மனத்தைத் துழாவிய கொலுசுகள்

கிணற்றில் விழுந்த பொருட்களைத் துழாவி எடுக்கும் கருவிக்குப் `பாதாளக்கொலுசு’ என்று பெயர். அதையே இந்நூலுக்குத் தலைப்பாக வைத்திருக்கிறேன். சில ஊர்களில் ‘பாதாளக் கரண்டி’ என்பர். இந்நூலிலுள்ள கவிதைகளை என் இதயத்தின் உள்ளிருந்த காதலைத் துழாவி எடுத்ததாக அர்த்தமில்லை.

சொல்லின் அழகை உத்தேசித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ எனத் தொல்காப்பியம் சொல்கிறது. ஆனாலும், அச்சொற்களுக்கு விசேஷப் பொருள்கள் தாமாக வந்துவிடுவதில்லை. எங்கு ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறதோ அல்லது ஒருசொல் யாரால் பயன்பாட்டுக்கு வருகிறதோ அவரே அச்சொல்லுக்கான முழு அர்த்தத்தையும் ஏற்படுத்துகிறார். சொல்லக்கூடிய இடத்தைப் பொறுத்தும், சொல்பவரின் மனநிலையைப் பொறுத்தும் ஒரு சொல், வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கிறது.

பாரதியின் கண்ணம்மா அத்தகையச் சொற்களில் ஒன்று. கண்ணம்மாவைச் சில ஆய்வாளர்கள், பாரதியின் மனைவியென்றும் மகளென்றும் சொல்கின்றனர். என்றாலும், அக்கவிதைகளின் ஊடே பாரதி தீட்டியிருக்கும் சித்திரமோ அவர்கள் இருவரையும் காட்டுவதில்லை. அவர்களின் உருவத்துடனும் குணத்துடனும் ஓரளவுக்கே பொருந்துகின்றன. மோனப்பெருவெளியின் சஞ்சாரத்தில் அவனுக்கு உதித்த கண்ணம்மா எனும் சொல், காதலையும் பக்தியையும் இன்னபிற உயர்ந்த விஷயங்களையும் பற்றியிருக்கிறது. வெறுமனே கண்ணம்மாவை ஒரு பெண்ணின் பெயராகவோ குறியீடாகவோ கருதுவதில் பயனில்லை.

ஏனெனில், ஒரு சொல்லை புதுவிதமான வடிவத்திலும் பாவத்திலும் பயன்படுத்தும் ஆற்றல் அவனுடையது. ‘சுட்டும்விழிச்சுடர்தான் கண்ணம்மா/ சூரிய சந்திரரோ’ என எடுத்த எடுப்பிலேயே ஆகாயத்திற்குக் கண்ணம்மாவை ஒப்பிடும் அவனுடைய எழுத்துக்களில் கரைவதும் நிறைவதும் தனி அனுபவம்.

நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களும் ஏக்கங்களுமே மனிதகுலத்தை இலக்கியத்தை நோக்கி நகர்த்தி யிருக்கிறது. அந்தத் தொடர்ச்சியைப் பாரதி கண்டடைந்து நமக்கும் கடத்தியிருக்கிறான். அவனுடைய கண்ணம்மாவும் என்னுடைய கண்ணம்மாவும் ஒன்றல்லர். ஆனால், இரண்டுபேருக்கும் இடையே ஓர் ஒற்றுமையுண்டு. அந்த ஒற்றுமை என்னவெனில், அவனும் என்னைப்போலவே கண்ணம்மாவை வெளிப்படையாகக் காட்டத் தயங்கியிருக்கிறான். காதல், பக்தி, காமம் என சகல ஊகங்களுக்கும் வழிவகுத்து,

ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் உதவியிருக்கிறான். இந்நூல் முழுவதுமே கண்ணம்மாவை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. யார் அந்த கண்ணம்மா என்கிற கேள்வியை தவிர்த்து, அந்தக் கண்ணம்மா எனக்குள் மீட்டிய, தீட்டிய அனுபவங்களை ரசிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். என் கண்ணம்மாவை உங்களுக்குச் சொல்லக் கூடாது என்பதில்லை. விஷயம் என்னவென்றால், எனக்கே இனிமேல்தான் அவள் தென்படப்போகிறாள்.

‘றெக்கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’ என்னும் பாடலை எழுதும்போதுகூட, இதே மனநிலைதான் எனக்கிருந்தது. அப்பாடலைக் கேட்டவர்கள், அதில்வரும் கண்ணம்மாவை என் மகள், மனைவி, காதலி எனத் தங்கள் வசதிக்கேற்ப எண்ணிக்கொண்டனர். சிலர் நேரடியாகக் கேட்கவும் செய்தனர். அதிலிருந்தே கண்ணம்மாவை முன்வைத்து சில கவிதைகளை எழுதும் ஆவல் ஏற்பட்டது.

