பேராசிரியர் கோ. ரகுபதியின் நூல்கள்

ரசியல், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசிப்பது என் வழக்கம். கடந்த இரண்டு மாதத்தில் அவ்விதம் வாசித்த நூல்களில் என்னை அதிகமும் கவர்ந்த நூல்கள் பேராசிரியர் கோ. ரகுபதியினுடையவை.

இன்றைக்கு பேசப்படும் மிக முக்கிய விவாதங்களுக்கான தகவல்களை, சார்போ சாய்வோ இல்லாமல் எழுதும்போக்கை அவரிடம் காண்கிறேன். ஒரு சின்ன பத்தியை விமர்சனமாக வைத்தாலும்கூட அதற்கான ஆதாரங்களைக் காட்டி, அந்தந்த பக்கத்திலேயே மூலநூலின் தகவல்களையும் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தலித் அரசியலின் தேவையை முன்வைத்தே அவருடைய பெரும்பாலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ஆளுமைகளாக கொண்டாடப்படும் பலர், சநாதனத்தைக் கைவிடாமல் எளிய மக்களை எத்தனை வெறுப்புடனும் கசப்புடனும் பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர் நூலை வாசித்தால் விளங்கிவிடும். தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக தீண்டாமையை ஒளித்துச் செய்யப்பட்ட மேற்பூச்சுகளை அவர் தம் எழுத்துகளால் கலைத்து விடுகிறார்.

பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆய்வுமுறையை மேற்கொள்ளும் கோ.ரகுபதி, எனக்கு நேரடி அறிமுகமில்லை. எனினும், அவருடைய நூல்கள் ஒருவித நெருக்கத்தையும் தோழமையையும் ஏற்படுத்துகின்றன. கல்விப்புலத்தில் செயலாற்றிவரும் ஒருவர், தீவிர அரசியலை முன்னெடுக்கும் கட்டுரைகளைத் துணிச்சலாகவும் துல்லியத்துடனும் எழுதிவருவது ஆச்சர்யமளிக்கிறது.

அம்பேத்கரின் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்டோரின் தரப்பிலிருந்து எழுதுவதால், ஏனைய தலித் ஆய்வாளர்களைவிட ரகுபதியின் எழுத்துகளில் கூடுதல் உண்மையைத் தரிசிக்கிறேன். தோழர்கள் அவருடைய நூல்களை அவசியம் வாசிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். `தலித்தும் தண்ணீரும்’ என்னும் தலைப்பிலான நூலில் புனிதம், தீட்டு, சுத்தம் போன்ற சொற்களால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் நிலைமையை விவரித்திருக்கிறார். தனிக் குளமும் கிணறும் அமைத்து அவற்றை தலித்துகளின் பயன்பாட்டுக்குச் சமர்பிப்பதை அல்லது சமர்பித்ததை சமத்துவத்தின் முன்மாதிரியாக அவர் கருதவில்லை. கயமை நிறைந்த சநானத்திற்கு உதவிபுரியும் செயலாகவே அக்காரியத்தைப் பார்க்கிறார்.

காந்தியின் சநாதன அரசியல்’, பறையன் பாட்டு’,காவேரிப் பெருவெள்ளம் 1924’, இரண்டை மலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ `ஆனந்தம் பண்டிதர்: சித்த மருத்துவரின் சமூக மருத்துவம், தலித் பொதுவுரிமைப் போராட்டம்’ என ஒவ்வொரு நூலுக்கும் அவர் செலவழித்துள்ள நேரமும் ஆய்வுமுறையும் அளவில் பெரியவை.

ஒரே வாசிப்பில் அனைத்து நூல்களையும் வாசித்துவிடலாம். ஆனால், அவ்வாசிப்பு தரும் விரிவும் அறிவும் ஒரு நூற்றாண்டின் தேவையைப் பிரதானப்படுத்துகிறது. விரைவில் பேராசிரியர் ரகுபதியைச் சந்தித்து உரையாடுவேன் என நம்புகிறேன். காலத்தை தம்மை நோக்கி திருப்பும் ஆற்றலுடைய ஆய்வாளர்கள், தமிழ் மண்ணில் இன்னமும் இருக்கிறார்கள் என்னும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

எழுதவும் வாசிக்கவுமான நடைமுறையில் கரைந்துபோதலே ஆனந்தம். தோழரும் பேராசிரியருமான கோ.ரகுபதிக்கு வாழ்த்தும் வணக்கங்களும்.

%d bloggers like this: