தெய்வீகனின் அமீலா

முகநூல் பதிவுகளின் வழியே என்னை ஈர்த்தவர்களில் ப. தெய்வீகனும் ஒருவர். சம்பவங்களைப் பகடியாக எழுதுபவர். எனினும், அப்பகடிகளின் பின்னே காத்திரமான சிந்தனைகளைச் செலுத்தத் தெரிந்தவர்.

அமீலா, தாமரைக்குள ஞாபகங்கள் ஆகிய இரண்டு நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவர், ஈழத்தைப் பூர்வமாகக் கொண்டவர். ஈழ இலக்கியங்களை தவறாமலும் தவிர்க்காமலும் வாசிப்பவன் என்கிற முறையில் தெய்வீகனையும் தெரிந்துகொண்டேன்.

குறிப்பாக, அவருடைய அமீலா சிறுகதைத் தொகுப்பு. ஒன்பது கதைகள் அடங்கிய மிகச்சிறிய நூல். `தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. தோற்றத்தில் பத்திரிகை எழுத்துபோல இருந்தாலும், அவர் கதைசொல்லும் விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. `வெள்ளை விழிகள்’ என்றொரு கதை நூலில் இடம்பெற்றிருக்கிறது.

அக்கதையில் மூன்றுநான்கு காட்சிப் படிமங்களை வைத்துக்கொண்டு முழுவாழ்வையுமே படம்பிடித்திருக்கிறார். இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அகதியாகவும் வேலை நிமித்தமும் வாழ்பவர்களின் மனோநிலையைத் துல்லியமாக அவரால் அக்கதையில் சொல்லமுடிகிறது.

போர்ப் பற்றிய நினைவுகளிலிருந்து மீள, ஒரு சமூகம் படக்கூடிய பாடுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டுகிறார். புலிபார்க்கும் ஆவலுடைய ஒருவனின் எண்ண ஓட்டங்களை விவரிக்கத் தொடங்கிய அவர், அரசியலுக்கு அருகே வந்தும் வராமலும் செல்லும் அழகை ரசித்தேன். பதுங்கிப்பாயும் பாவனையும் புலியையே காட்டியது.

அதே கதையில், வரதன் என்பவனின் வேதனைச் சித்திரத்தையும் வரைந்திருக்கிறார். தொடர் விசாரணைகளில் துன்பப்படும் வரதன், இறுதியில் தன் வாயைத் தானே தைத்துக்கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுகிறான்.

அவன் யார், அவன் ஏன் அந்நிலைக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறான் என்பதெல்லாம் கதையையொட்டி விரியும் யோசனைகள். இன்று நாமுமே வரதனாக வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். மனதில் பட்டதைச் சொல்லமுடியாத துயர்மிகு காலத்தின் சாட்சியங்களை அக்கதையில் காணமுடிந்தது.

அரசைப் பற்றியும், ஆட்சி, அதிகார அட்டூழியங்களைப் பற்றியும் வாய்திறந்தால் வங்கிக்கணக்குமுதல் முகநூல் கணக்குவரை முடக்கப்படும் என்பதே தற்போதைய நிலை. இந்த இக்கட்டான நிலையில் எதார்த்த வரதர்கள், தங்கள் வாயைத் தாமே மானசீகமாகத் தைத்துக்கொள்வதே உசிதம்.

அச்சத்தினால் வரதன் அக்கதையில் தைத்துக்கொள்ளவில்லை. அதை ஒரு வினையாகவே நிகழ்த்துகிறான். துன்பறுத்தும் கேள்விகளிலிருந்து விடுவித்துக்கொள்ள வாயைக் கட்டிக்கொள்வதன்றி ஓர் எளியனுக்கு ஓர் அபலைக்கு வேறு வழியேதும் இருக்கிறதா என்ன? வாயைக் கட்டினாலும் வயற்றைக் கயிற்றினாலும் ஜனநாயகத்தைக் கட்ட முடியாதென்று ஜோபைடன் அமெரிக்க அறிவித்திருக்கிறது.

தெய்வீகனின் ஒவ்வொரு கதையுமே இப்படியான கொதிநிலைக்குள் என்னைத் தள்ளின. கதைகளில் அழுவாச்சித்தனம் அறவே இல்லை. இளம் படைப்பாளியின் தெம்பும் திராணியும் வெளிப்படுகின்றன. கதைசொல்லும் முறைமையில் பழைய தேய்வழக்குகளைத் தடுத்திருக்கிறார். அவைவே சில இடங்களில் நின்று நிதானிக்க வைக்கின்றன.

நிச்சயமாக நூல் தலைப்பில் அமைந்த `அமீலா’ கதையைச் சொல்லவேண்டும். அக்கதை ஏனைய கதைகளைவிட, இன்னும் ஒருபடி மேலே இழுத்தது. ஆப்பிரிக்கப் பெண்மீது `லங்கா’விற்கு ஏற்படும் காதலைச் சொல்லும் கதையே அது. அக்கதையில் ஆப்பிரிக்க மக்களிடம் இருந்துவரும் ஒரு விநோத வழக்கத்தைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

நமக்குத்தான் அது விநோதமே தவிர, அவர்களுக்கு அது இயல்பு. பரம்பரைப் பழக்கம். தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை.  மகளை திருமணம் செய்துகொள்ள போகிறவன் உடலால் தகுதியானவனா என்பதைச் சோதிக்க, பெண்ணின் பெரியம்மாவுடன் கலவி என்பதாக அவ்வழக்கதைக் குறித்திருக்கிறார்.

படித்தவுடன் இப்படியெல்லாமா? ஒரு வழக்கதை உலகம் வைத்திருக்கிறது எனக் கேட்கத் தோன்றிற்று. உலகத்தின் விநோதங்களை, விபரீதங்களை கதைகளின் மூலமே அறிய வேண்டியிருக்கிறது. அத்துடன், அகிலமெங்கும் சின்னச் சின்ன அதிப்திகளில் மனம் பிறழும் ஆத்மாக்களே மலிந்துள்ளன.  

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் கதைகளைப் படித்ததும் ஏற்படும் அதே உணர்வை தெய்வீகனும் தருகிறார் என்றால் மிகையாகப்படலாம். நான் கோபிகிருஷ்ணனுடன் `கணையாழி’ காலத்தில் பழகியிருக்கிறேன்.

அன்றாட அவதிகளை எழுத்தில் கொண்டுவந்த அவர், இன்னுமின்னும் எழுதமுடியாதச் சூழலுக்குக் காலமே தள்ளியது. தெய்வீகனின் சயனைட், சுவை, எம் பேரன் ஆம்பள, இருள்பறவை, முயலகன் ஆகிய கதைகளைப் பற்றியும் எழுதலாம். நேரமும் காலமும் வாய்க்கையில் இன்னும் விரிவாக எழுதுகிறேன். தெய்வீகன், தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது.

தாமரைக்குள ஞாபகங்களின் நீட்சிபோல `அமீலா’ தென்பட்டாலும், வாசிக்கும் அனுபவத்தை வழங்கியதற்கு நன்றிகள். இப்படித்தான் கதையையும் கட்டுரையையும் எழுதவேண்டுமென்னும் விதியிருக்கிறதா என்ன? எனக்கு விதிகள்மீது அக்கறையே இல்லை. விருப்பமும் அனுபவமுமே வாழ்வையும் படைப்பையும் நகர்த்துவன.

இந்த ஒருநாளைத் தெய்வீகனுக்கு அளிக்கிறேன்.  தாமரைக்குள ஞாபகங்களில் சரஸ்வதியின் மகனாகத் தெய்வீகனும் தெரியத் தொடங்குகிறான். வணக்கமும் வந்தனமும்.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s