக்கிறாரே எனக் கேட்கலாம். பாலுணர்வை அப்பட்டமாக எழுதுவதும் பெண்களைப் போகக்கருவிகளாக புரிந்துகொள்வதும் சரியா எனவும் கேட்கலாம்.

உண்மையான பெரியாரியம் எதையும் கேள்விகேட்பது. எதன்மீதும் கேள்வி எழுப்புவது என்னும் அடிப்படையில் புரிந்துகொண்டால் நீலமணியின் கவிதைகள் விகல்பமாகப் படாது. அப்படியில்லாமல், அக்கவிதைகளில் உள்ள குதர்க்கங்களையும் வக்கிரங்களையும் முன்வைத்து பேசிக்கொண்டிருந்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். நீலமணியின் குதர்க்கங்களும் வக்கிரங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று சொல்லவரவில்லை. கவிதைகளில் அப்படியும் அவர் எழுதிப் பார்த்திருக்கிறார் என்றே சொல்லவருகிறேன். தம்மை ஒளித்துவைக்கவோ மறைத்துவைக்கவோ எண்ணாமல், தாம் இதுதானென தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நீலமணியின் ஆங்கிலக் கவிதைநூலான செகண்ட் தாட்ஸ் வெளிவந்தபோது, அவரிடம் கவிஞர் லதா ராமகிருஷ்ணன் ஒரு சிறுபேட்டியை எடுத்திருக்கிறார். அதில், ‘அகவயமான கவிதைகளைத் தான் எழுதவேண்டும், புறவயமான சமூகம் சார்ந்த கவிதைகளைத்தான் எழுதவேண்டும் என்று ஏதேனும் கோட்பாடுகளை வைத்திருக்கிறீர்களா’ எனக்கேட்டிருக்கிறார். அக்கேள்விக்கு, ‘அப்படியெல்லாம் கிடையாது. மனித வாழ்க்கையைக் கொண்டாடுதல். துன்பங்களுக்கான காரணங்களை அறிதல், தமிழ் நயங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய மூன்று நோக்கங்களே நான் கவிதை எழுத முக்கியக் காரணங்களாக என் கவிதைகளின் கருப்பொருள்களாக அமைந்தன’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அப்பேட்டியை வாசித்ததும் அவர் குறித்த என் ஊகம் சரியாயிருந்ததில் ஒரு திருப்தி. நானாக அவரை என் விருப்பத்திற்கேற்பச் சொல்லிவிடக் கூடாதே என்று ஆரம்பத்தில் தோன்றியது. அப்பேட்டியை எடுத்த லதாராமகிருஷ்ணன் நீலமணியை மிகச்சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் பெயர்த்து வெளியிடும் அவர், ஆங்கிலத்தில் இருந்தும் சில நல்ல கவிதைகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அவருடைய ‘துயரின் இதழ்களில் விரியும் புன்னகை’ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.

மிர்ஸா காலிப்பின் கவிதைகளைத் தமிழுக்கு அவரும் கொண்டுவந்திருக்கிறார். பலபேர் மிர்ஸாகாலிப்பைத் தமிழுக்குத் தந்திருந்தாலும், லதாராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நெருக்கமாகத் தோன்றுகிறது. கவிதைகளை மொழிபெயர்க்கத் தேவையான கவித்துவப் புரிதல் அவருக்குண்டு. அனாமிகா என்னும் புனைப்பெயரில் அவர் எழுதி வெளியிட்டுள்ள கவிதைநூல்கள் குறிப்பிடத்தக்கவை. நீலமணியிடம் அவர் கேட்டுள்ள மற்றொரு கேள்வி, கவிதை எழுதுவதற்கான உந்துதல் அல்லது தாக்கம் பற்றியது.

அதற்கு நீலமணி, ‘பெரும்பாலும் செய்தித் தாளிலிருந்து அதில் வாசிக்கக் கிடைக்கும் செய்தி அல்லது செய்திகள் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்போது கவிதை எழுத வேண்டும் என்ற வேகம் ஏற்படுகிறது. ஒரு கவிதை குறுங்கவிதையாக இருக்கவேண்டுமா அல்லது நீள் கவிதையாக இருக்கவேண்டுமா என்பதும் கவிதையே தன்போக்கில் நிர்ணயித்துக்கொள்கிறது’ என்றிருக்கிறார். அவருடைய கவிதைகள் மட்டுமல்ல, அவருமே தம்மைத் தம்போக்கில் செல்லும்படி விட்டிருக்கிறார். பிரச்சார தொனிகள் சில கவிதைகளில் இருந்தாலும், அவற்றை அவர் உணர்ந்தே படைத்திருக்கிறார். ‘சுரதா ஓர் ஒப்பாய்வு’ என்னும் நூலில் கவிஞர் முருகுசுந்தரம், பிரஞ்சுக் கவிஞர் போதலேரை சுரதாவுடன் ஒப்பிட்டிருக்கிறார்.

