முனாஜாத்துகளை முன்வைத்து

பூமிக்கடியிலும் வானத்திற்கு அப்பாலும் பொக்கிஷங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், சூஃபி கவிஞரான நிஜாமியோ பொக்கிஷத்தின் சாவி, சூஃபியின் நாக்கில் இருக்கிறது’ என்கிறார். ஒருமொழியிலிருந்து நாம் அர்த்தத்தைப் பெறுகிறோமா ஞானத்தைப் பெறுகிறோமா என்பது நம்முடைய மன அமைப்பைப் பொருத்தது.

ஒருவர் எதை, எங்கே, எப்படி, எப்போது சொல்கிறார் என்பதை வைத்துத்தான் அவர் ஆளுமையாகவும் அடிப்படை அறிவுடையவராகவும் மதிக்கப்படுகிறார். தனக்குத் தோன்றியதை எந்தச் சல்லடையுமில்லாமல் அப்படியே கொட்டிவிடுகிறவர் கவனிக்கப்படலாமே தவிர, காலத்தின் பாதையில் நின்றுநிலைக்க வழியே இல்லை.

இந்த இடத்தில் என்னை அதிகமும் கவர்ந்த ராபியா பஸ்ரி பற்றிச் சொல்லத் தோன்றுகிறது. அவர், கி.பி.எழுநூறுகளில் வாழ்ந்த பெண் சூஃபி. இறைவனைக் காதலனாகவும் நண்பனாகவும் காதலியாகவும் அணுகிய சூஃபிகளில் தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்தவராக அவர் பார்க்கப்படுகிறார்.

பஸ்ரா நகரின் விபச்சார விடுதியில் இருந்தபோதிலும், அவர் ஏற்றிய ஞானவிளக்கின் ஒளி இன்றும் அணையாதிருக்கிறது. இறைக்காதலில் தன்னையே கரைத்துக்கொண்ட அந்த மகாமனுஷி இறுதிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. நாட்டின் அரசரும், செல்வந்தர்களும், ஏன் தன்னை ஒத்த சூஃபிகளும் திருமணம் செய்துகொள்ள முன் வந்த நிலையிலும் அவர் அவர்களிடம் கேட்ட கேள்விகள், சூஃபியிஸசத்தின் விளக்கங்களாகச் சொல்லப்படுகின்றன.

அந்தக் காலத்தில் ஹசன் பசரி என்கிற புகழ்பெற்ற சூஃபியுடன் ராபியாவைத் தொடர்புப்படுத்தி பேசிய தகவலுண்டு. திருமணம்வரை அவ்வுறவு சென்றதாகவும் ராபியா கேட்ட கேள்விக்கு ஹசன் பசரியால் பதில் சொல்ல முடியாமல் போனதால் அத்திருமணம் தடைபட்டதாகவும் தெரிகிறது.நான் இறக்கும்போது நம்பிக்கையுள்ளவளாக இறப்பேனா இல்லை, அவநம்பிக்கையுடையவளாக இறப்பேனா’ என்ற கேள்வியை ஹசனிடம் ராபியா கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், அது இறைவன் மட்டுமே அறிந்த மறைவான விஷயமாகும்’ என்றிருக்கிறார். அதபோல மூன்று கேள்விகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலை ஹசன் சொல்லியிருக்கிறார்.நான் கேட்கும் எந்த கேள்விக்கும் தங்களிடம் பதிலில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை இறைவனே அறிவான் என்கிறீர்கள். எனில், என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கான அனுமதியையும் நீங்கள் அவரிடமல்லவா வாங்கவேண்டும்’ என்றிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்துள்ள மற்றொரு உரையாடல் அதைவிடவும் சுவாரஸ்மானது.

ராபியா, ஹசனிடம் அறிவை அல்லாஹ் எப்படிப் படைத்துள்ளான்’ என்றதும்அறிவைப் பத்துப் பங்குகளாக்கி ஒன்பது பங்குகளை ஆண்களிடமும் ஒரு பங்கைப் பெண்களிடமும் படைத்துள்ளான்’ என்றிருக்கிறார். உடனே அவர் இச்சையை எவ்வாறு படைத்துள்ளான்’ என மறுகேள்வி கேட்க,இச்சையைப் பத்துப் பங்குகளாக்கி ஒன்பதுப் பெண்களிடமும் ஒரு பங்கை ஆண்களிடமும் படைத்துள்ளான்’ என்றிருக்கிறார். அப்படியானால், ஒரு பங்கு அறிவைக் கொண்டு ஒன்பது பங்கு இச்சையை நான் அடக்கியாளும்போது ஒன்பது பங்கு அறிவைக் கொண்டு ஒரு பங்கு இச்சையைத் தங்களால் அடக்கியாள முடியாதா?’ என்று கேட்டிருக்கிறார். சூஃபிகளின் ஞானவார்த்தைகள், எளிய புரிதலுக்கு அப்பாற்பட்டவை.

புரிந்ததுபோலவும் புரியாததை நீட்டிப்பது போலவுமே அமைவன. ஒருவர் எப்போது சூஃபியாகிறார் என்னும் கேள்விக்கு, அவர் சூஃபியாக இல்லாதபட்சத்தில் ஆகவே முடியாதெனும் பதில் அத்தகையவற்றில் ஒன்று. ஒருமுறை ஒருபெண்இறைவனின் படைப்புகளின் அழகை வெளியே வந்து பாருங்கள்’ என்றதற்கு, நீ உள்ளே வந்து இறைவன் உருவாக்கியுள்ள அற்புதமும் அழகும் நிறைந்த படைப்புகளைப் பார்’ என்று ராபியா சொல்லியிருக்கிறார். உள்முகமாக ஒன்றைப் பார்க்கத் தொடங்கும்போதுதான் ஞானம் கிடைக்கிறது. ஞானமென்பது, கண்ணீராலும் இறைக்காதலாலும் எழுப்பப்பட்ட அகக்கோட்டை. அதற்குள் ஒருமுறை நுழைந்தவர்கள் அல்லது நுழைய விரும்புகிறவர்கள் அதன்பின் அங்கிருந்து திரும்புவதில்லை.