பதில் இல்லாத கேள்விகளுக்கு வித்திட்ட கண்ணம்மாவிடம் நாமுமே சில கேள்விகளை எழுப்பலாமே எனத் தோன்றிற்று. விளைவாகவே இந்நூல் முழுவதும் கண்ணம்மா வந்திருக்கிறாள். அத்துடன், சொல்முறையில் எனக்குத் தேவையானவிதங்களில் கண்ணம்மா தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரேவாசிப்பில் முழுகவிதைகளையும் வாசித்து விடலாம். இதுவரை நான் என்னுடைய கவிதைகளில் பேசாத பொருள்களை இக்கவிதைகளில் பேசியிருக்கிறேன். சொற்களுக்கான அர்த்தங்களை மாற்றியும் ஏற்றியும் குறித்திருக்கிறேன். தேக்கமில்லாத ஆற்றோட்டத்தை வரிகளாகவும் வார்த்தைகளாகவும் வனைந்திருக்கிறேன்.

வழக்கமான உணர்வெழுச்சியைவிட, இக்கவிதைகளை எழுதும்போது எழுந்த உணர்வெழுச்சி அதிக ஆச்சர்யத்தை ஏற்படுத்திற்று. இப்படியும் எழுதலாம் என்கிற எண்ணத்தை எட்டிய நிலையில், வெவ்வேறுவிதமான படிமங்களும் குறியீடுகளும் வந்துகொண்டே இருந்தன.

இந்நூலில் நான் பகிர்ந்துள்ள உணர்வுகள் சிலருக்குக் காதலாகவும், சிலருக்குப் பக்தியாகவும் தோன்றலாம். பாரதி சொல்வதுபோல சமயத்தில் அதுவே, தோற்றப்பிழையையும் தருவிக்கலாம். எதுவானாலும், இக்கவிதைகள் புதுவிதமான அனுபவத்தை வழங்குமென்றே நம்புகிறேன்.

1.
தொட்டிநீரில் விழுந்த
தட்டானோ பட்டாம்பூச்சியோ
ஈரம் தோய்ந்த தம் இறக்கைகளால்
மழைதூவுவது போலிருக்கிறது,
எப்போதாவது நீ சிரிப்பது.
இயல்பின் கதகதப்பில்
அச்சிரிப்பைப் பத்திரப்படுத்த
எத்தனைமுறை
சிராய்த்துக்கொண்டேனெனத்
தெரிந்துமே தெரியாததுபோல்
இருக்கிறாயே கண்ணம்மா
கட்டறுந்து பறக்குமென்
காதல் நுனியை
உன் முந்தியில் முடியுமோர்
ஆசையை இனியேனும்
அவிழ்ப்பாயா கண்ணம்மா?
அடர்ந்த கானகத்தின்
அத்தனை மரங்களுமே
ஒரே ஒரு விதையிலிருந்தே
ஓங்கி உயர்ந்ததென்று
உன் ஒவ்வொரு சிரிப்பும்
உணர்த்திடுதே கண்ணம்மா

2.
வடக்குநோக்கிப்பாயும்
கிளையாறுகளில் ஒன்றை
நீயும் நின் காதலும் நீந்துவதற்காக
நேற்று அனுப்பிவைத்தேன் கண்ணம்மா
அவ்வாற்றில் மிதமான
உன் பிராயத்தையோ பிரியங்களையோ
கவ்வாதிருக்கும்படி
மீன்களுக்குச் சொல்லியிருந்தேன்
பேரிரைச்சலையோ
பின்னுக்கு இழுக்கும் அலைகளையோ
எழுப்பக்கூடாதெனத் திவலைகளுக்கு
உத்தரவும் இட்டிருந்தேன்
ஆற்றின் ஓட்டத்திலும்
அளவுக்குமேல் உருளக்கூடாதென
கூழாங்கற்களையும் கேட்டிருந்தேன்
இத்தனையும் செய்த எனக்கு
அவ்வாற்றைக் குளிர்விக்கவும்
குளிப்பாட்டவும்கூடிய சக்தி
உன்னிடமே உள்ளதென்று
தெரியாதா கண்ணம்மா?

நூல் பெற:
நேர்நிரை, 181, இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு, ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்திருநகர், சென்னை& 87. அலைபேசி : 98411 57958 கோட்டோவியங்கள்: ஓவியர் இராமன் பக்கங்கள்: 200 / விலை: ரூ.200