மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த astitva திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ஒரு குடும்பப் பெண்ணின் தனிப்பட்ட ஆசாபாசங்களை முன்னுறுத்திய கேள்வி எழுப்பிய மிக அருமையான மராத்தித் திரைப்படம். ஒரே நேரத்தில் இந்தியிலும் வந்திருக்கிறது. எதார்த்தமான தளத்திலிருந்தே கதைத் தொடங்குகிறது. எனினும், அக்கதையின் போக்கு இன்றைக்கும் பொருந்தக்கூடிய விவாதங்களை உள்ளடக்கியது. திருமணமான பெண்ணுக்கு இந்திய சமூகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் என்னென்ன என்று விவரித்து, ஷண நேர தடுமாற்றத்தில் கதாநாயகியான தபு எந்த எல்லைக்கு நகர எத்தனிக்கிறாள் என்பதை இயக்குநர் தத்ரூபப்படுத்தியிருக்கிறார். ஆண்கள் என்றாலே ஏதோ ஒருவகை ஆதிக்கத்தைச் செலுத்துபவர்களே என்பதை நுட்பமான வசனங்கள் வழியே உணர்த்தியிருக்கிறார்.
பெண்ணுக்கென்று தனியான விருப்பு, வெறுப்புகள் தேவையில்லை எனும் குரூரச் சமூகத்தில் அத்திரைப்படம் காத்திரத்துடன் கல்லை எறிந்திருக்கிறது. காதலனோ, கணவனோ யாராயிருந்தாலும், கக்கடைசியில் பெண்ணை தன்னுடைய உரிமைப் பொருளாகக் கருதியே அன்பும் கருணையும் காட்டுகிறான் எனும் இடமிருக்கிறதே அதை நாள் முழுக்க விவாதிக்கலாம். இன்று என் தோழர்களுக்கு இப்படத்தைப் பரிந்துரைக்கிறேன். விஜய் அரோரா காமிராவும் ராகுல் ரணடேயின் இசையும் படத்தை மேல்நோக்கியிருக்கின்றன.
இம்மாதிரியான கருத்தாழம் மிக்க படங்களுக்கும் ஒருகாலம்வரை தேசியவிருது கொடுத்திருக்கிறார்கள். கலையென்பது வாழ்வைப் பிரதிபலிக்கும்போதுதான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இப்படியொரு திரைப்படம் தமிழில் இனியேனும் சாத்தியமாகலாம்.