தமிழிசை வளம்

தமிழிசையைத் தெரிந்துகொள்ள தொடங்கியதில் இருந்தே நாளும் ஓர் ஆச்சர்யத்தைக் கண்டுவருகிறேன். என்னுடைய திரைப்பாடல் முயற்சிகளில் அவற்றை எப்படியேனும் புகுத்துவிடும் ஆர்வம் மேலிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை. கடந்த வாரத்தில் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் எழுதி 1985இல் வெளிவந்த `தமிழிசை வளம்’ நூலை முழுமையாக வாசித்தேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ் இசைத்துறை வளர வழிகள், தொல்காப்பியம் சுட்டும் இசையியல், தொல்காப்பியம் சுட்டும் இசைக்கால அளவுகள், பஞ்சமரபு – சங்க இசை நூல், இசை கற்பிக்கும் முறைகள், மிடற்றொலியியல், பாடுங்கால் ஏற்படும் தீயோசைகள், பாடுங்கால் ஏற்படும் உடற்குற்றம், குரல், துத்தம் முதலிய ஏழிசைப் பெயர்க் காரணம், இன்றைய சட்சமெ பண்டைய குரல், இன்றைய இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொற்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ் சொற்கள், பண்ணுப் பகுப்பு இயல், சாமகானந்தான் அனைத்திந்தியாவின் தொன்மைப் பண்ணா?, முல்லைப்பண் ஆராய்ச்சிகளும் அவற்றின் முடிவுகளும், வில்யாழ் பற்றிய சில புதுச் செய்திகள், புல்லாங்குழல், தளத்துள்ளுமம், மத்தளச் சொல்லும் பொருளும், ஞானசம்பந்தரும் தாளமரபும், மு.ஆபிரஹாம் பண்டிதரின் முதன்மை இசைத்தொண்டு, விடுதலைப்போர் புரிந்த மதுரைப் பாவலர் பாசுர தாசர், மதுரை மாரியப்ப சாமிகளின் மாட்சி, ஞா.தேவநேயரின் நற்றமிழ் இசை ஆய்வு என ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனையோ செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதே பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன். இசைக்கேற்ப ஒரு மொழியை வடிவமைத்து, இலக்கணமும் வகுத்தளித்துள்ள நம்முடைய பெரியோர்கள் வியப்பின் விளம்பில் நிறுத்துகிறார்கள். தமிழை இனியும் எவராவது அறிவியலுக்குப் புறம்பான மொழியென்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அசையாகவும் சீராகவும் அவர்கள் நிகழ்த்தியுள்ள அற்புதங்களுக்கு அளவில்லை. மாத்திரை அளவுகளாக இசையையும் கணக்கிட்டுக்கொள்ள, எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பெருமிதப்படவைக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் வாசித்த புத்தகங்களின் துணையுடன், அனைவருக்கும் புரியும்விதத்தில் ஒரு நூலை ஆக்கித் தருவேன்.

முடியுமானால் அவ்வப்போது நான் எழுதிவரும் புத்தகங்களை நீங்களும் வாசித்துவந்தால் மகிழ்ச்சி. விரைவில் yugabharathi.com என்னும் புதிய இணையதளம் வரவுள்ளது. என்னுடைய திரைப்பாடல்கள், நூல்கள், காணொலிகள், நேர்காணல்கள் என அனைத்தையும் அவற்றில் பதிந்திருக்கிறோம். ஏறக்குறைய பணிகள் முடிவடைந்த நிலையில், என் பிறந்த நாளான டிசம்பர் இரண்டாம் தேதி இணையதளம் தோழர்களின் பயன்பாட்டுக்கு வரக்கூடும். தமிழிசைக் குறித்த நூல் பணிகளுக்கு எனக்குப் பேருதவி புரிந்துவரும் தோழரும் பேராசிரியமான சுடர்வழிக்கும், பங்குத்தந்தை சோ.பிலிப் சுதாகருக்கும் அன்பும் நன்றியும்.

%d bloggers like this: