பூக்கும் காலத்தின் மலர்ச்சிகளில் ஒன்றாக நேற்றைய தினம் அமைந்தது. `உழவர் சத்தியாகிரகம்’ உட்பட பல கட்டுரைகள் வாயிலாகவும்இன்றைய காந்திகள்’ நூல் மூலமும் என்னை அதிகமும் ஈர்த்த பாலசுப்ரமணியன் முத்துச்சாமியைச் சந்தித்தேன். நான்கைந்து மணிநேர நீண்ட உரையாடல், அகம்விரிந்த பூவாக அடிநெஞ்சில் வாசம் பரப்பிற்று. தூரதேசத்தில் இருந்தே எழுத்தால் என்னை ஆட்கொண்ட அவர், நேரிலும் அன்பைப் பகிர்ந்தது ஆச்சர்யமில்லை.
நெருக்கமான சிநேகிதத்தை அது நின்றுவிட்டுப்போன காலடிச் சுவட்டிலேயே கண்டுவிடுகிற காதலனைப் போல அத்தனைப் பரிச்சய முத்திரைகளை அவர் வார்த்தைகளிலும் வாழ்த்துகளிலும் பெற்றேன். பேச்சுவாக்கில் தோழர் நல்லகண்ணுவைச் சந்திக்கலாமே எனத் தோன்ற, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அருகே இருந்த தோழர் வீட்டு முன் அறையில் முகாமிட்டோம். சந்திப்புச் சக்கரையில் மேலும் இனிப்பின் சுவையேற, மகிழ்ச்சியின் மலைமுகட்டில் அமர்ந்துகொண்டோம்.
அனுபவமும் அரசியல் தெளிவுமுள்ள மூதய்யன் நல்லகண்ணுவின் மெல்லிய பேச்சொலியில் மேகக்கூட்டங்கள் விண்மீன்களை எங்கள் இருவர் மீதும் வாரி வாரித் தூவின.நற்தருணங்களே வாழ்வின் பேறு. நேற்றுபோல் மற்றுமொரு நாள் கிடைக்க காலத்தைப் பிரார்த்திக்கிறேன். இதுவரை பாலசுப்ரமணியனை சார் என்றே அழைத்துவந்தேன். என்னவோ தெரியவில்லை, இனி அவரை அண்ணனென்று அழைக்கத் தோன்றுகிறது.
அண்ணனுக்குத் தம்பியாக இருப்பதில் கிடைக்கிற சுகம் இருக்கிறதே அதை எழுத்தில் புரியவைப்பது எளிதல்ல. பெரியோரை (பெரியாரை) வியத்தலும் தகுமே. பாலா அண்ணனுக்கு முத்தங்கள்.