என் இடதுகண்ணும் துடித்தது

லக்கியத்திலும் திரைப்பாடலிலும் எளிய மக்களின் நம்பிக்கைகள் இடம்பெறுகையில் எனக்கேற்படும் சந்தோசத்திற்கு அளவில்லை. அவ்விதம் புழக்கத்திலுள்ள எத்தனையோ விஷயங்களைத் திரைப்பாடலாசிரியர்கள் தங்கள் வசதிக்கும் தேவைக்கும் தக்கவாறு பயன்படுத்தியுள்ளனர். ஒரு திரைப்பாடலில் சந்தம், இசை, குரல், சூழல், காட்சி, விவரணை ஆகியவை பொருந்திவந்தாலும் அவை, மக்களின் வாழ்வோடும் நம்பிக்கையோடும் கலந்திருக்கின்றனவா என்பதுதான் முக்கியம். வெறும் வார்த்தைகளை அடுக்கிக்கட்டும் பாடல்கள், வாழும் காலத்திலேயே மரித்துவிடுபவை.

வார்த்தை அழகிலும் வாக்கிய அழகிலும் சில பாடல்கள், நம்மைக் கவர்கின்றன. என்றாலும், வாழ்வின் அடிப்படைகளையும் நம்பிக்கைகளையும் எவை சொல்கின்றனவோ அவையே காலத்தின் கைகளால் காப்பாற்றப்படுகின்றன. ஏதோ ஒருவிதத்தில் ஒரு திரைப்பாடல் தனித்துவமாக அமைவதற்கு அதன் பின்னணியில் வழக்காறுகளும், வழிவழியாக மக்கள் பின்பற்றிவரும் நம்பிக்கைகளும் தேவைப்படுகின்றன. வழக்காறும் நம்பிக்கையும் வெவ்வேறு தன்மைகளை உடையவை. வழக்காறுகள் நம்பிக்கையின் விசையால் இயங்குபவை என்றாலும், அதுமட்டுமே அதன் அம்சமில்லை.  மேலோட்டமாகப் பார்த்தால் வழக்காறுகளை நம்பிக்கைகளின் பிரதிபிம்பமாகத் தெரியலாம்.

நம்முடைய பாட்டன் பாட்டியிடமிருந்தோ அல்லது வேறு எவரிடமிருந்தோ காலங்காலமாகப் பெற்றுவரும் கதை, கவிதை, பாடல் பழமொழி, விடுகதை, பழக்கவழக்கம் ஆகியவற்றையே வழக்காறுகள் என்கிறோம். நம்பிக்கையென்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. நாம் நம்புவதை இன்னொருவர் மறுப்பதால் அது, நம்பிக்கையே இல்லை என்று ஆகிவிடாது. வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியப் புராணங்களும் இதிகாசங்களும் எங்கே இலக்கியத் தகுதியைப் பெறுகின்றன என்பது தனிவிவாதம். ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்தும் தனித்துமே இயங்குகின்றன. அந்த வரிசையில் திரைப்பாடல்களையும் சேர்க்கலாம். ஆனால், இதுவரை அப்படியான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.

இலக்கியத்திற்குள் திரைப்பாடல்கள் வருவதில்லை என ஒருசிலர் கூப்பாடு போடுவதால், அம்முயற்சிகளுக்கு ஆதரவோ ஆறுதலோ கிடைப்பதில்லை. தொடர்ந்து திரையிசைப்பாடல் துறையில் இயங்கிவரும் எனக்கு, மக்களின் அன்றாட வாழ்விலிருந்து எழுதப்பட்ட பல திரைப்பாடல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. புராண, இதிகாசக் கருத்துகளையும், இலக்கியத்தின் நுட்பமான பகுதிகளையும் எளிய மொழியில் வெளிப்படுத்திய எத்தனையோ பாடல்களையும் பாடலாசிரியர்களையும் என்னால் பட்டியலிடமுடியும். வழக்காறுகளோ நம்பிக்கைகளோ எதுவென்றாலும் அதைத் திரைப்பாடலுக்குள் கொண்டுவந்தவர்களைக் கவனப்படுத்த வேண்டுமென்பதே என் ஏக்கம்.

உதாரணமாக,     `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல், எம்.ஜி.ஆர். நடித்த `காவல்காரன்’ திரைப்படத்தில் வந்திருக்கிறது. அப்பாடலைக் கேட்கும்தோறும் என்னையுமறியாமல் ஒரு புன்னகை பூத்துவிடும். காரணம், நூறுவயது வாழ்வதற்கு நினைவுகள் முக்கியமென்பதை அப்பாடல் சொல்கிறது. தன்னுடைய நினைவில் வருகிறவர், எதிர்ப்படுகையில் அவருக்கு நூறுவயதை வழங்கிவிடும் அரிய அன்பை அப்பாடல் கொடுக்கிறது. அதேபோல, `குமரிக்கோட்டம்’ திரைப்படத்தில் வெளிவந்த `நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமெனக் /  காதல் தேவதை சொன்னாள்’ பாடலில், `என் இடது கண்ணும் துடித்தது  / உனைக் கண்டேன் இந்நாள் / பொன்னாள்’ என்னும் வாக்கியமும் என்னை அதிகமும் ஈர்ப்பது.

இடது கண் துடித்தால் நல்லது நடக்குமென்னும் நம்பிக்கை, சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. பின்னால் நிகழ்வுள்ள நன்மையோ தீமையோ எதுவானாலும் அதை முன்கூட்டியே அனுமானிப்பதை சகுனமென்றும் நிமித்தமென்றும் சொல்வர். சகுனம் பார்ப்பது மூடநம்பிக்கை என வரையறுத்து வைத்திருப்பதால் அதை இன்றைய அறிவியல் உலகம் ஏற்பதில்லை. அத்துடன், அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பால் ஒன்றுமே இல்லையென்று கருதுபவர்கள், எளிய மக்களின் இம்மாதிரியான நம்பிக்கைகளை ஏகடியம் செய்வதையும் பார்க்கலாம். நிறுவப்பட்ட ஆய்வுகளையும் ஆதாரங்களையும் சான்றாகக் கேட்கும் சமூகத்தில், சாதாரண மக்களின் வழக்குமொழிகளுக்கு மதிப்போ மாண்புகளோ கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.

புகாரில் இந்திரவிழா நடந்தபொழுது கண்ணகியின் இடதுகண்ணும் மாதவியின் வலதுகண்ணும் துடித்ததாக இளங்கோவடிகள் எழுதியிருக்கிறார். பெண்களுக்கு வலப்புற உறுப்புகள் துடித்தால் கெடுதலென்றும், இடப்புற உறுப்புகள் துடித்தால் நன்மையென்றும் நம்பப்பட்டிருக்கிறது.  இதற்கு நேர்மாறாக, இடப்புற உறுப்புகள் ஆண்களுக்குத் துடித்தால் கெடுதி. வலப்புற உறுப்புகள் துடித்தால் நன்மை என்றும் கருதப்பட்டிருக்கிறது.  கண்ணகியின் இடப்புற கண் துடித்ததால்  வெகுவிரையில் மாதவியிடமிருந்து கோவலன் பிரிந்து, கண்ணகியைச் சேரவிருப்பதாக இளங்கோ சிந்தித்திருக்கிறார். `கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் / உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன / எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன / விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென்’ எனும் வரிகளில் இரண்டுபேரின் மனவோட்டத்தையும் ஒரே பாடலில் தெரிவித்திருக்கிறார்.

என்றோ இளங்கோ எழுதிய வரிகளை உள்வாங்கிய வாலி, குமரிக்கோட்டத்தில் குறித்திருக்கிறார். வெறும் திரைப்பாடல்தானே எனக் கடந்துவிடாமல் கவனித்துக் கேட்கும்போதுதான் அவ்வரிகளின் நுட்பத்தை உணரமுடியும். `என் இடதுகண்ணும் துடித்தது’ என ஜெயலலிதா பாடுவார். அதே வரியை எம்.ஜி.ஆர்., ` என் வலது கண்ணும் துடித்தது’ என மாற்றி உச்சரிப்பார்.  இடது வலதாகவும், வலது இடதாகவும் ஏன் மாற்றிப்பாடப்பட்டிருக்கின்றன என்பதற்குள் இலக்கிய அழகியல் ஒளிந்திருக்கிறது.

