காதலும் காதா சப்த சதியும்

திருமணமான பெண் தன்னுடைய இரண்டு கைகளையும் உயர்த்தியபடியே தெருவில் நடந்து போவதைப் பார்த்த மக்கள், இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ’ எனப் பேசிக்கொள்கிறார்கள். காரணம் புரியாமல் எதையாவது பேசிச் சிரிப்பதும், ஏகடியம் செய்வதும் மக்களின் இயல்புதானே? உண்மையில், பொருள் ஈட்டுவதற்குப் பிரிந்துசென்ற கணவனை எண்ணியும் ஏங்கியுமே அவள் அப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறாள்.

ஏக்கத்தில் உடல்மெலிந்த அவள், கைகளை மேலே உயர்த்தி நடப்பதன்மூலம் கைவளையல்கள் கழன்றுக் கீழே விழாமல் பார்த்துக்கொள்கிறாள் என்கிறது பிராகிருத இலக்கியம். சற்றே மிகையாகத் தோன்றினாலும் காதலும் அதுதரும் உணர்வுகளும் அப்படிப்பட்டவைதாம். எழுபதுகளில் வெளிவந்தகுறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்’ என்னும் நூலில் இரா.மதிவாணன் விவரித்துள்ள அக்காட்சி, ஒரு பெண் தன் கணவன்மீது கொண்டிருந்த அன்பைக் காட்டுவது.

இன்றைக்கு ஒருபெண், கணவனின் வருகையை உத்தேசித்துக் கைகளை உயர்த்திக்கொண்டே நடந்ததாகக் கவிதையோ பாடலோ எழுதினால் அது பெண்ணைச் சிறுமைப்படுத்துவதாகவும் பிற்போக்காகவும் கருதப்படும். பழைய இலக்கியங்களில் இப்படியான பதிவுகளே மிகுதி. எனக்கு அப்பாடல்களையும் காட்சிகளையும் ரசித்துப் பகிர்வதில் சிக்கலில்லை. அறிவுக்கு அப்பால் செல்லச் செல்லத்தான் கலைப்படைப்பின் நுட்பங்கள் பிடிபடுகின்றன. கைகளை உயர்த்திக்கொண்டே நடக்கிறாள் என்பதைக் கணவனின் வருகையை விரைவுபடுத்தக் கடவுளை வேண்டுகிறாள் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அப்பெண் கைவளையல்கள் கீழே விழுவதை அபசகுனமாகக் கருதுகிறாள் எனவும், கணவனால் அணிவிக்கப்பட்ட கைவளையல்களைக் காப்பதே கற்பின் கடமையென எண்ணுவதாகவும் பல்வேறு விதங்களில் அர்த்தப்படுத்தலாம். எது ஒன்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. அகத்தில் பார்க்கவேண்டியதை அறிவாலும், அறிவால் பார்க்கவேண்டியதை உணர்ச்சியாலும் புரிந்துகொள்ள முயல்வதால் விளையும் விபரீதங்கள், இலக்கியப் பிரதிகளுக்கு எதிரானவை.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட அகப்பாடல்கள், இன்றைய சூழலுக்கும் சுவைக்கும் ஏற்றவாறு பொருள் தருவதை வியப்பவர்களில் நானும் ஒருவன். வீரத்தையும் வெற்றியையும் முதன்மைப்படுத்தும் புறப்பாடல்களும் அவ்விதமே என்றாலும், அகப்பாடல்கள் கிளர்த்தும் உணர்வுகள் அலாதியானவை. ஒருவருடைய தனிவாழ்வில் அவர் அகத்திற்கும் புறத்திற்கும் எத்தகைய மதிப்பை அளிக்கிறாரோ அதைப் பொருத்தே இணக்கமும் இடைவெளியும் அமைகின்றன. என்றாலும், அகமென்பது அந்தரங்கத்துடன் உரையாடுவது; உற்றுணரும் சந்தர்ப்பங்களை வழங்குவது; சிறிய அளவிலான தேடலிலேயே கண்டடைய முடிவது.

அத்துடன் அது, காதலுடனும் காமத்துடனும் நம்மை நாமே தரிசித்துக்கொள்ள உதவுவது. அகப்பாடல்கள், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான பிரியங்களை, பிணக்குற்றுப் பேசாதிருக்கும் தருணங்களை, கூடிமுயங்கும் குளிர்பொழுதுகளை நினைவில் இருத்திக்கொள்ள ஏதுவானவை. பிறரிடம் பகிரத் தயங்கினாலும், அப்பாடல்கள் வழங்கும் அதி அற்புத நுண்ணுணர்வுகள் விசேஷம் பொருந்தியவை. காலத்திற்குத் தக்கபடி புரிதலிலும் பொருளிலும் மாறுபாடுகளைக் கொண்டுவிடும் புறப்பாடல்களுக்குச் சில வரையறைகள் உண்டு. அகப்பாடல்கள் அப்படியில்லை. எந்தச் சட்டகத்திற்குள்ளும் நிற்கவேண்டிய அவசியம் அவற்றுக்கில்லை. வயதையும் வரம்பையும் கடந்த ஓர் உச்சத்தைத் தொடும் சாதுர்யம், புறத்தைவிட அகத்திற்கே அதிகமும் வாய்க்கிறது.

நிபந்தனைகளற்ற அன்பினால் ஒருவர் இன்னொருவரை திருப்தி மட்டுமா படுத்துகிறார் என்பதிலிருந்து வாழ்வை அணுகுவதே வரம். என்னை எனக்கு யாரென்று காட்டிய இலக்கியங்களை ஏதோ ஒரு வழியில் மற்றவர்க்குக் கடத்திவிடும் ஆர்வத்தில் காதலும் கலந்திருக்கிறது. அத்துடன், வாசித்த நூல்களை ஏணியாக்கி இன்றுநான் பெற்றுள்ள பிரியங்களை எல்லோரும் பெறவேண்டுமென்பதே என் ஆவல். தெலுங்கு அகநானூறு எனக் கருதப்படும் காதா சப்த சதி’ நூலை இருபதாண்டுகளுக்கு முன் என் நண்பரும் கவிஞருமான ஸ்ரீரங்கம் மோகனரங்கனே அறிமுகப்படுத்தினார்.

லௌகீகத் தேவைகளின் பொருட்டு அங்குமிங்கும் அலைந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த என்னிடம்நீங்கள் ஏன் இன்னும் காதலிக்கவில்லை’ என்னும் கேள்வியுடன் அவர் வழங்கிய அந்நூலை, ஒருவித அதீதத் தீவிரத்துடன் வாசித்த நினைவுகள் இன்னமும் மங்கவில்லை. எப்பொழுதும் தாடியுடன் ரிஷிபோல காட்சியளிக்கும் மோகனரங்கன், என் ஆரம்பகால இலக்கிய முயற்சிகளுக்குத் துணைபுரிந்தவர். வாசிப்பில் காதலுடைய அவருக்கு, எந்தப் பெண்மீதும் காதலே வராமல் போனதென்று நம்பத்தான் வேண்டும். நூல்குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த அக்கேள்வியை அவர் கேட்டிருக்கலாம். என்றாலும், இந்நூலைப் பரிந்துரைக்கும் உங்களுக்காவது காதல் வாய்த்ததா’ எனக் கேட்காதது வருத்தமில்லை.

திரைப்பாடல் எழுதத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் அவர் வழங்கிய அந்நூல் பலவிதங்களில் எனக்குப் பயன்பட்டிருக்கிறது. காதல் பாடல்களை எழுதுவதற்கு உந்தியெழும் உணர்வுகள் முக்கியம். காட்சியையும் சூழலையும் இயக்குநரோ இசையமைப்பாளரோ விளக்கினாலும், மேலதிகக் கற்பனைக்கு இலக்கியங்களே இட்டுச்செல்கின்றன. வெறுமனே வாசிப்பது மட்டும் போதாது. எந்த இலக்கியப் பிரதியை வாசித்தாலும் அதன் அடர்த்தியை உணர்ந்து பதித்துக்கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் ஒருவராவது தேவை.

அந்த வகையில் மோகனரங்கன், ஏராளமான பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அந்நூல்களின் வழியே தெரியவரும் விஷயங்களைப் பற்றியும் மணிக்கணக்காக என்னுடன் உரையாடியவர். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவையும், மனுதர்ம சாஸ்த்திரத்தையும் தமிழில் மொழிபெயர்த்த திருலோக சீதாராமின் ஏனைய படைப்புகளையும் வாசிக்கத் தூண்டியவர். பாரதி, பாரதிதாசன் பாடல்களை மனப்பாடமாகப் பாடிப் பரப்பிய ஒருவராக திருலோக சீதாராம் இருந்தது பற்றியும்,சிவாஜி’ இதழ்மூலம் அவர் மேற்கொண்ட இலக்கிய முன்னெடுப்புகள் பற்றியும் அவரிடமிருந்தே தெரிந்துகொண்டேன்.

வாசித்த செய்திகளையும் பாடல்களையும் அவர் அளவுக்கு லாவகமாக எடுத்துச்சொல்லும் தன்மை எல்லோருக்கும் வசப்படாது. அவருடன் பல மைல்கள் பேசிக்கொண்டே நடந்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் சந்தேகங்களைத் தயங்காமல் கேட்டிருக்கிறேன். குறிப்பாக, காதா சப்த சதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த உரையாடல்கள் மிக நீண்டவை. அந்நூலை ஆக்கி அளித்துள்ள பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாதராஜாவைப் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அவர் வேற்றுமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர்களில் மிக முக்கியமானவர்.

ஆந்திரநாட்டு அகநானூறு’ என்னும் தலைப்பில் இரா. மதிவாணனும்சாலிவாஹனம்’ என்னும் பெயரில் த.நா.குமாரசாமியும் சில பாடல்களை காதா சப்த சதியிலிருந்து மொழிபெயர்த்திருந்தாலும் மு.கு. ஜகந்நாதராஜாவின் பெயர்ப்பே பிரசித்தி பெற்றது. காரணம், சந்த ஒழுங்குகளைக் கணக்கிட்டு நம்முடைய சங்கப் பாடல்களின் வடிவில் வழங்கிய ஆற்றல் அவருடையது. தமிழும் பிராகிருதமும்’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல், பரந்துவிரிந்த அவருடைய மொழிப் புலமையைப் புரிந்துகொள்ள உதவும்.காதா சப்த சதி’ என்பது பிராகிருத மொழியில் எழுதப்பட்ட எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகைநூல்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்நூல், ஆந்திர நாட்டை ஆண்ட சாதவாகன மன்னன் ஹாலன் என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. `காதா’ எனில் ஈரடிச் செய்யுள். எழுநூறைப் பிராகிருதம் `சப்தசதி’ என்கிறது. காதா சப்த சதி நூலிலுள்ள பலபாடல்கள், நம்முடைய சங்கப்பாடல்களை ஒத்துள்ளன. கருத்தமைவிலும் காட்சியிலும் ஒத்துவரக்கூடிய சில பாடல்களை முன்வைத்து, அந்நூல் தமிழிலிருந்து பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயத்தைத் அக்காலத்துத் தமிழறிஞர்கள் வைத்துள்ளனர். அவ்வையம் நியாயமானதே என்றாலும், தமிழ் மரபுக்கும் மதிப்பீட்டிற்கும் ஒத்துவராத வேறுசில பாடல்களும் அதே நூலில் இடம்பெற்றுள்ளதை ஜகந்நாதராஜாவும் சிலம்பொலி சு. செல்லப்பனும் சுட்டிக்காட்டி ஐயங்களை நீக்கியுள்ளனர்.

ஒன்றேபோல் இன்னொன்று இருப்பதாலேயே இரண்டும் ஒன்று என்று வாதிடுவது ஆய்வுக்கும் அறிவுக்கும் பொருந்துவதில்லை. தமிழ் மரபிற்கு ஒத்துவராதவை என்று அவர்கள் இருவரும் சுட்டிக்காட்டும் பாடல்கள், காமச்சுவை நிரம்பியவையாக இருக்கின்றன. பகிர முடியாததையும் சொல்லக்கூசும் உணர்வுகளையும் அம்பலப்படுத்துகின்றன. பொருந்தாக் காமம்’ என்று தமிழில் நாம் பகுத்து வைத்துள்ள வகைமையைவிடவும் கூடுதலான அந்தரங்கத்தைப் பேசுவனவாக உள்ளன. படுக்கையறைக் காட்சிகளையும் பட்டவர்த்தனப்படுத்துகின்றன.

பிறன்மனை நோக்காமையே பேராண்மை என்னும் புரிதலுக்கு நேர் எதிரான தன்மையைத் தருகின்றன. தமிழில் அப்படியான பாடல்களே இல்லை என்பதில்லை. எதை எழுதினாலும் அல்லது தொகுத்தாலும் ஒரளவுக்குமேல் எல்லைமீறுவதைத் தமிழ் எழுத்துமுறையும் தொகுப்புமுறையும் தவிர்த்திருக்கிறது. எது எல்லை என்கிற கேள்வியைத் தற்காலத் தமிழிலக்கியவாதிகள் கேட்டுப் பாலியல் சார்ந்த பதிவுகளைத் துணிச்சலுடன் எழுதுவதைக் கவனிக்கலாம். பாலுறுப்புச் சொற்களைப் பயன்படுத்துவதே புரட்சிகர எழுத்துமுறையாகப் பார்க்கப்படும் சூழலும் இங்குண்டு.