இறையச்சமே ஞானத்தின் தொடக்கமென்று இஸ்லாமிய ஹதீதுகள் விவரித்தாலும், சூஃபிகள் அச்சமானது தண்டனைகள்மீதோ பாவங்களின் மீதோ கட்டப்பட்டதில்லை என்கின்றனர்.நரகம் என்பது அவர்களுக்குத் தண்டனை பெறும் இடமல்ல. மாறாக, அது அவர்களுக்கு இறைவனைப் பிரிந்திருக்கும் இடம். அதேபோல, சொர்க்கமென்பதும் அவர்களுக்கு இன்பங்கள் குவிந்துகிடக்கும் இடமல்ல. காதலியின் முகம்கண்டு அதிலேயே திளைத்திருக்கும் ஒரு நித்திய சுகநிலை’ என்று ராபியா தம்முடைய உரைகளில் தெரிவித்து இருக்கிறார்.
உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்’ என்று ராபியாவிடம் ஒருவர் கேட்டதற்குநான்கு அங்குலங்கள்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாத அந்த அவர் மீண்டும் விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்றவுடன்கண்ணுக்கும் காதுக்கும் உள்ள தூரம்தான் உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி’ என்றிருக்கிறார். அதாவது, கேட்கப்படுவதெல்லாம் பொய், பார்க்கப்படுவதெல்லாம் மெய் என்பதே அவர் வெளிப்படுத்தியிருப்பது. கேட்பதில் கிடைக்காத அனுபவம், சரியான பார்வையில் கிடைக்கும் உண்மையின் அனுபவமே ஞானமென்று அறியப்படுகிறது.

அறிவுக்கு மேலான ஞானத்தைக் கற்கவோ கற்பிக்கவோ முடியாது. சூஃபிகளின் படைப்புகளும் வாழ்க்கை அனுபவங்களும் எல்லாக் காலத்திலும் என் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. எழுத்தாளர் நாகூர் ரூமியின் சூஃபி வழி’ நூலை இதுவரை இருபது முறையாவது படித்திருப்பேன்.

அந்நூலில் சூஃபிகள் பலருடைய வாழ்வையும் படைப்புகளையும் ஒருசேர தொகுத்துக் கொடுத்திருக்கிறார். பக்கத்திற்குப் பக்கம் பொக்கிஷங்கள். சூஃபிகளின் குரல் இலக்கியத்திற்கு மிக நெருக்கமானது. ஆழ்ந்த அனுபவங்களைப் பெறுவதற்கான கதவுகளைத் திறந்த சூஃபிகளின் வழியே இஸ்லாமிய இலக்கியங்களை வாசிக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் இலக்கியத்தைத் தம்முடைய தோள்களிலும் துதிக்கையிலும் சுமப்பதாகச் சொல்கிற பலர், இஸ்லாமிய இலக்கியங்களை ஏன் வாசிப்பதே இல்லையெனப் புரியவில்லை.

ஒருமொழிக்கு அம்மொழியில் வரக்கூடிய அனைத்து இலக்கியங்களும் வளத்தையும் வளர்ச்சியையும் அளிக்கின்றன. எனினும், அவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தரப்படுகின்றதா என்னும் கேள்வி என்னுடையதும்தான். இஸ்லாமிய இலக்கியங்கள், தமிழ் மொழிக்கு அளித்துள்ளப் பங்களிப்பை ஏற்காத மனம், போதாமையுடையது.

தமிழ்மொழிக்கு என விரிந்ததளத்தில் பேசுவதைவிட, தனிப்பட்ட முறையில் அவ்விலக்கியங்களில் பல என்னுடைய எழுத்து முயற்சிகளுக்கு உந்துவிசைகளைத் தந்துள்ளன. தொடக்கத்தில் இஸ்லாமிய இலக்கியங்களை வாசிப்பதில் எனக்கிருந்த சிரமங்கள் காலப்போக்கில் காணாமல் போயின. சிரமமென்று நான் சொல்வது, அவ்விலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பதங்களையும் வாக்கிய அமைப்புகளையும் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றங்களை மட்டுமே.

அரபுச் சொற்களையும் உருது, பெர்ஸியப் பதங்களையும் கூடுதலாகச் சுவீகரித்துள்ள இஸ்லாமிய இலக்கியங்கள், பார்வைக்குக் கடினமாகத் தோன்றினாலும் படிக்கப் படிக்க ஆச்சர்யங்களை அளிப்பவை. எனக்கு அவ்விலக்கியங்கள் குறித்த அறிமுகத்தையும் பரிச்சயத்தையும் வழங்கிய மௌலவி ரஃபி உக்தீன் முக்கியமானவர். நவீன இலக்கியத்துடன் பழந்தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களை இணைத்துச் சொல்லும் ஆற்றல் அவருடையது. பற்றுக்கும் அடிப்படைவாதத்துக்குமுள்ள மெல்லிய வேறுபாட்டை உணர்ந்த அவர், இலக்கிய விவாதத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துச்செல்வதில் அசகாயச் சூரர். நூலின் அடியாழத்தில் கிடக்கும் செய்திகளைக்கூடச் சிந்தனைத் துரட்டியால் பறித்தெடுத்துப் பகிர்பவர்.

அவர்மூலம் காஜியார் நூல் நிலையத்தில் நான் வாங்கி வாசித்த நூல்களுக்குக் கணக்கில்லை. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தஞ்சை இலக்கிய மேடைகளில் அவருக்கு நிரந்தர இருக்கை ஒன்று போடப்பட்டிருந்தது. என்னுடைய முதல் இரண்டு கவிதைநூல் வெளியீட்டு விழாவிலும் அவர் ஆற்றிய உரைகள் அற்புதமானவை. எல்லா ஊரிலும் இளம் படைப்பாளர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடைய இப்படியான ரஃபி உக்தீன்கள் இருப்பதால்தான் இலக்கியம் ஓரளவேனும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர் வழிகாட்டலுக்குப் பிறகே முனாஜாத்து, மசலா, கிஸ்ஸா, நாமா போன்ற இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் எனக்குத் தெரியவந்தன.

முனாஜாத்து எனும் அரபுச்சொல்லுக்குஇரகசியமாகச் பேசுதல்’ எனப் பொருள். அத்துடன், இறைவனிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தல், இறையருள் வேட்டல் எனவும் அச்சொல்லை அர்த்தப்படுத்தலாம். அல்லாஹ்வையும், அவருடைய அருளைப் பெற்ற மகான்ளையும் போற்றிப் பாடுவதையே முனாஜாத்து என்பர்.
இஸ்லாமிய மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள நூல்கள் பலவற்றிலும் முனாஜாத்துகள் இடம்பெற்றுள்ளன. அதுபோல, முனாஜாத்துகள் மட்டுமே அடங்கிய தனி நூல்களும் வந்துள்ளன. தனிப்பாடல் திரட்டு என்னும் வகைமைக்குள் வரக்கூடிய முனாஜாத்துகள், மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை.