எழுபதுகளில் வெளிவந்த குமரிக்கோட்டத்தில் இடம்பெற்ற இப்பாடலின் இன்னொரு சாயலை ஆர்.வி.உதயக்குமார் தன்னுடைய சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் எழுதியிருக்கிறார். ஆர்.வி.உதயக்குமார் எழுதிய பல பாடல்கள் எனக்குப் பிடித்தவை. இயக்குநராக அவர் அறியப்பட்டாலும் தொடக்கத்தில் அவர் பாடலாசிரியராகவே முயன்றிருக்கிறார். இளையராஜாவின் வழிகாட்டலில் சென்னைத் தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்ற அவர், ஆகச்சிறந்த வெற்றிப் படங்களையும் பாடல்களையும் தமிழ்த் திரையுலகிற்குத் தந்திருக்கிறார். `கூண்டுக்குள்ள என்ன வச்சு’ என ஆரம்பமாகும் பாடலில் சிலப்பதிகாரமும் குமரிக்கோட்டமும் இணைந்து வந்திருப்பதை ரசிக்கலாம்.

சடங்கு, சம்பிரதாயம், சகுனம், நாள், நட்சத்திரம், ஜோதிடம், ஜாதகம் ஆகிய எல்லாமே ஒருவித கணக்குகள்தாம்.  இந்தக் கணக்கில் வல்லவர்களும் உண்டு. இதைவைத்து வியாபாரம் செய்பவர்களும் உண்டு. `நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை / ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’ எனக் கந்தர்வன் எழுதிய ஓர் அழகிய கவிதை நினைவுக்கு வருகிறது. சின்னக்கவுண்டர் எனும் தலைப்பிலும் கதைப்போக்கிலும் விமர்சனத்தை வைப்பவர்கள்கூட, அத்திரைப்படத்தின் பாடல்களை வியக்காமல் இருப்பதில்லை. `அந்த வானத்தைப்போல மனம் படைச்ச’ என்னும் பாடலையும்  இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். எதார்த்தத்தில் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துக்கொண்டே இலக்கியத்தரம் வாய்ந்த கற்பனைகளையும் உவமைகளையும் அவர் அலாதியாகச் செய்திருக்கிறார்.

கூண்டுக்குள்ள என்ன வச்சி என்னும் பாடலில், `கண்ணு  வலதுகண்ணு  தானா  துடிச்சதுன்னா / ஏதோ  நடக்குமின்னு  பேச்சு / மானம்  குறையுமின்னு  மாசு  படியுமின்னு / வீணா  கதை  முடிஞ்சு  போச்சு / ஈசான  மூலையில  லேசான  பல்லிச் சத்தம் / மாமன்  பேரைச்  சொல்லி  பேசுது / ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு / ஊரும்  சேந்து  என்னை  ஏசுது’  என்றிருக்கிறார். கதையின் பின்னணியிலிருந்து இவ்வரிகளை யோசித்தால் சூழலுக்கு எழுதப்பட்டதாகத் தோன்றும். சூழலுக்கு எழுதினாலும் அச்சூழலைச் சொல்லுவதற்கு அவர் கையாண்டுள்ள உத்தி, அபாரமானது. சிலப்பதிகாரம் வாசிக்காத ஒருவருக்குக் குமரிக்கோட்டம் தெரியலாம். குமரிக்கோட்டம் பார்க்காத மற்றொருவருக்கு ஆர்.வி. உதயக்குமாரின் சின்னக்கவுண்டர் பிடிபடலாம். காலந்தோறும் கைமாறி கைமாறி வரக்கூடிய இவ்வகையான உத்திமுறைகளே திரைப்பாடல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

வலதுகண் துடித்தால் வரக்கூடிய நிமித்தம் என்னவென்று பாடலில் சொல்லிய உதயக்குமார், அதுவெல்லாம் உண்மையல்ல என்பதுபோலவும் மேலதிக வரிகளில் விவரித்திருக்கிறார். `மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு /  வீணா கதைமுடிஞ்சு போச்சு’ என்றிருக்கிறார். அவ்விளக்கத்தை நாம் ஏற்கிறோமோ இல்லையோ அடுத்த வரியில் `ஈசான மூலையில லேசான பல்லிச்சத்தம்’ என மற்றொரு நம்பிக்கைக்குத் தாவியிருக்கிறார். பல்லிச் சத்தத்தையும் சகுனமாகக் கருதும் பழக்கம் நம்மிடமுண்டு. பல்லியின் சத்தத்தை வைத்துச் சகுனம் பார்க்கப்படுவதை முன்னிட்டே `கெளரி சாஸ்திரம்’ எனும் நூல் எழுதப்பட்டிருக்கிறது. அதில், பல்லியின் சத்த எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும் கணிக்கப்பட்டுள்ள சகுனத்தை அறியலாம்.  அதுமட்டுமல்ல, பல்லி எச்சமிடுவதையும் சத்தமிடுவதையும் கணக்கிட்டு, நல்லதோ கெட்டதோ நடக்குமென்று தமிழ்ச் சமூகம் நம்பியிருக்கிறது.  

பல்லி எந்தத் திசையிலிருந்து ஒலியெழுப்புகிறதோ, எந்த நாளில் ஒலிக்கிறதோ அதற்கும் கணக்குகள் இருக்கின்றன. அது, தலையில் விழுந்தால் மரணமென்றும் உடலில் விழுந்தால் ஆயுள்கூடுமென்றும் கருதியிருக்கின்றனர். பல்லியின் நன்னிமித்தக் குறியைப் பற்றி எண்ணும் போதெல்லாம் கல்லாடனார் எழுதிய `கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்’ எனும் அகநானூறு பாடல் நினைவுக்கு வரும்.

தலைவியைப் பிரிந்துசென்றவன், காரியமாற்றிவிட்டு ஊர் திரும்புகிறான். தேரேறி வருபவன் பாகனிடம் சொல்வதுபோல அமைந்த பாடல் அது. தேரில் பூட்டப்பட்டக் குதிரைகளை வில்லைவிட வெகுவிரைவாக எய்து என்கிறான். தலைவியைப் பிரிந்த அவன், அவளைப் பார்க்கும் ஆர்வத்திலும் ஆசையிலும் பாகனை வேகப்படுத்துகிறான். அதைவிட, விரைவாக அவனுடைய சிந்தனைகள் தலைவியைத் தழுகின்றன. காத்திருந்தவனின் காதல், குதிரைகளைக் காட்டிலும் கூடுதலாக ஓட்டமெடுக்கிறது. சிந்தனையில் சரியும் அவன், தலைவி தற்போது என்னசெய்து கொண்டிருப்பாள் என்பதையும் யோசிக்கிறான். அவள் நெட்ட நெடிய வீட்டில் பல்லியின் நன்னிமித்த ஓசையை, இசையாக ரசித்துக்கொண்டிருப்பாள் எனவும், அவ்வோசையை அவள் கேட்டு முடிப்பதற்குள் ஓடிப்போய் கட்டிக்கொள்ள வேண்டும் எனவும் எண்ணுகிறான்.  

`எம்மினும் விரைந்துவல் எய்திப் பன்மாண் / ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇ / பாங்கர்ப் பல்லி படுதோறும் பரவி / கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி /கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி / பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித் / தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ’ என்னும் வரிகள் நினைந்து நினைந்து வியக்கத் தக்கவை. `கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி’ எனும் வரி, தனித்த அழகுடையது. மேயச்சென்ற கன்றுகள் மாலையில் வீடு திரும்புவதற்குள் விரைவாகச் செல்ல அவன் இதயம் ஏங்குகிறது. கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகி என்பதெல்லாம் செவ்வியலின் உச்சம். பல்லியை வைத்துக்கொண்டு கல்லாடனார், இலக்கியக் காதலுக்கு  அற்புதமான சகுனத்தை நல்கியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அதேபோல இன்னொரு அகநானூறு (289) பாடலும் பல்லியின் ஒலி குறித்தப் பதிவைச் சொல்கிறது. தலைவனைப் பிரிந்த தலைவி, அனுதினமும் அவனை நினைத்துத் தவிக்கிறாள். எப்போது வருவானோ என ஏங்கிய அவள், சுவரில் கோடு வரைந்து நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். மெல்லிய காற்று வீசினாலும் அவள் அவனுடைய ஞாபகத்தில் அவிழ்ந்துபோகிறாள். பிரிவின் துயரத்தில் வழிந்தோடும் கண்ணீர், அவள் தனங்களில் பட்டுத் தெறிக்கிறது. `சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்’ எனத் தொடங்கும் அப்பாடலில், `மையல் கொண்ட மதன்அழி இருக்கையள் / பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவ; நல்ல கூறு’ என நடுங்கிப், / புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே’ என்னும் வரிகள் கவனிக்கத்தக்கவை.

தனித்து ஏங்கும் சந்தர்ப்பங்களில் பல்லி ஒலியெழுப்பியதும், `தலைவனைக் குறித்து நல்லசேதியைக் கூறு’ என அவள் கேட்டதாக எயினந்தை மகன் இளங்கீரனார் எழுதியிருக்கிறார். பல்லி என்றில்லை, காகம், கருடன், கூகை, ஆந்தை, வௌவால் போன்றவையும் சங்கமரபில் சகுனத்திற்கு உதவியுள்ளன. வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடுமென்று சொல்வதை இப்போதும் கேட்கமுடிகிறது. வாய்ப்புகளும் வசதிகளும் அதிகரித்துவிட்ட நகர வாழ்க்கையிலும் இப்படியான நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூனைகளே அற்றுவிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் வார்த்தையிலேனும் பூனையை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

தொல்குடிச் சமூகத்தின் தொடர்ச்சியாக இவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டுமே அல்லாது, அறிவையும் அறிவியலையும் வைத்து வழக்காடுவதில் பிரயோஜனமில்லை. மக்களின் எந்த ஒரு நம்பிக்கையும் கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும், இம்மாதிரியான கேள்விகள் ஒருபோதும் நன்மைப் பயப்பதில்லை என்பதே என் புரிதல். `தமிழரின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்’ எனும் நூலில் முனைவர் க. காந்தி இதுகுறித்து விபரமாக எழுதியிருக்கிறார். உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்நூல், தற்போது கிடைக்கின்றதா எனத் தெரியவில்லை.

எண்பதுகளில் வெளிவந்த அந்நூலில் `வலமும் இடமும்’ குறித்து தனி ஆய்வையே நிகழ்த்தியிருந்ததாக நினைவு. வலதுகாலை எடுத்துவைத்து மணமகளை வீட்டுக்கு அழைக்கும் வழக்கத்திலிருந்து, வலங்கை, இடங்கைப் பாகுபாடுகள் தோன்றியதுவரை மிக விரிவாக அந்நூலில் அவர் பகிர்ந்திருக்கிறார். வலதுகாலை எடுத்துவைக்கும் அதே பெண்ணுக்கு, இடதுகண் துடித்தால் மட்டுமே நன்னிமித்தம் என்பதுதான் இடறுகிறது. தவிர, `நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும்’ எனத் தொடங்கும் `ஐங்குறுநூறு’ பாடலும் இடதுகண் துடிப்பதால் ஏற்படும் நற்சகுனத்தைச் சொல்கிறது. திரைப்பாடல்களில் இலக்கியத்திற்கு இடமே இல்லையென்றும், அவை வணிகத்திற்கும் விளம்பரத்திற்கும் செய்யப்படும் வேடிக்கையென்றும் சொல்பவர்களை இந்த இடத்தில் நான் நினைக்கவில்லை.

திரைப்பாடல்களில் அரிதிலும் அரிதான உவமைகளும் நம்பிக்கைகளும் வெளிப்படுவதை அதே துறையில் பல்லாண்டுகளாக இருப்பதால் என்னால் கிரகிக்க முடிகிறது. சிலப்பதிகாரத்தைச் சமண நூலாகக் கருதினாலும் அக்காப்பியத்தில் வலது உயர்வாகவும் இடது தாழ்வாகவும் காட்டப்பட்டிருக்கின்றன. அரங்கேற்றுக் காதையில் வரக்கூடிய  `குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப’ என்பதில் தொடங்கி முழுப்பாடலையும் வாசித்தால், வாத்தியக் கருவிகளை வாசிப்பவர்களிலும்  எவர் உயர்வு, எவரெவர் தாழ்வு என்னும் விவரணைகள் வருகின்றன. குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப எனில், நரம்புக்கருவிகளை வாசிப்பவர்கள் எந்நெறியில் நின்றனர் என்பதுதான். குயிலுவர், இடக்கை முதலான கருவியாளர்.  இசைவாணர்களில் தோல்கருவிகளை வாசிப்பவரும், நரம்பிசைக் கருவிகளை மீட்டுபவரும் ஒரேமாதிரியாகக் கருதப்படவில்லை.

வலதும் இடதுமாக அவர்கள் நிறுத்தப்படுவதில் தராதரமும், உயர்ந்தவர்கள் இன்னொருவருக்குத் தராத இடமும் உணர்த்தப்பட்டிருக்கின்றன. காணப்போவது நல்லதா, கெட்டதா எனத் துடிக்கும் கண்களைப் பற்றி இராமாயணத்திலும் சில குறிப்புகள் உண்டு. அசோகவனத்தில் சீதைக்கு வாய்த்த ஒரே துணையும் உற்ற ஆறுதலும் தரத்தக்கவளாகத் திரிசடை இருக்கிறாள். அவளிடம் `முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள் / துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும் / இனியன துடித்தன, ஈண்டும் ஆண்டு என / நனி துடிக்கின்றன,ஆய்ந்து சொல்வாய்’ என்கிறாள். அதாவது, முதன்முதலாக இராமன் விசுவாமித்ர முனிவருடன் மிதிலைக்கு என்னைக் காணவருகையில் என் இடதுகண்ணும் தோளும் புருவமும் துடித்தன.

அதேபோல தம்பி பரதனுக்கு நாட்டை அளித்துவிட்டு வனம்புகுந்த நாளிலும், இராவணன் என்னை சிறைகொண்ட நொடியிலும் என் வலதுகண், தோள், புருவம் ஆகியன துடித்தன. ஆனால், தற்போதோ இடது கண் துடிக்கிறது. இடதுகண் துடித்தால் நன்மையென்று சொல்வார்களே அப்படி ஏதேனும் என் வாழ்வில் நடக்க இருக்கிறதா எனத் திரிசடையிடம் சீதை கேட்கிறாள். இதற்கு முந்தைய பாடலிலும் கம்பர் மிக அழகாக இச்சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என அஞ்சி அஞ்சி ஒவ்வொரு நொடியையும் அசோகவனத்தில் சீதை கழித்துக்கொண்டிருக்கிறாள். தன்னைத் தானே நொந்து, தற்காத்துக்கொள்ளும் வழியறியாத சீதைக்குப் பல்வேறு எண்ணங்கள் ஓடுகின்றன. தன் உடம்பிலும் மனத்திலும் நேரக்கூடிய மாற்றங்களைக் கவனித்து அதை யாரிடம் பகிர்வது என்றுகூட தெரியாத நிலை.

அந்த நிலையில்தான் திரிசடையின் கருணைக் கண்கள் அவளுக்கு உதவுகின்றன. `நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை / சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ? / பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல் / வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்’ எனத் தொடங்கிய கம்பர், அடுத்து `முனியொடு மிதிலையில்’ எனும் பாடலைத் தந்திருக்கிறார். நலம், சலம், பொலம், வலம் எனக் கம்பர் அடுத்தடுத்து வார்த்தைகளை அடுக்கியுள்ள விதத்தை அறிய, எத்தனைமுறை இப்பகுதியை வாசித்திருக்கிறேன் என்பதற்குக் கணக்கில்லை. ஒரு சின்ன நம்பிக்கையை வைத்து, காவியத்தின் ரசத்தைக் கூட்டிவிடும் அசாத்திய ஆற்றல் கம்பருடையது.

தமிழிலக்கிய பரப்பெங்கும் வலது, இடது கண்கள் துடிப்பதைப் பற்றிய சமிக்ஞையை அறியலாம். ஒருவரேபோல் அனைவரும் வலதை நன்மையாகவும் இடதைத் தீமையாகவுமே சொல்லியிருக்கின்றனர். இன்றைய அரசியலும்கூட வலதாகவும் இடதாகவும் பிரிந்தே கிடைக்கிறது. இந்தப் பிரிவிலும் பிளவிலும் எது நன்மை, எது தீமை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைப்பாடல்களில்  `இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ’ என்னும் பாடலும் ஒன்று.

பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் வெளிவந்த அப்பாடலில் `என்றும் இந்த பூமியிலே  / உனக்காக நான் பிறப்பேன்  / நீதான் என் துணைவனென்றால் / நூறு ஜென்மம் நானெடுப்பேன்  / விலகாத சொந்தமிது / பலகால பந்தமிது’ என்னும் வரிகள் வசீகரிப்பவை. உனக்காகப் பிறப்பேன், திரும்பவும் ஜென்மம் எடுப்பேன் என்பதெல்லாம் தேய்வழக்கான வரிகளென்று சிலர் கருதலாம். ஆனால், அவ்வரிகளை வாலி, நாட்டார் பாடலிலிருந்து பெற்றிருக்கிறார். `கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்’ எனும் நாட்டார் பாடலைக் கேட்டிருக்கலாம். அதே ஓசையில்  `செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும் / செத்த இடத்தனிலே செங்கழுநீர்ப் பூபூப்பேன் / மாண்டு மடிந்தாலும் வைகுந்தம் சேர்ந்தாலும் / மாண்ட இடந்தனிலே மல்லிகைப் பூப்பூப்பேன்’ என்பதாக நீளும் அப்பாடலின் அதிஅற்புதக் கற்பனையைக் கடன்வாங்கியே வாலி எழுதியிருக்கிறார். வாலி இன்னும் ஒருபடி மேலேபோய், இலங்கையின் இளங்குயிலை பல்லவியாக்கியதால் `அன்பு தெய்வம் கௌதமனின் / அருள் கூறும் ஆலயங்கள் /  வளரும் நம் உறவுகளை / வாழ்த்துகின்ற வேளையிது /  கடல் வானம் உள்ளவரை / கணம்தோறும் காதல் மழை / தமிழ் போலும் ஆயிரம் காலம் / திகட்டாத மோஹன ராகம்’ என்றிருக்கிறார்.

சிங்களமும் பெளத்தமும் கலந்திருக்கும் பூமியில் நிகழும் காதல் என்பதால் கெளதமனின் அன்பையும் தமிழையும் தவிர்க்காமல் இணைத்திருக்கிறார். இதே செய்தியைத் தாங்கிய `இம்மை மாறி மறுமை ஆயினும் / நீயாகியர் என் கணவனை / யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ எனும் குறுந்தொகைப் பாடலும்  நினைவுக்கு வருகிறது. ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்தும் தனித்துமே இயங்குகின்றன. அதுபடி, எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்ச்சியைக் காணமுடியும். குறிப்பிட்ட வட்டத்திற்குள் தேடிப்பார்த்தால் அனைத்தையுமே இலக்கியமென்னும் அகப்பையில் அள்ளிவிடலாம்.

மேலே குறித்த நாட்டுப்பாடலில் வரும் `மாண்டு மடிஞ்சாலும் வைகுந்தம் சேர்ந்தாலும்’ எனும் வரியை ஆர்.வி. உதயக்குமாரும் `உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது’ எனத் தனக்கேயுரிய சொற்சிக்கனத்துடன் `பொன்னுமணி’ திரைப்படத்தில் எழுதியிருக்கிறார். `நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா’பாடலில் வரக்கூடிய வரிகள் அவை. தமிழர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட திரைப்பாடல்களின் வழியே பன்னெடுங்கால வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் மீட்டெடுக்க முடியும். ஒரு திரைப்பாடலை ஊன்றிக் கேட்கும்போது நம்மையுமறியாமல் சில வரிகளைச் சிலாகிக்கிறோமெனில், அது நிச்சயமாக நம்முடைய தொன்மத்தின் மிச்சமே என்பதுதான் என் நம்பிக்கை.

இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் `எங்க ஊரு ராசாத்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற `பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாடல், எங்கிருந்தோ என் காதில் விழுகிறது. வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் கனக்கச்சிதமாக வெளிப்படுத்திய அப்பாடலின் இறுதிவரி, விண்மீனையும் விடிவெள்ளியையும் நினைவுபடுத்தியது. நினைவுகளைக் கழித்துவிட்டால் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்பர். எனக்கோ, தொன்மத்தைத் தவிர்த்துவிட்டால் கலைகளிலும் காவியங்களிலும்கூட ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.