பாலியல் சார்ந்த பதிவுகளைப் படைப்பதும் படிப்பதும் சமூகக் குற்றம்போலக் கருதி, அவற்றை முற்றாக விலக்குவதற்குப் பின்னே அரசியலும் வைதீக மரபும் இல்லாமல் இல்லை. மனத்தடை இல்லாமல் ஒரு பாலியல் எழுத்தைப் படித்துப் பகிரக்கூடிய பக்குவத்தில் நம்மில் எத்தனைபேர் இருக்கிறோம்? எழுத்தாளர் கி.ராஜநாராயணன்வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்னும் குறிப்புடன் வெளியிட்ட நாட்டுப்புறக் கதைகளைப் பற்றி பொதுவெளியில் பேசுபவர்கள் அதிகமில்லை. ஆனால், ஆரம்பத்திலேயே பிராகிருதம் இந்த மனத்தடைகளை உடைத்து எறிந்திருக்கிறது.

பிராகிருதமெனில் முன்பே செய்யப்பட்டது’ என்றும், சமஸ்கிருதமெனில்செம்மைப்படுத்தப்பட்டது’ என்றும் சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தின் வெகுஜன வடிவமே பிராகிருதமென்பதை பலர் ஏற்பதில்லை. மக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள காதா சப்த சதி, கட்டுப்பாடற்ற இச்சைகளைப் பேசுகின்றது. அத்துடன், வெகுஜன ரசனைக்கும் நுகர்வுக்கும் கற்போ அதன் கோட்பாடுகளோ ஒரு பொருட்டே இல்லை எனும்விதத்தில் அமைந்துள்ளது.

துய்த்தலே பிரதானமென்று ஆனபிறகு நெறியோ பிறழ்வோ சமூகச் சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஒருவகையில் இடது, வலதாகக் கற்புக் கோட்டை வரைந்தால் ஏனைய மொழிகள் வலது பக்கமும், தமிழ்மொழி இடது பக்கமும் நிற்பதை அறியலாம். மு.கு.ஜகந்நாதராஜாவும் செல்லப்பனாரும் கற்புக் கோட்பாட்டின் அடிப்படையில் நின்றே காதா சப்த சதியின் தொகுப்புமுறையைப் பார்க்கிறார்கள். அவ்விதம் ஒரு பாடலையோ படைப்பையோ அணுகும்போக்கு சரியா, தவறா என்பதற்குள் நான் போகவில்லை. தமிழின் சிறப்பாகச் சொல்லப்படும் ஒன்றை, கூராய்வு செய்யாமல் உள்ளதை உள்ளவாறு பகிர்ந்துகொள்ளவே முயற்சிக்கிறேன்.

காதா சப்த சதியில் இடம்பெற்றுள்ள பெண் வர்ணனைகளும், பெண்ணின் இச்சைகளும் ஒளிவு மறைவில்லாமல் பகிரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர்கள் அப்படியெல்லாம் எழுதவே இல்லை எனச் சொல்வதற்கில்லை. நம்முடைய சங்கப் பாடல்களின் அசலான தொகைவடிவம் தற்போது கிடைத்துள்ளவை மட்டும்தானா என்பதை முழுமையாக ஆராயும்பொழுதே பதில் கிடைக்கும். எழுதப்பட்ட பாடல்கள் கைக்குக் கிடைத்தும் அவை தொகுப்புக்கு உரியனவாக இல்லையெனத் தவிர்த்திருக்கவும் வாய்ப்புண்டு.

சிற்றிலக்கியங்களில் மிகுதியாகக் காமமும் இச்சையும் பாடல்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பே எழுதப்பட்ட சங்கப் பாடல்களில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்தும் பரிசுத்தப் படைப்பாக அமைந்திருப்பது எப்படி எனத் தெரியவில்லை. தொகைநூல்களைப் பொறுத்தவரை அவற்றைத் தொகுப்பவரின் அல்லது தொகுக்கும் குழுவின் கருத்தியல் இடையீடுகள் கவனத்துக்குரியவை. தொகைநூல் ஆக்கம் குறித்து தமிழறிஞர் அ. பாண்டுரங்கனின் தொகையியல்’ நூலில் இதுபற்றிய கூடுதல் விவரங்களைப் பெறலாம். 2008இல் வெளிவந்த அந்நூல், தற்போதும் கிடைக்கிறது. புதுவையில் வசிக்கும் அ.பாண்டுரங்கனின் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை பேராசிரியர் கா. சிவத்தம்பி பாராட்டியிருக்கிறார்.

பருத்த கச்சைகள் பற்றியும் சோளியாய் விரிந்த அல்குல் பற்றியும் தமிழிலக்கியத்தில் பதிவுகள் உண்டு. என்றாலும், அம்மாதிரியான பதிவுகளை மிகுதியாகக் காதா சப்த சதி கொண்டிருக்கிறது. களவியல் பதிவுகளில் முறைதவறிய உறவுகளைக் கூடக் காணமுடிகிறது. கருத்திருக்கும் முலைக்காம்புகளை விவரித்து எழுதப்பட்டுள்ள பாடல்கள், உவமைகளின் உச்சம் எனலாம். பிள்ளைப்பேற்றுக்குப் பிரிந்திருந்த மனைவி, கணவனை மறுபடியும் எப்போது கூடுவோம் எனக் கவலைப்படுவதால் அவள் சார்பாக காம்புகள் கருத்துவிட்டன என்பதெல்லாம் நான் வேறெங்கும் வாசிக்காதது.

என் பாவாடையின் முடிச்சிக்காய்த் துழாவிய போது / ஏற்கெனவே அவிழ்க்கப்பட்டிருந்தது கண்டு வெட்கினான் / நானோ, ஒரு நகை நகைத்து அவனை ஆரத்தழுவினேன்’ என்றொரு கவிதை காதாவில் இடம்பெற்றுள்ளது. அதேபோல தோழி, என் மெல்லிய பாவாடை / என் தொடைகளின் வியர்வையில் ஒட்டிக்கொண்டது / அவன் துழாவியபோது நான் நகைத்தேன்’ என்னும் கவிதையும் அந்நூலில் வருகிறது. வேறு எங்கேயும் வாசித்தறியாத ஒரு நுட்பமான பதிவைக் காதா சப்த சதியில் மட்டுமே காணமுடிந்தது. முதலிரவு முடிந்த மறுநாள் பெண்ணுடையில் கறைபடிந்திருக்கிறதா என ஆண் வீட்டார் ஆராய்வது பற்றிய பாடல் அது.

திருமணத்திற்கு முன்பே அவள் கன்னிமை கழிந்தவளா, இல்லையா என்று சோதித்திருக்கின்றனர். இன்றும்கூட இம்மாதிரியான சோதனைகள் நிகழாமலில்லை.ஆனந்த படம்’ எனும் பெயரில் முதலிரவு அழைக்கப்பட்டிருக்கிறது. நெடுநாள் களவில் ஈடுபட்டுவந்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். வழக்கம்போல் திருமணம் முடிந்த மறுநாள் சோதிப்பார்களே என்றுணர்ந்த தலைவி, முதலிரவு உடையை வழங்காமல் அதற்கு மாற்றாக அவளே தயாரித்த செம்பட்டாடையைக் கொடுக்கிறாள்.

ஆடையைப் பார்த்த ஆண் வீட்டாரும் தோழிகளும் திகைத்துவிடுகிறார்கள். சர்ச்சை பெரிதாக விரிவதற்குள் தலைவன் தலையிட்டு, அவளுடைய கன்னிமை கழிந்ததற்குத் தானே பொறுப்பென்று சொல்லிப் பிரச்சனையைத் தீர்ப்பதாகப் பாடல் முடிகிறது. ஓரிடத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்புக் கோட்பாட்டை காதா சப்த சதி வலியுறுத்துகிறது. மற்றோர் இடத்தில் தோழிகளெல்லாம் தலைவிக்குத் தேள் கடித்ததாகச் சொல்லிக் கணவனுக்குத் தெரியாமல் கைத்தாங்கலாக மருத்துவக் கள்ளக்காதலனிடம் கூட்டிப்போயினர்’ என்கிறது. ஒருபாடலில் தலைவியே தலைவனை அவன் விரும்பும் இன்னொரு பெண்ணிடம் அழைத்துப்போனாள் எனவும் வருகிறது.

அவ்விதம் தலைவனின் விருப்பத்தை உணர்ந்து அழைத்துவந்த தலைவியை அந்தப் புதுப்பெண்ணோ பரத்தையோ பாராட்டியதாகவும் பாடல் சொல்கிறது. யார் எதை ரசிக்கிறார்களோ அதை அவர்கள் ரசித்துக்கொள்ளட்டும் என ஹால மன்னன் நினைத்திருக்கிறான். அவனே அந்நூலைத் தொகுத்திருக்கிறான். எழுநூறு பாடல்களையும் அவன் அணுஅணுவாக அனுபவித்துத் தொகுத்ததுபோல் இருக்கிறது. புலவர்களை மதித்துப் பொன்னும் பொருளும் வழங்கிய அவன்,கவிவத்சலன்’ என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறான். அவனுமே சிறந்த புலவனாக இருந்தபடியால் தொகைநூல் முயற்சியில் இறங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அதைவிட, நான்கு பாடல்களைத் தொகுப்பில் இணைத்துக்கொள்ள நான்கு கோடித் தங்க நாணயங்களைத் தந்ததாகவும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்திய மொழிகளில் ஒப்பிலக்கணம்’ நூலில் வாசித்த இத்தகவல் உண்மையெனில் மகிழத்தக்கது. எல்லா நிலைகளுக்கும் எல்லா மனிதர்களுக்குமான பாடல்களைத் தொகுத்த ஹாலன், பிறிதொருவர் பாடலைத் தன் பெயரில் வெளியிட்டுக் கொண்டதாகவும் செய்தி உண்டு.

எல்லாவற்றையும் தாண்டி அப்பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு மிகமிக நெருக்கமானவையாக அமைந்திருக்கின்றன. காதாவின் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒருவகையில் நம்முடைய தமிழ்ப் பாடல்களுடன் பொருந்திப் போவதைக் காலத்தின் கொடை என்றே சொல்லவேண்டும்.அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்கிற செம்புலப் பெயல் நீரார் பாடலைக் குறுந்தொகையில் காணலாம். என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவில்லை.

என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் உறவில்லை. ஆனாலும்கூட வானத்தில் இருந்து பொழிகிற மழை, மண்ணுடன் கலந்து அந்நிறத்திற்குத் தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறதோ அப்படித்தான் நம்முடைய உறவும் பிரிக்கமுடியாமல் பிணைந்திருக்கிறது’ எனச் சொல்லக்கூடிய அப்பாடலுக்கு நிகராகக் காதா சப்த சதியிலும் ஒரு பாடல் இருக்கிறது. திரிலோசனன் என்பவர் எழுதிய பாடல். முன்பின் அறிமுகமோ முன்னெச்சரிக்கையோ இல்லாமல் பிறப்பதே காதலென்பதை அப்பாடல்மூலமும் அறியலாம்.

அத்துடன், அன்பையும் அழகையும் எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அப்பாடல் உணர்த்துகிறது. ஒரு பெண்ணோ ஆணோ காதல் கொள்வதற்கு அழகு முக்கியமா என்கிற கேள்வியும் அப்பாடலில் தொக்கி நிற்கிறது. அன்பு செலுத்துவதற்கு அழகு ஒருபோதும் காரணமாக இருப்பதில்லை.எது கிடைத்ததுவோ அது துய்த்திடுக / இலவணம் சிற்றூர் இவண் பெற லரிதே / எழிலோய்! சுவைகொள் இலவண மிருந்தும் / நேயமிலாது நேர்ந்தென் பயனோ?’ என்னும் பாடல்வழியே தெரியவரும் பக்குவம் பரவசமூட்டுகிறது.

பார்த்த உடனே காதல் வருவதற்கு அன்பு காரணமா, அழகு காரணமா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அழகைவிட அன்பே முக்கியமென்பதை காதா சப்த சதியும் அடிக்கோடிடுகிறது. காட்சியை விவரித்துக் கருத்தை உணர்த்துவதுதான் காதாவின் தனித்துவம். அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என நேரடித் தன்மையைக் குறுந்தொகை கொண்டிருக்கிறது. ஆனால், காதாவோ எதையுமே நேரடியாகச் சொல்வதில்லை. ஒரு காட்சியை வரைந்து, அக்காட்சியின் வழியே சொல்லவேண்டியதைச் சூசகமாகச் சொல்கிறது.

உதாரணமாக, நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரக்கூடிய தலைவன், அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறான். பார்த்ததும் அவளை அவனுக்குப் பிடித்துவிடுகிறது. நகரத்துப் பெண்ணைப்போல ஆடையோ அணிகலனோ கூடுதல் அலங்காரமோ இல்லாதபோதிலும் கிராமத்துப் பெண்ணிடம் வெளிப்படும் கபடமற்ற அன்பில் கரைந்துபோகிறான். ஆனாலும், அவனுக்குள் இவள் வாழ்வு மொத்தத்திற்கும் ஒத்துவருவாளா என்னும் சந்தேகம் எழுகிறது. அதை வாய்திறந்து அவன் கேட்கவில்லை. என்றாலும், உடனிருக்கும் தோழிக்கு அவன் தயங்குவது புரிந்துவிடுகிறது.

நகரத்து அழகு நளினமே ஆனாலும், கிராமத்து அழகைப் போல் அது உண்மையில்லாதது என உணர்த்த விரும்புகிறாள். எப்படி உணர்த்துகிறாள் என்பதில்தான் திரிலோசனின் திறமை வெளிப்படுகிறது. தயக்கத்துடன் உணவருந்த அமர்ந்த தலைவன், பதார்த்தங்களைத் தோழி பரிமாறியதும் உப்புப் போதவில்லையே என்கிறான். உடனே தோழி ஐயா இது கிராமமென்பதால் உப்பு கிடைப்பது அரிது. ஆனால், உப்பைவிட, உடலுக்கும் உயிருக்கும் ஊறுசெய்யாத நெய் எளிதாகக் கிடைக்கும்’ என்கிறாள். உப்பு, நெய் ஆகிய இரண்டு சொற்களும் உள் அர்த்தம் கொண்டவை. உப்பை வடமொழியில்லவணம்’ என்பர். லவணமென்ற சொல்லுக்கு அழகென்னும் பொருளும் உண்டு.

அதேபோல, நெய் என்ற சொல்லுக்கு நேயமென்றும் அன்பென்றும் இருபொருள்கள் இருக்கின்றன. தோழி என்ன சொல்ல வருகிறாளென்றால் அழகைவிட அன்பே கிராமத்திலிருக்கிறது என்பதைத்தான். உப்பை அதிகமாகத் தேடும் உனக்கு, அதைவிட அவசியமான நெய்யை என் தோழி வைத்திருக்கிறாள்’ என்கிறாள். அழகைக் காட்டிலும் அன்பு மிகுதியாக உள்ள என் தோழியை ஏற்றுக்கொள் என்பதையும் அவ்வார்த்தைகளின் வழியே தெரிவிக்கிறாள். கவர்ந்திழுக்கும் அழகைவிட, காலத்திற்கும் தேவையான அன்பே காதலுக்குரியது என்கிறாள். உவமையும் கற்பனையும் ஒரு பாடலை எந்த அளவுக்கு உயர்த்துமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இரண்டுமூன்று வாக்கியங்களில் பூலோகத்தின் புதிர் முழுவதையும் உவமைகளாலும் கற்பனைகளாலும் அவிழ்த்துவிடமுடியும். மனிதகுல வரலாற்றில் காதலின் பங்கே அதிகம். பாவ புண்ணியங்களை வரையறுத்த மதநூல்கள் எதுவென்றாலும் அவை அனைத்துமே காதலிலிருந்தே தொடங்குகின்றன. ஒன்றேபோல் இன்னொன்று அமைவதால் இரண்டும் ஒன்றில்லை என்ற எண்ணத்தை விடுத்து, ஒன்றிலிருந்துதான் இன்னொன்று பிறக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. தொடர்புக்கும் தொடர்ச்சிக்கும் இருக்கக்கூடிய மிகச்சிறிய வித்யாசத்தை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் இலக்கியத்தின் ஆச்சர்யங்கள் பிடிபடுகின்றன.

ஆற்றில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்த இளைஞன், ஆசை மீதூர அவனும் அதே ஆற்றில் மற்றொரு கரையில் இறங்கி நீரை அள்ளிப் பருகுகிறான். அவள் மஞ்சள் பூசிக் குளித்ததால் நீரின் நிறமும் சுவையும் மாறியிருக்கிறது. ஆனாலும், அவன் அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஓடிவந்த நீரை உள்ளங்கையால் ஏந்திக் குடிக்கிறான். அந்த நேரத்தில் தன்னுடைய தோழியிடம் அவள்,அந்தோ ஒருவன் நீரை அள்ளிப் பருகுகிறானே அவன் என் இதயத்தைப் பருகுவதுபோல இருக்கிறது’ என்கிறாள்.

இக்காட்சியை மு.கு. ஜகந்நாதராஜா அன்னாய்! யான் நீராடுங் காலை / அழகன் வந்தங் காற்றி லிறங்கி / மஞ்சட் கைப்புநீர் வாரிக் குடித்தென் / நெஞ்சம் பருகி நீங்கல் போன்றான்’ என்று பெயர்த்திருக்கிறார். காதாவைப் பொருத்தவரை முதலடி 12 மாத்திரையும், இரண்டாம் அடி 18 மாத்திரையும், மூன்றாம் அடி 12மாத்திரையும் நான்காம் அடி 15 மாத்திரையும் கொண்டு அமையவேண்டும். அந்த அளவைக் கனக்கச்சிதமாக அமைத்து எழுதியுள்ள அழகைக் கவனிக்காவிட்டால் ருசியில்லை. மாத்திரை அளவுகளைக் கணக்கிட்டே மொத்த நூலையும் எழுதி, ஒவ்வொன்றின் கீழேயும் விளக்கவுரைகளைத் தந்திருக்கிறார்.

மேற்கூறிய காட்சியை நினைவூட்டும் பாடல் ஒன்று இயக்குநர் ஷங்கரின் `ஜீன்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. `அன்பே அன்பே கொல்லாதே’ என்னும் பல்லவி தாங்கிய அப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடலின் இறுதி வரிகள் ஏறக்குறைய இதே மாதிரியான தொனியை உடையவை. `பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக / பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் / தேவதை குளித்த துளிகளை அள்ளித் / தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்’ என்னும் வரிகளே அவை.

மஞ்சள் கலந்த நீரானாலும் அது காதலியின் உடலைத் தழுவியதால் ருசியுடையதாக ஹாலன் எழுதியதற்கு மாற்றாக வைரமுத்துவும் சிந்தித்திருக்கிறார். சொல்லப்போனால் ஹாலனைவிட வைரமுத்து ஒருபடி மேலேபோய் எழுதியிருக்கிறார். திருக்கமண்டலத்தில் சேரும் நீரே தீர்த்தமென்று சொல்லப்படும். ஆனால், வைரமுத்துவோ தேவதை குளித்த நீரையே தீர்த்தமாக்கித் திகைக்க வைத்திருக்கிறார். வைரமுத்துவும் ஹாலனும் ஒரே காலத்தவரோ ஒரே தேசத்தவரோ இல்லை. ஆனால், இருவரும் ஒரே சிந்தனையை அல்லது கற்பனையை எட்டிப்பிடித்திருக்கிறார்கள்.

காலங்கள் மாறினாலும், காட்சிகளும் மாறினாலும் காதலைப் பற்றிச் சிந்திக்கும்போது எல்லாக் கவிஞர்களும் ஒரே புள்ளியில் வந்துசேர்வதே அக இலக்கியங்களின் அற்புதம். காதா சப்த சதியைப் புதுக்கவிதை வடிவில் தந்திருக்கும் சுந்தர் காளியும், பரிமளம் சுந்தரும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். அன்னம் வெளியீடாக வந்துள்ள அந்நூலும் வாசிக்கத் தக்கது.
யாப்பு வடிவில் மு.கு. ஜகந்நாதராஜா எழுதியுள்ள பாடல்களிலும் பார்க்க, சுந்தர்காளியும் பரிமளமும் புதுக்கவிதையில் தந்திருக்கும் கவிதைகள் எளிய புரிதலில் இதயத்தைத் தொட்டுவிடுகின்றன.

மாத்திரை அளவிற்கேற்பச் சொற்களை பிரயோகிக்காமல், ஒரு பாடல் என்ன உணர்வைக் கடத்த விரும்புகிறதோ அதை அப்படியே தந்திருக்கின்றனர். மூலநூலில் எழுநூறு பாடல்கள் இருந்தாலும், ஐநூற்று மூன்று பாடல்களை மட்டுமே மு.கு.ஜ. பெயர்த்திருக்கிறார். ஒரே பொருளுடைய பிற பாடல்களைத் தவிர்த்தும், தமிழிலக்கிய மரபிற்கு ஏற்றதைத் தேர்ந்தும் கொடுத்திருக்கிறார். உறவுகளின் பிறழ்வைச் சொல்லக்கூடிய பாடல்கள் சிலவும் அவற்றில் இல்லாமல் இல்லை.
பிராகிருதத்தைக் காட்டிலும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் உயர்ந்தன எனக் காட்டுவதற்காக அவர் அப்பாடல்களை இணைத்திருக்கலாம்.

சுந்தர்காளியும் பரிமளமும் பெயர்த்துள்ள நூலில் 251கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பாரேன், அவன்மீது அவள்கொண்ட கோபம் / விரலிடுக்கில் நழுவும் மணல்போல் / ஒரு மெல்லிய பெருமூச்சில் கரைந்து போவதை’ என்று சுந்தர்காளியும் பரிமளமும் பெயர்த்துள்ள அதே பாடலை காதலன் மீதே கடுஞ்சினத்தாலே / ஊடல் கூர்ந்தோள் உறுதி மிகினும் / பையத் தளர்ந்து பாழா கிடுமே / கைப்பிடி யிறுக்கிய குறுமண லொத்தே ’ என்பதாக மு.கு. ஜகந்நாதன் தந்திருக்கிறார்.

ஓசையையும் மாத்திரை அளவுகளையும் கணக்கிடாமல் எழுதும்முறையையே நவீன இலக்கியவாதிகள் விரும்புகின்றனர். பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயத்தை அறவே ஒதுக்கிவிட்ட அவர்களுக்குப் படிமமும் குறியீடும் இயல்பாக இருந்தாலன்றி அப்பாடலையோ கவிதையையோ வாசித்து உணர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சுந்தர்காளியும் பரிமளமும் நவீன கவிதைகளை உள்வாங்கி, அவற்றுக்கு மிக நெருக்கமாக வரக்கூடிய காதாக்களைப் பெயர்த்துள்ளதைப் பாராட்ட வேண்டும். `ஊரே தீப்பற்றி எரிந்த பின்னும் / நெருப்பின்றி வாழ முடியுமா என்ன’ என்றொரு கவிதையின் இறுதி வரியை அமைத்துள்ளனர்.

என்ன தவறுசெய்தாலும் அவனைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதே சரி என எண்ணும் ஒருத்தியின் மனப்பதிவாக வந்துள்ள அக்கவிதை, பல்வேறு திறப்புகளைக் கொண்டது. குடும்ப அமைப்பிற்குள் வாழ முற்படும் ஒருபெண், சகித்தலையும் எஞ்சியுள்ள வாழ்நாளுக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தையும் தெரிவிக்கிறது. மிகச்சிறிய வரிகளில் இப்படி ஏராளமான தெறிப்புகளைக் காதாக்களில் பார்க்கமுடிகிறது. புதிதாக வந்துள்ள காதா சப்த சதியை இன்றைய நவீன கவிதைகளுடன் ஒப்பிட்டு விவாதிக்கலாம்.

ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் அது கைக்கொள்ளும் மாற்றத்தினால் விளைவதே என்னும் நம்பிக்கை எனக்குண்டு. இலக்கண மீறல்களையும் சேர்த்தே சொல்லுகிறேன். இறுக்கமான கட்டுப்பாடுகளையும் வடிவங்களையும் தளர்த்தத் தயங்கிய எந்தமொழியும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதில்லை. தமிழைப் பொருத்தவரை அது, எந்தக் காலத்திலும் தன்னுடைய வழிமுறைகளையும் வரையறைகளையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தொங்கியதில்லை.

புழக்கத்தில் கண்டடையும் சொற்களை எழுத்திலும் இலக்கியத்திலும் இணைத்திருக்கிறது. சங்க காலத்தில் பயன்படுத்திய சொற்கள், கால ஓட்டத்தில் வேறு பொருளைக் கொடுத்தாலும் அவற்றையும் உரிய அர்த்தத்தில் இருத்திக்கொள்ளும் சாமர்த்தியம் தமிழுக்குண்டு. இந்த நெகிழ்வினால் ஆக விரைவில் தமிழ்மொழி அழிந்துவிடுமோ எனச் சிலர் பயந்தாலும், அதுவே தமிழை மேலும் மேலும் உயிர்ப்புடையதாக வைத்திருக்கிறது. அதைப்போல வடிவ மாற்றங்களும் ஒரு மொழியை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லைஅவள் எவ்வளவுதான் அதன் மடியைப் பீச்சினாலும் / இடையனின் கைகளைக்கூட நனைக்காத / கட்டுக்கடங்காத பசு / பாரேன், இப்போது குடங்குடமாய் பால் கறப்பதை’ என்றொரு கவிதை, சுந்தர்காளியின் பெயர்ப்பில் வந்திருக்கிறது.

இந்தக் கவிதையை வாசித்த மாத்திரத்தில் எனக்கு நாச்சியார் திருமொழி’ நினைவுக்கு வந்தது. `வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்று ஆண்டாள் எழுதியுள்ள அதே தொனிதான் இதிலும் தென்படுகிறது.
பிராகிருதத்தைத் தமிழ்ப்படுத்தி வாசிக்கிறோமா இல்லை தமிழையே எளிமைப்படுத்தி வாசிக்கிறோமா என்கிற தோற்றமே எஞ்சியது. கண்ணனை நினைத்துக் கறந்தால் குடம் குடமாய் பால் நிறையுமென்று ஆண்டாள் சொல்வதைப் பக்தியெனப் புரிந்துவைத்திருக்கிறோம். கண்ணனை மட்டுமல்ல, காதலை நினைத்து யார் கறந்தாலும் பசுவின் காம்பில் பால்மிகும் என்றே காதா சப்த சதி சொல்கிறது.

