நவீன மலாய் இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் முன்ஷி அப்துல்லாஹ் பற்றிய மிக அரிய நூலை நாகூர் அப்தும் கையூம் `சொல்ல மறந்த வரலாறு’ என்னும் தலைப்பில் தந்திருக்கிறார். ஒரு சாமானியன் சரித்திர நாயகனான கதை என்பதாகத்தான் நானுமே அந்நூலை படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அந்நூலில் கையூம் தந்திருக்கும் தகவல்களோ ஆச்சர்யப்படுத்துகின்றன. அந்நூல், ஒரு நபர் பற்றிய வரலாறு என்பதிலும் பார்க்க, பல ருசிகரத் தகவல்களை அளிக்கிறது.
ஆயிரத்து எண்ணூறுகளில் மலேசியவுக்கு சென்ற முன்ஷி, மலாய் மொழியைப் படித்து பாண்டித்யம் மிக்க அறிஞராக உயர்ந்திருக்கிறார். மலாய் இலக்கியத்திற்கே மறுமலர்ச்சியை உண்டு பண்ணிய ஒருவராக உலகமே போற்றும் அவர், நாகூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் அவருடைய பாட்டனார் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் பலர் அறியாதவை. இளவயதிலிருந்தே இலக்கிய ஈடுபாடுடையை முன்ஷி, மலாய் இலக்கியத்தின் அற்புதர்களில் ஒருவர்.
பத்திர எழுத்தராக பணியாற்றிய அவர், காலப்போக்கில் காலத்தால் அழியாத அறிஞர்கள் வரிசையில் வைத்து ஆராதிக்கப்படுகிறார். எழுத்தினால் உயர்ந்த ஆற்றலே முன்ஷியின் பெருமை. எழுத்து வாழ்வில் அவர் எதிர்கொண்ட சவால்களும் கொஞ்சமல்ல. பைபிளை மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்ய கிறிஸ்த்தவ மிஷினரிகளுக்கு உதவியர் என்பதால் அவர் அதீதத் தூற்றலுக்கு ஆளாகியிருக்கிறார். எனினும், அத்தூற்றல்களை அவர் பொருட்படுத்தாமல் மதங்கள் எதுவானாலும் அவை வலியுறுத்தும் செய்திகள் மக்களை சென்றடைய வேண்டுமென விரும்பியிருக்கிறார். எழுத்தாளனுக்கு மதமோ, சாதியோ, இனமோ, மொழியோ ஒரு விஷயமே இல்லை என்றுதான் அவரும் செயலாற்றியிருக்கிறார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அவருக்குத் தரப்படும் அங்கீகாரம், எழுத்துக்குக் கிடைத்த வெகுமதியே எனலாம்.
`ஹிகாயத் அப்துல்லாஹ்’ என்னும் பெயரில் அவர் எழுதிய சுயசரிதை நூல் இன்றும் மலேசியாவில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. நாட்குறிப்புபோல எழுதப்பட்ட அச்சுயசரிதை நூலில், மலேசியாவின் அக்காலத்தைய பழக்க வழங்கங்கள் பதியப்பட்டுள்ளன. முன்ஷி அப்துல்லாஹ் பற்றி நல்லதும் அல்லதுமாக இணையத்தில் கொட்டிக் கொண்டிருக்கின்றன. எது தக்கது, எது தகாதது என்பதெல்லாம் அவரவர் சிந்தனைக்கும் அரசியலுக்கும் விட்டுவிடலாம்.
என்னுடைய நண்பர் அப்துல் கையூம் அறியவேண்டிய ஒருவரை, அழகுத் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். முன்ஷியின் எழுத்துகளை தமிழிலும் கொண்டுவர வேண்டிய கட்டாயமிருக்கிறது. அவர் தமிழிலிருந்து மலாய் மொழிக்கு சிலவற்றை பெயர்த்திருக்கிறார்.
குறிப்பாக, இன்று மலேசிய மண்ணில் புழக்கத்திலுள்ள பல பஞ்ச தந்திரக் கதைகள் இங்கிருந்து அவர் வழியே அங்கு போனதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் இப்படி பலப்பல சுவாரஸ்யங்களை, `சொல்ல மறந்த வரலாறு’ நூல் சொல்கிறது. தமிழை வேராகக் கொண்ட முன்ஷி என்னும் பேராளுமை, தமிழ் நிலப்பரப்பிலும் பேசப்பட வேண்டியவர். போற்றிப் புகழ்ந்து கொண்டாடப்படவேண்டியவர்.