மூன்று நூல்கள்; மூன்று கோணம்

மீபத்தில் மூன்று நூல்களை வாசித்தேன். ஒன்று, தோழர் ஆர். பட்டாபிராமனின் `தோழர் காந்தி’. மற்றொன்று தோழரும் பத்திரிகையாளமான கோவி. லெனின் எழுதியுள்ள `காந்தி தேசம்’. மூன்றாவது நூல், `காந்தியின் தீண்டாமை’ எனும் தலைப்பில் மருத்துவர் நா. ஜெயராமன் எழுதியது. மூன்றுமே என்னை வெகுவாகக் கவந்தன.

பட்டாபிராமன் தம்முடைய தீவிர வாசிப்பிலும் தேடலிலும் கண்டடைந்த விஷயங்களை நூலில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். தர்க்கத்தைக் தாண்டி எது ஒன்றையும் தம்முடைய புரிதலில் இருந்தே முன்வைக்கிறார். காந்தியே ஆனாலும், புனிதப்படுத்தும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. நூலை வாசித்ததும் மேலும் சில புரிதலை நோக்கி நகரத் தோன்றிற்று.

அவருடைய `காந்தியைக் கண்டடைதல்’ நூலின் சாராம்சம் இதிலும் வருவதை உணரமுடிந்தது. என்றாலும், சோர்வை ஏற்படுத்தவில்லை. அடுத்து லெனின் ஆக்கியளித்துள்ள `காந்தி தேசம்’. ஓராண்டுக்கும் மேலாக நக்கீரன் பத்திரிகையில் கேள்வி பதில்களாக எழுதியவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். மாவலி என்னும் பெயரில் எழுதுபவரும் அவரே என்பதை பலர் அறிந்திருக்கலாம். அந்நூலில் காந்தியை முன்வைத்து இன்றுவரை விமர்சனத்திற்கு உள்ளாகும் பல பிரச்சனைகளை நாகரீகமான பதங்களில் தெரிவித்திருக்கிறார்.

பெரியாருடனும் அம்பேத்கருடனும் அவர் கொண்டுள்ள பற்றைப் பிரதானப்படுத்தி, காந்தியைப் பார்க்கவில்லை என்பதுதான் அவரின் தனித்துவம். அதேசமயம் அவர், காந்தியின் முடிவுகளில் தென்படும் முரண்பாடுகளைத் தொட்டுக்காட்டாமல் இல்லை.ஓர் ஆளுமையையோ அரசியல் தலைவரையோ வியந்தோதும் தன்மையிலிருந்து விலகி விமர்சனப்பூர்வமாக அணுகியுள்ள நூல். மருத்துவர் ஜெயராமன் முன்வைக்கும் வாதங்கள், தவிர்க்கமுடியாதவை.

எது ஒன்றையும் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே நல்லதும் கெட்டதும் எனத் தெரியாமலில்லை. ஒருவரை முன்னிறுத்தி செய்யப்படும் காரியங்களுக்குப் பின்னேதான் வரலாற்றின் தொடர்ச்சி இருக்கிறது. அந்த அவரின் தொடர்ச்சியைப் பற்றுவதும், விடுவதும் காலத்தின் தேவையை உத்தேசித்தே நிகழ்கிறது.

காந்தி இன்றைய தேவையாயெனில், காந்தியும் தேவை என்பதுதான் என் பதில். அவர் நிகழ்த்திய மாற்றங்களும் ஏற்றங்களும் கூடுதல் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவர் மட்டுமே எல்லாமுமாக ஏற்பதில் சிக்கலுண்டு.

சநாதன எதிர்ப்பில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானவையா எனும் கேள்வி, அவரைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது. அத்துடன், சிந்தனை ஓட்டத்திலும் செயலூக்கத்திலும் அவர் காலத்து ஆளுமைகள் ஒவ்வொருவருமே ஆகச்சிறந்த பணிகளை ஆற்றியுள்ளனர்.

வழிகள் வேறாயினும், வந்து சேர்ந்துள்ள இடம் ஒன்றே என்று புரிந்துகொண்டால் குழப்பமில்லை. வாசிப்பின் ஆரம்பக் கட்டத்தில் நமக்குத் தோன்றும் அபிப்ராயங்கள், பின் நாள்களில் மாறிவிடுவது இயற்கையே. நான் என் நம்பிக்கைகள்மீது அதீத பற்றுதிகள் வைப்பதில்லை. அனைத்து வகையான சிந்தனைகளுக்கும் இடமளித்து, அவற்றை ஓரளவேனும் புரிந்துகொள்ளவே முயற்சித்து வருகிறேன். இம்மூன்று நூல்களும் மூன்றுவிதமானக் கோணங்களைத் தருகின்றன. எல்லாத் தத்தவங்களும் பரிசீலனைக்கு உட்பட்டவை எனும் தளத்திலிருந்து மூன்று நூல்களையும் வாசிக்கலாம்.