பசுவையும் தாயையும் முன்வைத்து வரக்கூடிய இன்னொருகவிதை `வயது முதிர்ந்த பசுவும்கூடக் / கறக்கிறவனின் கைப்பட்டால்தான் பால்கொடுக்கும் / மகனே, பார்த்தாலே பால்கொடுக்கும் பசுவை / இங்குதான் காண்பாய்’ என்று வரும். ஒருகுழந்தை பசியுடன் பார்த்தாலே தாயின் மார்பு சுரப்பதை இதைவிடவும் அழகாக வேறு எங்கேனும் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். இன்னொரு கவிதை,கட்டிலறையில் கலவியிலிருக்கையில் / காதல் மகனே ஆனபோதிலும் / அநாவசியமாய் அழுது கரைந்தால் / எந்தத் தாய்தான் அவனைச் சபிக்கமாட்டாள்’ என்கிறது.

தாய்மையைக் கேள்விக்கு உட்படுத்துவதுபோல இக்கவிதை அமைந்திருந்தாலும், எதார்த்தத்தில் ஒரு பெண் எப்படி எண்ணுவாளோ அதையே எழுத்தாகப் பார்க்கமுடிகிறது. தாய்மையைத் தமிழ்ச்சமூகம் வைத்திருக்கும் உயரத்தில் நின்றுகொண்டு இக்கவிதையை வாசித்தால் அதிர்ச்சி ஏற்படலாம். காதலின் மிகை உணர்ச்சிகளுக்கு நிகராகத் தவிப்புகளையும் வேதனைகளையும் காதாவில் காணலாம். `நின்நினை வுடனே நேரும் சாவின் / மீண்டும் நினையே மேவுதல் வெறுமென‘ என்றொரு பாடல். நான் இறக்கும்போதும் உனையே நினைப்பதால் அடுத்த பிறவியிலும் இதே வேதனைத் தொடருமோ எனக்கேட்கும் இடத்தில் அன்பின் இறுக்கத்தை அறியமுடியும்.

இறக்கும்போது ஒருவர் எதை நினைக்கிறாரோ அதை அடுத்தபிறவியில் அடைவர் எனும் ஐதிகத்தை அனுராகன் என்பவர் காதலாக மாற்றி எழுதியிருக்கிறார்என்னை அதிகமும் கவர்ந்த பாடல் ஒன்றுண்டு. காதலன் தண்ணீர் வேண்டுமென்று காதலியின் வீட்டில் வந்து கேட்கிறான். அவளுடைய தாயும் அவனுக்குத் தண்ணீரைத் தருவிக்கும்படிச் சொல்கிறாள். தண்ணீர் சொம்பினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வரும் காதலி, அவன் கைகளை ஏந்தச் சொல்லி ஊற்ற ஆரம்பிக்கிறாள்.

அதீத தாகமென்று நீரைக் கேட்டவன், ஊற்றும் நீரைப் பருகாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவளுக்கும் அது புரிந்துவிடுகிறது. உடனே அவள் நீரூற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறாள். மிக மெதுவாக நீரை ஊற்றும்போதே அவன் கூடுதலாகத் தன்னைப் பார்க்கமுடியும் என்று அவள் கருத, அவனோ விரல்களின் இடைவெளியில் நீரைச் சிந்தவிடுகிறான். இப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுத் தாகத்தைத் தீர்த்தனர் என அப்பாடல் முடியும்.

`இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது / இந்தப் பார்வைக்குத்தானா பெண்ணானது’ என்னும் திரைப்பாடலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். விரல் நெகிழ் விட்டு மேற்கண் கொண்டு / புனல்பரு கிடும்வழிப் போக்கனைக் கண்டு / தண்ணீர்ப் பந்தலில் தங்கும் மங்கையும் / மெலிந்தநீ ரொழுக்கை மேலும் குறைத்தாள்’ என்ற பிராத்துமகன் பாடலை மு.கு.ஜ. பெயர்த்திருக்கும் அழகே அழகு. சாராம்சம் குறையாமல் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பெயர்ப்பது எளிதில்லை.

இரண்டு மொழிகளையும் உணர்ந்து பெயர்ப்பதைவிட, அவ்விரண்டு மொழிகளையும் இலக்கண சுத்தத்துடன் கற்றுச் சுவை குன்றாமல் பெயர்த்திருப்பதுதான் பெரிதிலும் பெரிது. காதலனுக்கு காதலி தண்ணீர் கொண்டுதரும் அழகிய காட்சி ஒன்றைக் கபிலரும் எழுதியிருக்கிறார். கலித்தொகையில் இடம்பெற்றுள்ள அப்பாடல், காதா சப்த சதியைத் தாண்டிய ரசனையைத் தருவது. காட்சிப்படி, யாரோ ஒருவன் வாசலில் வந்து தண்ணீர் கேட்கிறான். அடுக்களை வேலையில் இருக்கும் அன்னை, மகளைக் கூப்பிட்டு இறைஞ்சிக் கேட்பவனுக்கு இந்த நீரைக் கொண்டுபோய் கொடு’ என்கிறாள்.

அவளும் தண்ணீருடன் வாசலுக்குப் போகிறாள். போனால் அவன் ஏற்கெனவே அவளுக்குத் தெரிந்தவன்; அவளும் அவள் தோழியும் விளையாடியபோது குறுக்கே புகுந்து குறும்பு செய்தவன்; அவர்கள் கட்டிய மணல் வீட்டைக் கலைத்துப்போட்டவன்; காதல் மிகுதியில் எதை எதையோ பேசியவன்; எங்கே போனாலும் விடாமல் துரத்துபவன்; வீடுவரைக்கும் வந்துவிட்டானே என யோசிக்கிறாள்.

அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் நீர்ச் சொம்பை நீட்டுகிறாள். வாங்கிக் குடித்தவன் அதுதான் சமயமென்று கைகளைத் தொட்டு இழுக்கிறான். அவளுக்கோ அச்சம். என்ன செய்வதென்று தெரியாமல் கத்திவிடுகிறாள். அவள் எழுப்பிய ஓசை அடுக்களையில் நின்றிருக்கும் அன்னையின் காதில் விழுகிறது. ஏதோ நடந்துவிட்டதோ எனப் பதறிய தாய், அங்கிருந்தபடியே என்னடி சத்தம்’ என்கிறாள். பதிலுக்கு மகள்,உண்ணும் தண்ணீரால் விக்கினான்’ என்று சமாளிக்கிறாள். நடந்ததைச் சொல்லாமல் நடக்காத ஒன்றைச் சொல்கிறாளே என அவனுக்கு அவள்மேல் காதல் மிகுந்துவிடுகிறது.

