கோடி அருவி கொட்டுதே

வெண்ணாற்றங்கரையில் நானும் சரவணனும் பேசியபடியே நடந்த காலங்கள் மறக்கமுடியாதவை. முப்பதாண்டுகளுக்கு முந்தைய காவிரி நீர்ப்பெருக்கை எங்களுடைய கலை, இலக்கிய, அரசியல், சினிமா கனவுகளுக்குப் பொருத்தலாம். நட்பில் வளர்ந்தோம். நட்பையும் வளர்த்தோம். ஒருவிதத்தில் அவனே என் கிரியா ஊக்கி. இன்றைய என் வாழ்வின் ஏற்றங்கள் அத்தனைக்கும் ஏணியானவன். விஷயங்களை என்னிடம் பகிர்வதற்காகவே தேர்ந்த வாசகனாகத் தீர்மானித்தவன். காதல்முதல் காரல்மார்க்ஸ்வரை அவனே எனக்கு விளக்கினான். இராமசாமிப் பெரியாரையும் இராமனுஜ அய்யங்காரையும் புரிந்துகொள்ளப் புத்தகம் அளித்தான்.

என் அந்தரங்கத் தவிப்புகளையும் ஆசைகளையும் அவனளவுக்கு அறிந்தவர்கள் எவருமில்லை. பால்யத்தில் கங்காயிருந்த ஆர்வநெருப்பை ஊதிப் பெரிதாக்கியதில் அவன் பங்கே அதிகம். அதுமட்டுமல்ல, வேலையையும் விருப்பத்தையும் ஒன்றாக்கினால் அன்றி உயர்வதற்கு வழியில்லை என்றதும் அவன்தான். சொன்ன சொல்லுக்காக சேமித்து வைத்திருந்த செருவாட்டுக் காசில் என்னையும் சென்னைக்குக் கூட்டிவந்து இலக்கியத்தையும் சினிமாவையும் சாத்தியப்படுத்தினான். இந்தநேரத்தில் பெருமிதமான அன்பையும் நட்பையும் அளித்த காலத்தைக் கண்ணீரால் வணங்குகிறேன். சாதுர்யத்தில் வாழ்வை வெல்லமுடியாது.

சமயமும் வாய்ப்புகளுமே ஒருவரை உண்டாக்கி உச்சத்தில் வைக்கிறது. இளவயதில் அவன் எனக்கொரு வாக்குறுதி கொடுத்திருந்தான். ‘என்றேனும் ஒருநாள் திரை இயக்குநராகி உன்னைப் பாட்டெழுத வைக்கிறேன்’ என்பதே அது. கோள்களின் சுழற்சியில் நான் முன்னாலும், அவன் பின்னாலும் திரைத்துறைக்குத் தெரிய நேர்ந்தது. ‘சரவணன் ராஜேந்திரன்’ எனத் திரையில் அவன் பெயர் விரியப் பார்த்ததும் அழத் தோன்றிற்று.

காத்திருத்தலின் வலி காதலைவிட கனவுகளுக்கே அதிகம். அவன் எனக்களித்த உறுதியை ஈடேற்ற வந்தபோது ஆயிரம் பாடல்களை நான் கடந்திருந்தேன். ஆனாலும், அவனுக்கு எழுதிய ‘கோடி அருவி கொட்டுதே’ பாடலே முதல் பாடலென்று அறிவிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபமில்லை.
‘மெஹந்தி சர்க்கஸ்’ என்று படத்திற்கு தலைப்பு வைத்தான். வாழ்க்கையோ அவனை வைத்து ஆடிய சர்க்கஸை பிழைத்திருந்து பின்னால் எழுதுவேன். அவன் எனக்களித்த உறுதியைக் காப்பாற்றத் தாமதமானாலும், நிகழ்த்திவிட்டான் என்பதில் நிம்மதி. ஷான் ரோல்டனின் மெட்டைக் கேட்டமாத்திரத்தில் சரவணனின் முகத்தைப் பார்த்தேன். பூரித்து நின்றிருந்தான்.

அருவிகள் கீழே வந்து ஆறாக ஓட ஆரம்பிக்கும். எனக்கோ வெண்ணாறு மேலேறி அருவியாகிவிட்டதுபோல ஆனந்தம். புன்னகை தவழ்ந்தோடிய அந்தக் கணத்தில் ‘கோடி அருவி கொட்டுதே எம்மேல / அது தேடி உசுர முட்டுதே உன்னால’ என்றேன். கருத்த அவன்முகம் சிலிர்த்தது. சிவந்தது. முப்பதாண்டுகளுக்கு முன் அடைகாக்க ஆரம்பித்த முட்டை, குதூகலக் குஞ்சுகளாகப் பொரியத் தொடங்கின.
மொத்தமே பத்தே நிமிடத்தில் முழுப்பாடலையும் எழுதினேன். என் கவிதை நூல்களுக்கு அவன் எழுதிய அணிந்துரைகளை வாசித்தாலே அவன் ரசனையை அறியலாம். காட்சிகளை வரிகளாக வரித்தெழுதும் பாணி அவனுடையது. பாலுமகேந்திராவிடம் பாடம் கற்றவன். இலக்கிய நுண்ணுணர்விலும் இயல்பைத் தொலைக்காதவன். ‘மல கோவில் வௌக்காக / ஒளியா வந்தவளே / மனசோடு தொளபோட்டு / எனையே கண்டவளே / கண்ண மூடிக் கண்ட கனவே / பல ஜென்மம் தாண்டி வந்த உறவே’ என்று வரிகளைச் சொல்லச்சொல்ல வசமழந்த நிலையில் ‘எழுது, நல்லாயிருக்கு’ என்றான்.

