யுகபாரதி

Archive for the ‘எதிர்வினை’ Category

எங்க ஊரு பாட்டுக்காரன்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 19, 2009

திரைப்படப் பாடல் எழுதுவதற்கு எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணனும் கவிஞர்.மனுஷ்யபுத்திரனும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.இந்த இரண்டுபேரில் வைரமுத்துவுக்குப் பிறகு சிறந்த பாடலாசிரியாக வரும் வாய்ப்பு மனுஷ்யபுத்திரனுக்கு இருப்பதாக எழுத்தாளர். சாருநிவேதிதா கூறியிருக்கிறார்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கும்  அந்த வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனால்,அதைச் சாருவால் எழுதவோ வெளிப்படுத்தவோ இயலாது. ஒரே பாட்டில் முப்பது ஆண்டுகாலமாக எழுதிவரும் வைரமுத்துவை காட்டிலும் சிறந்தவராக மனுஷ்யபுத்திரன் தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை உயிர்மெய் பதிப்பக வாசகர்கள் நிச்சயம் உணருவார்கள்.

திரைப்படப் பாடல் எழுதுவதில் உள்ள சிக்கலையும் அதன் நுட்பங்களை உணர்ந்துகொள்வதில் உள்ள தடையையும் நம்மூர் சோகால்ட்டு எழுத்தாளர்கள் புரிந்துகொள்வது கடினம்.அதுவும்,மொழிக்கட்டமைப்பைக் கொண்டு இயங்கும் திரைப்பாடல்கள் தன்னிச்சையான எந்த கருத்தோடும் அல்லது கதாபாத்திரத்தோடும் இணைந்து வினைபுரிவதில்லை. கேட்பவரின் ரசனை மட்டமும் எழுதுகிறவரின் ரசனை மட்டமும் வெவ்வேறு.தமிழ் இலக்கண அறிவை கொண்டிராத ஒருவரால் சிறந்த பாடலை உள்வாங்கவோ விமர்சிக்கவோ இயலாது என்பதை அதன் ஊடே பத்து ஆண்டுகளுக்கு மேல் பயணிக்கும் என்னால் கூற முடியும்.  பார்வைக்கு எளிதுபோல் தோன்றினாலும் பயிற்சி இல்லாமல் திரைப்பாடலைக் கையாள முடியாது.மேற்கோள் காட்டி கருத்து கூறும் மிகச் சாதாரண வரிகளைக் கூட மெட்டு அனுமதிக்காமல் எழுத இயலாது.

பாபநாசம் சிவனிலிருந்து இன்று எழுதுகிற ஆரம்பப் பாடலாசிரியர் வரை ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமையாகப் பார்க்கப்பட வேண்டும்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கண்ணதாசன்,வைரமுத்து என்று பட்டியல் தயாரித்து அவர்களைத் தாண்டி வேறு எவருமே போதிய கவனிப்புப் பெறவில்லை என்பது மோசடி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழியின் அழகுகளை உள்வாங்கிக்கொண்டு யாராவது ஒருவர் முன்நிற்கிறார்.அந்த வரிசையில் உடுமலையார், ஆலங்குடி.சோமு, கு.மா.பாலசுப்ரமணியம், கவி.கா.மு.செரிப்,  புலவர்.புலமைப்பித்தன், நா.காமராசன் ஆகியோர் தவிர்க்க முடியாதவர்கள் என்பதைச் சாரு போன்றோர் உணர வேண்டும்.

நெடிய ஆய்வை மேற்கொள்ளாமல் கருத்து கூறும் யார் ஒருவரும் திரைப்பாடலின் உண்மையான பங்களிப்பை உணராதவர்கள் என்றே
கருதவேண்டும்.யாரையாவது திருப்திபடுத்த எழுதும் இம்மாதிரியான அபிப்ராயங்கள் காலத்தின் கண்களைக் குருடாக்குவதற்கு ஒப்பானதே.
எழுத வருவதற்கு முன்பு நமக்கு அந்தத்துறை குறித்த குறைந்தபட்ச அறிவாவது இருக்கிறதா என சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. இசையறிவை வைத்துக்கொண்டு மட்டும் சிறந்த பாடலைத் தீர்மானித்துவிட முடியாது.ஏனெனில்,தமிழ்த் திரைப்படப்பாடல்கள் என்பது இசையைத் தாண்டி வரிகளால் மட்டுமே கவனம் பெற்றிருக்கின்றன.வரிகள்,சமூக அரசியலோடு சம்பந்தமுடையவை என்பதும் அதன்வழியேதான் ஒருபாடல் அடையாளப்படுகிறது என்பதும் முக்கியமானது.

எது எப்படியானாலும் யாருக்கு என்ன இடம் என்பதை காலமும் பின்வரும் தலைமுறையும் தீர்மானிக்கும் என்பதால் தாம்பள வடிவ ஜால்ராக்களைப் பொறுத்தருள்வோம்.

Advertisements

Posted in எதிர்வினை | குறிச்சொல்லிடப்பட்டது: , | 8 Comments »