என்னுடைய சேகரிப்பில் இருபதிற்கும் மேற்பட்ட முனாஜாத்துகள் உள்ளன. இணையத்தில் கிடைக்கும் பல முனஜாத்து பிரதிகள் வாசிக்கும் தரத்தில் இல்லை. மார்க்க அறிஞர்களின் துணையுடன் அவற்றை ஒன்றாகத் தொகுக்கும் பணியை நானே மேற்கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறேன்.
என்னிடமுள்ள முனாஜாத்து பிரதிகளில் ஹக்கு பேரில் முனாஜாத்து’ என்பதும் ஒன்று .புலவர் நாயகம் எனும் புகழுக்குரிய சேகனாப் புலவர் எழுதியது. ஒருமுறை சென்னை நகரில் கொடிய விஷபேதி நோய் பரவி மக்களை அச்சுறுத்தியிருக்கிறது. அச்சூழலில் ஏக இறைவனை இறைஞ்சுவதொன்றே மீள வழியென்று நினைத்து மக்கள், சேகனாப் புலவரிடம் முனாஜாத்து பாடித் தரும்படிக் கேட்டிருக்கிறார்கள்.

அதுபடி அவர் பாடியளித்த முனாஜாத்து அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்திருக்கிறது. படித்தவுடனே சட்டென்று மனதில் பதிந்துவிடும்படியான அழகிய பதங்களில் வந்திருக்கிறது. என்னிடமுள்ள பிரதி பிற்காலப் பதிப்பென்று நினைக்கிறேன். முதல் பதிப்பு எப்போது வந்ததென்றோ என்னிடமுள்ள பதிப்பு எத்தனையாவது பதிப்பென்றோ அதில் குறிப்பில்லை.

அம்முனாஜாத்தில் இடம்பெற்றுள்ளஉள்ளங் கலங்கித் தத்தளித்தே யுணர்வு மயங்கி நின்னடியார் / வெள்ளங் கண்ணான் மிகவோட வெருளுந் துயர மணுகாமற் / கொள்ளுங் கிருபை மௌலானா குதாயே வதூதே காப்பாறே / கள்ள நோய்த் தங்கடங்கள் காப்பாய் காப்பாய் றகுமானே’ என்னும் வரிகள், தோத்திரத் தன்மை வாய்ந்தவை.

`வெள்ளங் கண்ணான் மிகவோட வெருளுந் துயர மணுகாமற்’ என்னும் சொற்றொடரில் மொத்தப் பதிகத்தின் உள்ளடக்கத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஹக்கு’ என்றால் உண்மை. எல்லா உண்மைகளையும் உணர்ந்த ஏகனே எமக்கு நேர்ந்துள்ள அபாயத்தை நீக்குவாயாக என்பதுதான் அப்பதிகத்தின் உள்ளடக்கம். வழக்கிலுள்ள ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டாலும், அப்பதிகத்தின் உள்ளடக்கமும் வடிவமும் இஸ்லாமிய இலக்கிய வகைக்குரியதென்று தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்’ நூலில் மணவை முஸ்தபா குறித்திருக்கிறார். சேகனாப் புலவரின் முனாஜாத்து கொடுத்த பரவசத்தில் அவ்வடிவத்தையும் அப்பாடல்களையும் கூடுதலாகத் தெரிந்தகொள்ள முனைந்தபோதுதான், முனாஜாத்துகள் தனி ஒரு துறையாக வளர்ந்திருப்பது தெரியவந்தது.

இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் சில முனாஜாத்துகள் பற்றித் தன்னுடையஇஸ்லாமியர் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டு’ எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முனாஜாத்துகளில் ஒன்றிரண்டு என் கைக்கு இன்னமுமே கிடைக்கவில்லை. குறிப்பாக, மேலப் பாளையத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீதுப் புலவர் பாடிய ஆனந்த சாஹித்தியம்’ நூலில் அற்புதமான முனாஜாத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது, அரபு அரிச்சுவடியில் உள்ள இருபத்தொன்பது முதல் எழுத்துகளை வைத்து எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோலசங்கீத சிந்தாமணி’ என்னும் முனாஜாத்து பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்ற முனாஜாத்துகளின் இறுதிச்சொல், பாடப்பெறுவரின் பெயரில் அமைவதுபோல் அல்லாமல் காஜா முகினுத்தீன் பெயரில் அமைந்துள்ளது என அடிக்கோடிட்டிருக்கிறார். சங்கீத சிந்தாமணியும், ஆனந்த சாஹித்தியமும் இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களிடமோ புரவலர்களிடமோ இருந்தால் பகிரலாம். என்னுடைய தேடலில் கிடைத்த செய்யிது முகியித்தீன் கவிராஜர் பாடிய நவநீத புஞ்சம்’ நூல் 1887ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.நவநீதம்’ என்றால் புதுமை. புஞ்சம்’ எனில் குவியல். அக்குவியலில்றகுமான் மீது முனாஜாத்து’, றசூலுல்லாமீது முனாஜாத்து’,முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்’, திருப்புகழ்’,நபி நாயக மாணிக்கமாலை’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் முகியீத்தீன் ஆண்டகையின் பேரில் பதுருத்தீன் புலவர் பாடிய முனாஜாத்தும், கீழக்கரை செ.மு. செய்யிது முகம்மது ஆலீம் புலவர் பாடியளித்துள்ள முனாஜாத்தும் கிடைக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது திருப்பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் இறைவனின் நாமத்தை ஒவ்வொரு வரியிலும் வைத்துப் பாடியுள்ள செய்யிது முகம்மது ஆலீமின் பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

உணவை அளிக்கையில் ரஸாக்’, இம்மை மறுமைப் பேறுகளை வழங்குகையில்பத்தாஹ்’, எல்லையில்லா ஞானத்தை அருளுகையில் அலீம்’, பிரியும் உயிரை மேவிப் பிடிக்கையில்காபீல்’ என வெவ்வேறு பெயர்களில் விளிக்கப்படும் அல்லாஹ்வை, ஒரே பாடலில், இரண மீந்திடும் ரஸ்ஸாகே இகபர நன்மையாவும் / கரம ளித்திடும் பத்தாஹே கனவறி வுறும் அலீமே / பிரிந்திட்ட உயிரை மேவிப் பிடித்திடும் காபீலான / அருமறை பகரும் ஆதி அர்ஹமூர் ராஹிமீனே’ எழுதியிருப்பதை வியப்பின் விளிம்பில் நின்று வாசித்திருக்கிறேன். பாடலாக வாசித்தாலும் பக்தியாக உருவகித்துக்கொண்டாலும் அப்பாடல், அதி அற்புத அனுபவத்தை தருவது.