சுரதாவோடு நிற்காமல் நீலமணியையும் அந்த ஒப்பாய்வில் இணைத்துக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கவிஞனுக்கென்று தனிப்பட்ட இலட்சியம் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது, ஒரு பித்தலாட்டம்’ என்று சுரதா தெரிவித்த அதிர்ச்சி வாசகம் அந்த நூலில்தான் இடம்பெற்றுள்ளது. ‘தனிப்பட்ட இலட்சியமோ கொள்கைகளோ இல்லையென்றால் சுரதா மாதிரி வெறும் உவமைகளை மட்டும் அடுக்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்’ என இடதுசாரிகள் எழுப்பிய கண்டனங்கள் இப்போது நினைவுகொள்ளத் தக்கதல்ல. சுரதாவை ஏனைய நாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டு எழுதிய முருகசுந்தரம், அதே நூலில் சுரதாவை நீலமணி விஞ்சிவிட்டார் என எழுதியிருக்கிறார்.

குருவையே விஞ்சிவிட்டீர்களே என்றதற்கு நீலமணி, ‘சுரதாவை சில இடங்களில் நான் விஞ்சிவிட்டதாக எழுதியுள்ளதை ஒப்பமுடியாது. இன்னமும் நான் தொட விரும்பும் இலக்காகவே சுரதாவைக் கருதுகிறேன். ஆழமும் அகலமும் அவரது அற்புதம். இளமையிலேயே சாதித்தவர். ஐந்து பத்திரிகைகளை வேறு யார் நடத்தியிருக்கிறார்கள்’ என்று பதிலளித்திருக்கிறார்.

சுரதாவை அவர் விஞ்சினாரா இல்லையா என்னும் பட்டிமன்றம் தேவையில்லாதது. சுரதா ஓர் ஒப்பாய்வு நூல் இணையத்தில் கிடைக்கிறது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்தவராக அறியப்படும் முருகுசுந்தரம், ஆரம்பத்தில் புதுக்கவிதைகளை ஏற்கவில்லை. பிற்காலத்தில் புதுக்கவிதைகளின் வீச்சைப் புரிந்துகொண்டு அவரும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். முருகுசுந்தரம் நீலமணியைப் பற்றிச் சொல்லியதைவிட, சுரதாவே ஒரிடத்தில் ‘நிலைக் கண்ணாடியில் என்னைப் பார்த்தால் / நீலமணி தெரிகிறாரே’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நீலமணியின் ஆரம்பக்கால கவிதைகள் மரபின் தாக்கத்தில் பிறந்திருந்தாலும் பிற்காலத்தைய கவிதைகளில் சூஃபித்துவம் வெளிப்படுகிறது. மிர்ஸா காலிப்பின் கஸல் தன்மைகளில் அவர் எழுதியுள்ள ‘மல்லிகைப் பந்தல்’ என்னும் கவிதை வசீகரம் நிரம்பியது.

வார்த்தைகளின் அடுக்கில் அவர் கிளர்த்தும் உணர்வோட்டம் காதலையும் கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைப்பது. ‘பாம்பு தந்த பழத்தை ஆதாம் ஏற்கவில்லை / நீ தந்தபோது ஏற்றான் / நீ தந்தால் பழத்தையென்ன / பாம்பையே தின்னலாமே’ என்பதுமாதிரி போகும் அக்கவிதையில், அவருடைய பயணத்தின் நீட்சியை உணர முடிகிறது. கட்டுப்பெட்டியான மரபில் எழுதத் தொடங்கிய ஒருவர், அதிலிருந்து புதுக்கவிதைக்கு வந்து, பிறகு வடிவமற்ற வேறொரு பிரதேசத்தில் பிரவேசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் நீலமணியின் ‘உப்புநதிகள்’ நூலுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரை என் எண்ணங்களுக்கு ஏற்றவிதத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘எழுத்தின் நிறம் கருப்பு’ நூலில் இடம்பெற்றுள்ள ‘உப்பு யாத்திரை’ கவிதையும் உப்பு நதிகள் நூலில் உள்ள கவிதைகளும் ஒன்றுபோல் தோன்றக்கூடியன. ஆனால், இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