இப்பாடலுக்கு சங்க நூற் காட்சிகள்’ நூலில், கி.வா.ஜகந்நாதன் எழுதியுள்ள குறிப்புரையும் ரசிக்கத்தக்கது. நினைவுகளின் ஊடே விரியும் காட்சிகளே காதலுக்கான அடர்த்தியைக் கூட்டுகின்றன. சங்கப் பாடல்களின் வாக்கிய அமைப்புகளை உள்வாங்கிக்கொள்வதில் சிரமம் இருந்தாலும் கி.வா.ஜ. போன்றோரின் உரைகளையேனும் வாசித்து அவற்றைக் காட்சிகளாக மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டுகிறேன். காகித எழுத்துகளைக் காட்டிலும் காட்சிகளுக்குச் சக்தி அதிகம். பழந்தமிழ்ப் பாடல்களின் வழியே விரியும் காட்சிகள், காதலை உச்சாணிக் கொம்பில் ஏற்றுபவை.

எவ்வளவுதான் ஒரு பெண் தன் காதலை மறைத்துக்கொண்டாலும் அது, வெளிப்பட வேண்டிய நேரத்தில் தெரிந்துவிடுமென்பதைஅன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, / அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், / உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும் / தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் / கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் / செய்தான், அக் கள்வன் மகன்’ என்று கபிலர் எழுதியுள்ளதில் நகைக்கூட்டம்’ என்னும் சொல், என்னை அதிகமும் ஈர்ப்பது. அதேபோலஉண்ணுநீர் விக்கினான்’ என்பது. விக்கினால் நீரைப் பருகுவது வாடிக்கை. ஆனால், அவளோ நீர் குடிக்கும்போது விக்கினான் என்கிறாள். தாயிடம் மறைக்க விரும்பிய பெண், நீர் விக்கிற்று’ எனச் சொல்வது இருக்கிறதே அதுதான் காதலின் உளவியல்.

`எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன் / அவள் தாகமென்று சொன்னாள்’ பாடல் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. நீரைப் பற்றி எழுதிவிட்டதால் நெருப்பைப் பற்றியும் காதாவில் இடம்பெற்றுள்ள குறிப்பைச் சொல்லாமல் விடுவது முறையில்லை. தீப்பெட்டிகள் இல்லாத அந்தக் காலத்தில் அரணிக் கட்டையை உரசுவதாலும், சிக்கிமுக்கிக் கல்லைத் தட்டுவதாலுமே தீயை உண்டாக்கினர் என்பது தெரிந்ததுதான்.

ஒரு வீட்டில் நெருப்பிருந்தால் அதில் கொஞ்சம் கங்கு வாங்கி, அடுத்துவீட்டு விளக்கையோ அடுப்பையோ பற்றவைப்பது வழக்கம். அதுபடி, அடுத்தவீட்டுப் பெண் கங்கு கேட்டு வந்திருக்கிறாள். தலைவியோ முகம் பார்த்துத் தராமல் விளக்கைக் கொடுத்தாள் என்றொரு பாடல் சொல்கிறது. ஏன் அவள் முகம் திருப்பி விளக்கைக் கொடுத்தாளெனில், கணவனைப் பிரிந்த அவள், அவனை எண்ணியெண்ணி அழுதுகொண்டே இருக்கிறாளாம். கையில் விளக்கை நீட்டும்பொழுது அழும் கண்ணீர் விளக்கில் பட்டு அணைந்துவிடுமோ என்றஞ்சியே முகம் பார்க்காமல் கொடுத்தாள் என்கிறது அப்பாடல்.

இந்தக் கற்பனையை வாசித்த உடனேஉழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து / வேண்டிய யவர்க் கண்ட கண்’ எனும் திருக்குறள் நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியாது. மனைவியைப் பிரிந்து வேற்றூரில் தங்கியிருக்கும் தலைவன், மனைவி ஊரில் இருந்து வருபவனைப் பார்த்து என் மனைவி எப்படியிருக்கிறாள்’ என்கிறான். அதற்கு அவன்பார்த்தேன், மணிக்கொருமுறை அழுது வடிகிறாள். அப்போது அவள் சிந்தும் கண்ணீரில் ஆடை நனைகிறது. கொஞ்சநேரத்தில் உன்னை நினைத்துப் பெருமூச்சு விடுகிறாள்.

உடனே, நனைந்த ஆடை காய்ந்துவிடுகிறது’ என்கிறாள். காதாவில் வரக்கூடிய பெண்ணும், குறளில் வரக்கூடிய பெண்ணும் பிரிவில் ஒரே மாதிரி அழுகிறார்கள். நீரும் தீயுமாக நிகழும் வாழ்வை, அகப்பாடல்கள் வஞ்சகமில்லாமல் வரித்துள்ளன. எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட அகப்பாடல்கள், இன்றைய சூழலுக்கும் சுவைக்கும் ஏற்றவாறு பொருள் தர நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ என்கிற ஐம்பூதங்களும் உதவுகின்றன. காதல் கொண்டிருந்தால் அல்லது காதலுடன் கலந்திருந்தால் / நீங்கள் ஒருபோதும் / மரணத்தை உணரமாட்டீர்கள்’ என ஜலாலுதீன் ரூமி எழுதுவார். உண்மையில், காலத்தின் வேகத்திற்கேற்ப கருத்துகள் மாறினாலும், சிந்தனைகள் செழுமையடைந்தாலும் காதல் உணர்வுகள் நித்தியமானவை.

இரண்டு கைகளையும் ஏந்தியபடியே தெருவில் நடந்த பெண்ணைப்போல நானுமே இரண்டு கைகளையும் இதயத்தையும் விரித்து இலக்கியத்தை ஏந்திக்கொள்ள எண்ணுகிறேன். எந்தமொழியில் காதல் கவிதை எழுதப்பட்டாலும், அது எனக்காக எழுதப்பட்டதுபோலவே தோன்றுகிறது. காதா சப்த சதியில் இடம்பெற்றுள்ள இன்னுமொரு கவிதை,நீண்டநாள் வாழ வேண்டுமெனில் / காதலைப் பிரிந்து போகச்சொல் / அப்போது ஒருநாள் ஒருயுகமாக நீளும்’ என்கிறது. வாழ்வதற்குக் காதலிக்கலாம். வாழ்ந்துகொண்டே இருக்க, காதல் கவிதைகளை வாசிக்கலாம்.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s