அத்துடன், அவர் எழுதியுள்ள முனாஜாத்துகளில் பல்வேறு நுணுக்கமான செய்திகளும் காணப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவானாகவும் இருந்தவர் என்பதால் அவருடைய முனாஜாத்துகளில் தமிழின் நயமும் சுவையும் கலந்துள்ளன.முனாஜாத்து மாலிகை’ எனும் தலைப்பில் அவர் வழங்கியுள்ள பாடல்களிலும் தனித்துவத்தைக் காணமுடியும். தொடுக்கப்பட்ட மாலையே மாலிகை’ எனப்படுகிறது.

அவரே `பொறியெனும் கரிகள் யாவும் / புலன்தொறும் புகுந்திடாது / அறிவெனும் துறட்டி தன்னால் அடக்கியே / புறத்தில் வீழ்த்தி / நெறியெனும் கொலுவி லார்ந்து / நிறையருள் சிறந்த நாளு / முறைவழி பிழைத்திடாத முர்தலா அலியுல்லாவே’ என்றும் எழுதியுள்ளதை வாசித்தவுடன் உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் / வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’ என்னும் திருக்குறள் நினைவுக்கு வந்தது. சொற்களைச் சந்தத்திற்கேற்ப எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மரபுக்கவிதைகளின் சூக்குமம் உள்ளது.

சீர்களையும் தளைகளையும் கணக்கிட்டபடியே அடுத்தடுத்தச் சொற்களை இலாவகமாக எழுதிக்கொண்டு போகும்முறை முனாஜாத்துகளில் தென்படும் அம்சங்களில் ஒன்று.முகியித்தீன் முனாஜாத்தில்ஆவது வொன்றுமில்லா தடிமையின் ஆசையினாலே / யாவல் கொண் டுமதுபாத மடிக்கடி புகழநாடிப் / பாவம் செய்திடும் சொல்லில் பகர்பிழை பொறுத்து தென்னாளுங் / காவல் செய்திடடி வீரெங்கும் காதிறே முஹயித்தீனேஎன்னும் பகிருத்தீன் புலவரின் வரிகளும் கவனிக்கத்தக்கவை.

முனாஜாத்தைப் பிரபந்த வகையில் ஒன்றெனக் கொள்ளலாமே தவிர, அது இஸ்லாமிய இலக்கியம் தமிழுக்குக் கொடுத்த கொடையாகவோ வடிவமாகவோ கருதமுடியுமா எனும் கேள்வியைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி தன்னுடையதமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள்’ கட்டுரையில் கேட்டிருக்கிறார்.
உட்பொருள் எதுவாக இருந்தாலும் அது, தமிழிலக்கியத்தில் ஏற்கெனவே பயிலப்பட்டுவந்த பிரபந்த வடிவத்தையே கொண்டிருப்பதால் அவர் அப்படியொரு எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆசிரியப்பாவிலோ சிற்றிலக்கியங்களில் விரவிவரும் சிந்து, கும்மி ஆகிய வடிவங்களிலோ எழுதப்பட்டுள்ள முனாஜாத்துகள், வடிவத்தில் தனித்துத் தெரியவில்லை என்றாலும், உள்ளடக்கத்திலும் சொற்களின் பிரயோகத்திலும் புதிய வகையாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
முனாஜாத்தைப் போலவே கிஸ்ஸா’ எனும் வடிவமும் இஸ்லாமிய இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.கதை சொல்லுதல்’ என்னும் பொருளில் வரும் அச்சொல், போக்கும் பொழுதுகளை ஆக்கும் பொழுதுகளாக மாற்றிக்கொள்ள உதவுவது.

பொது நிகழ்விலும் குடும்ப நிகழ்விலும் கிஸ்ஸாவைச் சொல்வதும், கேட்பதும் இஸ்லாமியர்களின் மரபுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. யூசுபுநபி கிஸ்ஸா, சைத்தூன் கிஸ்ஸா ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. மதாறு சாகிபுப் புலவர் யூசுபு நபி கிஸ்ஸா’வையும், அப்துல் காதிற் சாகிபுசைத்தூன் கிஸ்ஸா’வையும் படைத்துள்ளனர்.
பாரசீகத்திலும் உருதுவிலும் உள்ள கிஸ்ஸாக் கதைகளை கொஞ்சம் வசனமாகவும் கொஞ்சம் கவிதையாகவும் தமிழில் தந்துள்ளனர். யூசுபு- ஜூலைகா வழியே சொல்லப்படும் வரலாறு, மனிதனுக்கும் இறைவனும் இடையே தோன்றும் காதலைப் பற்றியது.

அக்கதையின் போக்கையும் சுவையையும் விவரித்தால் பல பக்கங்களைத் தாண்டுமென்பதால் விட்டுவிடுகிறேன். கவிஞர் சாரண பாஸ்கரன் எழுதிய யூசுப் சுலைகா’ காப்பியத்தைப் பற்றிய குறிப்பை வேறு கட்டுரையில் கொடுத்திருக்கிறேன். மதாறு சாகிபுப்புலவர் யூசுப்- சுலைகாவின் முழு வரலாற்றையும் கிஸ்ஸா வடிவத்தில் எழுதியிருக்கிறார்.

யூசுப்பும் சுலைகாவும் இறுதிக் காட்சியில் இணைந்து வாழ எத்தனித்ததைத்தேனும் சீனியும் கலந்ததுபோல் / சீரும் செல்வமுமாய் இருக்கும்போது / ஊனும் உயிரும்போல் ஒத்திருந்து / உவந்த ஆண்டு அஞ்சில் பிள்ளையிரண்டாம்’ என்னும் வரிகளில் அறியலாம். உரையிட்ட பாட்டுபோல் அமைந்துள்ள கிஸ்ஸாவில் இஸ்லாமிய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் பலவும் சொல்லப்பட்டுள்ளன. சைத்தூன் கிஸ்ஸா’வில் முகம்மது ஹனீப்பின் வீரமும், சைத்தூன் இறுதியில் இஸ்லாத்தைத் தழுவிய விதமும் அழகிய சொற்றொடர்களால் அமைக்கப்பட்டுள்ளன.

இலக்கியமாக வாசித்தாலும் கதையாக்க் கேட்க விரும்பினாலும் கிஸ்ஸாக்களின் வழியே பெறப்படும் உணர்வுகள் உச்சமானவை. கூடவே மசலா, நாமா ஆகிய இரண்டின் வடிவத்தையும் மேலோட்டமாகச் சொல்லத் தோன்றுகிறது. மஸ்’அலா என்ற அரபுச்சொல்லின் திரிபேமசலா’ எனப்படும். கேள்வி என்னும் பொருளைத் தரும் அச்சொல், வினாவிடை வடிவைக் குறிப்பது. மார்க்க அறிஞர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர்கள் அளித்த பதில்களும் தொகுக்கப்பெற்றிருப்பதே மசலா வடிவமாகச் சொல்லப்படுகிறது.

மசலா இலக்கியத்தில் ஆயிர மசலா, நூறுமசலா, வெள்ளாட்டி மசலா ஆகிய மூன்று உள்ளன. ஆயிர மசலாவென்று வழங்கும் அதிஜய புராணம்’ என்றநூலை எழுதியவர் செய்கு முதலி இஸ்ஸாக் எனத் தெரிகிறது. இவரே வண்ணப்பரிமளப்புலவர் என்னும் பெயரிலும் அழைக்கப்படுகிறார்.ஆயிரம் மசலா’ என்று தலைப்பு இருந்தாலும், நூலில் முந்நூறு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஏனைய பாடல்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. மசலா வடிவம் கேள்வி பதில்களைக் கொண்டன என்பதால் அவற்றில் விடுகதை அமைப்பிலும் சில பாடல்களை வண்ணப்பரிமளப்புலவர் தந்திருக்கிறார்.

`மண்தரைக்குள் ஏறாது / வானிருந்து ஓடாது அங்கு / அந்தரத்தில் ஓராறுண்டது எனக்கும் கூறுமென்’ என்றொரு விடுகதை வருகிறது. அதாவது,விண்ணிலிருது விழுவதுமில்லை. மண்ணிலிருந்து ஓடுவதுமில்லை. ஆனால், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே அந்தரத்தில் ஓர் ஆறு ஓடுகிறது அது என்ன’ என்ற கேள்வியைத் தொடுத்து, அதற்கு நபி பெருமான் கடுமையாக உழைப்பவர்களின் வேர்வைத் துளியே விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஓடும் ஆறு’ எனச் சொல்வதாக அமைத்திருக்கிறார். மசலா வகையை அறிந்ததாலேயே ஆறுமுகநாவலர் தம்முடைய சொற்பொழிகளை வினாவிடையாக அமைத்துக்கொள்ள எண்ணினார் எனவும் சொல்லப்படுகிறது.

முனாஜாத்து , மசலா வடிவங்களை வாசித்தால் அவற்றின் உள்ளே கரைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயிரம் மசலாவில் கேள்வி கேட்பவரே பதிலைச் சொல்பவராக அமைகிறார். ஆனால், நூறு மசலாவில் பதிலுக்கு எதிர்க்கேள்வி கேட்கப்படுவது சுவாரஸ்யத்தைத் தருகிறது. ஒருவிதமான உரையாடல் தொனியைத் தரும் நூறு மசலாவின் மற்றொரு சிறப்பு, அதில் மார்க்கத்தையும் இறைத்தூதர்களையும் தாண்டிய கேள்வி பதில்கள் இடம்பெற்றுள்ளதுதான். `சிங்கத்தின் முன் தப்பிவந்த கருந்தேக முள்ள ஆனைபோலும் / தங்குமயில் வாயிற்றப்பும் நெடு சர்ப்ப மது தன்னைப் போலும் / சர்ப்ப வாயில் தப்புகின்ற குழித்தவளை யது தனைப்போலும் / செப்பிடுமா வேங்கையில் தப்பும் செம் மறியாடு அதனைப் போலும்’ என வரிசையாக உவமைகளை அடுக்கிக்கொண்டே போகும் அழகை வெகுவாக ரசிக்கலாம்.

மார்க்கக் கருத்துகளை மட்டுமே பேசும் வெள்ளாட்டின் மசலாவிலும் ஆயிர மசலாவிலும் இல்லாத உவமைகளும் கற்பனைகளும் நூறு மசலாவில் உண்டு.கதை, வரலாறு, புத்தகம் என்பதை பாரசீகம் நாமே’ என்கிறது. அந்த நாமேதான்நாமா’வாகத் தமிழில் வழங்கப்படுவதாக இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மதாறு சாகிபுப் புலவர் எழுதிய மஃறாஜூ நாமா’வும் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்யிது அஹமது மரைக்காயர் எழுதியநூர் நாமா’வும் பிரசித்திப் பெற்றவை. நாமா இலக்கியங்களுள் ஷாமு நைனா லெப்பைப் புலவர் எழுதிய இருஷாது நாமா’ குறிப்பிடத்தக்கது.

`இர்ஷாத்’ என்ற அரபி நூலின் தமிழ் வடிவமாகக் கருதப்படும் இருஷாது நாமா’ யாப்பிலக்கண அமைதி கெடாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாமா இலக்கியங்கள் பலவாயினும் அவற்றில் அதிகப் புகழ் பெற்றதாகச்சக்கறாத்து நாமா’வைச் சொல்வர். நாமா நூல்களின் அடிப்படை, இன்மையில் இன்பத்தில் மூழ்குபவர்கள் மறுமையில் தவிக்கப்போகும் துன்பத்தைக் கூறி எச்சரிப்பதுதான். மரணத் தறுவாயில் இறைவனை நாடாமல் ஒவ்வொரு பொழுதிலும் அவன் நாமத்தையும் வழிகளையும் பின்பற்றுங்கள் என்பதுதான்.

முனாஜாத்து, மசலா, கிஸ்ஸா ஆகிய மூன்றைவிடவும் நாமா இலக்கியங்களே இஸ்லாமிய மக்கனை நேரடியாகச் சென்றடைந்தவை என்கின்றனர்.
இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் முதல் வாசிப்பில் எளிதாகப் பிடிபடுவதில்லை என்றாலும், அடுத்தடுத்த வாசிப்பில் நமக்கு நெருக்கமானவையாக மாறிவிடுகின்றன. அரபுத்தமிழ்ச் சொற்களும் அதன் அர்த்தங்களும் தெரிய வந்தவுடன் அவற்றின்மேல் நமக்கேற்படும் காதல் அதிகரித்துவிடும்.