‘முகத்தில் அறையும் சிலுவை / அழுகை’ என்னும் கவிதை உப்பு யாத்திரையில் வரக்கூடிய ஒரு கண்ணி. அதையே உப்புநதிகள் நூலில், ‘கண்ணீர் பொழியட்டும் / உட்கொண்ட உன் உருவத்தை / இப்படித் துப்புகிறது கண்’ என்றிருக்கிறார். ‘ஜாதகக் காடுகளில் / மூக்குக் கண்ணாடி தொலைத்தவர்களுக்கு / நம் முகமா தெரியப்போகிறது’ என்னும் கவிதையைவிட, ‘நீ கோலம் போடுகிறாய் / உன் விரல்களிலிருந்து உதிர்வது / என் உயிர்ப்பொடி’ என்னும் கவிதை என்னை ஈர்த்தது. ‘உயிர்ப்பொடி’ என்னும் வார்த்தை உள்ளார்ந்த எண்ணங்களைத் தூளாக்கிவிடுகிறது. மொழியின் சாத்தியங்களை எந்த அளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்தி, அதற்குமேலும் உணர்வுகளைக் கடத்தும் மாயங்களைக் கவிதைகள் செய்கின்றன. ஆனால், அந்நிலையை எட்டுவதற்கு ஒரு கவிஞனுக்கு ஐம்பது ஆண்டுகள் பிடிக்கின்றன.

கஜலைத் தமிழில் முதலில் எழுதியதுடன் மொழிபெயர்த்தவரும் நீலமணியே என்றாலும், அப்துல்ரகுமான் தம்மையே முதன்மையானவர் என நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. கஜலுக்குரிய தன்மைகளை தாமே முதலில் கண்டடைந்ததாகக் கூறியுள்ள அப்துல்ரகுமான், அவ்வடிவத்தை ஜனநாயகப்படுத்தும்விதமாகச் சில சுதந்திரங்களை மேற்கொண்டிருக்கிறார்.

ஈரோடு தமிழன்பன் அவ்வடிவை இசைப்பாடல்களாக ஆக்கியிருக்கிறார். எனக்கு நீலமணியின் கவிதைகளே கஜலுக்கு நெருக்கமானவைகளாகத் தோன்றுகின்றன. வார்த்தைகளைப் பிரயோகித்துள்ள அழகில் நீலமணியே தனித்துத் தெரிகிறார். வழக்கமான முரண்களின் விளையாட்டையே தமிழன்பனும் அப்துல்ரகுமானும் கஜல்களாக தந்திருப்பது கவனிக்கத்தக்கவை.

கேளிக்கைத் துணுக்குகள் போலவும், வார்த்தைகளின் ஏமாற்றுவேலை போலவும் தோன்றக்கூடிய கவிதைச் செயல்பாடு, உரிய வினையாற்ற காலக் கணக்குகளைப் பார்க்காமல் பொறுத்திருக்க வேண்டும் போல. தமிழில் இன்றைக்கு எழுதப்பட்டுவரும் கவிதைகளில் கவிஞனே எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடுகிறான். வாசிப்பவனின் உணர்வுக்கு பங்கோ தீனியோ இருப்பதில்லை. குறியீடுகளாலும் படிமங்களாலும் உணர்த்தப்படும் ஒரு காட்சியோ கருத்தோ நம்மைத் தைக்கவேண்டும். தைத்த முள்ளை நாமே எடுத்துக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கவேண்டும்.

தைத்தபோதும் அதை எடுக்கும்போதும் நிகழக்கூடிய வலியை, வாசகனுக்குத் தரத் தக்கதே நல்ல கவிதை என்கிறார்கள். சின்னத்தையும் அடையாளத்தையும் குறியீடாகக் கொள்ளலாம். எழுதுபவனின் உணர்வுத்திறன், மன ஆழம், அறிவுக்கூர்மை ஆகியன படிமத்தின் வரையறை. இந்த இரண்டையும் கவிதை எழுதும் ஒருவர், எந்த அளவில் புரிந்திருக்கிறாரோ அந்த அளவே அவருடைய கவிதைகள் வெளிப்படும். நீலமணியின் மரபுக்கவிதைகளை எடுத்துக்கொண்டாலும், புதுக்கவிதைகளைக் கவனித்தாலும் நம்மை ஈர்க்கும் படிமங்களையும் குறியீடுகளையும் அவர் உருவாக்கித் தந்திருக்கிறார். ‘தலைகீழ்த் தீ’ என்றொரு கவிதை. ‘எண்ணத்தில் இனிப்பவனின் தோளில் தூங்கும் / இன்பத்தைவிட சொர்க்கம் இனிதா என்ன? / அண்மையிலே குளிர்ச்சிதரும், இவளைவிட்டு / அகன்றாலே சுடும் இவள் ஓர் தலைகீழ்த் தீதான்’ என்று எழுதும் நீலமணி, அக்கவிதையை எண்சீர் விருத்தத்தில் எழுதியிருக்கிறார்.

