பணமும் மாங்கல்யமும்

ரு திரைப்பாடலின் செயலும் கருத்தும் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது முக்கியமானது. கதைக்காகவும் சூழலுக்காகவும் எழுதப்படும் ஒரு திரைப்பாடல் விளைவுகளை உத்தேசித்து எழுதப்படுவதில்லை. ஆனாலும்கூட, அது சில சமயத்தில் நல்ல விளைவுகளையும் கெட்ட விளைவுகளையும் உண்டாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். திட்டமிட்டே ஒரு சமூகத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ எழுதப்படும் பாடல்களை குறித்து நான் சொல்வதற்கு எதுவுமில்லை. ஏனெனில், அந்தத் திட்டமிடலுக்குப் பின்னால் அரசியல் இருப்பதால் அது விளைவுகளை உண்டாக்கக்கூடியதே. அப்படியல்லாமல், தன்னியல்பாக ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தே பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

திரைமொழியையும் திரைப்பாடல்களையும் விமர்சனப் பூர்வமாக அணுகி பல நல்ல கட்டுரைகள் வந்துள்ளன. அத்துறையில் தொடர்ந்து ஸ்டாலின்ராஜாங்கம், சுந்தர்காளி, வெங்கேஷ் சக்ரவர்த்தி, தியோடர் பாஸ்கரன், ராஜன்குறை அம்ஷன்குமார் போன்றோர் ஈடுபட்டு மிகக் காத்திரமான விவாதங்களை எழுப்பி வருவது வரவேற்புக்குரியது. அவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் சிலரால் ஏற்கப்பட்டும் மறுக்கப்பட்டும் இருப்பதை விட்டுவிடலாம். எதுவொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று.

ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களும் இல்லாத துறைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும் அபாயமிருக்கிறது. நூறாண்டும் மேலாகத் திரைப்பாடல் என்னும் வடிவத்தை மக்கள் உள்வாங்கி வருகிறார்கள். இந்த நூறாண்டுகளில் திரைப்பாடலின் வடிவமும் நேர்த்தியும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. சாஸ்த்தீரிய மெட்டோ நாட்டுப்புற மெட்டோ எதுவானாலும் அது, தன் ஆரம்ப நிலையிலிருந்து ஓரளவு வளர்ந்தோ தேய்ந்தோ இருப்பதை மறுப்பதற்கில்லை.

காலத்திற்கேற்ப கலை இலக்கிய வடிவங்கள் மாறுதலுக்குட்படுவது இயல்பென்பதால், அந்த மாற்றங்களை நம்மால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. எவருடையத் திரைப்பாடலானாலும் அப்பாடல் குறிப்பிட்ட காலத்தைப் பிரதிபலிக்கவில்லையென்றால் அது, அடுத்தத் தலைமுறையின் பார்வைக்கே வராது. உதாரணமாக என். எஸ். கிருஷ்ணனின் பாடல்களை எடுத்துக்கொள்வோம். அவர், தம்முடைய பாடல்களின் வழியே குறிப்பிட்ட காலத்தை வெகுவாகப் பிரதிபலித்திருக்கிறார். பகுத்தறிவும் சுயமரியாதையுமே காலத்தின் தேவை என்பதை உணர்த்திய அவருடைய பாடல்கள், அன்றைக்கிருந்த மைய நீரோட்டத்திற்கு மாற்றானவை அல்லது எதிரானவை.

இதிகாச, புராண, வைதீக, சனாதன கட்டுக்குள்ளிருந்த திரைப்பாடலை தம் விருப்பத்திற்கேற்ப வளைத்தும் நெளித்தும் அவர் செய்த மாற்றங்கள் ஒருகாலத்தின் அவசியத்தைக் காட்டுகின்றன. இசைக்கோப்பிலும் பாடலைப் பாடும்முறையிலும் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. நாடகத்தில் இருந்தும் தெருக்கூத்திலிருந்தும் திரைப்பாடலுக்கான புத்துருவை கண்டெடுத்தவர் அவரே.

நம்முடைய தனிப்பாடல் மரபிலிருந்த நகைச்சுவை தன்மைகளை திரைப்பாடலின் வடிவத்திற்குள் கொண்டுவந்த பெருமை அவருக்கே உரியது. அதுமட்டுமல்ல, அவர் அந்த நகைச்சுவையின் ஊடாக சமூகக் கருத்துக்களை முன்வைத்துதான் அதிலுள்ள சூட்சமம். கசப்பு மாத்திரைகளை தேனில் தடவித் தருவதுமாதிரி என்ற கிளிஷேவை இந்த இடத்தில் தவிர்ப்பது நல்லது.

கலைஞன் என்பவன் சமூக ஆசிரியனுக்கு ஒப்பானவன் என்னும் ரீதியில் அமைந்ததே கலைவாணரின் படைப்புகள். மிகச் சுமாரான திரைப்படத்திலும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றதன்மூலம் அது, வெற்றிகரமான படமாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டிருக்கிறது. காரணம், மக்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு மட்டுமல்ல. அன்று அவர் முன்வைத்த கருத்துக்கள் பொதுசமூகத்தைச் சிந்திக்கத் தூண்டின என்பதால்தான்.

நடுத்தர வர்க்கத்தினர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும் பாடுகளையும் கதைவடிவப் பாடலாக்கிய புதிய உத்தியை அவரே திரைக்கு அறிமுகப்படுத்தியவர். அவருக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி வேறு எவருமே அவருடைய பாணியில் திரைப்பாடல்களைக் கையாளவில்லை. கேள்வி பதில் வடிவில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அவர் அப்பாடல்களில் சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், வில்லுப்பாட்டின் வடிவத்தையும் கதாகலாஷேப சொல்முறையையும் திரைப்பாடலின் வகைமாதிரிகளில் ஒன்றாக்கியதும் அவர்தான்.

முற்போக்குக் கருத்துக்களை தம்முடைய பாடல்களின் வழியே பிரச்சாரம் செய்த அவர், பெரியாரின் தலைமைச் சீடர்களில் ஒருவராகச் செயல்பட்டவர். சமூக அக்கறை என்கிற தளத்தில் இருந்துதான் அவருடைய திரைமொழியும் ஆக்கங்களும் உருவாகியுள்ளன. நகைச்சுவை என்றாலும்கூட, அதிலும் நல்ல கருத்துக்களைச் சொல்லமுடியும் என நிரூபித்துக் காட்டும் தனி வல்லமை அவருடையது. காலத்தின் பிரதிபலிப்பென்று நான் சொல்வதும் அதைத்தான். வரும் காலத்தில் பெரும் பிரளயமாக திராவிட இயக்கம் இம்மண்ணில் பெருக்கெடுக்குமென்பதை முன்கூட்டியே அனுமானித்தவராக அவர் தெரிகிறார்.

பெரியாரைத் தொடர்ந்து அண்ணா, அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி என அக்காலத்தில் கவனிக்கப்பட்ட திராவிட இயக்க ஆளுமைகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அந்தத் தொடர்புகளையெல்லாம் கலைகளில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். திராவிட இயக்கத்தினருடன் அவருக்கிருந்த தொடர்பைப் போலவே பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும் அவர் அன்பு பாராட்டியிருக்கிறார். பொதுவுடமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவியவர்களில் என். எஸ். கே.வும் ஒருவர்.

தமக்கு கிடைத்த தொடர்புகளையும் சிந்தனைகளையும் திரைக்கு வெளியே நிறுத்திவிடாமல் அதை எப்படி திரையில் வெளிப்படுத்துவது எனவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ‘காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற/ காலம் மாறிப்போச்சு / இப்போ / ஊசியைப் போட்டால் உண்டாகுமென்ற / உண்மை தெரிஞ்சு போச்சு” என்றொரு பாடல், 1955இல் வெளிவந்த ‘டாக்டர் சாவித்திரி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
உடுமலை நாராயணக்கவி எழுதி, ஜி. ராமநாதன் இசையமைத்த அந்தப் பாடலை இப்போது கேட்டாலும், ஜம்பதுகளில் மக்களின் மனநிலையை மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியிருப்பதை உணர முடிகிறது.

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த மக்களிடம், நாத்திக கருத்துக்களை பிரச்சாரம் செய்வதென்னும் அவருடைய யோசனைக்குக் கிடைத்த வெற்றியாகவும் அப்பாடலைப் பார்க்கலாம். பொது சமூகத்தின் மனசாட்சியை கேள்விகேட்கும் தெம்பும் திராணியும் அவருடைய கலை செயல்பாட்டை ஆக்கிரமித்துள்ளன.
இன்றுவரை அவருடைய ஆக்கங்களே திரையில் மிளிர்ந்த அரசியல் போக்குகளை அளவிட உதவுகின்றன. அவர் தம்மை ஒரு நாகரீகக் கோமாளி என்னும் பதத்திற்குப் பொருத்தமானவராக ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

வெறும் கோமாளியாக அல்லாமல், நாகரீகக் கோமாளியாக அவர் தம்மை அறிவித்துக் கொண்டதற்குப் பின்னால், சமூகமும் அது சார்ந்த அக்கறையும் இருக்கிறது. பாடலாசிரியர்களைத் தமக்கேற்பவும் தம்முடைய கொள்கைகளுக்கு ஏற்பவும் எழுத வைத்து, அதை திரையில் லாவகமாக பயன்படுத்திய அவர், திரைப்பாடல்களை சமூகக் கருத்தோட்டத்தைச் சொல்லும் கருவியாக எண்ணியிருக்கிறார். நாடக காலத்திலேயே பெரியாரின் அரசியல் கருத்துக்களில் பற்று கொண்ட கலைவாணர், தான் நடித்த முதல் திரைப்படமான சதிலீலாவதியிலேயே அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். அத்திரைப்படத்தில் துக்கடா வேடமொன்றில் நடித்திருக்கிறார். பகுத்தறிவும் சுயமரியாதையுமே மனித வளர்ச்சிக்கு அவசியமென்பதை பாடல்களின் வழியே பிரச்சாரம் செய்த முதல் திரைக்கலைஞர் என். எஸ். கே. மட்டுமே. குறிப்பாக, 1949இல் வெளிவந்த நல்லதம்பி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறண்டி’ என்னும் பாடல், நவீன சாதனங்கள் எதுவுமே புழக்கத்திற்கு வராத காலத்தில் எழுதப்பட்டது. ஆனால், அப்பாடலில் சொல்லப்பட்ட அத்தனை சங்கதிகளும் இன்றைக்குச் சாத்தியப்பட்டிருக்கின்றன.

பருத்திச்செடியில் புடவை ரவிக்கை காய்ப்பதையும் கவிதைபாடி மழையையும் காற்றையும் வரவழைக்கப் போவதையும் கற்பனை செய்த அப்பாடல், காலத்திற்கு முன்பே கண்ட கனவுகளின் வெளிப்பாடு. அறிவியல் புரட்சி என்ற வார்த்தையை விரித்து அதற்கான விளக்கத்தை சொல்லிச்சென்ற அப்பாடல், உடுமலை நாராயணக்கவியையும் கலைவாணரையும் சமமான உயரத்திற்கு இட்டுச்சென்றது. ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே / ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று சுதந்திரத்திற்கு முன்பே எழுதிப்பார்த்த பாரதி நினைவுக்கு வருகிறான்.

நாளை நடக்க இருப்பதை இன்றே தீர்க்கதரிசனமாக காணக்கூடிய ஆற்றல் கவிஞர்களுக்கு உண்டு. அந்தவகையில் விஞ்ஞான வளர்ச்சியை ஒரு திரைப்பாடலில் எழுதிக்காட்டியவர் உடுமலை நாராணக்கவி. வளர்க்கபடவேண்டியதை சுட்டிக்காட்டும் அப்பாடல், எதை எதை ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. ‘அஞ்ஞானத்தை ஒழிக்கப்போறண்டி / அணுசக்தியால ஆயுள் விருத்தி பண்ணப் போறண்டி’ எனும் வரிகள் இன்றைய இந்தியாவின் அணுசக்தி கொள்கை குறித்தக் கவலையை எழுப்பினாலும், ‘அடுத்தநாட்டுக்காரன்போல ஆளைக் கொல்லாம/ ஊர பாழு பண்ணாம’ என விரியும் வரிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

சகலமும் மேலே இருப்பவனின் செயல் என்ற எண்ணத்திற்கு மாற்றாகவும் எதிராகவும் விஞ்ஞானத்தை முன்வைத்த முதல் திரைப்பாடல் அதுவே. தாம் சார்ந்த கட்சியையும் கொள்கையையும் தைரியமாக சொல்லிக்கொள்வதில் இன்றைய திரை நடிகர்களுக்குத் தயக்கமிருக்கிறது. அவ்வளவு ஏன், தாமே ஒரு கட்சியை தொடங்கிவிட்ட நிலையிலும் அல்லது தொடங்க இருக்கும் நிலையிலும் அதைத் திரையில் வெளிப்படுத்தும் துணிச்சல் வாய்க்காதவர்களாக தற்போதைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், கலைவாணர் தமது பணியையும் பயணத்தையும் வரையறுத்துக் கொண்டிருக்கிறார்.

எங்கே பொது சமூகம் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை திரும்பப் பெற்றுவிடுமோ என அவர் அஞ்சவில்லை. அத்துடன், வியாபார சினிமாவில் கட்சிக்கும் கொள்கைக்கும் இடமில்லை என்பது போன்ற மேலோட்டமான பார்வையும் அவருக்கில்லை. கலையின் நேர்த்தியையும் காலத்தையும் தேவையையும் உரியமுறையில் செயல்படுத்தும் ஆற்றலைப் பெற்றவராக அவர் இருந்திருக்கிறார். எது தம்முடைய கொள்கை என்பதையும் எது தம்முடைய கட்சி என்பதையும் மறைத்துக்கொண்டு திரைத்துறையில் ஜீவிக்க எண்ணவில்லை. பட்டவர்த்தனமாக தம்மைக் காட்டிக்கொள்வதே கலைக்கு உண்மையாயிருப்பதென்னும் நிலைப்பாடே அவருடையது.

அவரைத் தொடர்ந்தே எம். ஜி. ஆர். தம்மை சினிமாவிலும் அரசியலிலும் ஒருசேர அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்திருக்கிறார். நடிகர்களில் கலைவாணரின் பாதையை சரியாகப் பற்றி நடந்தவர் எம். ஜி. ஆர். கொடைத் தன்மையிலும்கூட, எம். ஜி. ஆருக்கு முன்மாதிரியாக கலைவாணரே இருந்திருக்கிறார். அரசியல் கருத்துக்களை சொல்வதன்மூலம் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற முடியும் என கலைவாணர் நினைத்திருக்கவில்லை. ஆனால், எம். ஜி. ஆ.ருக்கு காலமே அத்தகைய வாய்ப்புகளை வழங்கின.

திராவிட இயக்கத்தின் அபரிமிதமான வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதுர்யம் எம். ஜி. ஆரிடம் இருந்தது. மக்களின் மனநிலைக்கேற்ப தம்மை உருவாக்கிக்கொள்பவர்களே புகழ்பெறுகிறார்கள். எம்.ஜி.ஆர். தமக்குக் கிடைத்த பிரபல்யத்தைத் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்குக் கொடையளித்ததைப் போல திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னுடைய வளர்ச்சியை எம்.ஜி.ஆரின் நீடித்த புகழுக்குக் கொடையளிக்கத் தவறவில்லை.

கலைவாணர் பாடலாசிரியர்களை எவ்விதம் பயன்படுத்திக்கொண்டாரோ அவ்விதமே எம்.ஜி.ஆரும் பாடலாசிரியர்களை பயன்படுத்தியிருக்கிறார். மக்கள் மத்தியில் தம்முடைய செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள பாடல்களே உதவுமென்று கருதிய அவர், திராவிட இயக்கச் சார்பில்லாத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் மருதகாசியையும் தம் படங்களுக்கு பாடல் எழுத வைத்திருக்கிறார்.
பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய அண்ணாவுக்குக் கலைத்துறையில் துணையாக நின்றவர், கலைவாணர்.

அரசாங்கத்தையோ அரசாங்கப் பதவிகளையோ கைபற்றுவதில்லை என்ற பெரியாரின் கொள்கையில் இருந்து சற்றே விலகி, தேர்தல் அரசியலை அண்ணா முன்வைக்கிறார். ‘கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை’ என்ற கருத்துக்கு மாற்றாக ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றிருக்கிறார்.
அண்ணா திடீரென்று யு- டர்ன் அடித்து, பெரியாருக்கு எதிராக வளரத் தொடங்கிய நிலையில் அவருக்கு பக்கபலமாக இருந்த கலைவாணர், தீனா மூனா கானா என்னும் பாடல்மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமது முழு ஆதரவைத் தந்திருக்கிறார்.

பெரியாரின் சீடராகவும் தளபதியாகவும் இருந்த கலைவாணர் சட்டென்று அண்ணாவை ஆதரிக்க ஆரம்பித்ததை பெரியார் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது ஆராய்ச்சிக்குரியது. அண்ணாவையும் அவருடைய தம்பிகளையும் பெரியார் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், கலைவாணரைக் குறித்து அவர் எங்கேயும் விமர்சித்ததாகத் தெரியவில்லை.

இறுதிவரை தமது கழகத்தின் தலைவர் பதவிக்கு உரியவர் பெரியாரே என்று அண்ணா முழங்கியிருக்கிறார். அந்த முழக்கத்தை ஆரம்பத்தில் ஏற்காத பெரியார், பின்னாட்களில் ஒப்புக்கொண்டதிலுள்ள அரசியல் நமக்குத் தேவையில்லாதது. கலைவாணரை பெரியார் விமர்சிக்காமல் இருந்ததற்கு பின்னாலும் அப்படியொரு அரசியல் இருக்கக்கூடும்.
தீனா மூனா கனா என்னும் பாடல், கலைஞர் கதை வசனத்தில் உருவான பணம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ‘திருக்குறள் முன்னணி கழகம்’ என்பதாக தீனா மூனா கானாவுக்கு விளக்கம் சொல்லப்பட்டாலும் அது, திராவிட முன்னேன்றக் கழகம் என்பதன் சுருக்கமே என்று எல்லோருக்கும் தெரியும்.

தணிக்கை துறையின் வெட்டுக்கும் கண்டனத்திற்கும் ஆளாக்கூடும் என்பதால் திராவிட முன்னேற்றக் கழகத்தை, திருக்குறள் முன்னணிக் கழகமாக ஆக்கியிருப்பார்கள். பாடலின் ஆரம்பத்தில் திருக்குறள் முன்னணிக் கழகம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, பாடலின் இறுதியில் எங்கள் தி. மு. கழகம் என்பதில் இருந்தே அவர்களின் திட்டத்தை யூகிக்கலாம். அப்போது தீவிர திராவிட முன்னேற்றக் கழகக் கவிஞராக அறியப்பட்ட கண்ணதாசன் எழுதிய அவ்வரிகளைக் கலைவாணர் பாடியிருக்கிறார்.

அண்ணாவையும் பெரியாரையும் குறிப்பிட்டு வாழ்த்தும் அப்பாடல், கருப்பு சிவப்பு பேதத்தைப் பற்றியும் கள்ளர், மறவர், பள்ளர், பறையர் இடையே உள்ள சாதீய முரண்களைப் பற்றியும் சொல்லாமலில்லை. சமத்துவத்தை நோக்கிய திசையில் தீனா மூனா கழகம் செல்லும் என்ற குறிப்பை உணர்த்தவே அப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. 1952இல் ‘பணம்’ திரைப்படம் வெளிவந்த இரண்டாவது ஆண்டில் அதாவது, 1954இல் ‘மாங்கல்யம்’ என்றொரு திரைப்படம் வருகிறது. அத்திரைப்படத்தில் தீனா மூனா கானாவுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வானா மூனா கானா என்று ஆரம்பிக்கும் பாடல் இடம்பெறுகிறது.

‘தீனா மூனா கானா’வை எழுதியவர் கண்ணதாசன். ‘வானா மூனா கானா’வை எழுதியவர் மருதகாசி. மருதகாசி, ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் ரீதியாக அக்காலத்தில் எதிர்த்த இயக்கமாக தமிழரசு கழகத்தைச் சொல்லலாம். ஓப்பீட்டளவில் தமிழரசுக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கில் பாதிகூட இல்லை. என்றாலும், எதிர்ப்புணர்வில் தி. மு. க. விற்குச் சவால்விடும் கலைஞர்கள் தமிழரசுக் கழகத்தில் பங்கு பற்றினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஏ. பி. நாகராஜன், கவி. கா. மு. செரிஃப், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்ரமணியன், மருதகாசி என பெரும் பட்டியலை தமிழரசுக் கழகமும் வைத்திருந்தது. தீனா மூனா கானாவை விமர்சித்து எழுதப்பட்ட வானா மூனா கானா பாடல், கூஜா கூஜா கூஜா என்பதாகத் தொடங்கும். பணக்காரர்களையும் நடிகர்களையும் அண்டிவாழும் ஒருவனை கிண்டல் செய்தவதாக அமைந்த அப்பாடல், மிகத் தெளிவாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்குகளைப் பரிகசித்திருக்கும். எதிரெதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் கருத்து ரீதியாக தமக்குள்ள முரண்பாட்டை திரைப்பாடல்கள் மூலமே தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல ‘கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு’ என்று ஆரம்பிக்கும் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். உலகத்திற்குத் தெரியாத புது கருத்தைச் சொல்வதைப் போல மிடுக்காகத் தொடங்கும் அப்பாடல், ‘பரிசு’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. 1963இல் வெளிவந்த அப்பாடலுக்கு வாயசைத்திருப்பவர் எம். ஜி. ஆர். பாடல்துறையில் தமக்கென தனி இடத்தைப் பிடித்தவிட்ட நிலையில், கண்ணதாசனுக்கு அம்மாதிரி எழுதவேண்டிய அவசியம் என்ன வந்தது என எளிதாகக் கேட்கலாம்.
கூந்தல் கருப்பு, குங்குமம் சிவப்பு என்று சொல்வதல்ல அவர் நோக்கம். தமது கட்சிக் கொடியான கருப்பு சிவப்பை எதன் வழியேனும் சொல்லிவிடும் தாகமே அது.

ஒரு காதல் பாடலில் கருப்பு சிவப்பை சொல்லியதற்காக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் பலவும் கண்ணதாசனை வறுத்தெடுத்தது வேறு கதை.
கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளிலும் கட்சியையும் கொள்கையையும் சொல்லிவிட எம். ஜி. ஆர். விரும்பியிருக்கிறார். அதன் விளைவால் பல பாடல்கள் உதயமாயின. விவசாயி திரைப்படத்தில் கடவுளெனும் முதலாளி பாடலில், ‘கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் / கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்/ பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி / உழைத்தால் பெருகாதோ சாகுபடி’ என்று மருதகாசியை எம். ஜி. ஆர். எழுத வைத்திருக்கிறார்.

தீனா மூனா கானாவுக்கு பதிலாக வானா மூனா கானாவை எழுதிய அதே மருதகாசியைத் தமக்குத் தோதாக எழுத வைத்ததில் எம். ஜி. ஆரின் கணக்குப் பிடிபடுகிறது. தமக்கு எதிராக இருப்பவரை அல்லது செயல்படுபவரை தம்மை நோக்கி இழுத்துவிடும் சாதுர்யம் அவருக்கு உண்டு.
எத்தனை சாதுர்யம் இருந்தாலும், எம்.ஜி.ஆரைக் கண்காணித்துக்கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் அரசு அவற்றையெல்லாம் தன்னால் இயன்றவரை தடுக்காமல் இல்லை.

‘உதயசூரியனின் பார்வையிலே / உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே’ என ‘அன்பே வா’ திரைப்படத்திற்கு வாலி எழுதிய வரிகளை அனுமதிக்க மறுத்து, ‘புதிய வானம் புதிய பூமி’ என்று திருத்தவைத்து திருப்தியடைந்த காங்கிரஸின் வரலாறு கவனிக்கத்தக்கது. அதேபோல, ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்னும் பாடல் திரையிலும் ஒலிநாடாவிலும் வெவ்வேறு இறுதிவரியுடன் அமைந்திருக்கும். ‘அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல் / அன்புக்கு வணக்கு வள்ளாலாரைப் போல் / கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் / மேடையில் முழங்கு திரு. வி. க. போல்’ என்றுதான் திரையில் வரும். ஆனால், ஒலிநாடாவில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்’ என்றிருக்கும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. வி. க.வை அனுமதித்த அப்போதைய அரசு, அறிஞர் அண்ணாவை நீங்கியிருக்கிறது. ஆனால், என்ன வேடிக்கையென்றால் அப்பாடல் வெளிவந்த சில ஆண்டுகளில் திரு. வி. க.வை எல்லோரும் மறந்துவிட, ஆட்சி அதிகாரத்திற்கு அண்ணா வருகிறார். ஒரு திரைப்பாடலின் செயலும் கருத்தும் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் விசித்திரமானவை.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s