இஸ்லாமிய இலக்கியம் என்றில்லை, எந்த இலக்கியத்தையும் வாசித்து உணர்வதற்குப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. வெறுமனே பக்கம் பக்கமாக வாசித்துக்கொண்டு போவதில் பயனில்லை. நூலைத் தேர்ந்தெடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட அதிக முக்கியம் அந்நூல், எதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது. உலகத்தில் பல்வேறு தத்துவங்களும் அத்தத்துவங்களைக் கண்டடையும் தாத்பரியங்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே முறையில் அல்லது முதல் அறிமுகத்தில் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை.

உச்சியைத் தொட ஒவ்வொரு கிளையாகத் தாவும் பறவையைப்போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு விரியும் வாசிப்பே அனுபவம். ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தாலும் புரிந்துகொள்ளமுடியாத விஷயங்களும் உண்டு. முனாஜாத்து பிரதிகள் சிலவற்றை வாசித்துக்கொண்டே வருகையில் வசீகரிக்கும் வாக்கிய அமைப்புகள் சிலவற்றைப் பார்க்க முடிந்தது. அரபுச் சொற்களைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து அவர்கள் எழுதியுள்ள எதுகையும் மோனையும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தை வழங்கின.
மொழிக்கு முதலில் வராத ங,ட,ல,ள,ழ,ர,ற,ண,ன ஆகிய உயிர்மெய் எழுத்துகளைக்கூட முதலடியாக வைத்து எழுதியுள்ளனர்.

தமிழாய்ந்த புலவர் மரபில் வந்தவர்களே இஸ்லாமிய இலக்கிய கர்த்தாக்கள் என்றாலும், தமிழின் விதியை மீறி அவர்கள் எழுதியுள்ளவிதம் அரபுத் தமிழை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உதாரணமாக சேகனாப்புலவர் எழுதிய முனாஜாத்து ஒன்றில் லவுலாக்க ஆலமெல்லா நான்படை யேனென் றோதும் / அவுலாநீ ராகை யாலும் அறுவாகுக் குயிர்நீ ராலே’ என்று வரும். மொழிக்கு முதலில்ல’கரம் வராது அல்லது வரக்கூடாதென்ற விதியிருந்தாலும், அரபுச்சொல்லின் முக்கியத்துவம் கருதி பயன்படுத்தியிருக்கிறார்.
குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கும்போதுதான் அரபையும் தமிழையும் இணைத்து எழுதும்முறை வந்ததாகச் சொல்லப்படுகிறது.

திருமறையின் விளக்கங்களில் கருத்துப்பிழையோ சொற்பிழையோ வந்துவிடக் கூடாதென்னும் அச்சத்தில் தொடங்கிய அக்காரியம், காலப்போக்கில் மரபாக மாறியிருக்கிறது. சமஸ்கிருத எழுத்துகளின் உச்சரிப்பைத் துல்லியமாக்க ஹ,ஷ,ஜ, ஸ போன்ற எழுத்துகள் தமிழுடன் கலந்ததுபோல அல்லாமல், தமிழின் ஓலிப்புமுறைக்கேற்ப அரபுமொழியை நம்முடைய எழுத்துருவிலேயே சிறுசிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
குறிப்பாக க,ச,ட,த,ப,ற என்கிற ஆறு வல்லின எழுத்துகளும் மற்ற மொழிகளில் இருப்பதுபோல மூன்று நான்கு ஒலி வேறுபாடுகளை உடையன அல்ல. பாடல்களைப் பற்றி எழுதும்போதுகூட பாவம்’ என்கிற சொல்லை அடிக்கடிப் பயன்படுத்த நேரும்.

உண்மையில் பாடலில் வரும் பாவத்திற்கும், பழி பாவம் என்பதிலுள்ள பாவத்திற்கும் வித்தியாசமுண்டு. இரண்டிற்கும் ஒரே பொருளில்லை. ஆனால், ஒலிப்புமுறையில் இரண்டும் ஒன்றேபோல் தோன்றும். இந்தச் சிக்கலை வேறு சில சொற்களைப் பயன்படுத்திக் களைய முனைந்தாலும், பாவமென்கிற சமஸ்கிருதத் சொல்லுக்கு உரிய பொருள்தரும் தமிழ்ச்சொல்நளிநயம்’ என்பது. இவை தமிழல்ல’ எனும் தலைப்பில் ஆய்வறிஞர் ப.அருளி தொகுத்துள்ளஅயற்சொல் அகராதி’யில் பாவத்திற்கு நளிநயம்’ என்னும் பதத்தைத் தந்திருக்கிறார்.

சங்கீதக் கட்டுரையில் `நளிநயம்’ என்று பாவத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாமெனினும், அதை எத்தனைபேர் சரியாக உள்வாங்கிக்கொள்வர் என்பதில் தயக்கமேற்படுகிறது. எல்லோரும் பயன்படுத்தி எல்லோருடைய சிந்தனையிலும் அச்சொல் பதிந்துவிட்டால் அதன்பின் அதை உபயோகிப்பதில் சிக்கல் இல்லை. இஸ்லாமிய இலக்கியத்தில் தென்படும் சொற்கள் பலவும் அவ்விதமே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சொற்களைப் புரிந்துகொள்வதிலோ உச்சரிப்பதிலோ பிரச்சனை வருவதில்லை. முற்றிலும் வேறான ஒலிப்புமுறைச் சொற்களை அச்சமூகத்திற்கு வெளியே இருப்பவர்களால் பயிற்சியில்லாமல் எழுதவோ படிக்கவோ வாய்ப்பில்லை. இந்தச் சிக்கலைக் களையும் பொருட்டே அரபுத்தமிழ் எழுத்துருவில் சில மாற்றங்களும் குறியீடுகளும் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள 1976இல் எம்.எம். உவைஸ் எழுத்தில் வெளிவந்த இஸ்லாமும் இன்பத்தமிழும்’ நூலை வாசிக்கலாம். தமிழ், உருது ஆகிய இரண்டு மொழிகளையும் பேசக்கூடிய இஸ்லாமியர்கள், தம்மிடையே காணப்படும் முரண்பாடுகளில் ஒன்றாக மொழியை முன்வைப்பதும் கவனிக்கத்தக்கது. 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழில் அதிகமும் பிறமொழிச் சொற்கள் கலந்ததாக மொழியறிஞர்கள் கருதுகிறார்கள்.

