முன்னிருக்கைக்காரர்கள்

முன்பொருமுறை ‘கவிதை ஒரு தூண்டில்; அது மிக எளிதாக எல்லா இதய மீன்களையும் கவ்வி விடுகிறது’ என எங்கேயோ வாசித்திருக்கிறேன். இது எந்தளவுக்கு உண்மை என்பதை யோசிக்கும் தருணத்தைச் சில புத்தகங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. சமீபத்தில் அப்படியொரு புத்தகமாக நான் கருதியது, உதயசங்கரின் ‘தீராது’ கவிதைத் தொகுப்பு.

அதிலொரு கவிதை, `மாயாஜாலங்களை / என்றுமே நம்புவதில்லை / சின்னக் கருப்பன் / ஆனால் /உன்னைத் தொட்ட கணத்தில் / மறையாய் மறைந்து /விட்ட கணத்தில் /மீண்டும் தோன்றிய /மாயமென்ன? / மீண்டும் மீண்டும் / மறைந்து போகத் துடிக்கிறான் /சின்னக் கருப்பன் / என்ன செய்து மறைந்தாய் / என் தேவதையே’ என்று வரும். நூல் நெடுக சின்னக் கருப்பனின் அடங்காத காதல் வாசகங்களைக் கேட்கமுடிகிறது.

அவன், அந்தச் சின்னக்கருப்பன் எவனாக, வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவன் நமக்கு நெருக்கமானவனாகத் தென்படுவதுதான் நூலின் சிறப்பு. உதயசங்கரின் முந்தைய தொகுப்பையும் நான் வாசித்திருக்கிறேன். அதினினும் பார்க்க, இது என்னை அப்படியே இன்னொரு தளத்திற்குக் கொண்டுபோய், குதி போட வைக்கிறது. ஒருவேளை சின்னக் கருப்பனாக தன்னை உணர்ந்து கொண்டதாக இருக்கலாம். சின்னக் கருப்பன் சேட்டைகளின் சிம்மாசனமாக எனக்குள் அமர்ந்திருக்கிறான்.

எனக்குள் மட்டுமல்ல; இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் அப்படியே ஆகக்கூடும் என்பது என் துணிவு. போதை உச்சியில் ஏறி புரண்டு படுக்கக்கூட முடியாத தருணங்களைப் போன்றவைதான் காதலின் நினைவுகள். வேட்டைக்காரனாகவும், வேட்டையாடப்படுபவனாகவும் தன்னை முன்நிறுத்திக் கொள்கிற சின்னக் கருப்பன் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுகிறவனாகவும், சீக்கிரத்தில் கிளர்ச்சியடைபவனாகவும் இருந்து தொலைக்கிறான்.

மாபெரிய மாயா ஜாலங்களை எதிர்க்கத் துணிகிற ஒருவனே பின்னாளில் அம்மாயா ஜாலத்திற்குள் ஆட்படுகிற நிலைதான் காதலின் சாயல். தேவதையாக, ராட்சசியாக, நல்லவளாக, கெட்டவளாக எனப் பல பரிமாணங்களில் வெளிப்படுகிறாள் ஒருத்தி. அந்த ஒருத்தி என் எதிர்வீட்டுக்காரியாக, அடுத்த வீட்டுக்காரியாக, இதுவரை அறிமுகமே இல்லாதவளாகவும் இருக்கலாம். என்றாலும், அவளைப் பிடிக்கிறது. உதயசங்கர் தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் இப்படியானதொரு பாரிய வித்தியாசத்தைக் கொண்டுவர முயன்றதற்காக வம்சி பதிப்பகத்தைப் பாராட்ட வேண்டும்.

`பச்சை நிறச் சளி /மண்ணில் ஒட்டி / சுருள்வதைப் போல /உன் /பச்சை வாடை /ஞாபகங்கள் /ஒட்டிக் கொண்ட / நெஞ்சிலிருந்து /இருமி இருமிப் /பார்க்கிறான் /சின்னக் கருப்பன் /துப்ப முடியவில்லை. காச நோய்க்காரன் இருமிய சளியைக் கவ்விக்கொண்டுபோன ஒரு காக்கையைப் பற்றி இதற்குமுன் ஞானக்கூத்தன் எழுதியதாக நினைவு. அதற்குப்பிறகு உதயசங்கரின் இக்கவிதையில் காணமுடிகிறது. உதட்டுக்கும் தொண்டைக்கும் இடையில் உருள்கிற சளியை காதலுக்கு ஒப்புமைப்படுத்துவது ஏற்புடையதா? நாகரிகமா? இயல்பு தானா? எனப் பல மாதிரி நமக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்டாலும். முடிவில் காதல் என்ற உச்சபட்ச நிலையில் அது அசட்டையான கேள்வியாகி விடுகிறது.

போலவே, `பச்சை வாடை’ என்ற சொல் அலாதியான பொருளைத் தருகிறது. ஈர வாடை என்னும் சொல்லைப் பிரபந்தத்தை தொடர்ந்து பாரதியிடம் மட்டுமே காணமுடியும். அது மாதிரி, பச்சை வாடை சொல்லும் அதன் பொருளும். நூலின் நேர்த்தியைத் தனியாக எழுத வேண்டும். அடுக்கி வைக்கப்பட்டுள்ள கவிதைகளின் வரிசையும் கூட அயற்சி ஊட்டுவதாக இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக வருகிற கவிதைகள் ஒற்றைச் சொல்லின் பல அதிர்வுகளையும் பல சொற்களின் ஒற்றை அதிர்வையும் தருவது மிகுதி. எழுதுவதில் மிகச் சிரமமானதாக எனக்குத் தோன்றுவது காதல் கவிதைகள்தான். ஆனால், தமிழில் அவையே நிறைய வெளிவருகின்றன.

வருகின்ற அத்தனையும் கவிதைக்குள் அடங்குகிறதா என்பது தனி விஷயம். வாசகனைக் கவனத்தில் வைத்து எழுதிக்கொண்டிருக்க முடியாது. படைப்பாளனின் தனி சுதந்திரமும் எழுத்து முயற்சியும் அக்கவனத்தில் பாதிக்கப்படும் மெய்யான காதலை இதுகாறும் கண்டடைய வாய்ப்பில்லாத யாருக்கும் காதல் கவிதை தன் நிலையில் இருந்து அல்லாமல் புதியதொரு வாசகனையும் கூடவே அழைத்துச் செல்கிற சூசகம், வலியும் அழகும் நிரம்பியது.

`காமத்தின் விஷமேறி / நீலம் பாரித்து /உடல் துடிதுடிக்கிறது / மூளையின் அணுக்களில் / போதையின் உச்சத்தில் /தவிக்கிறது /உயிர் /அகாத பாலைவனத்தில் / பார்க்கும் பள்ளமெல்லாம் / கனையூற்றாய்த் தெரிய / கானல் காமத்தை / துரத்தியலையும் /யாத்திரிகனுக்கு /காமம் செப்பாது /கண்டது மொழிக /கவியே என்பதை வெகுவாக ரசித்தேன். காதல் பள்ளியில் தொடங்கி காமத்தை வந்தடையும்வரை கோடுகளாக வாழ்க்கை அமைத்து விடுகிறது. இரண்டையும் விலக்கி விட்டு வாழ்வு சாத்தியமில்லை. ‘கானல் காமத்தை துரத்தியலையும் யாத்திரிகன்’ கற்றை கற்றையாக வார்த்தைகளை விட இப்படியான சொற்கட்டுகளில் இக்கவிதைகள் தனித்துத் தெரிகின்றன .

ஒரு நல்ல காதல் கவிதையை எழுத முடியாததாலேயே பலர் காதலை இழந்த பாக்கியவான்களாக அழுது வழிவதை அறியலாம். பெண்களுக்குக் கவிதைகள் பிடிக்குமா என்கிற அச்ச உணர்விலேயே சில பையன்களுக்குக் காதல் வராமல் போன சம்பவங்களும் உண்டுதான். ‘தீராது’ தொகுப்பை வாசித்த சில மணி நேரங்கழித்து ஷோபாசக்தியின் ‘தமிழ்’ என்னும் தலைப்பிலான சிறுகதையொன்றை வாசித்தேன். ‘அநிச்ச’ இதழில் வெளிவந்ததிருக்கிறது. ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ மற்றும் ‘ம்’ நாவல்கள் ஏற்படுத்திய அதிர்வு என்னால் மட்டுமன்று; தமிழ் இலக்கியவாதிகள் அனைவராலும் மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக, ‘கொரில்லா’ தனிக்கவனம் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.

தனக்கு ஒருவர்மீது பிம்பம் ஏற்பட்டபிறகு அதே பிம்பத்தில் பிறரது படைப்புகளைப் பார்ப்பது இயற்கை. ஆனால், எல்லா பிம்பங்களையும் அச்சிறுகதை உடைத்து நொறுக்கி, கீழே தள்ளி அதன்மீது ஏறி நின்று கெக்கலிக் கொட்டி ஆவேசமாகத் தன்னை நிறுவிக் கொண்டது. உலகத் தெருக்களில் உள்ள பல வேசியகங்களுக்கு அவர் போனதையும் அங்கு அந்தப் பெண்களோடு நிகழ்ந்த உரையாடலையும் சுயவர்ணனையாகச் சொல்லியிருக்கிறார். ‘ஆயிரம் பெண்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் நின்றிருக்கும் ஒரு வேசியை என்னால் அடையாளம் காணமுடியும்’ என்ற சொற்றொடர் என்னை மேலும் மேலும் காலத்தின் அச்சுறுத்தலை உணர வைத்தது.

மலேசியத் தெருக்களில், சிங்கப்பூரில், கனடாவில் என எல்லா இடங்களிலும் அந்தப் பெண்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடுமே வாழ்வதைப் பதிவு செய்திருக்கிறார். பத்தொன்பது வயதில் முதன்முதலாக நிகழ்கிற பெண்ணுடனான தன் உறவு இத்தனை வயது வரை எங்கெல்லாமோ திரிந்து விரிந்து அலைந்த கதையை, பயன்படுத்திய ஆணுறைகளை மலக்குழியினுள் போடாதே என்ற எழுத்துப் பலகையில் கொண்டுவந்து முடித்திருப்பது முத்தாய்ப்பு.
‘தீராது’ தொகுப்புக்கும் ‘தமிழ்’ சிறுகதைக்கும் எந்தெந்த விதத்தில் சம்பந்தமுள்ளது என இரண்டையும் வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒன்று, காதல்; மற்றது, காமம். இது இல்லாமல் அதுவோ, அது இல்லாமல் இதுவோ கிடையாது தானோ? மலரினும் மெல்லியது காமம். எனில், மலரின் மென்மையை காமத்தைக் கொண்டுதானே அளக்க முடியும்? பெண்ணிடம் போனதெல்லாம் கவிதையா? கதையா? என்றும் கேட்போருண்டு. இன்று உலகம் முழுக்க ஈழத்தமிழர்கள் வாழ்வுக்காகப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களது சோகமும் தொடர்ந்த அமைதியின்மையும் எப்போது முடிவுக்கு வருமோ தெரியவில்லை. காலம் கனிவதற்காக காத்திருப்பதன்றி வேறு வழியேது? ஆனால், அவ்வாறு புலம்பெயர்ந்து இருப்பவர்களின் அனுபவங்கள் ஒரு சராசரி படைப்பாளனுக்குக் கிட்டாதவை என்பது மிகையல்ல.

மொழிரீதியாக கலாசார ரீதியாக வேறு வேறு பிரதேசத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டே ஆகவேண்டிய சூழல். அந்தச் சூழல் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் யாருக்காவது வாய்த்திருக்குமா? தமிழ் நிலத்தைத் தாண்டிப் பக்கத்து மாநிலத்துக்குப் போய் வந்தால் கூட சின்னச் சின்ன மாறுதல்கள் எழுத்தில் மலரும் என நம்புகிறேன். இப்படிச் சொல்வதால் மொழிப்பற்று அற்றவனாகவோ, தாழ்மைச் சிந்தையுடையவனாகவோ என்னை நீங்கள் கருதினாலும் பிரச்சனையில்லை. அடுத்தவரின் படைப்புகளை வியத்தலும் அதுகுறித்த ஆரோக்கியமான கருத்துப் பகிர்வை மேற்கொள்ளுவதும் எழுத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.

எவருக்குமே எழுதத் தெரியவில்லை, தானே சகலத் தகுதிக்கும் பாத்தியப்பட்டவன் என்றெல்லாம் கிறுக்குபவர்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. அது ஒருவிதமான நோய்க்கூறு. எத்துணைப் பெரிய கொம்பேறி மூக்கனாக இருந்தாலும், காலத்திற்கும் வரலாற்றுக்கும் முன்னே அற்பமென்பதே நிஜம். எழுத்தோ இன்னபிறவோ சக மனிதனை நெகிழ்வும் மகிழ்வுமாக நெருங்கி, உள்ளத்தை உன்னதத்தை நோக்கி நகர்த்தவேண்டும். எப்படி எனில், கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைப் போல ‘முன்னிருக்கையில் யாரோ / முகம் தெரியவில்லை / உதிர்கிறது பூ மனது தாங்கவில்லை’

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s