அதையே வேறு வடிவத்தில் ‘நீ இரவிலும் குடைபிடிப்பது நியாயம் / நிலவிலும் உன்மேனி கொப்பளிக்கும்’ என்று சிந்திக்கிறார். உண்மையில், அறுசீர் விருத்தத்திலும் எண்சீர் விருத்தத்திலும் சொல்லமுடியாத ஒன்றை, புதுக்கவிதையில் சொல்லிவிடமுடியும் என்று அவர் ஊகிக்கவில்லை. மாறாக, இரண்டிற்கும் உள்ள ஒத்திசைவான தன்மைகளை ஒவ்வொரு கவிதையிலும் விரவிவிடுகிறார்.

நீர்விளாவுதல் என்று தமிழில் ஒரு சொல்லுண்டு. குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு அப்படி ஒரு சொல்லைத் தாய்மார்கள் பயன்படுத்துவர். நீலமணியின் கவிதைகள் பலவும் அப்படியான காரியத்தையே செய்கின்றன. உவமைகளைப் பொருத்தமான இடத்தில் விளாவுதலே அவர் செய்திருப்பவை. எங்கேயும் கூடவோ குறையோ இல்லாத பதத்தில் விளாவும் அவர் நுட்பத்தை வியக்கலாம். இரண்டு வரிகளில் ஒரு மின்னல் திரியைக் கொளுத்தும் சாதுர்யம் அவருடையது.

பொதுவாக, கட்டுரைகளில் மேற்கோள்கள் அதிகம் பயன்படுத்துவதை நான் விரும்புவதில்லை. ஆனால், மேற்கோளில்லாமல் நீலமணியை எழுதுவது சரியில்லை என்பதால் ஆங்காங்கே தந்திருக்கிறேன். கவிதைகளைச் சொல்லிப்பார்த்து சுவைப்பதில்தான் அழகிருக்கிறது. வெறும் வாக்கியங்களாக விவரித்து எழுதினால் பாராட்டுக்கடிதம் ஆகிவிடும். எனக்கு அவருடைய மரபுக் கவிதைகளில் தென்படும் புதுமையும், புதுக்கவிதைகளில் தென்படும் மரபான சொல்லாட்சிகளும் பிடித்தவை. பெரும் ஆர்வத்துடன் அவற்றைப் படிக்க எங்களூர் இலக்கிய தாதா எனக்கு உதவினார். இப்போது நானுமே என்னை இலக்கிய தாதாவாக எண்ணி, நீலமணியைப் பரிந்துரைக்கிறேன்.

எங்களூர் இலக்கிய தாதா இத்தனை ஆண்டுகளாக என்னைச் சந்தித்த அல்லது நான் சந்தித்த அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். இன்னமும்கூட அவர் தன்னுடைய நானை, உள்ளிருந்து வெளியே எடுத்ததாகத் தெரியவில்லை. எனினும், என்போல பலரையும் நானற்ற மனிதர்களாக ஆக்கி, பேரையும் புகழையும் வாங்க வைத்து மகிழ்ந்திருக்கிறார். ‘நான் எதையுமே தங்களுக்குச் செய்யவில்லை. உள்ளிருந்த தங்களுடைய நான் வெளியேறியதால் உயர்ந்திருக்கிறீர்கள். அதனால், தவறியும் என் பெயரை எங்கேயும் சொல்லிவிடாதீர்கள். ஒருவேளை நீங்கள், நானே தங்கள் உயர்வுக்குக் காரணமென்று சொல்லி, அதை உலகமும் நம்பத் தொடங்கினால் தற்போதுவரை வெளியாகாத என் நானை நான் வெளியேற்றும் முயற்சியில் தோற்றுவிடுவேன்’ என எங்களூர் இலக்கிய தாதா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எனவே, இப்போதும் அவர் பெயரைத் தவிர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீலமணிக்கு பிடித்த இசம், மாமிசம் என்று பார்த்தோமே அதேபோல, எங்களூர் இலக்கிய தாதாவிடம் எனக்குப் பிடித்த இசம், போங்கிசம். அதுகுறித்து வேறொரு கட்டுரையில் விபரமாக எழுதுகிறேன்.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s