எனக்கோ இன்னும் சிறப்பாக வரலாமோ என்றிருந்தது. ‘அறிவையும் அபிப்ராயத்தையும் விட்டுடு பாரதி, உள்ளே இருந்து வர்ற உணர்வே சத்தியம்’ என்றான். நெருங்கிய நட்பில் நிறையமுறை அவன் அப்படித்தான் பேசியிருக்கிறான். பொட்டில் அறைந்தாற்போல் எதையாவது புரியவைத்துவிடுவான். கலையும் இலக்கியமும் அறிவிற்கு அப்பாற்பட்ட தன்மையுடையவை. ‘விமர்சகர்களின் வேலையைப் படைப்பாளன் பார்க்கத் தொடங்கினால் எழுத்திலும் எண்ணத்திலும் வீழ்ச்சியே’ என்பான்.
‘போஸ்டரில் வரத்தானே மாஸ்டர்களே மருகுகிறார்கள்’ என்று போகிறபோக்கில் இலக்கியப் பொடியை நையாண்டியில் தூவுவான்.

பலவிதங்களில் அவனும் நானும் ஒரே உணர்வில் உழல்பவர்கள். முரண்பாடுகளையும் பேசித் தீர்க்க பிரியங்களை சேகரிப்போம். ஒத்திசைவே உறவின் பலமென்று பயின்றிருக்கிறோம். அத்துடன், இளையராஜாவை நானும் அவனும் நாபிக்கமலத்தின் நடுவில் வைத்திருப்பவர்கள். பாரங்கள் எங்களை அழுத்தியபோதெல்லாம் அவரே எங்களைப் பாதுகாத்திருக்கிறார். உணவிற்கே வழியில்லாமல் கோடம்பாக்கத் தெருக்களில் உலவிய நாள்களில் அவருடைய ‘நித்த நித்தம் நெல்லுசோறு’ எங்கள் பசியைப் போக்கியிருக்கிறது.

‘நள்ளிரவில் கேட்க நம்ம இசைஞானி / மெட்டமைச்சப் பாட்டா பொங்கி வழிஞ்ச’ என்றதும், ‘நள்ளிரவும் ஏங்க’ என்று வரலாமா என்றான். சின்னத் திருத்தமே அவன் செய்தது. ஆனால், அதுவே பாடலின் அழகை மெருமேற்றியது. ‘பொட்டலுல வீசும் உச்சிமல காத்தா / புன்னகையில் ஏண்டா என்ன புழிஞ்ச’ என்று அடுத்தவரியை ஆரம்பித்ததும், ‘போதையேறுது’ என்றான்.அதையே ‘சாராயம் இல்லாம சாஞ்சேண்டி / கண்ணால’ என்றாக்கினேன். ‘கூழாங்கல் சேராதோ செங்கல்ல’ என்று சொன்னதும், ‘அம்மா உழைத்த செங்கல் சூளையைப் பாட்டிலும் வக்கிறியா சரி சரி’ என்றான்.

அடுத்தடுத்து அன்பின் பகிர்தலை எழுதிக் காட்டினேன்.
இரண்டாவது சரணத்தில் ‘ஒன்ன நெனச்சாலே செந்தமிழும்கூட / இந்திமொழித் தாண்டி / நெஞ்சத் தொடுதே’ என்றதும், ‘ஏம்பா இந்தித் திணிப்பை காதல் பாட்டிலுமா எதிர்க்கணும்’ என நளின நக்கலடித்து, ‘கதைக்குப் பொருந்துது எழுதிக்கோ’ என்றான். காதலரும்பியதும் ஆணிடமும் முகிழ்க்கும் வெட்கத்தை ‘என்னயிது கூத்து / சுண்டுவிரல் தீண்ட / பொம்பளைப்போல / வெக்கம் வருதே’ என்றேன். நா.முத்துக்குமார் ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ பாடலில் இதே உவமை வந்திருக்கிறது.

கொள்வினை கொடுப்பினையாக நானும் அவனும் மாற்றிக்கொண்ட சிந்தனைகளையும் கற்பனைகளையும் யாராவது ஆராயலாம். எனக்கும் சரவணனுக்கும் முத்துக்குமார் அள்ளிக்கொடுத்த அன்பை, காலத்திடம் கையளிக்கும் எண்ணத்துடனே அவ்வரியை இணைத்தோம். அவன் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி, இதயம் விரிய இழுத்துக்கொண்ட அனுபவம் சரவணனுக்குண்டு.

இப்பாடலைப் பாடிய பிரதீப்பும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் எங்களைப் போலவே இணைபிரியாதத் தோழர்கள். நட்பெனும் நாணின்றி காதல் அம்புகளைத் தொடுப்பதற்கு வழியில்லை. ‘நெஞ்சு படபடக்கிறது / அருவியை / நீர்வீழ்ச்சியென்று / யாராவது சொல்லிவிட்டால்’ என விக்ரமாதித்யன் எழுதுவார். அன்பும் நட்புமே அருவி. அது, கொட்டிய உடனே பெருகி ஓடும் பேராறு. இப்போது, வெண்ணாற்றங்கரையில் என்னையும் சரவணனையும் பேசிக்கொண்டே யாரோ இருவர் நடந்துபோகிறார்கள்.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s