சிங்கார சுவைதரும் சங்கீதமே

ரசியல் ஆளுமைகளைத் தட்டையாகப் புரிந்துகொள்ளும் பலரை நானறிவேன். அரசியலைத் தாண்டி அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோலவும், தம்மைவிட அவர்கள் ஒருமாற்றுக் குறைவே என்பதுபோலவும் எழுதியும் பேசியும் இன்பம் காண்பது ஒருவித நோயன்றி வேறில்லை.

`அண்ணா: அறிவு கொடை’ என்னும் தலைப்பில் 64 தொகுதிகளை `தமிழ்மண் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது. புலவர் செந்தலை ந. கவுதமன் தொகுத்தளிக்க, மதிப்பிற்குரிய ஐயா கோ. இளவழகன் பதிப்பித்திருக்கிறார். மிக அரிய காரியம்.

அண்ணாவின் எழுத்து, பேச்சு, ப்டைப்பு, வரலாறு எனப் பல்வேறு தலைப்புகளில் முழுவதுமாக வந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் தேவையையும், காலத்தின் பொருத்தப்பாட்டையும் கவனத்தில் கொண்டே அத்தொகை நூலைகளைத் தந்திருக்கிறார்கள்.

அந்நூல்களை எனக்கு அன்புளித்த கவிக்கோ மன்ற முஸ்தபாவுக்கு என் வாழ்நாள் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். நூல்கள் மொத்தத்தை வாசித்து, என் பார்வையில் அண்ணாவை எழுதும்படிக் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே தமிழ் இந்து தயாரித்தளித்த `மாபெரும் தமிழ்க் கனவு’ தொகுதியில் விடுபட்ட பலவும் இத்தொகுதியில் கிடைக்கின்றன.

நூலை ஒவ்வொன்றாக புரட்டுகையில் சிதம்பரம் ஜெயராமன் அண்ணாவைப் பற்றி எழுதிய பதிவு ஒன்று கண்ணில் பட்டது. அண்ணா திரைக்கலைமீதும் திரையிசைமீதும் அலாதியான ஆர்வமுடையவர். சொல்லப்போனால், அவர் வருகைக்குப் பின்னரே திரைப்படங்கள் மக்கள் அரசியலைப் பேசின. எப்போதும் பாடல்களைக் கேட்டு, ரசித்து அதைப் பிறருக்கும் கடத்துகின்ற பழக்கம் அவருக்குண்டு.

அப்படி ஒருமுறை கே.பி. காமாட்சி சுந்தரத்தின் சிங்கார சுவைதரும் சங்கீதமே / உலகெங்குமே இன்பமே’ பாடலைச் சிதம்பரம் ஜெயராமனைப் பாடச் சொல்லியிருக்கிறார். அவரும் பாடிக் காண்பிக்க, `அனுபல்லவியை மீண்டும் ஒருதரம் பாடு’ என்றிருக்கிறார்.

`மங்காத எழுசுரம் தன் கார்வையில் பிறந்து / மாறி மாறி வெகு இராகங்களாய் சிறந்த’ என்பதே அனுபல்லவி வரிகள். அவரும் இரண்டுமுறை பாடியிருக்கிறார். ஆனாலும், அண்ணாவுக்கு ஜெயராமன் பாடியதில் திருப்தியில்லை.

`மாறி மாறி வெகு ராகங்கள் சிறந்த’ எனும் இடத்தில் இராகங்களை மாற்றிப் பாட வேண்டாமா’ என்றதும்தான் ஜெயராமனுக்குத் தன்னுடைய பிழையே பிடிபட்டிருக்கிறது. எதையும் நுட்பமாக ரசிப்பது, தேர்ந்த விதத்தில் புரிந்துகொள்வது என்பதுதான் கலைக்கு நாம் அளிக்கும் கெளரவம்.

கலைக்கு என்றில்லை. எது ஒன்றையுமே அடிப்படையுடன் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழிசையின் சுவையும் அழகும் வார்த்தைகளில் உள்ளன. அதை உரியவகையில் பாடாவிட்டால் தித்திப்பில்லை. ராகமும் வார்த்தையும் இயைந்து வருமிடங்களில் பாவங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிக்க வேண்டும். அதுவல்லாது, வெறும் ஆர்வத்தில் பாடினோமென்றால் பாடலுக்கான அர்த்தம் பாழ்பட்டுவிடும்.

தமிழிசைக்கு அண்ணாவும் பெரியாரும் நீட்டிய ஆதரவுக் கரத்தைப் பற்றிக்கொண்டு மேலேற முயற்சித்து வருகிறேன். கலைகளை அரசியல்மயப்படுத்துவதிலும், அக்கலைகளுக்கு உள்ளே இருக்கும் அரசியலை வெளிப்படுத்துவதிலும் திராவிட இயக்கம் தனித்துத் தெரிகிறது. வைதீக பஜன்களைவிட, வரலாற்றை இசையிலும் கட்டியெழுப்பிய இன்னொரு பொற்காலம் வருமென்றே நம்புகிறேன்.

%d bloggers like this: