யுகபாரதி

Archive for the ‘அரங்கக் கவிதை’ Category

இலக்கியத்தின் தலையெழுத்து

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 26, 2009

பாட்டெழுத வாயென்றால்
பட்டென்று ஓடிஓடி
காட்டுகின்ற காட்சிக்கு
கவியெழுதும் பையன்நான்
பாட்டரசன் சபைக்கழைத்து
படைத்திடுக வாழ்த்தென்று
கேட்டீர்கள் என்பதாலே
கிறுகிறுத்துப் போகின்றேன்

ஆண்டுகள் பலவாக
அபலைகண்ட பட்டினிக்கு
நீண்டதொரு இலைவிரித்து
நெய்ச்சோறு இட்டதுபோல்
காண்கின்றேன் உங்களது
கைத்தட்டு விருந்தோம்பல்
ஈன்றதாய் அகம்மகிழும்
இனியநாள் இன்றெனக்கு

பூப்படையாக் கவிதையோடு
புகழ்தேடித் திரியுமிந்த
யாப்புக்குத் தாய்தகப்பன்
யாரென்று கேட்காதீர்?
தோப்புக்குள் விழுந்துவிட்ட
தூயவிதை; கம்பனெனும்
சீப்புக்குள் சிக்கிக்கொண்ட
சிறுமுடிநான் உதிருகின்றேன்

கட்டிலுக்கும் மெத்தைக்கும்
கண்ணில்கண்ட அத்தனைக்கும்
வெட்டித்தமிழ் எழுதுகின்ற
வேலைக்கு மத்தியிலே
தொட்டிலுக்குத் திரும்பிவந்த
துணிவோடு தொடங்குகிறேன்
தொட்டெடுக்கத் தமிழன்னை
துணையாக வரவேண்டும்

கடைக்குட்டி என்றெந்தன்
கருத்துக்குச் செவிகொடுப்பீர்
தடைபட்டு போகாத
தமிழுக்குக் கரம்கோர்ப்பீர்
இடையிடையே ஏதேனும்
இருமல்போல் வந்தாலும்
முடியட்டும் கவிதையென்று
மூச்சுக்குள் சிறையிருப்பீர்

கழகத்தால் ஆட்சிவரும்
கழகமிது, வாழ்வுதரும்
பழக்கத்தால் பண்புவரும்
பாடுமிந்த மேடையிலே
கிழக்குபல அமர்ந்துவிட்டு
கீழிறங்கிப் போனதாலே
கிழமைகளில் இன்றெனக்கு
சனியல்ல; சாதனைநாள்

சும்மாவே இருப்பவர்க்கும்
சுகமான கவிதைவர
கம்பனது லேகியத்தை
கலந்துதினம் குடித்துவந்தால்
மும்மடங்குத் தமிழ்வந்து
முற்றத்தில் ஊஞ்சலிடும்
சம்மதித்து உலகுநமை
சரித்திரமாய் யேந்திவிடும்

ஊரியல்பு நாட்டியல்பு
உரைக்கின்ற காவியங்கள்
பேரியல்பு கொண்டகம்பன்
பெருமைக்கு ஈடுண்டா?
தேரியல்பு தெருயியல்பு
தெவிட்டாத நடையியல்பு
நீரியல்பு நெருப்பியல்பு
நெருக்கமான மொழியியல்பு

யாரியல்பும் போலில்லா
எளிமையான தனியியல்பு
நாரியல்பை மறைத்துவைக்கும்
நறுமண மலரியல்பு
சீரியல்பு; செதுக்கிவைத்த
செந்தமிழின் சிலையியல்பு
வேரியல்பை விட்டுடாத
விழுதுடைய உயிரியல்பு

காற்றுக்கு ஜன்னலென்ற
கருத்துடைய நமக்கெல்லாம்
ஆற்றொழுக்கு மிக்க அவன்
அதிசயத்தைப் பிழிந்துவைத்தான்
நேற்றடித்த மழையாலே
நிலைகொண்ட தளிர்போல
ஈற்றடிகள் அத்தனையும்
இலக்கியத்தின் தலையெழுத்து

ஊற்றிடம் நீர்வாங்கி
உறிஞ்சுகின்ற நாவுக்கு
போற்றுகிற பாக்கியத்தை
புவியிலே அவன்கொடுத்தான்
சீற்றத்தைச் சிறியநதி
சிறப்பிக்க முடியாது;
மாற்றத்தை அவனளித்தான்
மற்றவர்கள் வாழ்வதற்கு

ஒருவனுக்கு ஒருத்தியெனும்
உயந்ததொரு மந்திரத்தை
இரும்பெடுத்துப் பொறித்ததுபோல்
இயற்றியவன் கம்பநாடன்
அரும்பெடுத்துத் தமிழ்முடிந்த
அந்தத்திருக் கைகளாலே
பிரம்பெடுத்தும் சிலயிடத்தில்
பிள்ளைகளைத் திருத்துகிறான்

பாசத்தைக் காண்பிக்க;
பக்கத்தில் இருந்தபடி
நேசத்தைக் காண்பிக்க;
நினைவுகள் தவறியவர்
மோசத்தைக் காண்பிக்க;
முடிந்தவரை உறவுகளின்
வேசத்தை காண்பிக்க;
வெற்றிவரும் வேளையிலே

தேசத்தைக் காண்பிக்க;
தெய்வநிலை எய்துகிற
வாசத்தைக் காண்பிக்க;
வழிமாறும் வாலிபரின்
நாசத்தைக் காண்பிக்க;
நல்லவழி நாமுணர
பாஷைக்கு உயிர்கொடுத்த
பரமாத்மா கம்பநாடன்

காதலுக்கே மரியாதை
கம்பனால் வந்ததுதான்
நாதனுக்குச் சீதைமேல்
நல்லன்பு வராவிட்டால்
மோதலின்றி போயிருக்கும்
முன்னிருந்த வில்லழகு
வாதத்துக்கு வரவேண்டாம்
வாசித்துப் பாருங்கள்

மீட்கவைத்த நெருப்பின்னும்
மீளாமல் ஈழத்தில்
போட்டெரிக்கும் நிலைகண்டு
பொசுங்காமல் என்னசெய்ய?
தோட்டாக்கள் மழைதூவ
துரோகங்கள் அரசாள
வாட்டத்தில் கிடக்கிறோமே
வருந்தாமல் என்னசெய்ய?

மேற்குலகுச் சூரியனை
மிரட்டுகின்ற கதையறிந்தும்
தோற்பதிலே வெறிகொண்டு
துவள்கிறோமே என்னசெய்ய?
நாற்புறமும் சோகமெனும்
நடுக்கத்தில் கிடந்தாலும்
பாற்கடல் சுனாமிபோல
பதைக்கிறோமே என்னசெய்ய?

விளம்பரத்தில் வீழ்ந்துவிட்ட
வேடிக்கை மனிதர்களின்
அளப்பெரிய தீமையாலே
அனுதினமும் போராட்டம்
தளுப்புகளே உடலாகும்
தலைகுனிவு ஒருபக்கம்
களும்பிடவும் தடைவிதிக்கும்
கவர்மெண்டு மறுபக்கம்

அரசன்புகழ் பாடவந்த
அவையிலே அரசியலா?
உரசல்கள் எதுக்கென்று
ஒதுங்குவோர் நாமில்லை
கரங்களைக் குவித்துநின்றால்
காடென்ன? மலைகளென்ன?
நிரந்தர இருட்டைவெல்ல
நிகழ்த்துவோம் புதியபோரை

 

12.08.2006 அன்று சென்னை கம்பன் கழக விழாவில் வாசித்த கவிதை இது.

Advertisements

Posted in அரங்கக் கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , | 5 Comments »