குறிப்பாக, விஜயநகர நாயக்க மன்னர்களும் முஸ்லீம் சுல்தான்களும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்னரே தமிழ்மொழிநடை முற்றிலும் மணிப்பிரவாளமாக மாறியிருப்பதை ஆய்ந்திருக்கின்றனர். வடமொழியில் புலமையுடையவரே உயர்ந்தவரெனக் கருதப்பட்ட காலத்தில் தமிழ் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இலக்கிய மொழிநடையைப் பொருத்தவரை அது முற்றிலும் மார்க்கத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களையும் அதன் வடிவங்களையும் உள்வாங்கப் போதிய பயிற்சியோ முயற்சியோ மேற்கொள்ளப்படவில்லை.

சொற்களின் ஒலிப்புமுறையை வைத்தே அவ்விலக்கியங்கள் இயங்குகின்றன. தமிழிலக்கியக் காப்பியப் பெருமைகளைப் பேசும் பலரும் சீறாப்புராணத்தை விட்டுவிடுவதைக் கவனிக்கலாம். அக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள காண்டங்களையும் பாத்திரங்களையும் விளக்கி கவி. கா.மு.ஷெரீப் ஆற்றிய உரை,சீறாப்புராணச் சொற்பொழிவுகள்’ எனும் தலைப்பில் நூலாக வந்திருக்கிறது. அரபுச்சொற்களும் பெயர்களும் கலந்த அக்காப்பியத்தை அவர் அளவுக்கு எளிய தமிழில் விளக்கி வேறு எவரும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை.

அதிலும் அவர் பாடல்களுக்கு சொல்லியிருக்கும் பொருளும் நயமும் இருக்கிறதே அவை அலாதியானவை.
அதேபோல, தமிழ்ச் சமூகம் நினைவிற் கொள்ளவேண்டிய மற்றொரு பெயர், மணவை முஸ்தபா. அறிவியல் தமிழ்க் களஞ்சிய உருவாக்கத்தில் முனைப்புக் காட்டிய அவர், யுனஸ்கோ கூரியர்’ தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராகவும் இருந்தவர். இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் வடிவங்களையும் பிரபலப்படுத்தியதில் அவருடைய பங்கும் இருக்கிறது. அவர் நடந்திய மாநாடுகள் வழியேதான்தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்’ பரவலான கவனத்தைப் பெற்றன.

குறிப்பாக, சூஃபி தத்துவம் குறித்த அறிதலையும் விவாதத்தையும் எழுத்தாளர்கள் மத்தியில் எடுத்துச்சென்றதில் அவரே முதன்மையானவர். தமிழ் மரபில் சித்தர்கள் எனப்படுபவர்கள் சூஃபிகளிடமிருந்து எவ்வெவற்றில் ஒத்தும் உழன்றும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர் நடத்தியக் கருத்தரங்குகள் வழியே கவனத்துக்கு வந்தன. அப்படியான கருத்தரங்கில் வாசித்த கட்டுரை ஒன்று, கவிக்கோ அப்துல்ரகுமான் பத்திப் பிரித்து வெளியிட்டுள்ள குணங்குடியார் பாடற்கோவை’யில் இடம்பெற்றிருக்கிறது.

கருத்தரங்கக் கட்டுரையின் விரிந்த வடிவையே நூலுக்கு முன்னுரையாகத் தந்திருக்கிறார். அதில், மஸ்தான் சாகிபின் பாடல்களை எவ்விதம் புரிந்துகொள்வது என்பதுடன், இஸ்லாமிய இலக்கியங்களை எவ்விதம் உள்வாங்கவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். மார்க்கக் கருத்துகளுக்கும் நெறிகளுக்கும் முதன்மையளித்தாலும், அவ்விலக்கியங்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் கவனிக்கத்தக்கவை. எந்த அரபுச் சொல்லாக இருந்தாலும், அதைத் தமிழில் எழுதும்பொழுது தொல்காப்பியரின் எழுத்திலக்கண வரையறைக்குள் நின்றே சிந்தித்திருக்கிறார்கள்.

எழுத்திலக்கணம் மட்டுமல்ல, தமிழ்நிலத்தில் தொன்றுதொட்டுப் புழக்கத்திலுள்ள நம்பிக்கைகளையும் இலக்கிய அணுகுமுறைகளையும் கிரகித்தே படைப்புகளை ஆக்கி அளித்திருக்கின்றனர்.பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ எனக் கம்பரைப் போலவே பித்துப் பிடித்த பிரபஞ்சத்தார் போலன்றோ / முத்தார்க் கிருக்கும் முறைநான் காண் நிராமயமே’ என்று குணங்குடியாரும் எழுதியிருக்கிறார்.

நிராமயமென்றால் நோயற்றது, பரம்பொருள் என்று அர்த்தம். நோயிலிருந்து காக்கும்படியும் நொடிதோறும் நிகழும் தீங்குகளிலிருந்து மீட்கும்படியும் ஏக இறைவனை நோக்கிக் குணங்குடியார் பாடியுள்ள நிராமயக் கண்ணிகள், தனிச் சுவையுடையவை. குணங்குடியாரின் பாடல்களுள் நுழைந்தால் அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது அத்தனை எளிதில்லை. சொற்களை மந்திரம்போலச் சுழற்றிவிட்டிருக்கிறார். அவருடைய ஒரேஒரு பராபரக் கண்ணியையோ நிராமயக் கண்ணியையோ யோசிக்க ஆரம்பித்தால்கூட அந்தநாள் அத்தனை அற்புதமாக மாறிவிடும்.

சூஃபிக் கருத்துகளைச் சொல்லும்போதுகூட அதை நம்முடைய மொழியில் ஏற்றுக்கொள்ளும்வகையில் எழுதிவிடும் சாமர்த்தியம் அவருக்குண்டு. பொதுச்சொற்களைப் பிரயோகித்து எழுதினாலும் மார்க்க நெறிகளை விலகிப்போகாத தொனி அவருடையது. பெரும்பாலும் இந்திய இஸ்லாமிய மரபுகளைக் கவனப்படுத்தும் வகையிலேயே அவருடைய பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்திய மரபில் நான்குமறை என்றால் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும். குணங்குடியாரோ இந்த நான்கையும் சபூர், தவ்ராத், இஜீல், குர்ஆன் ஆகியவற்றுடன் இணைத்துவிடுகிறார். அதேபோல, நான்கு நெறியாகச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்லப்படுவதை ஷரீயத், தரீகத், மஅரிபத், ஹகீகுத் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுக் குறித்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் ந,ம,சி,வ,ய என்கிற பஞ்சாக்கரமாகக் கூறப்படுவதைக்கூட அ, ல, ல, அ, ஹா என்று அதாவது,அல்லாஹூ’ என்னும் சொல்லாக ஆக்கிவிடுவதை அவருடைய கீர்த்தனங்களில் பார்க்கமுடிகிறது.

