வயலிசைப் பாட்டுகள்

தமிழ்த் திரையிசை நம்முடைய பாரம்பரியத் தமிழிசையின் நீட்சியாகப் பார்க்கப்பட்டாலும், அதில் பெரும்பகுதி நாட்டார் பாடல்களின் திரட்சியால் உருவாக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வேளாண்மை சார்ந்த வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அப்பாடல்களில், அசலான தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் தென்படுகின்றன. ஆரம்பத்தில் கர்நாடக இசையின் தாக்கத்திலிருந்து பாடல்களை இயற்றிய பாபநாசம் சிவனிடம் காணப்படாத அக்கூறுகளை பிற்காலத்தில் வந்தவர்களே மிகுதியாக எழுதியிருக்கின்றனர்.

திராவிட இயக்கம் வேர்விடத் தொடங்கிய பிற்பாடுதான் இந்த மாற்றங்கள் வந்தன எனச் சொல்வதற்கில்லை. அதற்கும் முன்பேகூட சில திரைப்படங்களில் வேளாண்மைப் பதிவுகள் படமாக்கப்பட்டுள்ளன. என்றாலும், பெரிய அளவில் அவற்றை முன்னெடுத்தவர்கள் திராவிட இயக்கக் கலைஞர்களே. நாட்டுப்புற இசையை முழுதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த பல பாடல்கள் திரையிசையிலும் இடம்பிடித்து, மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘வெள்ளை வெள்ளை கொக்குகளா / விரட்டியடித்தாலும் வாரீகளா’என்ற மதுரகவி பாஸ்கரதாஸின் பாடலேகூட, நாட்டார் பாடலின் தழுவலில் அமைந்த மேடை நாடகப் பாடல் என்பது பலரும் அறியாதது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, அவர் எழுதிய அந்தப் பாடலைப் பாடித்தான் நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தி, பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.

பாஸ்கரதாஸைத் தொடர்ந்து, திரையில் அதிகமான தொழிற்பாடல்களை எழுதியவராக உடுமலை நாராயண கவியைக் கருதலாம். அவர் காலத்தில் திராவிட இயக்கம் வளர்ச்சியின் முகப்பில் இருந்தது. எனவே, அவர் சகலத் தொழில்களையும் தொழிலாளர்களையும் முதன்மைப்படுத்தும் பாடல்களை எழுதிக் குவித்திருக்கிறார். வழக்கத்திலிருந்த கூத்துப் பாடல்களின் வடிவிலும், இன்னபிற நாட்டுப்புறச் சந்தங்களிலும் அவர் ஆக்கி அளித்திருக்கும் பாடல்களைப் பட்டியலுக்குள் கொண்டுவருவது எளிதல்ல. தாயத்து விற்பவரில் தொடங்கி தமிழகத்தில் அன்றைக்கு என்னென்ன தொழில்கள் இருந்தனவோ அத்தனை குறித்தும் அவர் ஒருவரே எழுதியிருக்கிறார். 1946இல் வெளிவந்த `வேலைக்காரி’ திரைப்படத்தில் `உழுது பலன் காப்போம் / ஏர் ஆநிரை உதவியென்றே மேய்ப்போம்’ பாடலில் ` உலகெங்கும் நலங்கொள்ள / பழுதின்றித் தொழில் பார்ப்போம் / உழவர் நாம் பசியென்ற பிணி தீர்ப்போம் என்று எழுதியிருக்கிறார்

தொழிலாளர் முன்னேற்றம், தொழிலாளர் நலன் சார்ந்த சிந்தனைகள் என அவர் எழுதிக்காட்டிய வழியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் தொடர்ந்திருக்கின்றனர். ‘கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ என விவசாயியின் பெருமைகளை மருதகாசி எழுதியிருக்கிறார் என்றால், ‘காடுவௌஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வேளாண்மை மக்கள் குறித்துச் சிந்தித்திருக்கிறார்.

இரண்டு பேரிடமும் வர்க்கச் சிந்தனை ஒருசேர இருந்தாலும், அவர்கள் அப்பாடல்களின் வழியே தமிழர்களின் ஆதாரத் தொழிலாக விவசாயத்தையே முதன்மைப்படுத்தினர். குறிப்பாக, 1957இல் வெளிவந்த ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்தில் மருதகாசி எழுதிய ‘மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி’ என்ற பாடல், வேளாண்மை சார்ந்த திரைப்பாடலுக்கு நல்ல உதாரணம். நாட்டார் பாடலின் சந்தங்களுக்கு ஏற்றவாறு மருதகாசி எழுதிய அப்பாடலுக்கான இசையை சிந்துபைரவி ராகத்தில் கே.வி. மகாதேவன் அமைத்திருக்கிறார். ராகங்களும் கீர்த்தனைகளும் மக்களிடமிருந்தே பெறப்பட்டிருக்கின்றன. சாஸ்திரிய சங்கீதமும் உயிர்களின் ஓசையிலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. தெய்வத்தைத் தொழவும் வீடுபேற்றை அடையவும் இசை மிகச்சிறந்த வழியெனினும், அவ்வழியை முன்கூட்டியே அறிந்தவர்களாக எளிய மக்கள் இருந்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்களைப் பட்டியலிட்டு, அந்தந்த ஊரின் சிறப்புகளை அப்பாடலில் அவர் குறித்திருக்கிறார். மனம்போன போக்கில் அல்லாமல், தாம் உணர்ந்ததையும் உணர்த்தப்பட வேண்டியதையும் திரைப்பாடலாக்கிய பெருமை அவருடையது. அடிப்படையில் அவருமே விவசாயியாகத் தம்மை வரித்துக்கொண்டவர் என்பதால் அப்பாடலின் வரிகள் மிக எதார்த்தமாக வெளிப்பட்டுள்ளன. திரைத்துறையிலிருந்து சிலகாலம் விலகி, விவசாயம் பார்த்தவராகவும் அவர் அறியப்படுகிறார். அந்த அளவிற்குத் திரைப்பாடலை மக்கள் மயப்படுத்திய மருதாசி, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை’ என்று ‘பிள்ளைக் கனியமுது’ திரைப்படத்தில் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உழவர்களுடைய பாடுகளையும் அன்றாடப் பிரச்சனைகளையும் திரைப்பாடலில் அவரும், அவருக்குப் பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் எழுதியபோதிலும்கூட, விவசாயத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. வேளாண்மையே இயற்கையானதுதான். என்றாலும், இயற்கை வேளாண்மை குறித்து நம்மாழ்வார் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளாலும், அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டு அதீதமான ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாலும் ஏற்பட்டுள்ள கேடுகளை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளன.

இயற்கையாகவே நம்முடைய பாரம்பரிய விதைகளில் இருந்துவந்த சக்தி, பசுமைப் புரட்சி என்னும் பெயரில் அழித்தொழிக்கப் பட்டுவிட்டது. இடு பயிர்களும் ஊடு பயிர்களும் கலந்து செய்யப்பட்ட விவசாயத்தின் இன்றைய நிலை, மண்ணைப் பாழ்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சிந்தனைகளைத் திரைப்பாடலில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதுகுறித்தெல்லாம் தற்போதைய திரைப்பாடல்கள் எழுதப்படுவதில்லை. காதலைப் பற்றி எழுதுவதும் பாடுவதுமே பிரதானமாகி, ஏனைய உணர்வுகளுக்கு இடமில்லாமல் போயிருக்கின்றன.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வெளிவந்த திரைப்பாடல்களில் மண்சார்ந்த பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. அந்நிய ஆட்சியிடமிருந்து நிலத்தை மீட்பதும் அந்நிலத்தில் தம் பாரம்பரிய விவசாய முறையைப் பின்பற்றி உயிர்களைக் காப்பதும் தேவையென்று கருதியிருக்கிறார்கள். குறிப்பாக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் மருதகாசிக்கும் இந்த எண்ணம் தீவிரமாக இருந்திருக்கிறது. இருவருமே காவிரிக் கரையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் உழவை தொழிலாக அல்லாமல், வாழ்வாகப் பார்த்தவர்கள் என்பதாலும் அவர்கள் இருவருடைய வரிகளிலும் வேளாண்மைத் தொழிலின் மேன்மைகள் இடம்பெற்றுள்ளன.

‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை’ என்னும் பாடலில், ‘வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா? / தலை வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா / வளர்த்துவிட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா / என் மனைக்கு வரக்காத்திருக்கும் நீ என் சொந்தம்மா?’ என்று தற்குறிப்பேற்ற அணியில் வளர்ந்துநிற்கும் நெல்மணிகளை மருதகாசி வர்ணித்திருக்கிறார். சிநேகபாவத்தோடு கதிரையும் வயல்வெளிகளையும் இத்தனை பாந்தமாக சிந்தித்த இன்னொரு திரைப்பாடலைக் காட்டுவதற்கில்லை. உவமைகளை யார் வேண்டுமானாலும் அடுக்கலாம். ஆனால், அதை வாழ்விலிருந்து கையாளக்கூடிய ஆற்றலை மருதகாசியிடமே காணமுடிகிறது.

தலை வளைந்து நிற்கும் கதிர் என்றுதான் அவர் எழுதியிருக்கிறார். தலை குனிந்து என்று எழுதவில்லை. குற்றம் செய்தால்தான் தலை குனிந்து நிற்க வேண்டும். கதிரோ குற்றமெதுவும் செய்யவில்லை. மாறாக, நன்மை செய்யவே வளர்ந்து நிற்கிறது. ஆகவே, நன்மை செய்ய வளர்ந்து நிற்கும் கதிரை, குனிந்து நிற்பதாகவோ அல்லது குற்றம் செய்ததாகவோ சொல்ல அவர் தயங்கியிருக்கிறார். ‘தலை வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா’ என்பதில், மருதகாசியின் சொற்பிரயோகம் மட்டுமல்ல, உழவில் அவருக்கிருந்த பிடிப்பையும் உணரமுடிகிறது. திரைப்பாடல்தானே, ஓசைக்கும் உவமைக்கும் ஏற்ப வார்த்தைகளை போட்டுவிடலாம் என அவர் யோசிக்கவில்லை. தம் அனுபவத்திலிருந்தே வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘கடவுளென்னும் முதலாளி’ பாடலில்கூட, ‘மண்ணிலே முத்தெடுத்துப் பிறர்வாழ / வழங்கும் குணமுடையோன் விவசாயி’ என்றே சொல்லியிருக்கிறார். சுரதா தலைமையேற்ற கவியரங்கம் ஒன்றில் அப்துல்ரகுமான் நெல்மணியை ‘நெல்முத்து’ என்று உவமை செய்திருக்கிறார். கருப்பு சிப்பியின் உள்ளே இருப்பது வெண்முத்து என்றால், மஞ்சள் சிப்பியின் உள்ளே இருப்பது நெல்முத்து என்பதாக அவர் செய்த அந்த உவமை அக்காலத்தில் பலரையும் ஈர்த்திருக்கிறது. ஆனால், அப்துல்ரகுமான் சிந்திப்பதற்கு முன்பே திரைப்பாடலில் ‘மண்ணிலே முத்தெடுத்துப் பிறர்வாழ’ என்று மருதாசி எழுதியிருக்கிறார்.

மண்ணிலே முத்தெடுத்து என்பதற்கும் நெல்முத்து என்று சொல்வதற்கும் அதிக வித்யாசம் இருப்பதாக எனக்குப் படவில்லை. நீரிலே முழ்கி முத்தெடுப்பது எப்படியோ அப்படித்தான் நிலத்திலே உழைத்து முத்தெடுப்பதும். வெண் முத்து, நெல்முத்து என்ற வார்த்தைகளை மருதகாசி பயன்படுத்தவில்லையே தவிர, முத்தெடுத்து என்ற சொல், ஒரே பொருளைத்தான் சுட்டுகிறது. அப்பாடல் வெளிவந்த காலத்தில், இருக்கின்ற முதலாளிகள் போதாதென்று கடவுளையும் முதலாளியாக்கும் வேலையை மருதகாசி செய்திருப்பதாக ஒருசிலர் விமர்சித்திருக்கின்றனர்.

திராவிட இயக்கச் சார்பில்லாத மருதகாசி, தமிழரசு கழகத்தின் முக்கிய பொறுப்பு வகித்தவர். அதனாலேயே அப்படியான விமர்சனத்தை அவருக்கு எதிராக சிலபேர் வைத்ததாகச் சொல்லப்படுகிறது. திரைப்பாடல்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனாலும், நம்முடைய வாழ்வையும் பண்பாட்டையும் சொல்லக்கூடிய பாடல்களை விமர்சிக்க வேண்டியதில்லை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை வேளாண்மைக்குப் பயன்படுத்த முயன்ற காரணத்தினாலேதான், இயற்கை விவசாயமே இல்லாமல் போயிருக்கிறது.

திராவிட இயக்கம் முற்றுமுழுக்க அறிவியலையும் அதனால் விளையும் நன்மைகளையும் நிபந்தனையில்லாமல் ஆரம்பத்தில் ஆதரித்திருக்கிறது. அதனால் திராவிட இயக்கப் படைப்பாளிகளிடமும் பாடலாசிரியர்களிடமும் மரபார்ந்த பயிர்த் தொழில் குறித்த சிந்தனைகள் வெளிப்படவில்லை. ‘சும்மா கெடந்த நெலத்தை கொத்தி’ என்று ஆரம்பிக்கும் ‘நாடோடி மன்னன்’ திரைப்பாடலை எடுத்துக்கொள்வோம். அப்பாடல், திராவிட இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டது. உண்மையில், பட்டுக்கோட்டையும் திராவிட இயக்கச் சார்புடையவர் அல்லர். ஆனாலும், அவர் அப்பாடலை எழுதக் காரணம் அடிப்படையில் அவருமே விவசாயியாக வாழ்வைத் தொடங்கியவர் என்பதால்தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தம் பாடல்களில் மிக நேர்த்தியாக விவாதங்களை வடிவமைத்திருக்கிறார். வழக்கில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தர்க்க நியாயங்களை வைப்பதில் அவருக்கு ஈடாக இன்னொருவரைச் சொல்வதற்கில்லை. ‘சும்மா கெடந்த நிலத்தை’ என்னும் பாடலில், வர்க்கப் புரட்சிக்கான கேள்விகளையும் பதில்களையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. இடதுசாரிப் பின்புலத்துடன் திரைப்பாடலை எழுதிய அவர், உழைக்கும் மக்களின் குரலாகவே பலபாடல்களில் வெளிப்பட்டிருக்கிறார். ‘மாடாய் உழைத்தவன் வாழ்க்கையிலே / பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்’ என்ற கேள்விக்கு, ‘அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே / சேர்வதனால் வரும் தொல்லையடி’ என்று பதிலளித்திருக்கிறார்.

முதலாளி, தொழிலாளி என்று பொதுப்படையாக மருதகாசி எழுதியதற்கு விளக்கவுரையைப் பட்டுக்கோட்டை தந்ததுடன் அதைப் பாடலின் ஊடே விவாதித்தும் இருப்பது கவனிக்கத்தக்கது. ‘பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கே / இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்’ என்ற கேள்வியை அவரே எழுப்பி, ‘கஞ்சி கஞ்சி என்றால் பானை நெறையாது / சிந்திச்சு முன்னேற வேண்டுமடி’ என்றிருக்கிறார்.

ஆணும் பெண்ணும் மாறி மாறி கேள்வியும் பதிலுமாகத் தொடரும் அப்பாடலில், தாம் சார்ந்த கொள்கையை எழுதக்கூடிய சாதுர்யம் அவருக்கு இருந்திருக்கிறது. வர்க்க பேதங்களையும் வர்ணாசிரம பேதங்களையும் திரைப்பாடல்களின் வழியே எத்தனையோபேர் எழுதியும்கூட, ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அவ்வப்போதாவது அப்படியான பதிவுகள் நம்முடைய திரைப்பாடல்களில் இருந்துவந்திருக்கின்றன. அதேசமயம், அறுவடைத் திருநாள் குறித்தோ அல்லது தைப் பொங்கலை முன்வைத்தோ சொல்லும்படியான பாடல்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை என்பது தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

தைப் பொங்கலைப் பற்றி வெளிவந்துள்ள பாடல்கள் இருபதோ முப்பதோ இருக்கலாம். அதுவும்கூட, அப்பாடல்கள் முழுக்க பொங்கலைப் பற்றி எழுதப்பட்டதல்ல. காதலனோ காதலியோ தம் காதலை வெளிப்படுத்தும் சூழலுக்காக தைமாதத்தையும் பொங்கலையும் இணைத்தே பாடியிருக்கிறார்கள். ‘தை பொறக்கும் நாளை / விடியும் நல்ல வேளை / பொங்கப் பான வெள்ளம்போல பாயலாம் / அச்சுவெல்லம் பச்சரிசி / வெட்டிவச்ச செங்கரும்பு / அத்தனையும் தித்திக்கிற நாள்தான்’ என்று ரஜினி நடித்த ‘தளபதி’ திரைப்படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, கமலஹாசனும் தம்முடைய ‘மகாநதி’ திரைப்படத்தில் பொங்கலுக்காக ஒருபாடலை இடம்பெறச் செய்திருக்கிறார்.

சட்டென்று நினைவிற்கு வரக்கூடிய ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்‘, ‘தைமாதப் பொங்கலுக்கு தாய்தந்த செங்கரும்பே’, ‘தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’, ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’, ‘ஐயாரெட்டு நாத்துக்கட்டு’, ‘நல்ல நல்ல நிலம் பாத்து’, ‘ஏத்தமய்யா ஏத்தம்’, ‘ஆசையில பாத்திகட்டி’, ‘தோப்போரம் தொட்டில் கட்டி’, ‘சம்பா நாத்து சார காத்து’, ‘மாரி மழை பெய்யாதோ’ என ஒருசில பாடல்களைத் தவிர, பொங்கல் குறித்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பாடல்களே வரவில்லை என்பதுதான் உண்மை. என் நினைவிலிருந்து தப்பிய இன்னும் சில பாடல்கள் இருக்கலாம். எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறதே என்பதுதான் என் கவலை.

உழவே உலகிற்கு அச்சாணி என்று எண்ணவும் எழுதவும் தெரிந்திருந்த நமக்கு, அது ஏன் திரைப்பாடல்களில் அதிக முக்கியத்துவத்தை பெறவில்லை என்பது யோசனைக்குரியது. உழுதுண்டு வாழ்பவரே வாழ்பவர் மற்றவரெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து செல்பவர்களே என்று திருக்குறள் சொல்கிறது. ஒவ்வொரு பொங்கலன்றும் ஒருடஜன் படங்களாவது திரைக்கு வருகின்றன. இந்தப் படங்களில் பலவும் தமிழர் வாழ்வைச் சொல்வதாக நம்பப்படுகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளில் இத்தனை லட்சம் படங்களில் தமிழரின் ஒரே பண்டிகையான பொங்கலுக்கு நூற்றுக்கணக்கில்கூட பாடல்கள் இல்லையென்பது தகவலல்ல. அதிர்ச்சி.

வலிந்து ஒரு பாடலை கதைக்குள் திணிக்கவேண்டுமென நான் சொல்லவரவில்லை. நம்முடைய பண்பாட்டு அணுகுமுறைகள் எந்த அளவுக்குக் கலைத்துறையிலும் திரைத்துறையிலும் இருக்கின்றன என்பதை எண்ணியே கவலைப்படுகிறேன். கரு. பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் ‘பொறந்திருச்சி காலம் பொறந்திருச்சி’ என்றொரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கும் கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்தக் கதாபாத்திரத்தின் வாயிலாக ஒரு விவசாயப் பாடலை இயக்குநர் கரு. பழனியப்பன் வைத்திருக்கிறார். அப்பாடலில் விவசாயக் கூலிகளின் வாழ்நிலை குறித்து எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஆணும் பெண்ணும் மாறி மாறி பாடக்கூடிய பாடலில், ‘அழகழகா அறுத்துக்கட்ட / அடிச்ச நெல்ல அளந்துகொட்ட / மரக்காவ கொண்டுவந்து இவநீட்ட / மாமன் / சிரிப்பால நொம்புதுங்க கொறமூட்ட’ என்று எழுதியிருக்கிறேன். வயல் விளைந்து அறுவடைக்கு காத்திருக்கும் சூழலில் பாடல் ஆரம்பமாவதாக இயக்குநர் சொல்லியிருந்ததால், அங்கிருந்து பாடலைத் தொடங்கி உழவின் பெருமைகளை அப்பாடலில் பதிவு செய்திருக்கிறேன். அப்பாடலில் நாட்டுப்புற இசையாளர் கே. ஏ. குணசேகரன் நடித்திருக்கிறார். முதல்முதலாக நாட்டுப்புறப் பாடல்களை இடதுசாரி மேடைகளிலும் ஒலிநாடாவிலும் கொண்டுவந்தவர் அவர்தான். நாட்டுப்புற இசையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதல் நபரும் அவரே. அவரைப் பின் தொடர்ந்தே மற்றவர்கள் அத்துறையில் ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

எதை எழுதச் சொல்வதானாலும். இயக்குநர் கரு. பழனியப்பன் அதுகுறித்து முன்பே தெரிந்துகொண்டுதான் எழுதச் சொல்வார். தரவுகளை அவரே சேகரித்துவிட்டு அதன் அடிப்படையில் பாடல்களை எழுதிவாங்குவது அவர் வழக்கம். விவசாயத்தின் சிறப்புகளை பாடலில் சொல்ல வேண்டுமென்றதுமே, கே. ஏ. குணசேகரனையும் இன்னபிறரையும் அழைத்து, நீண்ட கலந்துரையாடலை நிகழ்த்தினார். என்னையும் அக்கலந்துரையாடலில் பங்கேற்க வைத்து, அதன் பிறகே பாடலை எழுத வைத்தார். இசையமைப்பாளர் வித்யாசாகரும் அப்பாடலை அதீத பிரயத்தனத்துடன் அணுகியவிதம் வரவேற்கத்தக்கது. ‘பகலிரவா பாடுபட்டு / பக்குவமா நீரவிட்டு / கதிரறுக்கக் கொண்டுவந்தோம் அருவாள / ரேழி / குதிருக்குள்ள கொட்டிவைப்போம் மகசூல’ என்று நான் எழுதிய வரிகளில் ‘ரேழி’ என்ற சொல் இயக்குநரையும் இசையமைப்பாளரையும் வெகுவாகக் கவர்ந்தது.

திரைப்பாடல்களில் வேறு எங்கேயும் காணப்படாத அச்சொல்லை முதல்முறையாக நானே பயன்படுத்தியதாக கரு. பழனியப்பன் பாராட்டியது நினைவிலிருக்கிறது. 2006இல் வெளிவந்த அத்திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெறாததால் அப்பாடலும் அதிலுள்ள வரிகளும் கவனத்துக்கு வராமல் போய்விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளை முன்வைத்து வெளிவந்த ‘49ஒ’ திரைப்படத்திலும் என்னுடைய ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது.

அப்படத்தின் இயக்குநர் ப. ஆரோக்கியதாஸ். 2016இல் திரைக்கு வந்த அத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறார். மழையை வாழ்த்திப் பாடுவதாக பாடலின் சூழல் இருந்தாலும், விவசாயத்தின் தன்மையையும் விவசாயிகளின் துயரத்தையும் அப்பாடலில் சொல்ல முடிந்தது. ‘கட்டடங்கள் உருவாக / வயக்காட்ட அழிச்சாங்க / பட்டினியில் பலநூறு / விவசாயும் மரிச்சாங்க/ கண்ணக்கட்டி விட்டதுபோல தெரியாமலே / நாம / தட்டுக்கெட்டு நிக்கிறோமே / புரியாமலே / விவசாயம் மட்டும் / இல்லையின்னா / உயிரேதடா / உலகேதடா?’ என்று நான் எழுதிய வரிகளில் மொத்தக் கதையும் வெளிப்பட்டிருப்பதாக ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பலரும் பகிர்ந்துகொண்டனர்.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் காட்டுவதல்ல. மாறாக, அது அந்நாடு அதலபாதாளத்திற்குப் போய்க்கொண்டிருகிறது என்பதன் அறிகுறி. கலை இலக்கியச் செயல்பாடுகளில் குறிப்பிட்ட சமூகம், தமது வாழ்வின் அடிப்படைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதபோது இப்படியான கேடுகள் வருவதைத் தவிர்க்கமுடியாது.

உணவு அரசியல், உடை அரசியல், கலாசார அரசியல் என்பவை மேம்போக்காகப் பார்க்கக்கூடிய விஷயங்களில்லை. நாகரிகத்தினாலும் நுகர்வினாலும் நாம் அதைப் பொருட்படுத்தத் தவறுவோமேயானால் அதன் விளைவுகளை ஆபத்துக்களாக அனுபவிக்கநேரும். அத்தகைய சூழலை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய நாட்டார் பாடல்களின் தொடர்ச்சியாகத் திரையிசையை வளர்க்கவேண்டிய கட்டாயம், முன்னெப்போதைக் காட்டிலும் தற்போது அதிகரித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நாட்டார் பாடல் தொகுப்புகளை உள்வாங்கி, அதிலிருந்து வார்த்தைகளையும் இசையையும் உருவாக்கிய இளையராஜாவின் ஆளுமையை இந்த இடத்தில் நினைவுகூரலாம்.

ஒருமுறை அவரிடம் பாடல் எழுதுவதற்காகப் போயிருந்தபோது அவர் மேசையில் இரண்டு நூல்கள் இருந்தன. ஒன்று, கி.வா. ஜகந்நாதன் தொகுத்து, தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக வந்துள்ள ‘மலையருவி’ நூல். மற்றொன்று, நா. வானமாமலை தொகுத்த ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ நூல். இரண்டிலும் உள்ள பாடல்கள் அனைத்தையும் அவர் வாசித்திருக்கிறார். அப்பாடல்களில் விரவியிருந்த உத்தி முறைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு எழுதும்படி அறிவுறுத்தினார். மக்களுக்கான இசையெனில் அது, மக்களிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும் என்கிற புரிதலை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன். எளிய சொற்களில் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தலாம் என்கிற முடிவுக்கு என்னைத் தள்ளியதும் அந்நூல்களே.

மருதகாசியும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இயல்பிலேயே கிராம வாழ்வுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டிருந்ததால் அவர்களால் மக்களின் உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்க முடிந்திருக்கிறது. அக்காலத்திய இசையமைப்பாளர்களும் தம் மெட்டுகளை கிராமியப் பாடல்களின் தாக்கத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். மனத்தடை எதுவும் இல்லாமல், கிராமத்துப் பாடல்களில் தென்படும் ராகங்களை அடிப்படையாக வைத்து அவர்கள் உருவாக்கிய எத்தனை எத்தனையோ பாடல்கள் இன்றும் மக்களால் வரவேற்கப்படுகின்றன. ஆனால், தொண்ணூறுகளுக்குப் பிறகு அந்த மரபு அடியொடு மறுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டார் பாடல்களையும் சாஸ்திரிய இசையையும் விடுத்து, இந்துஸ்தானிக்குத் தாவிய ஏ.ஆர். ரகுமானின் இசை முயற்சிகள் வேரே இல்லாத பாடல்களுக்குக் காரணமாயின. அசலான தமிழர் பண்பாட்டின் அடிப்படைகளை உணராமல் அவர் உற்பத்தி செய்த பாடல்கள் உலக அரங்கில் பாராட்டப் பெற்றாலும், கிராமத்து மனிதர்களின் ஈர்ப்புக்கு உரியதாக ஆகாமல் போயிருப்பதை அறியமுடிகிறது. மண்வாசனை இயக்குநர்களும் மக்கள் இசைக் கலைஞர்களும் சேர்ந்துதான் இழந்துவிட்ட நம்முடைய பாடல்களை மீட்க வேண்டும். ஒரு பாடலாசிரியனாக நான் விரும்புவதும் அதுதான். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டு அதன்பின் கிடைக்கக்கூடிய புகழாலும் பெருமையாலும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதே என் எண்ணம்.

மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்.