இந்திய யோக நெறியில் வரக்கூடிய ஏகாட்சரத்தைஅலீப்’ என்னும் சொல்லால் அழைப்பதையும் அறியலாம். தேடுவதும், நாடுவதும் சிந்தைத் திருநடனம் / ஆடுவதும் உன்னடியார்க்கு ஆசை நிராமயமே’ என்றும் எத்தனையோ கற்றும் இதயம் தெளியா திருந்த / பித்தருடன் நேசம் பிழைகாண் நிராமயமே’ என்றும் அவர் எழுதியுள்ள கண்ணிகள், ஆச்சர்யமளிப்பவை.

மண்ணின் தன்மைக்கேற்ப மார்க்கத்தின் கருத்துகளை முன்வைக்கும் குணங்குடியாரின் பாடல்களில் சிவம், சக்தி, மனோன்மணி, அம்பிகை, வாலை, சாம்பவி, தட்சிணமூர்த்தி, நந்தி, துளவமணி மார்பன், சிற்றம்பலம் போன்ற சொற்கள் வந்துள்ளதை ஆன்மிகத் துறையினரின் பரிபாஷை என்று அப்துல்ரகுமான் விளக்கியிருக்கிறார். இஸ்லாமிய இலக்கியங்களை எத்தகைய கவனத்துடன் உள்வாங்கவேண்டுமென்பதற்கு அந்த ஒரு முன்னுரையே போதுமானது. காசிம் புலவர் எழுதியதிருப்புகழ்’ தனித்தன்மையுடையது.

அருணகிரிநாதரின் திருப்புகழுக்குச் சற்றும் குறைவில்லாத தமிழும் அழகும் பொருந்திய அப்பாடல்களை, இஸ்லாமியப் பாடகர்கள் இன்றளவும் மேடைகளில் பாடிவருகிறார்கள். குணங்குடியாரைப் போலவே தமிழ் நிலத்தில் அதிகமும் அறியப்பட்ட தக்கலை பீர்முகமது அப்பா எழுதிய பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆகச் சிறந்த அனுபவத்தை வழங்குபவை. ஆழிய ஞானம் 63’ எனும் தலைப்பில் மு. முகம்மது சலாகுதீன் எழுதியுள்ள நூல், நுட்பம் மிகுந்தது. ஆன்மாக்களின் ஆபரணம் எனும் துணைத்தலைப்பில் பீரப்பாவின்ஞான ரத்தினக் குறவஞ்சி’யில் இடம்பெற்றுள்ள வரிகளுக்கு அவர் உரையெழுதியுள்ளார். அவ்வுரைகளில் பலவும் என்னை ஈர்த்தன.

குறிப்பாக எட்டெழுத் தாக வெழுந்த வெழுத்தென்ன சிங்கி / அது மட்டி லடங்கா வடிவட்ட கோணமே சிங்கா’ என்னும் வரிகளுக்கு மிக வித்தியாசமனான விளக்கத்தை வழங்கியிருக்கிறது. ஞானப்பாடல்களை உரைகளின் வழியே கிரகிக்கும்போது அவற்றின் அழகும் கனமும் கூடிவிடுகின்றன. எண்ணங்களை வரிவடிவில் எழுத அந்தக் காலத்தில் எழுத்துகளையே தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். அதுபடி, எட்டு என்னும் எண்ணிற்குஅ’கரத்தைக் குறியீடாகக் கொண்டது அறியாததல்ல.

சலாகுத்தீன் தன்னுடைய உரையை உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ள அகரத்தையே எட்டெழுத்து’ எனப் பீரப்பா கூறுவதாக விவரிக்கிறார். பூஜ்ஜிய வடிவில் தொடங்கி ஒன்றில் முடிவதுபோல அமைந்துள்ள அகரம், ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்தே ஒன்று தொடங்குகிறது என்பதைத் தெரிவிப்பதாக எழுதியுள்ளதை வியக்கலாம். வட்டத்தில் ஆரம்பித்து ஒன்றுபோல முடிக்கும் எழுத்துருவிற்குப் பின்னேயும் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா எனப்படுகிறது.

பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை அத்தனையும் வட்ட வடிவிலேயே அமைந்திருப்பதால்மட்டிலடங்கா வடிவட்டக் கோணமே’ எல்லாவற்றுக்கும் முதலாகவும் ஆதாரமாகவும் இருப்பதை விளக்கமாக தந்திருப்பது மேலோட்டமான புரிதல் அல்ல. ஞானியர்களின் வார்த்தைகள், வாக்கியங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. சித்தர்களும் சூஃபிகளும் ஒன்றா எனும் சந்தேகம் பலருக்குண்டு. ஆனாலும், தக்கலை பீர்முகமது அப்பாவின் ஞான ரத்தினக் குறவஞ்சி’ சித்தர் பாடல்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடுத்துச்சொல்லவும் பகிர்ந்துகொள்ளவும் இஸ்லாமிய இலக்கியங்களில் எவ்வளவோ இருக்கின்றன.பொக்கிஷங்களின் சாவி, சூஃபிகளின் நாக்கில் இருக்கிறது’ என்னும் நிஜாமியின் கவிதையைப் போல, வாழ்வின் பொக்கிஷங்களை இலக்கியத்தின் சாவியால் மட்டுமே திறக்கமுடியும். இலக்கியத்திலும்கூட இஸ்லாமும் ஏனைய மதங்களும் ஒன்றே என்பதுதான் என் புரிதல். அறிவின் அதிகபட்ச சாதனை ஸ்தம்பித்து நிற்பதுதான்’ என்று சூஃபி ஸனாய் எழுதியஹதீகா’வில் ஒரு வரி வரும். அறிவே ஸ்தம்பிக்க வைக்குமெனில், அதைவிட மேலான ஞானம் என்னசெய்யுமோ?

%d bloggers like this: